Tamil tuition | Tamil assessment books | Tamil eLearning
Tamilcube.comTamilCube
Learning made fun & easy
Join Tamil tuition at Bedok, Jurong East and Little India | Learn Tamil online at World's first Tamil ELearning Platform.Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
அத்தியாயம் - 46

46. காசி-கயா புனிதப் பயணம் --
இரண்டு ஆடுகளின் காதை
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ஸ்ரீ ஸாயீ பாபா உம்முடைய பொற்கமலப் பாதங்கள் புனிதமானவை; உம்முடைய நினைவு புனிதமானது; உம்முடைய தரிசனம் புனிதமானது. இம் மூன்றும் எங்களைக் கர்மத்தின் தளைகளி­ருந்து விடுவிக்கக்கூடிய சக்தி பெற்றவையாகும்.

2 தற்காலம் உருவமற்ற நிலையில் இருந்தாலும், விசுவாசத்துடனும் பக்தியுடனும் உம்முடன் ஒன்றிவிட்டால், ஸமாதியிலுள்ள உமது ஜோதி கண்மலர்கிறது. பக்தர்கள் இன்றும் இதை அனுபவபூர்வமாக உணர்கின்றனர்.

3 எவ்வளவு முயற்சி செய்யினும் எங்கள் கண்களுக்குப் புலப்படாதவாறு செய்துவிடுகிறீர்; அவ்வளவு மெல்­யதான நூலைப் பிடித்திருக்கிறீர். எப்படியிருந்தால் என்ன? இந்த தேசத்தில் இருப்பினும், அல்லது வேறு தேசத்தில் வசிப்பினும், பக்தர்களை இந் நூலால் உம் திருவடிகளுக்கு இழுத்துவிடுகிறீர் அல்லீரோ?

4 அவ்வாறு இழுத்துவந்து அவர்களைக் கட்டியணைக்கிறீர், ஒரு தாய் தம் குழந்தைகளைப் போஷிப்பதுபோல சிரமமின்றி அவர்களை சுலபமாகப் பராமரிக்கிறீர்.

5 நீர் எங்கிருக்கிறீர் என்று எவருக்கும் தெரியாத வகையில் நூலை இழுக்கிறீர்; ஆனாலும், விளைவுகள் என்னவோ, பக்தர்களுக்குப் பின்னால் நீர் எந்நேரமும் அரணாக நிற்கிறீர் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளும்படி செய்கின்றன.

6 மெத்தப் படித்த பண்டிதர்களும் சாமர்த்தியசா­களும் அழகர்களும் அகந்தையால் இவ்வுலகவாழ்வெனும் சேற்றில் மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் நீரோ, எளிமையும் நம்பிக்கையும் உடையவர்களுடனும், அப்பாவி மக்களுடனும் உம்முடைய சக்தி கொண்டு விளையாடுகிறீர்.

7 அகமுகமாக வியூகங்களை வகுத்து எல்லா விளையாட்டுகளையும் நீர் ஆடுகிறீர்; ஆனாலும், வெளிப்பார்வைக்குத் தனிமைவிரும்பி போலவும் சம்பந்தமில்லாதவர் போலவும் பாசாங்கு செய்கிறீர். எல்லாக் காரியங்களையும் செய்துவிட்டு 'நான் செயலற்றவன்ஃ என்று சொல்­க்கொள்கிறீர். உம்முடைய செயல்முறைகளை அறிந்தவர் எவரும் உளரோ

8 ஆகவே, நாங்கள் எங்களுடைய எண்ணம், சொல், செயல், இவற்றைத் தங்கள் பாதகமலங்களில் செலுத்திவிட்டு இடைவிடாமல் உம்முடைய திவ்விய நாமத்தை ஜபிப்போமாக அவ்வழியேதான் எங்களுடைய பாவங்கள் கழுவப்பட்டு விலகும்.

9 வேண்டியவர்களுக்கு வேண்டியதை அளிக்கிறீர்; வேண்டுதல் ஏதும் இல்லாதவர்களுக்குப் பரமபதத்தை அளிக்கிறீர். பக்தர்களுக்கு இனிமையானதும் மகிழ்ச்சிகரமானதும் மிக்க சுலபமானதுமான வழியன்றோ உமது நாமம்

10 உமது நாமஜபத்தினால் பாவம் அழிகிறது; ராஜஸ குணமும் தாமஸ குணமும் மறைகின்றன. ஸத்துவ குணம் மேலோங்குகிறது. இதில் சந்தேகம் ஏதுமில்லை. படிப்படியாக வாழ்வில் தருமநெறி வளர்கிறது.

11 கடவுள் பக்தியும் அறநெறி வாழ்வும் இவ்வாறு விழித்துக்கொண்ட நிலையில், பற்றற்ற மனப்பான்மை வேகமாகத் தொடர்கிறது; புலன் அவாக்கள் அறவே அழிக்கப்படுகின்றன; ஆத்மஞானம் அக்கணமே பளிச்சென்று தோன்றுகிறது.

12 விவேகத்துடனும் அறிவுக்கூர்மையுடனும் தேடப்படும் ஞானம், தனக்குள்ளேயே லயிக்கும் (அமிழ்ந்து போகும்) மன ஒருமையே. இது குருவின் பாதகமலங்களில் பணிவுடன் விழுந்துகிடப்பதுதான். இதுவே குருவிடம் முழுமையான சரணாகதியாகும்.

13 ஸாயீயின் பாதகமலங்களில் மனம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்டதற்குச் சின்னம் ஒன்றே ஒன்றுதான். பக்தன் பரமசாந்த நிலையை எய்துகிறான்; நிஜமான பக்தி பொங்கிவழிகிறது.

14 குருவிடம் செலுத்தப்படும் அன்பு கலந்த பக்தியே அறநெறியாகும். ''அனைத்தும் நானேஃஃ என்பதே ஞானத்தின் ஸாரம். புலனின்பங்களின்மேல் விருப்பமின்மையே பெரும் வைராக்கியமாம். இந் நிலை எய்திவிட்டால் உலகியல் வாழ்க்கை மறைந்துபோகிறது.

15 என்னே இந்த பக்தியின் மஹிமை குவிந்த மனத்துடன் அனுஷ்டானம் செய்யப்படும்போது, தன் சக்தியுள் பொதிந்து கிடக்கும் சாந்தி, விரக்தி, கீர்த்தி, இம் மூன்றையும் வெளிப்படுத்துகிறது.

16 அவ்வகை குருபக்தி உடையவருக்குக் குறை ஏதும் உண்டோ? அவர் மனத்தால் என்ன வேண்டுமென்று விருப்பப்படுகிறாரோ, அது அவரிடம் பிரயாசை (உழைப்பு) ஏதுமில்லாமலேயே வந்து சேரும்.

17 அவ்வகை குருபக்திக்கு, திருமணத்தின்போது மகளுக்குக் கொடுக்கப்படும் சொத்துகள்போல இந்திர பதவியும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. புண்ணிய க்ஷேத்திரங்களே காலடியில் கிடக்கும் அந் நிலையில் மோக்ஷத்திற்கு முக்கியத்துவம் யாருமே கொடுப்பதில்லை.

18 தீக்ஷிதரின் பாகவத பாராயணத்தைப்பற்றியும் நவயோகீந்திரர்கள்பற்றியும் ஸாயீபாத தரிசனம்பற்றியும் சென்ற அத்தியாயத்தில் விவரணம் கண்டோம்.

19 ஆனந்தராவ் பாகாடேயின் அற்புதக் கனவுபற்றியும் ஸாயீபக்தியின் பெருமையையும் எடுத்துரைத்தேன்.

20 யாரை பாபா அரவணைக்கிறாரோ, அவர் தம்முடைய வீட்டி­ருந்தாலும் சரி, ஏதோ தீவி­ருந்தாலும் சரி, சர்வ நிச்சயமாக ஸாயீ அவரருகில் இரவும் பகலும் இருக்கிறார்.

21 பக்தர் எங்கே சென்றாலும் எவ்விடத்தில் இருந்தாலும், ஸாயீ அவருக்கு முன்னமேயே அங்கே சென்று சற்றும் எதிர்பாராத வகையில் தரிசனம் அளிக்கிறார்.

22 இப்பொழுது அதே முக்கியத்துவத்துடன் ஒரு புதுமையான காதை சொல்லுகிறேன். இதைக் கேட்பவர்கள் ஆச்சரியத்திலாழ்ந்து மனமகிழ்ச்சி அடைவார்கள்.

23 நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் ஸாயீயின் இவ்வமுதமொழிகளைக் கேட்பவர்கள் ஆத்மானந்தத்தில் பொங்குவார்கள். யோகஸமாதி நிலை அளிக்கும் ஆனந்தங்கூட இந் நிலைக்கு ஈடாகாது.

24 அற்புதமான திருப்பங்களைக் கொண்ட இவ்வினிமையான காதை, கேட்பவருடைய இதயத்தில் உணர்ச்சி பொங்கும்படி செய்து தம்மையே மறக்கச் செய்யும்.

25 காகாஸாஹேப் தீக்ஷிதரின் மூத்த மகன் பாபுவிற்கு உபநயனம் (பூணூல் க­யாணம்) நாக்பூரில் நடத்தப்படவேண்டுமென்று நிச்சயிக்கப்பட்டது.

26 அதுபோலவே நானா சாந்தோர்க்கரின் மூத்த மகனின் திருமணமும் குவா­யர் நகரத்திற்குச் சென்று நடத்தப்படவேண்டுமென்று நிச்சயிக்கப்பட்டது.

27 பூணூல் க­யாணத்தை முடித்துவிட்டு, குவா­யரில் நடக்கும் க­யாணத்திற்கு தீக்ஷிதர் நேரத்தில் வந்துசேர இயலாது என்று சாந்தோர்க்கருக்குத் தோன்றியது.

28 இதைத் தவிர்ப்பதற்காக, நாக்பூரி­ருந்து குவா­யருக்கு உரிய நேரத்தில் சௌகரியமாக தீக்ஷிதர் வந்துசேரும் வகையில், இருதரப்பினருக்கும் வசதியான ஒரு முஹூர்த்த நாள் நிச்சயிக்கப்பட்டது.

29 இதன் பிறகு, பக்தமணியான சாந்தோர்க்கர் ஸாயீயை தரிசனம் செய்யவும், மகனின் க­யாணத்திற்கு வரும்படி அவரை நேரில் அழைப்பதற்காகவும் உற்சாகத்துடன் சிர்டீக்கு வந்தார்.

30 தீக்ஷிதர் ஏற்கெனவே சிர்டீயில் இருந்தார். சாந்தோர்க்கர் மசூதிக்குச் சென்று கைகூப்பி வணங்கி பாபாவைக் க­யாணத்திற்கு விஜயம் செய்யுமாறு வேண்டிக்கொண்டார்.

31 பாபா சிறிது யோசித்துவிட்டு, ''சரி,சரி, சாமாவை உம்முடன் அழைத்துச் செல்லும்ஃஃ என்று சொன்னார். இரண்டு நாள்கள் கழித்து தீக்ஷிதரும் பாபாவைத் தம் மகனின் பூணூல் க­யாணத்திற்கு விஜயம் செய்யும்படி வேண்டிக்கொண்டார்.

32 அவருக்கும் பாபா, ''சாமாவை உம்முடன் அழைத்துச் செல்லும்ஃஃ என்று அதே பதிலை அளித்தார். தீக்ஷிதர் பாபாவையே நேரில் வரும்படி மன்றாடி வேண்டினார்.

33 அதற்கும் பளிச்சென்று பதில் வந்தது, ''காசிக்கும் பிரயாகைக்கும் (அலஹாபாத்-திரிவேணி சங்கமம் ஆகும் இடம்) வேகமாகச் சென்றபின் சாமாவுக்கும் முன்னாடி நான் வந்து சேருவேன். நான் அங்கு வருவதை யாரால் தாமதம் செய்ய இயலும்?ஃஃ

34 கதைகேட்பவர்கள் இங்கே கவனமாகக் கேட்டு இவ்வார்த்தைகளின் பரிமாணத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் இவ்வார்த்தைகளில்

35 ''குவா­யருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டேனானால் அங்கிருந்து காசி எவ்வளவு தூரம் இருக்கிறதோஃஃ என்று சாப்பாடு முடிந்தவுடன் மாதவராவ் தமக்குள்ளேயே சிந்திக்கத் தொடங்கினார்.

36 செலவுக்காக நந்தராமிடமிருந்து ரூ100/- கடன் வாங்கிக்கொண்டு பாபாவிடம் அனுமதி பெற்றுக்கொள்வதற்காகச் சென்று மிகப் பணிவுடன் விண்ணப்பித்தார்.

37 ''குவா­யர் வரையில் நான் பூணூல் க­யாணத்திற்காகவும் திருமணத்திற்காகவும் செல்வதாக இப்போது நேர்ந்திருப்பதால், வாய்ப்புக்கேற்றவாறு காசிக்கும் கயைக்கும் சென்றுவருவதே சிலாக்கியம் என்று நான் நினைக்கிறேன்.--

38 ''ஆகவே ஓ பகவானே உமது பாதங்களில் விழுந்து பிரார்த்தனை செய்கிறேன். காசிக்கும் கயைக்குங்கூடப் போய்வரட்டுமா?ஃஃ பாபா அப்பொழுது மகிழ்ச்சியுடன் மாதவராவுக்கு அனுமதியளித்தார்.

39 மேலும் பாபா கூறினார், ''நீர் கேட்பதில் முறைகேடு என்ன இருக்கிறது? முயற்சி ஏதுமில்லாமலும் சுலபமாகவும் எது நமக்கு வாய்க்கிறதோ அதைத் தவறவிடாது கட்டாயம் பயன்படுத்தவேண்டும்.ஃஃ

40 இவ்வாறு ஆணையிடப்பட்டது. மாதவராவ் ஒரு மாட்டுவண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு கோபர்காங்விற்குக் கிளம்பினார்; வழியில் ஆபா கோதேவை சந்தித்தார்.

41 ஆபா தம் பேத்தியை வீட்டிற்குத் திரும்ப அழைத்துக்கொண்டு வருவதற்காக சாந்த்வடாவிற்குப் போய்க்கொண்டிருந்தார். காசிப் புனிதப் பயணத்தைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன் தம்முடைய குதிரைவண்டியி­ருந்து எகிறிக் குதித்தார்.

42 காசிப் பயணத்திற்குக் கையில் பணமில்லை; ஆயினும் மாதவராவுடன் சகபயணம் செய்யும் அருமையான வாய்ப்பை விட்டுவிட மனமில்லை.

43 ஆகவே, மாதவராவ் தைரியமூட்டியபோது ஆபா கோதேவுக்குத் தயக்கம் எங்கிருந்து வரும்? நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சட்டென்று ஏறி மாட்டுவண்டியில் உட்கார்ந்துவிட்டார்.

44 ஆபா கோதே பாடீல் ஒரு பணக்காரர். ஆயினும், பயணம் செய்துகொண் டிருக்கும்போது பணம் புரட்டுவது எவ்வாறு? காசிக்குப் போவது பணத்தினால் தடைப்பட்டுவிடுமோ என்பதுதான் அவருடைய பெரிய கவலை.

45 கதவைத் தட்டும் புனிதப் பயண நல்வாய்ப்பை, அதுவும் மாதவராவின் தோழமையுடன் செல்வதைப் பயன்படுத்தியே தீரவேண்டும் என்று அவருடைய ஆழ்மனம் விரும்பியது.

46 அவருடைய பிரச்சினையைப் புரிந்துகொண்டு, சரியான நேரத்தில் அவருக்கு தைரியம் அளித்துக் காசிப் பயணத்தின் புண்ணியம் அவருக்குக் கிடைக்கும் வகையில், ஆபா கோதேவைத் தம்முடன் மாதவராவ் சேர்த்துக்கொண்டார்.

47 பிறகு அவர்கள் இருவரும் நாக்பூரில் நடந்த பூணூல் க­யாணத்திற்குச் சென்றார்கள். செலவுக்காக மாதவராவுக்கு தீக்ஷிதர் இருநூறு ரூபாய் அளித்தார்.

48 அங்கிருந்து அவர்கள் திருமணவிழாவிற்காக குவா­யருக்குச் சென்றனர். அப்பொழுது சாந்தோர்க்கர் மாதவராவுக்கு நூறு ரூபாய் அளித்தார்.

49 மணப்பெண்ணின் தகப்பனார் ஸ்ரீமான் ஜடாரும் அவருக்கு நூறு ரூபாய் அளித்தார். இவ்வாறு, சாந்தோர்க்கருடைய குருபந்துவாகிய (ஒரே குருவினைப் போற்றி வழிபடுவதால் உறவினர் போன்று நெருக்கமாக ஆகிவிட்டவராகிய) மாதவராவுக்கு அன்பளிப்பாக நிறைய வருமானம் கிடைத்தது.

50 காசியில் 'மங்கள்காட்ஃடில் (ஒரு படித்துறையின் பெயர்) வெள்ளியும் பொன்னும் மணிகளும் இழைக்கப்பட்ட, அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன்கூடிய லக்ஷ்மிநாராயணர் கோயில் ஒன்று உண்டு. இக் கோயில் ஜடாருக்குச் சொந்தமானது.

51 ஜடாருக்குச் சொந்தமான ராமர் கோயில் ஒன்று அயோத்தியாவிலும் இருந்தது. இவ்விரண்டு புண்ணிய க்ஷேத்திரங்களிலும், மாதவராவையும் ஆபா கோதேவையும் மரியாதையுடன் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஜடார் தம் மணியக்காரரிடம் ஒப்படைத்தார்.

52 குவா­யரி­ருந்து அவர்கள் மதுராவிற்குச் (வடமதுரை - ஸ்ரீகிருஷ்ண ஜன்மபூமி) சென்றனர். அவர்களுடன்கூட ஓஜேயும்1 பினீவாலேயும்2 பேண்டார்கரும்3 சென்றனர். ஆனால், அவர்கள் மூவரும் மதுராவி­ருந்து வீடு திரும்பிவிட்டனர்.

53 மாதவராவென்னவோ, ஆபா கோதேவுடன் பிரயாகைக்குச் (அலஹாபாத் - திரிவேணி சங்கமம் ஆகும் இடம்) சென்றுவிட்டு அங்கிருந்து ஸ்ரீராமநவமி விழா ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தக்க சமயத்தில் அயோத்தியை வந்தடைந்தார்.

54 அவர்களிருவரும் அயோத்தியில் இருபத்தொன்று நாள்களும் காசியில் இரண்டு மாதங்களும் கழித்தனர். சூரியகிரஹணமும் சந்திரகிரஹணமும் சம்பவித்து முடிந்த பிறகு, இருவரும் கயாவிற்குக் கிளம்பினர்.

55 கயா அப்பொழுது பிளேக் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டிருந்தது. தெருக்களிலும் வீதிகளிலும் மக்கள் பீதியுடன் கவலை தோய்ந்து காணப்பட்டனர். எப்படியோ இச் செய்தி புகைவண்டியி­ருந்தபோதே மாதவராவுக்கு எட்டிவிட்டது.

56 புகைவண்டி கயா ரயில் நிலையத்திற்குள் இரவு நேரத்தில் வந்து சேர்ந்தது. ஆகவே, இருவரும் அருகி­ருந்த தர்மசத்திரத்தில் அன்றிரவைக் கழித்தனர்.

57 காலையில் கயாவாளி (யாத்திரிகர்களுக்குச் சடங்குகளும் பூஜைகளும் செய்வித்து சம்பாதிப்பவர்) ஒருவர் அவர்களை சந்திப்பதற்காக வந்தார். வரும்போதே, ''சீக்கிரம் கிளம்புங்கள், யாத்திரிகர்களின் கூட்டம் முழுவதும் வெளியே போவதற்குத் தயாராகிவிட்டதுஃஃ என்று துரிதப்படுத்திக்கொண்டே வந்தார்.

58 மனச்சஞ்சலமும் பீதியும் கொண்டிருந்த மாதவராவ் மெல்­ய குர­ல் அவரை வினவினார், ''வருகிறோம், வருகிறோம், ஆனால், உங்கள் பேட்டையில் கொள்ளைநோய் இருக்கிறது போ­ருக்கிறதே?ஃஃ

59 அதற்கு கயாவாளி பதிலுரைத்தார், ''ஓ, நீங்களே வந்து பாருங்களேன். அதுமாதிரி வியாதி இங்கு ஒன்றும் இல்லை. சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல் என்னுடன் வாருங்கள்.ஃஃ

60 ஆகவே, அவர்கள் இருவரும் கயாவாளியின் இடத்திற்குச் சென்றனர்; அவருடைய விசாலமான வீட்டைக் கண்டு மனம் மகிழ்ந்தனர்.

61 அவர்களுடைய சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருந்தது. வீட்டிற்குள் போய் உட்காருவதற்கு முன்னமேயே, பாபாவின் படமொன்றைக் கண்ட மாதவராவ் உணர்ச்சிவசப்பட்டுத் திக்குமுக்காடிப்போனார்.

62 எங்கோ தூரதேசத்தில் இருக்கும் கயாவில், பாபாவின் படத்தைக் காண்போம் என்று அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியம் அவர்களை மூழ்கடித்தது

63 ஆனந்தக்கண்ணீர் பொங்கிவர, மாதவராவ் அன்பின் பெருக்கால் தன்வசமிழந்தார். இதைப் பார்த்த கயாவாளி, ''ஏன் ஐயா நீர் அழுகிறீர்ஃஃ என்று கேட்டார்.

64 காரணம் ஏதுமின்றி மாதவராவ் அழுவதைப் பார்த்தவுடன் கயாவாளி சந்தேகப்பட்டு மனம் நொந்துபோனார்.

65 'பிளேக்நோய் இருக்கும் இந்த கயாவில் திட்டமிட்டபடி நாம் எப்படிப் புனிதப் பயணத்தை நிறைவேற்றப்போகிறோம்?ஃ என மாதவராவ் மனச்சஞ்சலமுறுகிறார் என்று நினைத்து கயாவாளி மிகவும் கவலையுற்றார். கயாவாளி ஆறுதலளித்தார்,--

66 ''இவ்விடம் பிளேக்நோய் இல்லை என்று ஏற்கெனவே நான் சொல்­விட்டபோதிலும் நீர் கவலைகொள்கிறீர். இதைக் கண்டு நான் வாஸ்தவமாகவே வியப்படைகிறேன்--

67 ''என்னிடம் நம்பிக்கை இல்லை என்றால் இங்கிருக்கும் எல்லாரையும் கேளுங்கள் இவ்விடத்தில் உங்களுடைய தலைமுடி ஒன்றுக்குக்கூடச் சேதம் விளையாது. நிலைமை இப்படியிருக்க, நீர் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்?ஃஃ

68 'பிளேக்நோயைப்பற்றிய பிராந்தியை மனத்தில் ஏற்றிக்கொண்டு தைரியத்தை சுத்தமாக இழந்துபோய் அனாவசியமாக இம் மனிதர் அழுதுகொண்டேயிருக்கிறார்.ஃ

69 இவ்வாறு நினைத்த கயாவாளி, விவரம் சொல்­ மாதவராவை சாந்தப்படுத்த முயன்றார். ஆனால், மாதவராவின் மனத்தில் இருந்த எண்ணமோ, 'எவ்வாறு என் தாய் (ஸாயீ) எனக்கு முன்பாகவே இன்று இவ்விடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார்ஃ என்பதே.

70 ஏற்கெனவே பாபா சொல்­யிருந்தார், ''காசிக்கும் பிரயாகைக்கும் சீக்கிரமாகச் சென்ற பிறகு நான் மாதவராவுக்கு முன்னாடியே வந்து சேருவேன்ஃஃ. இதோ, இங்கே, அந்தச் சொற்கள் நேரிடையான அனுபவமாகிவிட்டன.

71 வீட்டினுள் நுழைந்த உடனேயே பாபாவின் படம் தென்பட்டது. இந்த எதிர்பாராத அனுபவம் அவர்களுக்கு மஹா ஆச்சரியத்தை அளித்தது.

72 அன்பின் மிகுதியால் தொண்டை அடைத்துக்கொண்டது; கண்களி­ருந்து ஆனந்தபாஷ்பம் பொங்கியது; மயிர்க்கூச்செறிந்தது; உடலெங்கும் வியர்த்துக்கொட்டியது.

73 மாதவராவினுடைய நிலை இவ்வாறு இருந்தபோது கயாவாளி வேறுவிதமாக நினைத்தார். மாதவராவ் பிளேக்நோய்க்கு பயந்துதான் அழுவதாக அவர் வாஸ்தவமாகவே எண்ணினார்.

74 ஆவல் கொண்ட சாமாவே (மாதவராவே) கயாவாளியை நோக்கி இக் கேள்வியைக் கேட்டார், ''உங்களுக்கு இந்தப் படம் எப்படிக் கிடைத்தது? அனைத்து விவரங்களையும் எங்களுக்குச் சொல்லுங்கள்.ஃஃ

75 பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்தப் பேரதிசயத்தை கயாவாளி மாதவராவுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

76 மன்மாட், புண்தாம்பே (மஹாராஷ்டிர மாநிலம்) போன்ற இடங்களில் மொத்தம் இருநூறு முந்நூறு முகவர்கள் கயாவாளிக்கு வேலை செய்துவந்தனர். யாத்திரிகர்கள்பற்றிய விவரங்களை நோட்டுப் புத்தகங்களில் பதிவு செய்து கயாவாளியின் தொழிலை விருத்தி செய்துவந்தனர்.

77 யாத்திரிகர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுப்பதே கயாவாளியின் நிரந்தரமான தொழில். அவருடைய தொழில் இவ்வாறு நடந்துகொண் டிருந்தபோது கயாவாளி சிர்டீக்குச் சென்றார்.

78 ஸமர்த்த ஸாயீநாதர் ஒரு பெரிய மஹான் என்று அவர் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார். ஆகவே அவரை தரிசனம் செய்து, ஆசிகளைப் பெறவேண்டுமென்று ஆவல் கொண்டார்.

79 அவர் ஸாயீயை தரிசனம் செய்தார். பாதங்களில் விழுந்து வணங்கினார். பாபாவின் படம் ஒன்றையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் தீவிரமான ஆவலையும் உணர்ந்தார்.

80 சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த படம் ஒன்று மாதவராவிடம் இருந்தது. அதை கயாவாளி தமக்குக் கொடுக்குமாறு கேட்டார். பாபாவிடம் அனுமதி பெற்ற பிறகு மாதவராவ் அப் படத்தை கயாவாளிக்குக் கொடுத்தார்.

81 ''என்னிடம் இருந்த அதே படந்தான் இது, அந்த கயாவாளி இவரேதான்ஃஃ என்று மாதவராவுக்கு ஞாபகம் வந்தது. ''மேலும், எப்படி பாபா என்னை அதே இடத்திற்கு அனுப்பினார்? எப்படி இவ்வளவு காலம் கழித்து இந்த சந்திப்பை ஏற்படுத்தினார்--

82 ''சொல்லப் போனால், யார், எதற்காகப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்? என் மனத்தில் இது அறவே தோன்றவில்லை.ஃஃ

83 ஆனால், பாபாவினுடைய வழிமுறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை அவர் சாமாவை அதே இடத்திற்கு அனுப்பி அங்கே தரிசனமும் தந்தார். கயாவாளியும் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

84 'பாபாவினுடைய அனுமதி பெற்றபின் நான் கொடுத்த அதே படந்தான் இது, அதே கயாவாளிதான் இவர்ஃ என்று சாமாவுக்கு ஞாபகம் வந்தது.

85 'இவருடைய வீட்டில்தான் நான் அப்பொழுது சிர்டீக்குச் சென்றபோது தங்கினேன். இவர்தான் எனக்கு பாபாவை தரிசனம் செய்வித்தார்ஃ என்று கயாவாளிக்கும் ஞாபகம் வந்தது.

86 ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உதவிகளை நினைத்து அவர்களுடைய மகிழ்ச்சி கட்டுக்கடங்கவில்லை. கயாவாளி சாமாவுக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளை கயாவில் செய்துகொடுத்தார்.

87 கயாவாளி பெரும் பணக்காரர். வீட்டுக்கு வெளியில் யானைகள் சவாரிக்காகக் காத்திருந்தன தாம் ஒரு பல்லக்கில் ஏறிக்கொண்டு சாமாவை யானைச்சவாரி செய்யும்படி செய்தார்.

88 பூஜை திரவியங்களை எடுத்துக்கொண்டு இருவரும் விஷ்ணுபாதம் என்னுமிடத்திற்குச் சென்று மஹாவிஷ்ணுவுக்கு அபிஷேகமும் பூஜையும் மனமகிழ்ச்சியுடன் செய்தனர். பிறகு அட்சயவடம் என்ற இடத்திற்குச் சென்று, மூதாதையர்களுக்குப் பிண்டதானமும் (ஈமச்சடங்கும்) செய்தனர்.

89 அதன் பின்னர் தெய்வங்களுக்கு நிவேதனம் செய்தபின், பிராமணர்களுக்குத் திருப்தியாக போஜனம் செய்வித்து தக்ஷிணையும் கொடுத்தனர். இவ்விதமாக அவர்களுடைய புனிதப் பயணம் இனிதே நிறைவடைந்தது; சரியாகச் சொல்லவேண்டுமென்றால், பாபாவால் நிறைவேற்றிவைக்கப்பட்டது.

90 பாபாவின் திருவாய்மொழி சொல்லுக்குச் சொல் உண்மையாகிறது; நிறைவேறுகிறது. இதுவே இக் காதையின் ஸாரம். மேலும், பக்தர்களிடம் அவருடைய அன்பு அளவற்றது.

91 இக் காதை பாபா தம் பக்தர்களிடம் காட்டிய அன்புபற்றியது மட்டுமே. வாஸ்தவமாக, மற்ற ஜீவராசிகளையும் சமமாகவே பாபா பாவித்தார். ஜீவராசிகளிடம் பாசத்துடன் இருந்தது மட்டுமின்றி, அவற்றின் ஆத்மாவுடன் ஒன்றியவராகவே இருந்தார்.

92 லெண்டித் தோட்டத்தி­ருந்து மசூதிக்கு சாவதானமாகத் திரும்பி வரும்போது, எப்பொழுதாவது ஓர் ஆட்டு மந்தையைச் சந்தித்தால் பாபா மிகவும் குஷியாகிவிடுவார்.

93 அமுதம் பொழியும் கண்வீச்சை எல்லா ஆடுகளின்மீதும் செலுத்துவார். சில சமயம் ஓரிரண்டு ஆடுகளைத் தேர்ந்தெடுந்துக்கொள்வார்.

94 உரிமையாளர் என்ன விலை கேட்டாலும் பாபா உடனே பணம் கொடுத்து ஆடுகளை வாங்கி, கொண்டாஜியிடம் ஒப்படைத்துவிடுவார். இதுவே பாபாவினுடைய பழக்கமாக இருந்தது.

95 ஒருநாள் பாபா இரண்டு ஆடுகளை 32 ரூபாய் கொடுத்து வாங்கினார். எல்லாருக்கும் அது விநோதமாகத் தெரிந்தது.

96 அவ்விரண்டு ஆடுகளைப் பார்த்ததும் திடீரென்று அவற்றின்மேல் பாசமேற்பட்டு அருகில் சென்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.

97 மிருகப்பிறவி எடுத்த அவற்றைப் பார்த்து பாபாவின் மனத்தில் காருண்யம் ததும்பியது. அவை இருந்த நிலையைப் பார்த்து மனம் நெகிழ்ந்தார். அன்பின் அலைகளில் அமிழ்ந்துபோனார்.

98 அவ்விரண்டு ஆடுகளைத் தம்மருகே இழுத்துக்கொண்ட பின், வாஞ்சையுடன் முதுகில் தடவிக்கொடுத்தார். பாபாவின் அவ்விநோதமான செயலைக்கண்ட பக்தர்கள் வியப்பெய்தினர்.

99 முன்ஜன்மத்தில் அவர்கள்மீது தாம் வைத்திருந்த பாசம் ஞாபகத்திற்கு வந்தபோது பாபாவிடமிருந்து அன்பு பீறிட்டது. ஆடுகளாகப் பிறந்த அவர்களைப் பார்த்தபோது பாபா மிகுந்த பரிதாபமுற்றார்.

100 இரண்டு அல்லது மூன்று, அதிகம் போனால் நான்கு ரூபாய் மதிப்புள்ள ஆட்டுக்குப் பதினாறு ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தார். தாத்யாபா (தாத்யா கோதே பாடீல்) இந்த விநோதமான செயலைக்கண்டு வியந்துபோனார்.

101 ஆட்டுக்காரன் கேட்ட அதிக விலையை பேரமேதுமே இன்றி அப்படியே கொடுத்து பாபா வாங்கியதை அவர்கள் கண்கூடாகக் கண்டதால், தாத்யாவும் மாதவராவும் பாபாவின் செய்கையை வெறுப்புடனும் கோபத்துடனும் எதிர்த்தனர்.

102 'இரண்டே ரூபாய் பெறுமானமுள்ள பொருளுக்கு பதினாறு ரூபாய் எதற்காகக் கொடுத்தார்? பாபாவுக்குப் பணத்தின் அருமை தெரியாததால் தம் இஷ்டத்திற்கு எது வேண்டுமானாலும் செய்கிறாரோ? இந்த வாதமும் திருப்திகரமானதாக இல்லையே--

103 'எதற்காக பாபா இவ்வளவு மோசமான பேரமொன்றைச் செய்தார்? இப்படியா யாராவது பேரம் செய்வார்கள்? பேரமா இது?ஃ என்றெல்லாம் இருவரும் மனத்துக்குள்ளேயே பொருமிப் பிராண்டிக்கொண்டனர். இருவருமே பாபாவை தூஷித்தனர் (நிந்தித்தனர்).

104 பாபாவை எப்படி அவ்வாறு ஏமாற்ற முடியும்? கிராமத்து மக்கள் இதைப் பார்க்க ஒன்றுகூடினர். ஆனால், பாபா ஒரு துரும்பும் நஷ்டம் ஏற்படாததுபோலச் சலனமேதுமின்றி அமைதியாக இருந்தார்

105 தாத்யாவும் சாமாவும் இவ்விஷயத்தில் கடுப்படைந்து பாபாவின்மேல் தப்புக் கண்டுபிடித்தாலும், பாபாவென்னவோ சிறிதும் அமைதியிழக்கவில்லை. அவர் சாந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்தார்.

106 பணிவுடன் அவர்கள் இருவரும் பாபாவைக் கேட்டனர், ''இது என்ன விசித்திரமான உதாரச் செய்கை? 32 ரூபாய் வீணாகிப் போய்விட்டதல்லவா?ஃஃ

107 பணத்தைப்பற்றிய பேச்சு வந்தவுடன் பாபா புன்னகையுடன் தமக்குத் தாமே பேசிக்கொண்டார். ''சரியான பைத்தியக்காரப் பயல்கள் இவர்கள். ஓ எப்படி இவர்களுக்குப் புரியவைப்பேன்?ஃஃ

108 ஆயினும் பாபாவினுடைய சாந்தமும் அமைதியும் அருமையிலும் அருமை. பாபாவின் திடசித்த நிலை அணுவளவும் குறையவில்லை; இதுவே பரமசாந்தியின் லட்சணம் (அடையாளம்); கூடியிருந்தவர்கள் அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.

109 கோபத்தை அறியாதவரும் பரமசாந்தியை அனுபவிப்பவரும் எவ்வுயிரிலும் இறைவனைக் காண்பவருமான ஒருவரை விவேகமின்மை எப்படித் தொடமுடியும்?

110 விவேகஞானம் உள்ளவர் எவரும், எக்காலத்திலும் கோபத்தை அனுமதிக்கமாட்டார். எதிர்பாராதவிதமாக அதுமாதிரி சந்தர்ப்பம் ஏதாவது எழுந்தால், சாந்தி என்னும் பொக்கிஷம் திறந்துகொள்ளும்.

111 ஸதாஸர்வகாலமும் 'அல்லாமா­க்ஃ தியானம் செய்பவரின் பெருமையை எவ்வாறு எடுத்தியம்புவது? அவருடைய வாழ்க்கை புரிந்துகொள்ளமுடியாததும் பூரணமானதும் மிகப்புனிதமானதும் நலம் பல தரக்கூடியதுமாகும்.

112 காருண்யமூர்த்தியும் ஞானகர்ப்பமும் வைராக்கியநிதியும் சாந்திக்கடலுமான அவர் முக்காலத்திற்கும் உண்மையாக என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

113 பக்தர்கள் இருவருடைய கட்டாயத்தால் பாபாவும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அவர் கூறியதாவது, ''எனக்கு வீடுவாச­ல்லை; உட்காருவதற்கென்றுகூட ஓர் இடமில்லை; எனக்குச் சொத்துபத்துகள் எதற்காக?--

114 ''முத­ல் கடைக்குப் போய் ஒரு சேர் தீனிப்பருப்பு வாங்கிக்கொண்டு வாருங்கள். ஆடுகளை வயிறுமுட்டும்வரை தின்னவையுங்கள். பிறகு ஆடுகளை ஆட்டிடையரிடமே திருப்பி அனுப்பிவிடுங்கள்.ஃஃ

115 ஆணையை நிறைவேற்றும் வகையில் உடனே ஆடுகளுக்குப் பருப்பு தீனியாகக் கொடுக்கப்பட்டது. காலந்தாழ்த்தாமல் உடனே ஆடுகள் ஆட்டிடையரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.

116 பரோபகாரமே உருவெடுத்த ஸாயீ உண்மையிலேயே ஓர் அவதாரபுருஷர். தாத்யாவோ வேறெவரோ, நல்லெண்ணத்தையோ இரக்கத்தையோ அவர் மனத்தில் ஊட்டிவிட முடியுமா என்ன

117 அன்புடன் ஆடுகளுக்குப் பருப்பை ஊட்டி, வயிறு நிறைந்துவிட்டது என்று தெரிந்த பின்னர், ''இவ்வாடுகளை சொந்தக்காரரிடமே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். மந்தையுடன் போய்ச் சேரட்டும்ஃஃ என்று பாபா சொன்னார்.

118 இவ்விதமாகப் பணமும் போயிற்று ஆடுகளும் போயின அப்பொழுது பாபா ஆடுகளுடைய விநோதமான பூர்வஜன்மக் கதையை முழுக்க எடுத்துரைத்தார்.

119 பாபாவுக்குத் தாத்யாவும் சாமாவும் ஒன்றே. இருவரிடமுமே அவர் சமமாக அன்பு செலுத்தினார். அவர்களுடைய கோபத்தைத் தணிப்பதற்காக, பாபா மனோரஞ்சிதமான இக் கதையை விரிவாகச் சொன்னார்.

120 ஸாயீ தாமாகவே அவ்வாடுகளின் முன்ஜன்மக் கதையை எடுத்தியம்பினார். நீங்களும் கேளுங்கள்.

121 ''முற்பிறவியில் இவ்விரு ஆடுகளும் அதிருஷ்டம் வாய்ந்தவை. மனிதர்களாகப் பிறந்து என்னுடன் இருந்தார்கள். ஆனால், அவர்களும் கர்மவினையை அனுபவிக்க வேண்டியிருந்தது.--

122 ''நீங்கள் பார்த்த இவ்விரு ஆடுகள் இதற்கு முந்தைய பிறவியில் சகோதரர்கள், ஒருவரோடொருவர் கோரமாகச் சண்டையிட்டுக்கொண்டு இறந்தார்கள்; விளைவு இவ்விதம் ஆகியது.--

123 ''ஆரம்பகாலத்தில் இருவருக்குமிடையே மிக்க பாசம் இருந்தது. சகோதரர்கள் இருவரும் எப்பொழுதும் ஒன்றாகவே சாப்பிடுவார்கள்; ஒன்றாகவே தூங்குவார்கள்; பரஸ்பரம் நல்வாழ்வையே விரும்பினர். இருவருக்குமிடையே மகத்தான ஒற்றுமை நிலவியது.--

124 ''ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களாயினும், கர்மவினையாலும் விதிவசத்தாலும் பணம் குவிக்கவேண்டுமென்ற பேராசை அவர்களுக்குள் விரோதத்தை உண்டாக்கியது.--

125 ''அண்ணன் ஒரு படு சோம்பேறி; ஆனால், தம்பியோ ஊக்கமுள்ளவன்; இரவுபகல் பாராமல் உழைப்பவன். உழைப்பின் விளைவாகத் தம்பி பெரும்பொருள் குவித்தான். இதைப் பார்த்த அண்ணனிடம் பொறாமை விளைந்தது.--

126 '''சதையில் நெருடிக்கொண் டிருக்கும் முள் இவன். இம் முள்ளை எடுத்துவிட்டால் செல்வத்திற்குக் குறைவே இருக்காது.ஃ இவ்விதமான எண்ணத்தாலும் பேராசையாலும் மூழ்கடிக்கப்பட்டு அண்ணன் கெட்டவழிகளில் இறங்கினான்.--

127 ''இம்மாதிரியான பணத்தாசையும் பேராசையும் கண்ணை மறைத்துவிடும். ஆகவே, கண்ணிருந்தும் குருடனாகி சகோதர பாசத்தையே மறந்துவிட்டான். தம்பியைக் கொன்றுவிடவேண்டும் என முடிவு செய்து, செய­லும் இறங்கிவிட்டான்.--

128 ''பிராரப்தம் (பூர்வஜன்மவினை) கொண்டுவரும் துன்பம் மிகக் கொடுமையானதன்றோ அது அனாவசியமான பகையை விதைத்தது. பேராசை கட்டுக்கடங்காமல் போய், கொடுமையானதும் மருமமாகத் தீட்டப்பட்டதுமான சதியொன்று உருவாகியது.--

129 ''அவர்களுடைய வாழ்நாள் முடிந்துவிட்டது. ஆகவே, சகோதர பாசத்தை அறவே மறந்துவிட்டு அஹங்காரத்தினால் கோபமடைந்தனர். பரம வைரிகள் போல இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர்.--

130 ''ஒருவன் மற்றவனைத் தடியெடுத்து பலமாக மண்டையில் அடித்தான். மற்றவன் முதல்வனைக் கோடரிகொண்டு தாக்கினான். சகோதரர்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொண்டனர்.--

131 ''இருவரும் ரத்தக்களரி ரணக்களரியாக மூர்ச்சையடைந்து கீழே விழுந்தனர். சிறிது நேரத்தில் இரு உடல்களி­ருந்தும் உயிர் பிரிந்தது. இவ்வாறு அவ்விருவரும் மரணமடைந்தனர்.--

132 ''அவ்வாறு இறந்த பிறகு, இந்த யோனியில் புகுந்தனர். இதுவே அவர்களுடைய காதை; அவர்களைப் பார்த்தவுடனே எனக்கு விரிவாக ஞாபகம் வந்தது.--

133 ''அவர்களுடைய கர்மவினையைத் தீர்ப்பதற்காக இருவரும் ஆடுகளாகப் பிறந்தனர். மந்தையில் அவர்களைப் பார்த்ததும் எனக்குப் பிரேம ஆவேசம் ஏற்பட்டது.--

134 ''ஆகவே, என்னுடைய பையி­ருந்து பணம் செலவழித்து அவர்களுக்குச் சிறிது விச்ராந்தி (இளைப்பாறுதல்) அளிக்கவேண்டுமென்று நினைத்தேன். ஆனால், உங்களுடைய ரூபத்தில் அவர்களுடைய கர்மவினை அதைத் தடுத்துவிட்டது.--

135 ''ஆடுகளின்மேல் எனக்குக் கருணைபிறந்தது; ஆயினும் உங்களுடைய நிர்ப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு, நானும் கடைசியில் ஆடுகளை இடையரிடம் திருப்பி அனுப்பிவிட்டேன்.ஃஃ

136 ஆக, இக் காதை இங்கு முடிகிறது. வாசகர்களே, என்னை மன்னிப்பீர்களாக பிறகு அடுத்த அத்தியாயத்தைப் படிக்கும்பொழுது உங்கள் மனம் மகிழும்.

137 அடுத்த அத்தியாயம் ஸாயியின் திருவாய்மொழி அடங்கியதாகையால், அன்பு பொங்கிவழியும் அத்தியாயமாகும். ஸாயீயின் பாதகமலங்களில் பணிவுடன் சிரம் தாழ்த்தி வணங்கி, ஹேமாட் கதைகேட்பவர்களை வேண்டுகிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'காசி-கயா புனிதப் பயணம், மேலும் ஆடுகளின் பூர்வஜன்மக் காதைஃ என்னும் நாற்பத்தாறாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்
சுபம் உண்டாகட்டும்.


Do you want to ask questions and share ideas about your kid's education, parenting and more? Join Tamilcube Kids, our exclusive premium Facebook group now, and start meeting other Singapore Indian parents with similar interests.

Share:

Download Free Tamilcube School App:
Home Tamil Tuition Tamil Testpapers Tamil eLearning Calendar Books Astrology
Dictionaries : Tamil Hindi Malayalam Telugu Marathi Sanskrit Kannada More...
Baby Names : Tamil Hindi Sanskrit Telugu Kannada Muslim Malayalam Bengali Marathi Gujarati Marathi
GK : GK questions TNPSC More...
More...