Join Tamil tuition at Bedok, Jurong East and Little India | Learn Tamil online at World's first Tamil ELearning Platform.Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
அத்தியாயம் - 50

50. அஞ்ஞான காண்டம்
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 எனக்கு இந்தப் பிறவியை அளித்த அன்னையும் தந்தையும் செய்திருக்கும் உபகாரத்திற்கு ஓர் எல்லையே இல்லை. அன்னையின் மலக்குட­ல் ஒரு புழுவாக நான் ஜனிப்பதைத் தவிர்த்து, எனக்கு மனிதப் பிறவியை அளித்திருக்கின்றனர்.

2 குருடனாகவோ முடவனாகவோ ஊமையனாகவோ செவிடனாகவோ ஒற்றைக் கண்ணனாகவோ திக்குவாயனாகவோ பிறந்து, நான் என் தாயாருக்குப் பயனற்ற பிரஸவ வேதனையைக் கொடுக்கவில்லை. ஆரோக்கியமான சிசுவாகவே பிறந்தேன்.

3 எவர்களுடைய பாதங்களில் தேவர்களும் வணங்குவார்களோ, அத்தகைய உன்னதமான பிராமண குலத்தில் பிறந்திருக்கிறேன். இது எனக்கு ஈசுவரனின் கிருபையால் கிடைத்தது; முழுக்க முழுக்க இறையருளால் விளைந்தது.

4 நாம் கோடானுகோடி ஜன்மங்கள் எடுக்கிறோம். ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மாதா பிதா. ஆயினும், ஜனனமரணச் சுழ­­ருந்து நம்மை விடுவிக்கும் பெற்றோர் அமைவது அரிதினும் அரிது.

5 ஜன்மத்திற்குக் காரணமானவர் முதலாவது தந்தை. பூணூல் அணிவித்துப் பிரம்மோபதேசம் செய்பவர் இரண்டாவது தந்தை. அன்னமளித்துப் பா­ப்பவர் மூன்றாவது தந்தை. பயத்தி­ருந்தும் பீதியி­ருந்தும் விடுவிப்பவரோ நான்காவது தந்தை.

6 உலக வாழ்வில் இவர்கள் நால்வருமே முக்கியமானவர்கள். ஆயினும், கிருபாளுவான (அருளுடையவரான) ஸத்குருவுக்கு இணையான தந்தை வேறெவரும் இல்லை. ஸத்குருவின் அற்புதமான லீலைகளைப் பாருங்கள்

7 அன்னையின் கர்ப்பத்தில் வீரியத்தைப் பொழிந்து, யோனித்துவாரம் வழியாகக் குழந்தையைப் பிறக்கச் செய்பவர் உலகியல் ரீதியில் மாத்திரமே பிதா. ஆனால், ஸத்குருவோ உலகநடையி­ருந்து வேறுபட்ட பிதா.

8 ஸத்குரு, வீரியத்தின் சம்பந்தமே இன்றி, நீசமான யோனித்துவாரத்தின் சம்பந்தமும் இன்றித் தம் புத்திரனுக்குப் பிறவி அளிக்கிறார். பூரணமாக அநுக்கிரஹமும் செய்கிறார்.

9 நம்மை ஜனனமரணச் சுழ­­ருந்து விடுவிப்பவரும் கருணை நிரம்பியவரும் ஞானப்பிரகாசத்தை அளிப்பவரும் வேதங்களில் மறைந்திருக்கும் பேருண்மைகளை

விளக்கி நமக்குப் புரியவைப்பவரும் எங்கும் நிறைந்திருப்பவருமான ஸத்குருவை நான் வணங்குகின்றேன்.

10 சம்சார இருளை அகற்றும் சூரியனே ஆத்மானுபவம் பெற்ற ஞானிகளின் மணிமகுடமே பக்தர்களின் மனமாகிய சகோர பட்சிகளுக்குச் சந்திரனே கற்பகத்தருவே குருபரராகிய (பரமகுருவாகிய) தேவரீரை வணங்குகின்றேன்.

11 குருராயரின் மஹிமை எல்லையற்றது. அதை வர்ணிக்கப் புகும் முயற்சியில் பேச்சு கர்வம் இழக்கிறது. ஆகவே, குருவின் பாதங்களில் தலையைச் சாய்த்து ஊமையன் போல் மௌனமாக இருப்பதே நன்று.

12 பூர்வஜன்மத்தில், குறைபடாத, பூரணமான தவம் செய்யாதவனுக்கு உலகியல் வாழ்வின் மூன்று தாபங்களையும் அழிக்கக்கூடிய ஞானியின் தரிசனம் கிடைக்காது.

13 ஆன்மீக முன்னேற்றம் அடையவோ, மோட்சம் சித்திக்கவோ, தம்முடைய பொதுவான நலன் கருதியோ, ஒரு ஞானிக்கு அணுக்கத் தொண்டர் ஆகிவிட்டவர் வேறெதையும் நாடமாட்டார்.

14 ஞானியரின் கூட்டுறவு பெரும் பாக்கியமாகும். அதன் மஹிமையை யாரால் வர்ணிக்க முடியும்? நல்ல பக்தர்களுக்கு விவேகத்தையும் பற்றின்மையையும் பரம சாந்தியையும் அது கொண்டுவருகிறது.

15 ஸாயீ பிரபஞ்சப் பேருணர்வின் உருவே ஆவார். தோன்றாநிலையி­ருந்து தோன்றிய நிலைக்கு மாறியவர். அவருடைய பற்றற்ற தன்மையை யாரால் எந்த அளவுக்கு அறுதியிட்டு விவரிக்க முடியும்?

16 கிருபாளுவான ஸாயீ, விசுவாசமுள்ள பக்தர்களுக்கும் பிரேமையுடன் கேட்பவர்களுக்கும் தம்முடைய சுவையான சரித்திரத்தை அன்புடன் சொல்கிறார். அவர்களுக்கு இந்தச் சரித்திரம் ஒரு கோயில் அன்றோ

17 ஸாயீயின் கை எவருடைய சிரத்தில் வைக்கப்படுகிறதோ, அவருடைய அகம்பாவம் தவிடுபொடி ஆகிறது. 'அதுவே நான்ஃ என்னும் உணர்வு மனத்தில் உதிக்கிறது. பார்க்கும் இடமெல்லாமல் ஆனந்தம் நிரம்பி வழிகிறது.

18 பாமரனாகிய என்னுடைய சக்தி எம்மாத்திரம்? அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும்? பக்தர்களின்மீது உண்டான பிரீதியால் அவரே இந்தப் போதியைக் கிருபையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

19 அந்த ஸாயீயின் பாதங்களில் நான் விழுந்து வணங்குகின்றேன். கதை கேட்பவர்களுக்கு வந்தனம் செய்கிறேன். ஞானியரையும் சாதுக்களையும் சான்றோர்களையும் வணங்குகின்றேன். அவர்கள் அனைவரையும் பிரேமையுடன் ஆ­ங்கனம் செய்கிறேன் (தழுவுகிறேன்).

20 ஸாயீ ஸஹஜமாகவும் வேடிக்கையாகவும் பேசுவார். ஆனால், அந்த வார்த்தைகளின் கர்ப்பத்தில் பூரணமான நீதிநெறிகள் நிறைந்திருக்கும். எவர் நித்தியசாந்தியில் மூழ்கியிருந்தாரோ, அவரை தியானம் செய்பவர்கள் மஹத்தான அனுபவங்களைப் பெறுகின்றனர்.

21 அவரை சூரியனுக்கு உபமானமாகக் கூறமுடியாது. ஏனெனில், சூரியன் மாலையில் மறைந்துவிடுகிறான். சந்திரனுக்கும் ஒப்பிடமுடியாது. ஏனெனில், சந்திரன் தேய்ந்து வளர்பவன். ஸாயீ எப்பொழுதும் ஸம்பூர்ணமானவர் அல்லரோ

22 அவருடைய பாதங்களில் ஹேமாட் பணிவுடன் வணங்குகின்றேன். இந்தக் கதையை சிரத்தையுடனும் குவிந்த மனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்கும்படி கதை கேட்பவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

23 நிலத்தைச் சீர்பட உழுதாகிவிட்டது. விதைகளையும் விதைத்தாகிவிட்டது. ஆயினும், கிருபை நிரம்பிய மேகங்களாகிய நீங்கள் மழையாகப் பொழியாவிட்டால், விதைகள் முளைத்து, விளைச்சல் காண்பது எவ்வாறு?

24 ஞானியரின் கதைகள் காதில் விழும்போது, பாதகங்கள் விலகும். கதை கேட்பவர்களுக்குப் புண்ணியம் விளையும். ஆஹா அந்த அமோகமான விளைச்சலை அறுவடை செய்து லாபமடையுங்கள்

25 ஸாலோக்யம்1 போன்ற நான்குவகை முக்திகளின்மீது நமக்கு ஆசை ஏதும் இல்லை. ஸாயீயிடம் நிச்சலமான பக்தி நிலவட்டும். அதுவே நாம் அடையக்கூடிய பரம பிராப்தி (சிறப்பான பெரும்பேறு).

26 அடிப்படையாகச் சிந்தித்தால், நாம் கட்டுப்பட்டவர்கள் அல்லர் ஆகவே, விடுதலைக்கும் (முக்திக்கும்) நமக்கும் என்ன சம்பந்தம்? 'ஞானிகளின்மீது பக்திஃ என்னும் விழிப்புணர்ச்சி ஏற்படட்டும். அதுவே இதயத்தைப் பரிசுத்தமாக்கிவிடும்.

27 'நான்/நீஃ என்னும் எண்ணத்தி­ருந்து விடுபடுவோமாக. அதுவே நமக்கு இயல்பான நிலையை அளிக்கும். அதுவே நமக்கு பேதமில்லாத பக்தியையும் அளிக்கும். ஸாயீயிடம் நாம் வேண்டுவது இதையே.

28 போதியைப் பாராயணம் செய்பவர், படிப்பதற்காகப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்போது, வாசிக்கப்படும் விஷயத்தையும் வாசிக்கும் செய்கையையும் தம்மையும் ஒன்றாகக் காணவேண்டும். இதுவே கதைகேட்பவர்களுக்கு யான் விநயமாக விடுக்கும் வேண்டுகோள்.

29 ஹேமாட் பந்தை விட்டுத்தள்ளுங்கள்; காரணம், ஸத் சரித்திரத்தை இயற்றியவர் அவர் அல்லர். பக்தர்களின் நன்மைக்காக ஸாயீயால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு கருவி மாத்திரமே அவர்.

30 தெய்வாதீனமாகக் கண்டெடுத்த முத்துச்சிப்பியைத் தூக்கியெறிபவர் அதனுள் இருக்கும் முத்தையும் இழந்துவிடுகிறார். நன்மை பயக்கக்கூடிய விஷயங்களில் எவரும் உதாசீனம் காட்டக்கூடாது. அரசமரம் எப்படி உற்பத்தியாகியிருந்தால் நமக்கென்ன?2 நிழலை அனுபவித்தால் போதுமே

31 இங்கே, சொல்­ன் மாத்திரையை (எழுத்தொ­யை) நிர்ணயிப்பவர் ஸாயீயைத் தவிர வேறெவரும் அல்லர். கேட்கப்படும் விஷயமும் கேட்பவரும் கேட்கும் செய்கையும் அவரே ஆவார். இம்மூன்றும் ஒன்றுபட்டவையே என்பதை மறந்துவிடக்கூடாது.

32 காதுகள் பயபக்தியுடன் உஷாராக இல்லாமலோ, மனம் லயிக்காமலோ படிப்பது பாராயணம் ஆகுமோ? சொற்களின் பொருளை எப்படி அறிந்துகொள்ள முடியும்?

33 இந்தக் கதைகளைத் தற்பெருமையுடன் கேட்கக்கூடாது. கேட்பவர்கள் தங்களை மனத்தால் ஸாயீயாகவே பா(ஆஏஅ)வித்துக்கொள்ள வேண்டும். அந் நிலையில்தான் கேட்பவர்கள் பயன் பெறுவர். அந்த அகண்டமான (இடையறாத) அத்துவைத உணர்வைக் கட்டிக் காப்பாற்றுங்கள்.

34 அந் நிலையில்தான் இந்திரியங்களின் இயல்பான நாட்டங்கள் ஸாயீயின் ரூபத்தில் நிச்சயமாக ஒன்றும். நீரி­ருந்து எழும் அலைகள் நீரிலேயே ஒடுங்கிவிடுகின்றன அல்லவோ? அவ்வாறே இந்திரியங்களின் கொட்டங்களும் ஒடுங்கும்

35 அந் நிலையில்தான் ஞானத்தை நாடுபவர்கள் ஆன்மீக போதனை பெறுவர்; நகைச்சுவையை நாடுபவர்கள் விநோதத்தால் விளையும் மகிழ்ச்சியையும் உல்லாசத்தையும் பெறுவர்; கவிதை விரும்பிகள் பாடல்களிலுள்ள சொற்பொ­வையும் ஒ­நயத்தையும் பொருட்சுவையையும் ரசிப்பர். இவ்வாறாக, இக் காவியம் எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும்

36 முன்னதாக, இந்த ஸத் சரித்திரத்தின் முப்பத்தொன்பதாவது அத்தியாயத்தில், ஓர் உத்தமமான பக்தருக்கு ஸமர்த்த ஸாயீ உபதேசம் அளித்த விவரம் எடுத்துரைக்கப்பட்டது.

37 ஆக, பாபாவின் அருகில் அமர்ந்துகொண்டு அந்த பக்தர் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தை ஆரம்பத்தி­ருந்து ஒப்பித்துக்கொண் டிருந்தார்.

38 பாபாவுக்குப் பாதசேவை செய்துகொண்டே மெல்­ய குர­ல் கீதையை ஓதிக்கொண் டிருந்தார். முப்பத்துமூன்றாவது சுலோகம் முடிந்தபின் முப்பத்துநான்காவது சுலோகத்தை ஆரம்பித்தார்.

39 லயமடைந்த நிச்சலமான மனத்துடன் சன்னமான குர­ல் ஓதுகை நிகழ்ந்ததால், மற்றவர்களுக்கு அது கேட்கவில்லை. ஆகவே, ஓதுகையின் மூலநூல் எதுவென்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

40 முப்பத்துநான்காவது சுலோகத்தை அவர் ஆரம்பித்தபோது, அந்த உத்தமமான பக்தருக்கு ஸன்மார்க்கத்தைக் காட்டி அநுக்கிரஹம் செய்யவேண்டும் என்ற எண்ணம் பாபாவின் இதயத்தில் உதித்தது.

41 அந்த பக்தரின் பெயர் நானா (நாராயண கோவிந்த சாந்தோர்க்கர்). பாபா அவரிடம் கேட்டார், ''நானா, நீர் எதை முணுமுணுவென்று ஓதுகிறீர் ஓய்? அதை வாய்திறந்து ஸ்பஷ்டமாக (தெளிவாக) ஓதினால் என்ன?--

42 ''இத்தனை நேரமாக முணுமுணுவென்று ஏதோ ஓதுகை நடப்பதை நான் கவனித்துக்கொண் டிருக்கிறேன். ஆனால், சொற்களின் ஒ­ தெளிவாக வெளிப்படவில்லை. ஓய் இவ்வாறு ஓதுவதன் சூக்குமம் என்ன?ஃஃ

43 இக் கேள்விக்கு நானா தெளிவாகப் பதிலுரைத்தார், ''நான் கீதை பாடம் ஓதுகிறேன். மற்றவர்களுக்கு உபத்திரவமாக இல்லாமல் இருப்பதற்காக சன்னமாக ஓதுகிறேன்.'ஃ

44 ''சரி சரி; அது இங்கே கூடியிருப்பவர்களுக்காக. ஆனால், எனக்குக் கேட்கும்படியாகவாவது தெளிவாக ஓதும். நீர் பாடத்தைச் சரியாகப் புரிந்துகொண் டிருக்கிறீரா என்று பார்க்கிறேன்ஃஃ என்று ஸாயீ சொன்னார்.

45 நானா பாபாவுக்கு வந்தனம் செலுத்திவிட்டுத் 'தத்வித்தி ப்ரணிபாதேனஃ என ஆரம்பிக்கும் முப்பத்துநான்காவது சுலோகத்தை உரத்த குர­ல் ஓதினார். அதைக் கேட்டு பாபா திருப்தியடைந்தார்.

46 பின்னர், அந்த சுலோகத்தின் அர்த்தமென்ன என்ற கேள்விக்கு நானா விரிவாகப் பதிலுரைத்தார். நானாவின் விளக்கம் பூர்வாசாரியர்கள் (பண்டைய குருமார்கள்) அளித்திருந்த பாதையிலேயே அமைந்தது. பாபாவும் தலையசைத்து அங்கீகரித்தார்.

47 பாபா நானாவை மறுபடியும் கேட்டார், ''நானா, இந்தச் செய்யுளின் இரண்டாவது அடியின் முதற்பகுதியைப் பாரும். 'உபதேக்ஷ்யந்தி தே1 ஞானம்ஃ என்னும் சொற்களின் பொருள்பற்றிச் சிந்தனை செய்யும்.--

48 ''ஞானம் என்னும் சொல்லுக்கு முன்பாக, 'அஃ எழுத்து தொக்கிநிற்கும் குறியைச்2 சேர்த்துக்கொள்ளலாமா என்று பாரும். இவ்வாறு செய்தால், இச்சொல் 'அஞ்ஞானம்ஃ என மாறுபடும். சுலோகத்தின் பொருள் எதிர்மறை ஆகிவிடுமா என்றும்
யோசியும்.--

49 ''சங்கரானந்தர், ஞானேச்வரர், ஆனந்தகிரி, ஸ்ரீதரர், மதுசூதனர் போன்ற பாஷ்யகாரர்கள் (பேருரையாளர்கள்) 'ஞானம்ஃ என்னும் சொல்லுக்கு அளித்திருக்கும் விளக்கம்.--

50 ''அதை சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை நானும் அறிவேன். ஆயினும், 'அஃ எழுத்து தொக்கிநிற்கும் குறியைச் சேர்த்துக்கொள்வதால் விளையும் அற்புதத்தைத் தெரிந்துகொண்டே நாம் ஏன் அதைக் கோட்டைவிடவேண்டும்?ஃஃ

51 இவ்வாறு கூறியபின், கருணாமேகமான ஸாயீ, சகோரபட்சிகளும் சாதகப்பட்சி களுமான தம் பக்தர்களுக்காகப் பொழிந்த போதனாமிருதம் ஏற்கெனவே விவரிக்கப்பட்டுவிட்டது. (அத்தியாயம் 39)

52 ஆனால், ஸாயீ லீலா3 பத்திரிகை வாசகர்களில் சிலர் அந்த விளக்கத்தை மெச்சவில்லை என்பதும், சந்தேகப்படுகிறார்கள் என்பதும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

53 ஆகவே, சில பிரமாணங்களால், 'அஞ்ஞானம்ஃ என்னும் சொல் இங்கு நன்கு பொருந்துவதை நிரூபிக்கும் வகையில் சந்தேகிகளைத் திருப்தி செய்வதற்காக மேலும் ஒரு சிறிய முயற்சி செய்கிறேன்.

54 பாபாவுக்கு எப்படி ஸம்ஸ்கிருத ஞானம் இருந்திருக்க முடியும்? சிலருக்கு இந்த சந்தேகம் இருக்கலாம். ஞானிகளுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்றும், சந்தேகத்திற்குக் காரணம் வேறெங்கேயோ புதைந்திருக்கிறது என்றும் அறிவீர்களாக.

55 கதைகேட்பவர்களே, 'ஒன்றைக் (பரம்பொருளைக்) கண்டவன் அனைத்தையும் கண்டவனாகிறான்ஃ என்பது பிரமாணம். இந்த வேதவசனத்தை ஒப்புக்கொள்ளாதவர் எவரும் உளரோ? இந்த அபரோட்ச ஞானம் (காட்சி அறிவு) ஸாயீ பாபாவுக்கு இருந்தது.

56 பிரபஞ்சம் முழுவதையும் உள்ளங்கை நெல்­க்கனிபோல் ஸம்பூர்ணமாகப் (முழுமையாகப்) பார்க்கும் சக்தி பெற்ற ஞானிகள் அறியாத விஷயம் ஏதும் உண்டோ? சூரியன் பிரகாசிப்பதும் அவர்களாலேயே அன்றோ

57 அத்தகைய ஞானம் படைத்தவர்களிடம் அஞ்ஞான இருள் எப்படி ஒட்டிக்கொள்ள முடியும்? அவர்களிடம் அனைத்து வித்தைகளும் பொதிந்துகிடக்கின்றன.
ஸம்ஸ்கிருத மொழி மட்டும் என்ன பெரிய கொக்கு?

58 ஆயினும், ஸாயீ லீலா வாசகர்களில் சிலர் சொல்கின்றனர், ''நானாவை நம்பமுடியாது. ஞானம் எனும் சொல்லை அஞ்ஞானமாக மாற்றும் அகாரம் தொக்கிநிற்கும் குறியைத் தேவையில்லாமல் சேர்த்துக்கொள்வது, நானா சுயமாகச் செய்த கற்பனையே.--

59 ''தம்முடைய புலமையை முழுமையாகப் பறைசாற்றுவதற்காக அகாரம் தொக்கிநிற்கும் இந்த அஞ்ஞான காண்டத்தை அவரே ஜோடித்திருக்கிறார். அர்த்தமில்லாத ஒரு விதண்டாவாதத்தைக் கிளறிவிட்டிருக்கிறார். --

60 ''அகாரம் தொக்கிநிற்கும் குறியைத் தேவையில்லாமல் சேர்த்து, ஞானத்தை அஞ்ஞானமாக்கி, கீதைக்கு விபரீதமான விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.ஃஃ

61 ஆயினும், உண்மையான நிலையைக் கவனித்து சூட்சுமமாகச் சிந்தித்தால், ஸாயீ லீலா பத்திரிகையில் வெளிவந்த முப்பத்தொன்பதாவது அத்தியாயத்தின் கருத்தில் முரண்பாடு ஏதும் இல்லை என்பது நன்கு விளங்கும்.

62 நானா நம்பத் தகுந்தவரா, நம்பத் தகாதவரா என்பதுபற்றி எவரெவருக்கு என்னென்ன அபிப்பிராயங்கள் இருந்தபோதிலும், அவர் அளித்திருக்கும் விருத்தாந்தத்தைப் பயனற்றதாகவோ அர்த்தமில்லாத பிதற்றலாகவோ நாம் கருதக்கூடாது.

63 நானாவின் மீதிருக்கும் வெறுப்பை ஒதுக்கிவைத்துவிட்டு, மனத்திரிபுக்கு உட்படாமல் கண்ணோட்ட தோஷத்தைத் தூர விரட்டிவிட்டால், சந்தேகிகளுக்குக் குற்றமற்ற காட்சி முழுமையாகக் கிடைக்கும்.

64 ஸாயீ லீலாவின் உத்தமோத்தமமான முப்பத்தொன்பதாவது அத்தியாயத்தை மறுபடியும் படிக்காமல், இந்த அத்தியாயத்தில் மேற்கொண்டு சுலபமாக முன்னேற முடியாது.

65 ஸ்ரீகிருஷ்ணரின் திருவாய்மொழியாக வெளிவந்த ஸ்ரீமத் பகவத்கீதையில் ஞானகர்மஸந்யாஸ யோகம் என்னும் நான்காவது அத்தியாயத்தின் முப்பத்து நான்காவது சுலோகத்தில் 'அஞ்ஞானம்ஃ தொடர்பான உபதேசம் நிகழ்ந்தது.

66 தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயாப்

67 இதுதான் கீதையின் மூல சுலோகம். இந்த சுலோகத்தின் இரண்டாவது அடியில் ஞானம் எனும் சொல்லுக்கு முன்னால், அகாரம் தொக்கிநிற்கும் குறியைச் சேர்த்தால், அச் சொல் அஞ்ஞானம் என்று மாறுபடும்.

68 அகாரம் தொக்கிநிற்கும் குறியைப்பற்றி நினைக்காமல் விட்டுவிட்டால், ஞானம் என்பதுதான் பதம். இதில் சந்தேகமேயில்லை. அதற்கு விரோதமாக, துராகிருதம் (உரிமை இல்லாத இடத்தில் வ­ய நிகழ்த்தும் செயல்) செய்ய விரும்புபவர் யாரும் இல்லை. ஏனெனில், அந்தப் பதமும் அர்த்தமும் எல்லாராலும் நன்கு ஏற்றுக்கொள்ளப் பட்டவையாகும்.

69 ''ஞானத்தால்தான் கைவல்­யம் (வீடுபேறு) அடையப்படுகிறது.ஃஃ இந்த வேதவசனம் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. ஆயினும், 'தத்துவம் அறிந்தவர்களின் உபதேசத்தின் மூலமாகத்தான் ஞானம் பெறப்படவேண்டும்ஃ என்று இந்த வேதவசனத்தை நீட்டித்துக் கருத்தைக் கட்டுப்படுத்துவது அனாவசியம்.

70 நான் ஆத்மா; நிர்மலன்; சுத்தன்; புத்தன்; சுதந்திரமானவன்; ஆதியந்தமில்லாத சாட்சி மாத்திரமே. எல்லா உயிர்களிலும் ஒளிரும் தூய உணர்வு நான். 'இருப்பது ஒன்றே; இரண்டாவதாக ஏதும் இல்லைஃ எனும் உணர்வு விளைவிக்கும் ஆனந்தத்தால் நான் நிறைந்திருக்கிறேன்.

71 மேலும், நான் அஞ்ஞானம் அல்லேன்; அஞ்ஞானம் என்னுடைய செயல் அன்று. அதர்வண வேதத்தின் 1மஹாவாக்கியமான 'அயம் ஆத்மா ப்ரஹ்மஃ (இந்த ஆத்மா முழுமுதற்பொருள்) என்னும் சொற்றொடரில் இடம்பெறும் ஆத்மா நானே. இருக்கு வேதத்தின் 'ப்ரக்ஞானம் ப்ரஹ்மஃ (ஆத்மாவின் சஞ்சலமற்ற ஒருங்கிணைந்த தூய அறிவு நிலை முழுமுதற்பொருள்) என்னும் மஹாவாக்கியத்தின் பொக்கிஷமும் நானே.

72 யஜுர்வேதத்தின் 'அஹம் ப்ரஹ்மாஸ்மிஃ (நான் முழுமுதற்பொருளாக இருக்கிறேன்) என்னும் மஹாவாக்கியத்தை இடைவிடாது மனத்தில் இருத்துதலே வித்யா (மெய்ஞ்ஞானம்) என்று அறிக. நான் பாவி, பாக்கியமற்றவன், தெய்வ அருள் இல்லாதவன் என்பது போன்ற எண்ணங்களுக்கு இடமளிப்பதே அவித்யா (அஞ்ஞானம்).

73 இரண்டுமே ஆதியந்தமில்லாத மாயையின் புராதனமான சக்திகள். ஒன்று (அவித்யா) பந்தத்தை விளைவிக்கும். மற்றொன்று (வித்யா) பந்தங்களி­ருந்து விடுவித்து முக்தியை அளிக்கும்.

74 பெயர், உருவம் ஆகிய சகலமான பிரமைகளும் மாயை விளைவிக்கும் குழப்பங்களே. மாயையின் சக்தியை விளக்கமுடியாது; கடப்பது அதனினும் கடினம்.

75 கற்பனையில் என்னென்ன உதிக்கின்றனவோ அவை அனைத்தும் மாயையின் வசிப்பிடங்கள். கட்டுப்பட்ட நிலை, முக்தியடைந்த நிலை, ஆகிய கருத்துகள் நிச்சயமாகக் கற்பனையி­ருந்து பிறந்தவையே

76 'ஞானத்தால்தான் மோட்சம் அடையப்படுகிறதுஃ என்னும் வேத சித்தாந்தம் அப்பட்டமான உண்மை. ஆனால், பாவச்செயல்கள் நாசமாகாதவரையில் ஞானம் உதயமாகாது.

77 தூய ஞானத்தில் மூழ்கியவரிடமிருந்து விருப்பங்கள் விலகிவிடும். மாயையின் பந்தங்கள் அவருக்குக் கிடையா. தீய குணங்களுக்கும் அவரிடம் இடமில்லை.

78 பரமஞானியான சுகதேவருக்கும் விகற்பத்தால் (சந்தேகத்தால்) கேடு விளைந்தது. விகற்பத்தால் விளையும் அஞ்ஞானத்தை குருவைத் தவிர வேறு எவராலும் அகற்றமுடியாது.

79 விகற்பம் (கோணல் சிந்தனை) ஞானத்துள் புகுந்தவுடன், ஞானியும் பற்றுடையவர் ஆகிறார். ஒரு குடம் பா­ல் ஒருதுளி புளித்த கஞ்சி விழுந்துவிட்டாலும், பால் முழுவதும் திரிந்து போகிறதன்றோ?

80 ஆத­ன், முத­ல் அஞ்ஞானத்தை அடையாளம் கண்டுகொள். அதி­ருந்து விடுபட்டால் மனம் தூய்மையடைகிறது. அதன் பிறகே எல்லையற்ற ஞானம் தோன்றும்; பேதமில்லாத ஸமாதி நிலை கிடைக்கும்.

81 எந்நேரமும் செல்வத்தின் மாட்சிமையைப்பற்றியே நினைத்துக்கொண்டு, உலகியல் சுகங்களில் திருப்தி அடையாமல், மனைவியையும் மக்களையும்பற்றி இடைவிடாது சிந்தனை செய்பவரின் ஞானம் ஞானமன்று; அது அஞ்ஞானம்.

82 செல்வம், மனைவி, மக்கள் ஆகியவற்றில் மோகம் கொண்டவர் ஞானியாக இருப்பினும், தமக்கு எது நல்லது என்பதை அறியாதவர். ஆகவே, பக்தி இல்லாத அவருடைய ஞானம் அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது.

83 ஜீவசமுதாயமே அஞ்ஞானத்தில் மூழ்கிக் கிடக்கிறது. அஞ்ஞானத்தி­ருந்து விடுபட்டு ஞானியாகி, ஞானத்தையும் கடந்த நிலையை அடைவதே முழுமுதற்பொருளுடன் ஒன்றிய நிலை என்பது உறுதி.

84 அஞ்ஞானம் வெளியே சென்றுவிட்டால், ஞானம் தோன்றும். மன்னிப்பதில் விரைவு காட்டுபவர் ஞானமுள்ளவர். ஆனால், பற்றுகளை விடாதவரையில் அவர் மாயைக்கு வசப்பட்டே வாழ்கிறார்.

85 மற்ற எல்லா மனிதர்களையும் மயக்கிய மாயை, ராமர் கிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களுக்கும், ஸனகர் ஸனத்குமாரர் போன்ற முனிவர்களுக்கும், ஆணைக்கு அடிபணிந்த வேலையாளாக இருந்தது.

86 அனைத்து உயிர்களிலும் இதயவாசியாக இறைவன் உறைகின்றான். ஆயினும், யாருமே இந் நிலையை அறிந்தாரில்லை மாயையின் கற்பனைக்கப்பாற்பட்ட அந்தஸ்தும் அளவிடமுடியாத சக்தியும் அத்தகையன

87 ஆதலால், 'நான்தான் செய்வோன்; நான்தான் செயலால் விளையும் இன்பங்களை அனுபவிப்பவன்ஃ என்னும் பொய்யான அகந்தையைத் தூக்கியெறிந்துவிட்டு இதயவாசியிடம் சரணடையாதவரையில், நாம் முக்தி அடையமுடியாது.

88 நித்தியம் எது, அநித்தியம் எது? இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்; செவிகளால் கேட்க வேண்டும்; இடைவிடாது தியானம் செய்ய வேண்டும். சமம்1, தமம்1 ஆகிய ஆறு சாதனைகளில் வெற்றிபெற வேண்டும். அப்பொழுதுதான் அஞ்ஞானத்தி­ருந்து நிவிர்த்தி அடைய முடியும்.

89 'இவ்வுலகம் என்னிடமிருந்து வேறுபட்டது -- ஓர் அளவுக்கு உட்பட்டவன் நான் -- இனத்தி­ருந்து ஒதுக்கப்பட்ட தனியன் நான் -- இந்த உடலே நான்.ஃ ஈதனைத்தும் கலப்படமற்ற அஞ்ஞானம்.

90 ஞானத்தைப்பற்றி எடுத்துக்கூறி விவரித்திருக்கும் பரம கருணாமூர்த்திகளான வேதாந்த சாஸ்திர பாஷ்யகாரர்கள், அநுபந்த2 சதுஷ்டயத்தின் பிரகாரம் விஸ்தாரமாக விவரித்திருக்கின்றனர்.

91 அதிகாரி, விஷயம், சம்பந்தம், ஆகியவை முதல் மூன்று அநுபந்தங்கள். நான்காவது அநுபந்தம், பிரயோஜனம். பிரயோஜனம் குறித்த விரிவுரையில் 'அஞ்ஞான
நிவிர்த்தியே பிரயோஜனம்ஃ என்று அவர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர்.

92 வேதாந்தத்தின் முக்கிய விஷயம் 'ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றேஃ என்பதுதான். இந்த ஐக்கிய தத்துவத்தின் உள்ளே எப்படியோ புகுந்துவிட்ட ஐயமே அஞ்ஞானம். அதி­ருந்து நிவிர்த்தி பெறுவதே பிரயோஜனம்.

93 மூலமான இந்த அஞ்ஞானத்தி­ருந்து நிவிர்த்தி அடைவதே தன்னை உணர்வதால் பெறும் ஆனந்தம். ஆதலால், ஏதாவதொரு யுக்தியை உபயோகித்து அஞ்ஞானத்தை நாசம் செய்வது அவசியமாகிறது.

94 பேத சிந்தனையைக் கைவிடாத மனிதரை ஞானியென்று கருதமுடியாது. தேகாபிமானம் உள்ளவரின் ஞானம் பூரணமான அஞ்ஞானமே.

95 தம்மை ஞானமுள்ளவர் என்று பகட்டிக்கொண்டு அயோக்கியச் செயல்களில் ஈடுபடுபவர், சபிக்கப்பட்ட உணர்வு நிலையில் வாழ்கிறார். அவர் கும்பகர்ணனைப் போல நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார்.

96 வேதங்களின்படி வாழ்க்கை நடத்த இயலாமலும், வருணாசிரம தர்மத்தை அனுஷ்டிக்க முடியாமலும் வாழ்பவருக்கு, சித்தத்தைத் தூய்மைப்படுத்த அஞ்ஞானத்தை அகற்றுவதுதான் ஒரேவழி.

97 ஸத்துவம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களாலும், ஒ­ முதலாகிய
இன்ப நுகர்ச்சிகளாலும், பிறவி உறுப்பு மற்றும் வாய் போன்ற துவாரங்களின் மூலமாகவும், படைக்கும் தெய்வமாகிய பிரம்மதேவர் உட்பட அனைவரும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.

98 இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஆதியந்தமில்லாத மாயையால் சூழப்பட்டிருக்கின்றன. விருப்பு, வெறுப்பு போன்ற மனவிகாரங்களின்மீது மோகம் கொண்டு அனைத்து உயிரினங்களும் அஞ்ஞானத்தில் மூழ்கியிருக்கின்றன.

99 ஜீவன் அஞ்ஞானத்தால் கட்டப்பட்டிருக்கிறது. அஞ்ஞானத்தையும் ஆசைகளையும் கர்மபந்தங்களையும் துண்டித்துவிட்டால், ஜீவனின் சுத்தமான உருவம் வெளிப்படும்.

100 பசுவின் மடி நிறைந்து முலைக்காம்புகளில் பால் ஒழுகிக்கொண் டிருக்கிறது. இறுக்கமாக மடியில் ஒட்டிக்கொண் டிருக்கும் உண்ணிகளுக்கோ, அசுத்தமான ரத்தத்தின்மீதுதான் பேராசை. பா­ன்மேல் அவற்றுக்கென்ன இச்சை?

101 தவளையையும் வண்டையும் கவனியுங்கள். அழகான தாமரை மலர்களே அவை வாழும் சூழல். வண்டு, வாசனை மிகுந்த மகரந்தத்தைச் சுவைக்கிறது. தவளையோ சேற்றில் இருப்பதைத்தான் புசிக்கிறது.

102 தனக்கு எதிரிலேயே ஞானப் பொக்கிஷம் இருப்பதை மூடன் காண்கிறான். ஆயினும், அஞ்ஞானத்தின்மீதே அவன் ஆவல் காட்டுகிறான். மூடனுக்கு அஞ்ஞானமே ஞானமாகத் தெரிகிறது

103 அஞ்ஞானத்தை நிர்மூலமாக்கிவிட்டால், பிரம்ம ஞானம் தானாகவே தோன்றுகிறது. ஆத­ன், அஞ்ஞானம் எது என்று ஆரம்பத்திலேயே தீர்மானம் செய்வது அவசியம் என்று அறிவீர்களாக.

104 பிரம்ம ஞானத்திற்கு சமமாகப் பவித்திரமானது மூவுலகங்களிலும் எதுவும் இல்லை. அதனுள் உறையும் உபதேசம் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது இன்றி ஜீவனுக்குப் பயனில்லை.

105 அறிவு சம்பந்தமான விஷயமாக பிரம்மம் இருந்திருந்தால், புலன்களில் ஏதாவது ஒன்று அதைக் காட்டியிருக்கும்; அல்லது நிரூபித்திருக்கும்.

106 'பிரம்ம தத்துவம் புலன்களுக்கு அப்பாற்பட்டதெனினும், அறிவால் கிரஹிக்கக்கூடியதுஃ என்று ஸ்ம்ருதிகள் (வாழ்நெறி நூல்கள்) அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றன. ஆயினும், சுருதிக்கு (வேதத்திற்கு) இக் கருத்து சம்மதம் இல்லை.

107 புத்திசக்தி போன்றவை இல்லாது போய்விட்டால், எதையும் கிரஹித்துக் கொள்ளவேண்டிய தேவையே இல்லாமல் போகிறது. முழுமுதற்பொருள் என்று ஒன்று இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள இடமில்லாமல் போகிறது.

108 'எவையெவையெல்லாம் புலன்களால் உணரக்கூடியனவோ, அவையவையெல்லாம் இருக்கின்றன; மற்றவை இல்லைஃ என்பது எல்லாரும் அறிந்த பிரசித்தியான ஒரு கோட்பாடு. இக் கோட்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டால், பிரம்மம் என்று ஒன்று எப்பொழுதுமே இருந்திருக்கமுடியாது என்றாகிறது.

109 விளக்கம் இவ்வாறு அமைகிறது. ஆனால், இது அனர்த்தம் புத்தி, என்றும் அழிவின்றி நிரந்தரமாக இருக்கிறது என்பதே ஆழ்ந்ததும் பரந்ததுமான ஆராய்ச்சிச் சிந்தனையால் விளைந்த பாரம்பரியமான விளக்கம்.

110 பிரளய காலத்தில் புத்தி மறைந்து போகலாம். ஆனாலும், தான் இருந்த அனுபவத்தால் அது தொடர்ந்து வாழ்கிறது. ஆத்மாவே பிரபஞ்சத்தின் மூலம். இதில் சந்தேகமே இல்லை.

111 ஒரு பானையைக் கல்லால் அடித்தால், அதனுடைய உருவம் அழிந்து போகிறது; உடைந்துபோன துண்டுகளே மீதி. பானையின் உருவம் மறைந்துவிட்ட போதிலும், அது இருந்ததை ஓட்டாஞ்சில்லுகள் காட்டுகின்றன.

112 பானையின் உபயோகம் நாசமாகிவிட்டிருக்கலாம். ஆனால், பானையின் இருப்புக்கு முடிவென்பதே இல்லை. பானை இருந்ததற்கும் அதற்கு ஓர் உபயோகம் இருந்தது என்னும் உண்மைக்கும் ஓட்டாஞ்சில்லுகளே சாட்சி.

113 எந்தச் செய­ன் முடிவும் சூனியமாகாது முடிவு என்பதே, இருந்தது என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது அன்றோ? மனச்சாட்சியை மதிக்கும் நற்குணம், நற்புத்தியைக் குறிப்பால் உணர்த்துவதே இதற்குப் பிரமாணம்.

114 எல்லா க்ஷேத்திரங்களும் (புனிதத் தலங்களும்) தீர்த்தங்களும் விரதங்களும் புனிதமானவையே. ஆனால், புனிதத்தில் புனிதமானது ஞானம். பிரம்ம ஞானம் இல்லாது செய்யப்படும் பஜனையும் பூஜையும் அர்த்தமற்ற செயல்கள்.

115 சித்தம் அஞ்ஞானத்தால் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது. இறைவனிடம் பக்தி செலுத்தாமல் சித்தத்தைத் தூய்மைப்படுத்தமுடியாது. பக்தியின்றி ஞானம் முளைப்பதில்லை

116 ஆகவே, முத­ல் அஞ்ஞானம் எதுவென்று அடையாளம் கண்டுபிடி. அஞ்ஞானத்தின் பிடியி­ருந்து விடுபடவேண்டுமெனில், அதன் இயல்பையும் விவரங்களையும் தெளிவாகப் புரிந்துகொள். பக்தியே இதை அறிய உதவும் சாதனம்.

117 கால்கள் முதலாக வெளிவந்து பிறந்த குழந்தையின் கண்களுக்கு மை தடவினால், பூமியினடியில் இருக்கும் புதையல் அதன் கண்களுக்குப் புலப்படும். அதுபோலவே, பக்தியிடம் சரணடைந்து கைதூக்கிவிடும்படி வேண்டிக்கொண்டால், அஞ்ஞானம் அகலும்; ஞானம் உதயமாகும்.

118 ஞானம் பெறுவதே தன்னையறிதல். அதற்கு மூலாதாரம் அஞ்ஞான நிவிர்த்தி. ஆனால், இறைவனிடம் பக்தி ஏற்படாமல் மாயையின் சக்தியை வெல்லமுடியாது.

119 ஞானமும் அஞ்ஞானமும் கலந்து இருக்கின்றன. கற்களைப் பொறுக்கி எடுத்த பின்னரே அரிசியைக் கொதிநீரில் இடுவதைப்போல, அஞ்ஞானத்தை ஜாக்கிரதையாகப் பிரித்தெடுக்க வேண்டும்.

120 எல்லாப் பொருள்களிலும் எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பதோடல்லாமல், ஞானயக்ஞம் போன்ற உபாசனைகளைச் செய்பவர், பிரபஞ்சத்தையே முகமாக உடைய ஸ்ரீகிருஷ்ணனைக் காண்கிறார். ஞானத்தைப் பெற அவர் அஞ்ஞானத்தை எரித்துவிடுகிறார்.

121 இப்பொழுது ஞானயாகத்தின் சொரூபத்தைக் கவனியுங்கள். ''அஹம் ப்ரஹ்ம அஸ்மி (நான் முழுமுதற்பொருளாக இருக்கிறேன்)ஃஃ என்னும் வேதவசனமே இதன் வேள்வித்தூண். பஞ்சபூதங்களே (நிலம், நீர், தீ, காற்று, வானம்) யாகமண்டபம். ஜீவேசுவர பேதமே (இறைவனுக்கும் அவனுடைய படைப்பான ஜீவராசிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடே) வேள்விக்குரிய விலங்கு.

122 ஐம்புலன்களும் பஞ்சப்பிராணன்களும் இந்த யாகத்தில் இடவேண்டிய பண்டங்கள். மனமும் புத்தியும் யாககுண்டம். ஞானமெனும் அக்கினியால் யாககுண்டத்தில் வேள்வித் தீ மூட்டப்படுகிறது.

123 இங்கு, யாகம் செய்பவர் எஜமானர். அவர் அஞ்ஞானத்தைத் தீயில் நெய்யாகப் பொழிகிறார். ஆத்மானந்தத்தில் அவர் மூழ்குவதே அவபிருத ஸ்நானம் (வேள்வியை வெற்றிகரமாக முடித்தபின் செய்யும் நீராடுகை).

124 தாத்பர்யம் என்னவென்றால், அஞ்ஞானம் என்னும் நெய் இல்லாது, ஞானமெனும் அக்கினியைத் தூண்டமுடியாது. இத் தீயால் ஜீவேசுவர பேதத்தை அழித்தால்தான், அபேத ஞானம் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே எனும் ஞானம்) வெளிப்படும்.

125 முகம் பார்க்கும் கண்ணாடி மாசுபடுவதால் மங்குவது போலவும், புகைமூடுவதால் அக்கினியின் பிரகாசம் குறைவது போலவும், காமம் குரோதம் ஆகிய தீவிர உணர்வுகளால் தோற்கடிக்கப்படும் ஞானம், அஞ்ஞானத்தால் மூடப்படுகிறது.

126 ராஹு சந்திரனைப் பிடிப்பது போலவும் (கிரஹணம்), நீரைப் பாசி மூடுவது போலவும், சுயஞ்ஜோதியான ஞானத்தை மாயை மூடிவிடுகிறது.

127 மஹா பெரிய ஞானிகளும் மனம் தடுமாறி அதோகதி (தாழ்நிலை) அடைகிறார்கள். விடுபடும் உபாயம் தெரிந்திருந்தும், இஷ்டம்போல் நடந்துகொள்கின்றனர்.

128 அவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள். ஸத்சங்கத்தை விடுத்து, விலக்க வேண்டியவர்களின் கூட்டுறவை நாடுகிறார்கள். துர்ச்சங்கம் அவர்களைப் பலமாகப் பிடித்துக்கொள்கிறது. துர்ச்சங்கத்தின் (கெட்ட சேர்க்கையின்) பலவந்தத்தால் இஷ்டப்படி நடந்துகொள்கின்றனர்.

129 வானப்பிரஸ்தத்தை1 ஏற்றுக்கொண்ட பிறகு இல்லறத்தில் நுழைந்து, எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்கின்றனர். எதை வெறுத்து ஒதுங்கினார்களோ அதையே (இல்லறத்தையே) திரும்பவும் ஆவலுடன் ஏற்றுக்கொள்கின்றனர்.

130 பாவம் செய்யக்கூடாது என்று முயற்சி செய்பவர்கள் விதிவசத்தால் பாவம் செய்யத் தூண்டப்படுகிறார்கள். இந்த நிலையைப்பற்றி என் சொல்வது? இவர்களையும் ஞானியரில் ஒருவகை என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமோ

131 பாவத்தின் நிழலையும் தொடாது வாழவேண்டும் என்று விரும்பும் மஹா ஞானியுங்கூட, விளக்கால் கவரப்படும் விட்டில் பூச்சியைப் போன்று, செய்யத் தகுந்த காரியம் எது, செய்யத் தகாத காரியம் எது, என்று சீர்தூக்கிப் பார்க்க மறந்துவிடுகிறார்.

132 பாவம் செய்வது அஞ்ஞானம். இதை அவர் நன்கு அறிவார். ஆயினும், ஆசைகளின் உந்துதலால் அவர் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.

133 இவ்வகையான செயல்கள் அனைத்தும் ஆசையின் சேட்டைகள். ஆசையே எல்லா அனர்த்தங்களுக்கும் காரணம். நிறைவேறாத ஆசை கோவரூபமும் ஏற்கும்.

134 ஆசையின் ஓட்டம் தடுக்கப்படும்போது ஆசையே கோவமாக மாறும். மோட்ச மார்க்கத்தின் ஒவ்வொரு படியிலும் தடுக்கிவிடுவது இதுவே. இந்த இயல்பே ஞானத்துக்குத் தடை.

135 ஜீவன் ஆசையாலும் கோவத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது. இவ்வுணர்ச்சிகள் ஞானத்துடன் கூடவே இருந்து, அதை மறைத்தவாறு, பிரம்ம சொரூபத்தின்மேல் வட்டமிடுகின்றன.

136 இவ்வுணர்ச்சிகள் நம்மைத் தண்ணீரில்லாமலேயே மூழ்கடிக்கின்றன; அக்கினி இல்லாமலேயே எரித்துவிடுகின்றன; ஆயுதம் இல்லாமலேயே கொன்றுவிடுகின்றன; கயிறு இல்லாமலேயே கட்டிவிடுகின்றன.

137 இவற்றுக்கு எதிராக எந்த ஞானியாலும் தாக்குப்பிடிக்க இயலாது. இவை எந்த ஞானியையும் பந்தயத்தில் வென்றுவிடும். ஒரு பிராணிக்குத் தெரியாமலேயே அதை விழுங்கிவிடும். இவை ஊழிக்காலத்தையும் உண்டாக்கும் சாமர்த்தியம் படைத்தவை.

138 சந்தனமரத்தின் வேரில் காலஸர்ப்பம் (பாம்புருவில் மரணம்) சுருட்டிக்கொண்டு படுத்திருப்பதைப்போல, ஞானமெனும் கர்ப்பத்தை ஆசையும் கோவமும் பனிக்குடமாய்ச் சூழ்ந்திருக்கின்றன.

139 புலனுறுப்புகளும் புத்தியும் மனமும் ஆசையின் இல்லங்கள். மாயை, அவற்றின் மூலமாகச் செயலாற்றி ஞானத்தை மறைத்து ஜீவனை மோகவசப்படுத்துகிறது.

140 உமக்குச் சந்தனம் வேண்டுமென்றால், பாம்பை அழிக்கவும். ஆசை, கோவம் ஆகிய உணர்ச்சிகள் வேய்ந்திருக்கும் முகமூடியை எடுத்தெறிந்து ஞானப்பொக்கிஷத்தைப் பெறவும்.

141 பாம்பைக் கொல்லாமல் யாராலாவது சந்தனத்தை அடைய முடியுமா? கருநாகத்தை ஸம்ஹாரம் செய்யாமல் (அழிக்காமல்) யாரால் பூமிக்குள் இருக்கும் புதையலை எடுத்து லாபமடைய முடியும்?

142 அதுபோலவே, ஆத்மஞானம் பெறவும் பரம்பொருளை அடையவும் அவற்றை மறைத்திருக்கும் மாயையாகிய திரையை விலக்குவதுதான், அதற்காக நாம் செய்யவேண்டிய ஒரே சாதனை.

143 ஆதலால், முதலாவதாகப் புலன்களை வெல்லவேண்டும். அந்த வெற்றி, ஆசையையும் கோவத்தையும் நிர்த்தூளியாக்கும் (முற்றும் அழிக்கும்). ஆசை, கோவம் இவற்றின் ஆதீனத்தில் ஜீவன் இருப்பதால், அஞ்ஞானம் ஞானத்தை முழுவதுமாக மூடியிருக்கிறது.

144 தேகத்தைக் காட்டிலும் புலன்கள் சூக்குமம்; புலன்களைக் காட்டிலும் மனம் சூக்குமம்; மனத்தைக் காட்டிலும் புத்தி சூக்குமம்; புத்தியைக் காட்டிலும் பரம்பொருள் சூக்குமம்.

145 உலகியல் தருமநீதிகள் அனைத்திற்கும் அப்பால் இருப்பது, உயர்ந்ததிலும் உயர்ந்ததான, என்றும் நிலைத்திருக்கும் பரம சத்தியம். அதுவே மிகச் சிறந்த நன்மையை அளிக்கும் பரமாத்மா. அதுவே அமிருதம் போன்ற நம் உண்மையான உருவம்.

146 அந்தத் தத்துவமே தூயதும் ஞானமடைந்ததும் என்றும் அழியாததும் தளைகளி­ருந்து விடுபட்டதுமாகிய பேதமற்று நிற்கும் நிலை. அந்தத் தத்துவமே பரமானந்தத்தில் உறைகிறது. அதுவே நம்முள் இருக்கும் சைதன்னியம்.

147 பஞ்சீகரணம் (ஐம்பூதக் கூறுகளின் சேர்க்கை) என்று எது அழைக்கப்படுகிறதோ அது மாயையின் ரூபதரிசனம். அதைப் புரிந்துகொள்ள உதவுவன அத்யாரோபம்1, அபவாதம்2 என்னும் இரண்டு தத்துவங்களே.

148 பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று கலக்காத நிலையில், பஞ்சதன்மாத்திரைகள்3 என்று அழைக்கப்படுகின்றன. இந்திரியங்களையும் மனத்தையும் புத்தியையும் ஆத்மாவின் சூக்கும சரீரத்தையும் பிராணனுடன் ஒன்றுசேர்ப்பதே அவற்றின் செயல்.

149 பஞ்ச பூதங்களும் ஒன்றுசேர்ந்த நிலையைப் பாருங்கள். அந் நிலையில்தான் விராட்புருஷன் உதயமானான். பரமாத்மாவின் ஸ்தூல தேகத்தையே (பருவுடலையே) ஞானியர் விராட்புருஷன் என்று அழைக்கின்றனர்.

150 பருவுடல், சூக்குமவுடல் ஆகிய மனத்தோற்றங்களுக்குக் காரணம், சுயசொரூபம் பற்றிய அஞ்ஞானமே. பருவுடல், அனைத்துப் படைப்பிற்கும் ஆதாரமான பொருளி­ருந்த தோன்றியது என்பதையும் உடலுக்குக் காரணம் ஆத்மாவே என்பதையும் அறிவீர்களாக.

151 கியாதிபெற்ற (புகழ்பெற்ற) காரணசரீரம் (ஐம்பூதச் சேர்க்கையால் பருவுடலுக்குக் காரணமாயுள்ள நுண்ணுடல்) சைதன்னியத்தின் பிரதிபிம்பமே. அது கேவலம் அஞ்ஞானத்தால் விளைந்தது. அதன் உண்மையான பெயர், 'அனைத்துப் படைப்பிற்கும் ஆதாரமான பொருளின் தோன்றாநிலைஃ என்பதே.

152 இதற்குக் காரணம் ஆத்மாபற்றிய அஞ்ஞானமே. ஆத்மா, அவயவங்களுடன் சேர்ந்ததும் இல்லை; சேராததும் இல்லை; இரண்டுமே இல்லை. பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றே எனும் ஞானத்தால்தான் இந்த தேகத்தை அழிக்க முடியும்.

153 தன்னில் மூழ்கியிருப்பதே மோட்சம். இதைத் தவிர மோட்சம் ஏதும் இல்லை. தன்னை அறிவதே மோட்சம்

154 பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றேயெனும் ஞானத்தால்தான் அஞ்ஞானத்தி­ருந்து விடுதலை கிடைக்கும். ஆகவே, அஞ்ஞானம் எது என்பதைப் புரிந்துகொள்ள அதுபற்றிய விவரணம் அவசியமாகிறது.

155 அஞ்ஞானத்தால் NTp4 விளைந்தது. NTp, பிரம்மத்திற்கு மாறுபாட்டைக் கொணர்ந்தது. பிரம்மம், 'ஸத்ஃ என்று பெயரிடப்பட்டது. இவ்வாறாக அது பேசுவதற்கு உரிய பொருளாகியது

156 ஆதியில் அது புலன்களின் உணர்வுக்கு அப்பாற்பட்ட பொருளாக இருந்தது. ஆயினும், பேசும் சக்தி அதை புத்தியால் கிரஹிக்கக்கூடிய பொருளாக மாற்றியது. அதன் பிறகே அது மனத்துள் புகுந்து ஓங்காரமாக வெளிப்பட்டது.

157 எவர் ஓங்கார பிரம்மத்தை தியானம் செய்தவாறு இறைவனை நினைத்துக்கொண்டே தேகத்தை உதறுகிறாரோ, அவர் பிறவி எடுத்ததன் பயனை அடைகிறார்.

158 ஓங்காரமென்னும் ஒ­வடிவ பிரம்மத்தின் மூலமாகத் தோன்றாநிலையில் இருந்த பொருள் தன்னையே தோற்றுவித்துக்கொண்டது. தோன்றாநிலையி­ருந்த பொருளி­ருந்து 'மஹத்ஃ தத்துவம் (அறிவுத் தத்துவம்) தோன்றியது. தன்னுடன் அஹம்பாவத்தையும் (நான் என்னும் எண்ணம் -- உள்ளச் செருக்கு) கொணர்ந்தது

159 அஹங்காரத்தில் பஞ்சதன்மாத்திரைகள் இருக்கின்றன. அவற்றி­ருந்து பஞ்சபூதங்கள் வெளிவருகின்றன. பஞ்சபூதங்களின் வயிற்றி­ருந்து இவ்வுலகம் பிறக்கிறது.

160 நாம் இவ்வுலகத்தில் காணும் உருவங்களும் லட்சணங்களும், அஞ்ஞானம் மாயை இவற்றின் வெளிப்பாடுகளே. அஞ்ஞானத்தை அழிக்கும் நிமித்தம், அதைப்பற்றி விவரிப்பது அவசியமாகிறது.

161 மிகத் தூயதும் நிர்மலமானதுமான ஆத்மாவின் சுயசொரூபத்தையும் அதி­ருந்து வேறுபட்ட சபலையும் கலக்கமுடியாது.

162 லட்சியப் பிரம்மம் வேறுபட்டது என அறியவும். அது, வார்த்தைகளால் விவரிக்க முடிந்த பிரம்மத்தி­ருந்து மிகவும் வேறுபட்டதாகும். ஆதலால், இந்த அஞ்ஞானத் திரைகள் உபதேச பலத்தால் அகற்றப்படவேண்டும்.

163 தூக்கத்தில் ஏற்படும் கனவின்போது கண்கள் மூடியிருந்த போதிலும், மனம் மூன்று உலகங்களையும் சுற்றிவருகிறது. இவை அனைத்திற்கும் அஞ்ஞானமே காரணம்.

164 ஒருபொருள் பார்ப்பதற்கு ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், உண்மையில் அது வேறொரு பொருள். உண்மையில் கயிறு; ஆனால், கண்ணுக்குத் தென்படுவது பாம்பு தன்னுள் வெள்ளி இருப்பதுபோலக் கிளிஞ்சல் தோற்றமளிக்கிறது அன்றோ

165 காண்பது சூரியனின் ஒளிக்கிரணங்களைத்தான். ஆயினும், மக்கள் அதைக் கானல்நீர் என்று சொல்கின்றனர். இது மாயையின் விளையாட்டு. இதன் எதிரில் ஞானிகளும் பலமிழந்துவிடுகின்றனர்.

166 ஒரு தீவட்டியைக் கையிலேந்தி வேகமாக யாராவது சுழற்றினால், அக்கினி வட்டம் போன்ற ஒரு தோற்றம் உருவாகிறது. இதுவும் மாயையின் விளையாட்டு.

167 உண்மையில் அது ஒரு தீப்பந்தம். சக்கர உருவில் தீ இருப்பதற்கு இடமேயில்லை. அதுபோலவே, மாயையும் மோஹமும் சேர்ந்துகொண்டு தேவையில்லாத இந்த உலகியல் வாழ்வை உற்பத்தி செய்திருக்கின்றன.

168 இவ்வாறான நிர்த்தாரணத்தால் பிரமையை ஓட்டிவிட்டால், உலகியல் வாழ்வு நொடிப்பொழுதில் மங்கிப்போகிறது. 'நான் இவ்வுடல்தான்ஃ 'என் வீடுஃ 'என் மனைவிஃ ஆகியன எல்லாம் ஒரு பயனற்ற பயிற்சியின் தாழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

169 புத்திரன், ஆடுமாடுகள் போன்ற ஆசாபாசங்களால் முழுக்க முழுக்கச் சிக்கிக் கொண்டவர்கள், தங்களைப் பண்டிதர்களென்றும் ஞானிகளென்றும் சொல்­க் கொண்டாலும், லவலேசமும் (சிறிதளவும்) சுகமடையமாட்டார்கள்.

170 அவர்கள், 'நான் சாஸ்திரங்களை அறிந்தவன், பேரறிவு படைத்தவன், எனக்கு நிகர் எவரும் இல்லைஃ என்று தமக்குள்ளே மிகச் செருக்குற்று வாழ்வதால் எப்பொழுதும் நிம்மதியின்றி வாழ்கின்றனர்.

171 இதற்கே, மாயை என்றும், அஞ்ஞானம் என்றும், அவித்யை என்றும், பிரதான தத்துவம் என்றும் பெயர். இதையே ஞானியர் ஆரம்பத்தில் எடுத்தெறிகின்றனர். பின்னர் ஞானத்தை மேலழும்பும்படி செய்கின்றனர்.

172 ஞானம் சுயஞ்ஜோதி. அதற்கு உபதேசம் ஏதும் தேவையில்லை. அஞ்ஞானம் விலக்கப்பட்டுவிட்டால், ஞானத்தின் ஜோதி தானாகவே வெளிப்படுகிறது.

173 மின்னும் ரத்தினம் ஒன்று குப்பையில் புதைந்துபோய் ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டால் அதைப்பற்றிய நினைவும் மறைந்துவிடுகிறது.

174 பிற்காலத்தில், கர்மமும் தர்மமும் ஒன்றுகூடிய அதிருஷ்டசா­யின் கையில் அது அகப்படும். குப்பையில் புதைந்து கிடந்ததால் அது தன்னுடைய பிரகாசத்தை இழந்துவிட்டதுபோல் தோன்றலாம்.

175 ஆயினும், அழுக்கை அகற்றிச் சுத்தம் செய்தவுடன் ரத்தினம் தன்னுடைய சுயம்பிரகாசத்தை திரும்பப் பெற்றுவிடும். ஞானத்தின் நிலையும் அவ்வாறே.

176 அழுக்கும் புழுதியும் அஞ்ஞானம். இந்த அஞ்ஞானமே ஞானத்தைச் சூழ்ந்துகொண் டிருந்தது. அழுக்கை விலக்கிவிட்டால் ரத்தினம் இயல்பாகவே மின்னும்.

177 நித்தியமான வஸ்து எது? அநித்தியம் எது? இது சம்பந்தமான விவேகமே பாவச் செயல்களை நாசம் செய்கிறது. தூய்மையையும் நற்குணங்களையும் அளிக்கிறது. இவ்விவேகமே ஞானத்தையும் மலரச் செய்கிறது.

178 இவ்வுலகம் மாயையின் சந்தை. அசலும் போ­யுமான பொருள்கள் அபாரம். போ­யை அசல் என்று நம்பிப் பொருள்களை வாங்கும் மனிதர்களும் அநேகம்.

179 அசலையும் போ­யையும் அடையாளம் கண்டுகொள்வதில், திறமைமிக்கவர்களும் தடுமாறுகின்றனர். ஆகவே, வஞ்சத்தின் லட்சணங்களைப் (அடையாளங்களைப்) புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

180 இதற்கென்றே ஒரு நிபுணரைத் துணையாகக் கொள்ளவேண்டும். அவர் (ஸத் குரு), போ­ எவ்வாறு அசல்போலத் தோற்றமளிக்கிறது என்பதை, பார்த்தவுடனே காட்டிக்கொடுப்பார். அஞ்ஞானம் இவ்வாறாக அழியும்.

181 அஞ்ஞானம் அகன்றபின் ஞானமே மிஞ்சும். இயல்பாகவே மாயை நீங்கிவிடும். மீதியிருப்பது உண்மையான வஸ்து என்றறிக. பிரத்யட்சத்திற்குப் (கண்ணெதிரில் காண்பதற்குப்) பிரமாணம் தேவையில்லை.

182 புத்தியின் கண் பிரகாசமாக இருக்கிறது. ஆயினும், அது கற்பனை என்னும் இருளால் மூடப்பட்டிருக்கிறது. இந்த இருள் உபதேசத்தால் விலகுகிறது. பின்னர் மிஞ்சியிருப்பது முழுவதும் ஞானமே.

183 வழியில் நாம் பார்க்கும் பொருள் உண்மையில் ஒரு மலர்மாலை. ஆயினும், அந்திமயங்கும் நேரத்தில் அது ஒரு பாம்புபோலத் தெரிகிறது. இதற்குக் காரணம் அஞ்ஞானப் படலமே.

184 பாக்கெட்டில் இருக்கும் டார்ச்சு விளக்கில் மின்சார விசையைப் பாயச்செய்தால், அஞ்ஞானம் மறைந்து உண்மையான சொரூபம் வெளிப்படுகிறது. பாம்பென்னும் மாயத் தோற்றம் விலகிவிடுகிறது.

185 ஆகவே, அஞ்ஞானத்தால் ஏற்படக்கூடிய அபாயத்தை விலக்க, உபதேசமே உபாயம். ஞானிகள் அதன்பொருட்டே அஞ்ஞானம் எது என்பதை உபதேசம் செய்வதில் தங்களுடைய உடல்களைத் தேய்க்கின்றனர்.

186 உலகவாழ்வில் ஏற்படும் நல்லதும் கெட்டதுமான நிகழ்வுகளுக்கு அஞ்ஞானத்தால் நாம் செய்த பழவினைகளே காரணம். இதனை முத­லேயே அறியவேண்டியது அவசியம்.

187 'ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம.ஃ (முழுமுதற்பொருள் ஸத்தியமானது; ஞானமயமானது; என்றும் நிலைத்திருப்பது.) மாயையும் அவித்யையும் மற்றவை அனைத்தும் பிரமைகள். எப்பொழுது பிரமைகள் விலக்கப்படுகின்றனவோ, அப்பொழுதுதான் ஞானத்தைப்பற்றிய குழப்பங்கள் அகலும்.

188 தேகாபிமானத்தை ஜெயிக்காத மனிதரை ஞானமுள்ளவர் என்று யார் சொல்லுவார்? அபிமானத்தின் (பற்றின்) அதிஷ்டானத்திற்கு (நிலைக்களத்திற்கு), 'அஞ்ஞானமே உருவானதுஃ என்று பெயர்.

189 நாம் காணும் இந்த வசீகரமான உலகம் மாயையால் நிறைந்தது என்றும், மாயையில் மூழ்கியது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வுலகுக்கு மூலாதாரம் அஞ்ஞானமே.

190 உலகம் அஞ்ஞானத்தால் உற்பத்தி ஆகியது; அதன் வைபவமும் அஞ்ஞானத்தால் விளைந்ததே. இருப்பது ஒன்றே எனினும், அநேக வஸ்துகள் இருக்கின்றன என்னும் உணர்வின் விளைநிலம் அஞ்ஞானமே.

191 ஒளியும் இருளும் கலக்கும் அந்திநேரத்தில், போகும் வழியில் இருக்கும் கயிறு பாம்பாகத் தெரிகிறது. இருப்பது கயிறானாலும் பாம்புபோலத் தெரிந்து பெரும்பயத்தை விளைவிக்கிறது.

192 பாம்பென்னும் தோற்றத்தை உண்டுபண்ணுவது ஞானத்தை மறைக்கும் அஞ்ஞானமே. அந்த அஞ்ஞானத்தை அகற்றாதவரையில் மனம் பயத்தி­ருந்து விடுபடாது.

193 சிலருக்குப் பூமாலையாகத் தெரிகிறது; சிலருடைய கண்களுக்குக் குச்சியாகத் தெரிகிறது. இவ்வாறே சகலமான பொருள்களும் தெரிகின்றன. அனைத்தும் பிரமையின் எல்லையற்ற விளைவுகளே.

194 ஆகம வசனங்களை (வேதசாஸ்திரங்களை) அனுசரித்துச் சிரத்தையுடன் செயல்புரியும் ஆஸ்திகரே பிரம்ம ஞானம் பெறத் தகுதியுள்ளவர். நாஸ்திகர் எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் அதைப் பெற இயலாது.

195 இவ்வுலகை விபரீதமாகப் (எல்லாப் பொருள்களிலும் இறைவன் உறைகின்றான் என்பதை ஏற்காமல்) பார்ப்பவர்கள் பிரமை பிடித்தவர்கள். இவர்களால் ஜனனமரணச் சுழ­­ருந்து விடுபடவேமுடியாது. ஆன்மீக நாட்டமுடைய சான்றோர்களால் சுலபமாக அடையக்கூடிய பிரம்ம தத்துவம், இவர்களுக்கு எட்டாக்கனி.

196 இங்கு, வெறும் சொற்பொழிவு உதவாது; வேதங்களை முழுக்க முழுக்க மனப்பாடம் செய்வதும் உதவாது; நூல் பல கற்கப் பயன்படும் மேதையும் உதவாது; நூல் பல கற்றவர்களிடமிருந்து பெறும் கேள்வி அறிவும் உதவாது.

197 சொற்களி­ருந்து அவற்றின் பொருளைத்தான் அறிய முடியும். அவற்றின் மூலமாக வஸ்து விஞ்ஞானத்தை (இறைவனது உண்மைத் தன்மையை) எப்படி அறிய முடியும்? புத்தி அதிவிவேகமுடையது. ஆனால், இறைவனோ புத்தியின் சக்திக்கு அப்பாற்பட்டவன்.

198 சுருதிகள் (வேதங்கள்) பேராவலுடன் முயன்று இறைவனைத் தேடின; ஆயினும், வஸ்து (இறைவன்) இருக்கும் இடத்தைக் காணமுடியவில்லை. இதுவே வஸ்துவின் வைபவம் (பெருமை). புத்திசக்தியால் ஓர் எல்லைக்குமேல் செல்ல இயலாது.

199 வஸ்துவைப்பற்றி ஆறுசாஸ்திரங்களும் ஒன்றுகூடி, வாதங்களும் பிரதிவாதங்களும் செய்து சோர்வடைந்தன. ஆத்மவஸ்துவோ தான் இருக்கும் இடத்திலேயே இருந்தது. சொற்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

200 அதன் முன்னிலையில், பெரும் பண்டிதர்களும் சூரியவெளிச்சத்தில் இருக்கும் விளக்குப்பூச்சிபோல் ஒளியிழந்துவிடுவர். ஒருமுறை வஸ்துவை அடைந்துவிட்டால் எல்லா சப்தஜாலங்களும் (சொற்சிலம்பங்களும்) அடங்கிவிடும்.

201 பாருங்கள் இவ்வுலகில், இரவின் இருட்டில், அனைத்து வேலைகளும் விளக்கொளியின் உதவிகொண்டு செய்யப்படுகின்றன. சூரியன் உதித்தபின் விளக்கு யாருக்கு வேண்டும்?

202 இவ்வாறாக, பேசும் சக்திக்கு உட்படாத விஷயத்தை உபதேசம் செய்வது எப்படி? இக் காரணத்தால், உருவகக் கதை சொல்பவரின் நோக்கம் அஞ்ஞானத்தை அகற்றுவதாகவே இருக்க வேண்டும்.

203 'இருப்பது ஒன்றேஃ என்னும் புத்தியுடன் செயல்பட்டு உபாசனை (தீவிர வழிபாடு) செய்பவருக்கே ஆத்மா பிரசன்னமாகிறது. உண்மையான தத்துவப் பிரகாசத்தை அளித்துத் தன்னை நெருங்க உபாசகரை அனுமதிக்கிறது.

204 ஆத்மாவையே பரமாத்மாவாக தியானம் செய்து, இரண்டும் ஒன்றே என்ற சிந்தனையில் திளைத்தவாறு எவர் உபாசனை செய்கிறாரோ, அவருக்கு ஆத்மா பிரசன்னமாகிறது (காட்சியளிக்கிறது).

205 ஆத்மாவுக்கு வேறு வழியே இல்லை. அது பிரசன்னம் ஆகியே தீரவேண்டும். சாதகர் தமக்குள்ளேயே தேடுகிறார் என்பதைக் காணும் ஆத்மா, அவருக்குக் கிருபை செய்கிறது.

206 ஒரு சமயச் சொற்பொழிவுத்தொடரை முடிக்கும் தறுவாயில், கேட்டதால் ஏற்பட்ட சிரமத்திற்காகத் தம்மை மன்னிக்கும்படி சொற்பொழிவாளர் சபையை வேண்டுவார். இது சான்றோர்களால் எங்கும் அனுசரிக்கப்படும் சம்பிரதாயம்.

207 ஆனால், ஸத் சரித்திரத்திற்கு இந்தத் தொன்றுதொட்ட வழக்கம் பொருந்தாது. இதை ஆக்கிய பெருமை என்னைச் சாராது. பேனாவை என்னுடைய கையில் கொடுத்து, ஸாயீ தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதிக்கொண்டார்.

208 ஆகவே, இந் நூ­ன் ஆசிரியன் நான் அல்லேன். என்னுடைய செய்கையால் இங்கு யாரும் சிரமப்படவில்லை. 'சிரமத்திற்கு மன்னிக்கவும்ஃ என்று நான் கதைகேட்டவர்களை வேண்டினால், நூல் செய்த பெருமை என் தலையில் விழும்

209 இங்கு, எந்த பூஷணமும் என்னைச் சாராது; தூஷணமும் (நிந்தையும்) என்னைச் சாராது. எதற்கு ஸாயீயே கர்த்தாவோ, அந்த விஷயம் ஸம்பூர்ணம் ஆகிறது.

210 ஸாயியின் அனுமதியைப் பெற்றபின், அஞ்ஞானத்தைப்பற்றிய இந்த விவரணத்தை எல்லாரும் கேட்பதற்காக, அவர் எவ்வாறு எனக்கு விளக்கினாரோ அவ்வாறே நான் எழுதியிருக்கிறேன்.

211 தம்முடைய வைபவத்தையும் பிரதாபத்தையும் கௌரவத்தையும் வெளிப்படுத்து வதற்காக, குருதேவர், தாமே அடியேன் மனத்தில் புகுந்து இவ்விஷயத்தின் (அஞ்ஞானத்தின்) நுணுக்கங்களைப் பிரகாசப்படுத்தினார்.

212 இக் காவியத்தைச் சிலர் தூஷணம் (நிந்தை) செய்யலாம். சிலர் இதை எனக்குப் பெருமை சேர்க்கும் பூஷணமாகக் (அணிகலனாகக்) கருதலாம். எது எப்படியிருப்பினும், இருசாராருமே என்னுடைய வந்தனத்திற்கு உரியவர்கள்; அவர்கள் அனைவரும் நாராயணரின் வடிவங்கள்.

213 தம் பக்தர்களின் உயர்ந்த நன்மைக்காக, ஸாயீ தம்முடைய சரித்திரத்தைத் தாமே நிர்மாணம் செய்தார். ஹேமாடின் கையைத் தம் கையால் பிடித்துக்கொண்டு தம்முடைய காதையை எழுதவைத்தார்.

214 சரீரத்தை அவர் ஏற்றுக்கொண்டது உலகத்திற்கு அநுக்கிரஹம் செய்வதற்காக; குதர்க்கத்தையும் துராக்கிரஹத்தையும் (வன்முறையையும்) அழிப்பதற்காக; உலக மக்களுக்கு நற்பாதை காட்டி ரட்சிப்பதற்காக.

215 ஹேமாட் அவருடைய பாதங்களில் அனன்னிய (வேறெதிலும் நாட்டமில்லாத) பா(ஆஏஅ)வத்துடன் விழுந்து வணங்குகின்றேன். தொடரப்போகும் சுவை மிகுந்த கதைகளை ஒருமுகப்பட்ட மனத்துடன் கேட்குமாறு கதைகேட்பவர்களை வேண்டுகிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'அஞ்ஞானத்தை அழித்தல்ஃ என்னும் ஐம்பதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.


Do you want to ask questions and share ideas about your kid's education, parenting and more? Join Tamilcube Kids, our exclusive premium Facebook group now, and start meeting other Singapore Indian parents with similar interests.

Share:

Download Free Tamilcube School App:
Home Tamil Tuition Tamil Testpapers Tamil eLearning Calendar Books Astrology
Dictionaries : Tamil Hindi Malayalam Telugu Marathi Sanskrit Kannada More...
Baby Names : Tamil Hindi Sanskrit Telugu Kannada Muslim Malayalam Bengali Marathi Gujarati Marathi
GK : GK questions TNPSC More...
More...