Tamil tuition | Tamil assessment books | Tamil eLearning
Tamilcube.comTamilCube
Learning made fun & easy
Join Tamil tuition at Bedok, Jurong East and Little India | Learn Tamil online at World's first Tamil ELearning Platform.Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
அத்தியாயம் - 21

21. அருள்மழை பொழிந்தது
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 கடந்த அத்தியாயத்தில் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு டாகூரும்1 மற்றவர்களும் இம்மஹாபுருஷரை எப்படி தரிசனம் செய்தார்கள் என்பதை விவரிக்கிறேன். ஒருமுகப்பட்ட மனத்துடன் கேளுங்கள்.

2 கேட்பவர்களை ரோமாஞ்சனம் (மயிர்ச்கூச்செறிதல்) அடையச் செய்யாததும் ஆனந்தத்தால் ஊஞ்சலாடச் செய்யாததுமான, பிரவசனம் செய்பவரின் சொற்கள் வியர்த்தமானவை அல்லவா?

3 கேட்பவர்களை மனம் மகிழச் செய்யாததும் உணர்ச்சி வசத்தால் தொண்டையை அடைக்கச் செய்யாததும் ஆனந்தக்கண்ணீர் பெருகிக் கன்னத்தில் வழியும்படி செய்யாததுமான கதை என்ன கதை? உபயோகமில்லாத கதை.

4 மனோஹரமான பேச்சை உடையவரும் உலகம் காணாத உபதேசமுறைகளைக் கையாள்பவரும் தினந்தினம் புதுப்புது அற்புத லீலைகளைப் புரிபவருமான பாபாவின் பாதங்களில் என் நெற்றியை வைத்து வணங்குகிறேன்.

5 தெய்வ அநுக்கிரஹம் இல்லாமல் எவருக்கும் ஸாதுக்களையும் ஞானிகளையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காது. அவ்வாறான ஒரு மஹாபுருஷர் அருகிலேயே வந்தாலும் பாவிகளின் கண்களுக்கு அவர் தெரியாமற்போய்விடுவார்.

6 இது எந்த அளவிற்கு உண்மையென்பதை நிரூபிக்கத் தேசமெங்கும் அலையவேண்டியதில்லை; அந்நிய தேசத்துக்கும் செல்ல வேண்டியதில்லை. ஏன், கேட்பவர்களுக்கு என்னுடைய அனுபவத்தையே எடுத்துரைக்கிறேன்.

7 பாந்த்ரா2 நகரத்தில் பீர் மௌலானா என்ற பிரஸித்தி பெற்ற சித்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய புண்ணிய தரிசனத்திற்காக ஹிந்துக்களும் பார்ஸிகளும் மற்ற மதங்களைச் சார்ந்தவர்களும் அறிஞர்களும் பெருமக்களும் வந்தனர்.

8 நான் அந்த நகரத்தில் அப்பொழுது மாஜிஸ்ட்ரேட்டாக உத்தியோகம் பார்த்துவந்தேன். பீர் மௌலானாவுக்கு இனூஸ் என்ற பெயர்கொண்ட பக்தரொருவர் ஸேவை செய்துவந்தார். இந்த இனூஸ் என்னை தரிசனத்திற்கு வருமாறு இரவுபகலாகத் தொந்தரவு செய்துகொண் டிருந்தார்.

9 ஆயிரக்கணக்கில் மக்கள் அங்கு தரிசனத்திற்குக் கூடினர்; நானும் அங்கு எதற்காக ஓடவேண்டும்? இனூஸ் செய்த தொந்தரவு பொறுக்கமுடியவில்லை என்பதற்காகவா நானும் தரிசனம் செய்யப் போகவேண்டும்? என்னுடைய கௌரவம் என்னாவது?

10 ஒவ்வொரு தடவையும் இவ்வாறான சிந்தனை ஏதாவது மனத்தில் உதித்தது. கடைசிவரை நான் தரிசனத்திற்குப் போகவேயில்லை. என்னுடைய நிழலைப் பார்த்து நானே பயந்தேன் போலும் துரதிருஷ்டம் என்னைத் தடுத்துவிட்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

11 பல ஆண்டுகள் இவ்விதமாக உருண்டன. பிறகு நான் அங்கிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு நல்லகாலம் பிறந்தது; சிர்டீயுடன் அகண்டமான (முழுமையான) உறவு ஏற்பட்டது.

12 தாத்பரியம் என்னவென்றால், ஞானிகளின் சங்கம் அபாக்கியசா­களுக்குக் கிடைப்பதில்லை. இறைவனுடைய கிருபை இருந்தால் சுலபமாகக் கிடைக்கிறது; அது இல்லையெனில் குருதரிசனயோகமே அமைவதில்லை.

13 செவிமடுப்பவர்களே, இப்பொழுது இவ்விஷயமாக ஒரு சுவாரஸ்யமான காதை சொல்கிறேன்; பயபக்தியுடன் கேளுங்கள். காலங்காலமாக ஞானிகள் எவ்வாறு ஒருவருக்கொருவர் குஹ்யமான (கமுக்கமான) உறவும் பரிவர்த்தனையும் வைத்திருந்தனர் என்பதைப் பாருங்கள்.

14 காலம், வர்த்தமானம் (நிகழ்வுகள்) இவற்றுக்கு ஏற்றவாறும் அவர்களுடைய விருப்பத்திற்கேற்றவாறும் காரண காரியத்துடன் ஞானிகள் அவதாரம் செய்கிறார்கள். ஆயினும், அவர்கள் பரஸ்பரம் (ஒருவருக்கொருவர்) வேறுபட்டவர்களல்லர்.

15 தேசமும் காலமும் காரணமும் வேறுபட்டாலும், ஒரு ஞானிக்கு மற்றொரு ஞானியின் மனம் நன்கு தெரியும். உள்ளுக்குள் அவர்கள் அனைவரும் ஒருவரே.

16 எவ்வாறு ஓர் உலகையாளும் சக்கரவர்த்தி ஒவ்வொரு தேசத்திலும் ஓர் அதிகாரியை நியமித்துத் தம்முடைய ஸாம்ராஜ்ஜியத்திற்கு முன்னேற்றத்தையும் செழுமையையும் கொண்டுவருகிறாரோ, --

17 அவ்வாறே ஆத்மானந்தமாகிய சக்கரவர்த்தி பல இடங்களில் தோன்றி சூக்குமமான முறையில் தம்முடைய ராஜ்ஜியம் என்னும் சக்கரத்தைச் சுழற்றுகிறார்.

18 ஆங்கிலப் படிப்புப் படிக்கும் பாக்கியம் கிடைத்து பி.ஏ. பட்டம் பெற்ற டாகூர் என்ற நற்குடிமகன் ஒருவர் இருந்தார். படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து பெயர் பெற்ற அதிகாரியாக விளங்கினார்.

19 சில வருடங்களில் அவர் ஒரு மாம்லத்தாராக உயர்ந்தார். மேலும் உயர்ந்து டெபுடி கலெக்டர் பதவி பெற்றார். தெய்வப் பிராப்தியாக அவருக்கு ஸாயீ பாபாவிடம் உபதேசம் பெறும் அதிருஷ்டம் வாய்த்தது.

20 மாம்லத்தார் பதவி தூரத்தி­ருந்து பச்சைப் பசேலென்று தெரியும் மலையைப் போன்று வசீகரமானதுதான். அருகில் சென்று பார்த்தால்தான் எட்டிமரங்கள் அடர்ந்திருப்பது தெரியும். ஆயினும், கௌரவத்தில் என்னவோ அது உயர்ந்த பதவிதான்.

21 இந்தப் பதவியை மக்கள் ஒருகாலத்தில் பெரிதும் மதித்தனர். உத்தியோகஸ்தர் களுக்கும் இப் பதவியின் அதிகாரத்தை அனுபவிக்கவேண்டும் என்ற பெருவேட்கை அப்பொழுது இருந்தது. பரஸ்பரம் ஆனந்தமடைந்தனர். ஆனால், அக்காலம் இப்பொழுது மலையேறிவிட்டது.

22 தற்காலத்தில் இப் பதவியில் இருக்கும் சிரமத்தையும் பிடுங்கல்களையும் யாரால் விவரிக்கமுடியும்? இப் பதவி சுகமான உத்தியோகமாக இருந்தது பழையகாலம்; இப்பொழுதோ பொறுப்புகளின் சுமையே அதிகம். வருமானமென்னவோ நிறைய உண்டு.

23 மேலும், எவ்வளவு கடுமையாகவும் நேர்மையாகவும் உழைத்தாலும், மாம்லத்தார் பதவிக்கு டெபுடி கலெக்டருக்கு இணையாக முன்பிருந்த மரியாதையும் காம்பீர்யமும் தற்பொழுது இல்லாமற்போய்விட்டன.

24 மேலும், இந்த அதிகாரமான பதவியை அடைவதில் பணம் செலவு செய்யாமலும் சிரமப்பட்டுத் தொடர்முயற்சியாகப் படிக்காமலும் யாரால் வெற்றிபெற முடியும்?

25 முத­ல் பி.ஏ. பரீட்சையில் வெற்றிபெற வேண்டும். பிறகு, வரிவசூல் இலாகாவில் மாதம் ரூ. 30/- சம்பளத்தில் குமாஸ்தா வேலை கிடைக்கும். பிறகு இந்த மார்க்கத்தில் மெதுவாக முன்னேறவேண்டும்.

26 காலம் வந்தபோது அவர் மலைகளைத் தாண்டி (மேற்குத் தொடர்ச்சி மலைகள்) கிழக்கு நோக்கிச் சமவெளிக்குப் போகவேண்டும். நிலங்களை அளக்கும் பயிற்சி பெறவேண்டும். ஸர்வேயர்களுடன் தங்கியிருக்கவேண்டும். அப்பொழுதுதான் இலாகாவின் துறைத் தேர்வுகளில் வெற்றிபெற முடியும்.

27 பிறகு, உயர்பதவிகளில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் வைகுண்ட பதவியடைவதால் ஏற்படும் கா­யிடம் இவருடைய முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

28 போதும் இந்த வதவதவென்ற விவரணம். உளறிக்கொண்டே போவதில் பிரயோஜனம் என்ன? இம்மாதிரியான அதிகாரிகளில் ஒருவர் ஸாயீயை சந்தித்த காதையைக் கேளுங்கள்.

29 பெல்காமிற்கு சமீபத்தில் வட்காங்வ் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கு ஒரு சமயம் ஸர்வேயர் (நில அளவு செய்பவர்கள்) பிரிவு ஒன்று வந்து முகாமிட்டது.

30 அந்த கிராமத்தில் ஒரு ஞானி இருந்தார். டாகூர் அந்த ஞானியை தரிசனம் செய்து பாதங்களில் வணங்கி, ஆசீர்வாதமும் பிரஸாதமும் பெற்றார்.

31 அந்த சமயத்தில் அந்த ஞானி1, நிச்சலதாஸர் இயற்றிய விசாரஸாகரம்2 என்னும் நூலைப் படித்துக்கொண் டிருந்தார்.

32 சிறிது நேரம் கழித்து, டாகூர் விடைபெறுவதற்காக எழுந்தபோது அந்த ஞானி மகிழ்ச்சியுடன் அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

33 ''சரி, நீர் இப்பொழுது போகலாம். இந்த கிரந்தத்தைப் (நூலைப்) படித்துப் பாரும். அவ்வாறு செய்வதால் உம்முடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும். இதை நினைவில் வைத்துக்கொள்ளும்.--

34 ''பிற்காலத்தில் வேலை விஷயமாக வடதேசம் செல்லும்போது, நீர் செய்த மஹாபாக்கியத்தால் வழியில் ஒரு மஹாபுருஷரை சந்திப்பீர்.--

35 ''அவர் உமக்கு மார்க்கத்தைக் காட்டுவார்; உம்முடைய மனத்திற்கு உறுதியையும் சாந்தியையும் அளிப்பார். அவரே உமக்கு உபதேசங்களை அளித்து உமது மனத்தில் நன்கு பதியவைத்துவிடுவார்.ஃஃ

36 அவ்விடத்தில் வேலை முடிந்துவிட்டதால், டாகூர் புணே ஜில்லாவிலுள்ள ஜுன்னருக்கு மாற்றப்பட்டார். அங்கே போவதற்கு மிக உயரமானதும் கடப்பதற்கு அபாயகரமானதுமான நாணேகாட்டைக்1 கடந்துதான் செல்லவேண்டும்.

37 அந்த வழி ஆபத்துகள் நிறைந்தது. எருமை மாட்டின்மேல் சவாரி செய்துதான் கடக்க வேண்டும். போக்குவரத்து வாஹனம் வேறெதுவுமில்லாததால், ஓர் எருமைக்கடா, சவாரி செய்வதற்காக அண்மையி­ருந்து கொண்டுவரப்பட்டது.

38 எதிர்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறிய பின், அவருக்குக் குதிரையோ மோட்டார் வாஹனமோ கிடைக்கலாம். ஆனால், அன்றைய நிலையில் அங்கே கிடைத்த எருமைக்கடாவின் மேல்தான் அவருடைய பிரயாணத்தை ஸாமர்த்தியமாக சமாளிக்க வேண்டியிருந்தது.

39 எருமைக்கடாவின் உதவியின்றி மலையைக் காலால் நடந்து கடக்கமுடியாது. வேறு எந்த வாஹனமும் அங்கே கிடையாது. இதுவே நாணே காட்டின் அற்புதம்; வாஹனமும் அபூர்வம்

40 ஆகவே, அவர் தம் மனத்தை உறுதிசெய்துகொண்டு எருமைக்கடாவின் முதுகில் ஒரு சிறுமெத்தையைக் கட்டிச் சேணம் பூட்டச் செய்து, மிகவும் சிரமப்பட்டு ஏறி உட்கார்ந்தார்.

41 ஏறி உட்கார்ந்துவிட்டாரே தவிர, ஏற்றம் மிகச் செங்குத்தாக இருந்தது. அபூர்வமான வாஹனமாகிய எருமைக்கடாவின் திடீர் அசைவுகளும் ஆட்டமும் குலுக்கலும் சாய்தலுந்தான் என்னே அவருடைய முதுகு சுளுக்கிக்கொண்டு வ­த்தது.

42 ஒரு வழியாகப் பயணம் முடிந்தது. ஜுன்னரில் காரியக்கிரமங்கள் நன்கு நிறைவேறின. பதவியிடமாற்ற ஆணையும் வந்தது. அவ்விடத்தி­ருந்து கிளம்பிவிட்டார்.

43 பதவியிடமாற்றம் கல்யாண்2 என்னும் நகருக்குக் கிடைத்தது. அங்கு நானா சாந்தோர்கரை சந்தித்தார். ஸாயீநாதரின் கீர்த்தியை அவரிடமிருந்து கேட்டவுடன் டாகூருக்கும் தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் எழுந்தது.

44 அடுத்த நாளே அதற்கு வேளையும் வந்தது. சாந்தோர்கர் சிர்டீ செல்ல ஆயத்தம் செய்துகொண்டே சொன்னார், ''வாரும், இம்முறை நாமிருவரும் கூட்டாகச் செல்லலாம்.--

45 ''இருவருமே சென்று தரிசனம் செய்வோம்; அவருக்கு நமஸ்காரம் செய்வோம்; ஓரிரு நாள்கள் அங்கே தங்கிவிட்டுக் கல்யாண் திரும்புவோம்.ஃஃ

46 ஆனால், அன்றைய தினமே தாணே சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு விஷயமாக டாகூர் ஆஜராக வேண்டியிருந்தது. ஆகவே, அவர் சாந்தோர்கருடன் சிர்டீ செல்லும் யோசனையைக் கைவிடவேண்டியதாயிற்று.

47 'பாபா ஸர்வ சக்திகளும் வாய்ந்தவர்; உம்முடைய தரிசன வேட்கையை நிறைவேற்றுவார். கோர்ட்டு வழக்கு என்ன பெரிய சமாசாரம்ஃ என்று நானாஸாஹேப் கூறியது வீணாகப் போயிற்று.

48 அவரை சம்மதிக்கவைக்க முடியவில்லை. கோர்ட்டு வழக்கிற்குப் போகாமல் இருக்க பயப்பட்டார். நெற்றியில் எழுதப்பட்ட விதியின்படி வீணாக அலையாமல் யாரால் இருக்க முடியும்?

49 பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்கிற தீவிர வேட்கை இருக்கும்போது, எவ்வாறு எல்லா விக்கினங்களும் உடைத்தெறியப்படுகின்றன என்பதைத் தம்முடைய பழைய அனுபவங்களி­ருந்து நானா விவரித்தார்.

50 ஆனால், டாகூர் நானாவை நம்புமளவிற்குத் தம்மைத் தாமே இசைபட வைக்க முடியவில்லை. ஒருவருடைய இயற்கையான குணத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? அவர் சொன்னார், ''முத­ல் இந்தக் கோர்ட்டு வழக்கை ஒரு முடிவிற்குக் கொண்டுவந்துவிட்டு, என் மனத்தின் அரிப்பை ஒழித்துவிடுகிறேன்.ஃஃ

51 ஆகவே, அவர் தாணேவுக்கும் சாந்தோர்கர் சிர்டீக்கும் கிளம்பினர். நானா பாபா தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பினார். இதனிடையே தாணேயில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

52 வழக்கு விசாரணைக்காக டாகூர் அங்கு இருந்தபோதிலும், வழக்கு வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சாந்தோர்கரும் சென்றுவிட்டார். டாகூர் உள்ளுக்குள் வெட்கமடைந்தார்.

53 ''ஓ, நான் அவரை நம்பியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? சாந்தோர்கர் என்னையும் தம்முடன் அழைத்துக்கொண்டு போய் தரிசனம் செய்துவைத்திருப்பார். சிர்டீயில் மனம் நிறையும்வரை தரிசனம் செய்திருப்பேன்.--

54 ''இப்பொழுது கோர்ட்டு வேலையும் நடக்கவில்லை; ஞானியை தரிசனம் செய்யும் வாய்ப்பையும் இழந்துவிட்டேன்ஃஃ என்று நினைத்துக்கொண்டு டாகூர் உடனே சிர்டீக்குக் கிளம்பினார்.

55 ''சிர்டீக்குப் போய் நானாவை சந்திக்கும் அதிருஷ்டம் இருந்தால், அவரே என்னை ஸாயீநாதரின் அரவணைப்பில் சேர்த்துவிட்டால், நான் மகிழ்ச்சியடைவேன்ஃஃ என்று அவர் நினைத்தார்.

56 ''சிர்டீயில் எனக்கு யாரையுமே தெரியாது; எனக்கு முற்றும் புதிதான இடமாகும். நானாவை அங்கே சந்தித்துவிட்டால் விசேஷம்; ஆனால், அதற்கு வாய்ப்புக் குறைவாகத் தெரிகிறது.ஃஃ

57 இவ்வாறு சிந்தித்துக்கொண்டே அவர் ரயில் ஏறி மறுநாள் சிர்டீ போய்ச் சேர்ந்தார். நானா அங்கு இல்லை.

58 டாகூர் சிர்டீக்குக் கிளம்பிய அன்றே நானா சிர்டீயி­ருந்து கிளம்பிவிட்டார். டாகூர் மனமுடைந்து சோர்ந்துபோனார்.

59 ஆயினும் அங்கு இன்னொரு நல்ல நண்பரை சந்தித்தார். அவருடைய உதவியால் ஸாயீதரிசனம் செய்து பெருமகிழ்ச்சியடைந்தார்.

60 பாதங்களை தரிசனம் செய்தமாத்திரத்தில் பலமாக ஈர்க்கப்பட்டு, ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். உணர்ச்சிவசத்தால் சரீரம் புளகிதம் (மயிர்ச்சி­ர்ப்பு) அடைந்தது. கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது.

61 பிறகு சிறிது நேரம் பாபாவின் ஸந்நிதியில் நின்றார். முக்காலமும் அறிந்த பாபா முகத்தில் புன்னகை தவழ அவரிடம் என்ன சொன்னார் என்பதை கவனமாகக் கேளுங்கள்.

62 ''கன்னட அப்பா உமக்குச் சொன்னது எருமைக்கடாவின்மேல் ஏறிக்கொண்டு ஒரு கணவாயைக் கடப்பது போலாகும். ஆனால், இந்தப் பாதையில் நடப்பது கடினமாகும். உட­ன் அங்கங்கள் தேயுமாறு உழைத்தாக வேண்டும்.ஃஃ

63 இந்த அர்த்தபுஷ்டியுள்ள வார்த்தைகள் காதுகளில் விழுந்தவுடனே டாகூரின் இதயம் மகிழ்ச்சியால் பொங்கி வழிந்தது. முன்பு ஒரு ஸத்புருஷர் சொன்ன வார்த்தைகள் நேரிடை அனுபவமாக மலர்வதை உணர்ந்தார்.

64 இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு ஸாயீபாதங்களில் சிரம் வைத்து அவர் கூறினார், ''மஹராஜ், அநாதையான எனக்குக் கிருபை செய்யுங்கள்; என்னை ஆதரியுங்கள்.--

65 ''நீங்களே என் மஹாபுருஷர். நிச்சலதாஸரின் நூல் செய்யும் உபதேசத்தை முழுமையாக இன்றுதான் நான் புரிந்துகொண்டு ஆனந்தமடைந்தேன்.--

66 ''ஓ, வட்காங்வ் எங்கே, சிர்டீ எங்கே? ஸத்புருஷரும் மஹாபுருஷருமான இந்த ஜோடி என்னே எவ்வளவு தெளிவான, சுருக்கமான பாஷை உபதேசம் செய்யும் திறமைதான் என்னே--

67 ''ஒருவர் சொன்னார், 'புத்தகத்தைப் படி; பிற்காலத்தில் நீ ஒரு மஹாபுருஷரை சந்திப்பாய். நீ எவ்வழி நடக்கவேண்டுமென்று உபதேசித்து அவர் வழிகாட்டுவார்ஃ (என்று).--

68 ''தெய்வபலத்தால் அவரை சந்தித்துவிட்டேன். அவரும் தாம்தான் அம் மஹான் என்பதைக் குறிப்பால் அறிவித்துவிட்டார். முதல்வர் சொன்னவாறு நான் அந்நூலைப் படித்தேன். இப்பொழுது இரண்டாமவருடைய உபதேசத்தின்படி நடக்க வேண்டும்.ஃஃ

69 ஸாயீநாதர் அவரிடம் சொன்னார், ''கன்னட அப்பா உமக்குச் சொன்னது அனைத்தும் யதார்த்தமே (உண்மை நிலை) ஆனால், அவையனைத்தையும் செயல்முறையில் கொண்டுவந்தால்தான் உம்முடைய மனோரதங்கள் நிறைவேறும்.ஃஃ

70 வட்காங்வில் நிச்சலதாஸரின் விசாரஸாகரம் பக்தரின் நன்மைக்காகப் பரிந்துரைக்கப் பட்டது. சிறிது காலம் சென்ற பின், நூலைப் பாராயணம் செய்து முடித்த பிறகு, அதை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது சிர்டீயில் கற்றுக் கொடுக்கப்பட்டது.

71 முத­ல் நூலைக் கற்க வேண்டும்; பிறகு அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். ஆரம்பத்தி­ருந்து முடிவுவரை அதன்படி நடக்க வேண்டும். திரும்பத் திரும்ப இம்மாதிரியே பாராயணம் செய்ய வேண்டும். கற்ற வழி நிற்க வேண்டும்.

72 வாசிப்பதே முடிவான காரியம் அன்று; அது நடைமுறைக்கு வரவேண்டும். இல்லையெனில், அது கவிழ்த்து வைக்கப்பட்ட பாத்திரத்தின்மேல் நீர் ஊற்றுவது போலாகும்.

73 அனுபவ ஞானம் அளிக்காத புத்தக ஞானம் வியர்த்தமாகும். பிரம்ம ஞானம் அடைந்த குருவின் கிருபையில்லாது, வெறும் புத்தக ஞானம் பலனேதும் அளிக்காது.

74 புருஷார்த்தங்கள் (அறம், பொருள், இன்பம், வீடு), பக்தியின் உண்மை நிலை, இவற்றை விளக்கும் ஒரு சிறுகதையை இந்த சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். கேட்பவர்கள் தங்களுடைய நன்மை கருதி கவனமாகக் கேட்கட்டும்.

75 புண்ணியப்பட்டணத்தில் (புணே) வசித்து வந்த அனந்தராவ் பாடண்கர் என்ற பெயர் கொண்ட பக்தரொருவர் ஸாயீதரிசனம் செய்ய ஆவல் கொண்டு சிர்டீக்கு வந்தார்.

76 அவர் வேதாந்தம் பயின்றவர்; உபநிஷதங்களையும் பாஷ்யங்களையும் (விரிவுரை) மூல மொழியான ஸமஸ்கிருதத்திலேயே படித்தவர். அவ்வளவு படிப்பும் அவருக்கு மனவமைதியை அளிக்கவில்லை; மனம் அலைபாய்ந்துகொண்டே இருந்தது.

77 ஸமர்த்த ஸாயீயை தரிசனம் செய்தவுடனே அவர் சாந்தியடைந்தார். பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டுச் சடங்குகளுடன் கூடிய பூசையும் செய்தார்.

78 கைகளைக் கூப்பி அஞ்ச­ செய்துகொண்டு பாபாவின் எதிரில் உட்கார்ந்தார். பிரேமையுடன் கருணை வேண்டும் குர­ல் கேட்டார்.

79 ''பலவிதமான நூல்களைப் படித்துவிட்டேன்; வேதங்களின் சிகரமான உபநிஷதங்களையும் அத்யயனம் (மனப்பாடமாக ஓதுதல்) செய்துவிட்டேன். ஸத்தான சாஸ்திரங்களையும் புராணங்களையும் பிறர் சொல்லக் கேட்டுவிட்டேன். ஆயினும் ஏன் என் மனம் ஏக்கம் பிடித்தும் சோர்வடைந்தும் இருக்கிறது?--

80 ''நான் வாசித்தெல்லாம் வீண் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஓரெழுத்தும் பயிலாத பா(ஆஏஅ)வபக்தி உள்ளவர் என்னைவிடச் சிறந்தவர் என்றே நினைக்கிறேன்.--

81 ''நான் பல நூல்களைக் கற்றதும் சாஸ்திரங்களைப் பரிசீலனை செய்ததும் வீண். மனத்திற்கு சாந்தியளிக்காத அனைத்துப் புத்தக ஞானமும் வீணே--

82 ''ஓ, சாஸ்திரங்களைக் குடைந்து ஆராய்வது எவ்வளவு ஸாரமில்லாத விஷயம் மஹாவாக்கியங்களை1 ஜபம் செய்தும் மனவமைதி பிறக்கவில்லையெனில் ஜபம் செய்வதால் என்ன பிரயோஜனம்? ஓ, மனவமைதியே கிடைக்கவில்லையெனில் பிரம்ம ஞானம் எங்கிருந்து கிடைக்கும்?--

83 ''ஸாயீ தரிசனம் மனக்கவலைகளை அகற்றிவிடுகிறதென்றும், சாந்தியை அளிக்கிறதென்றும், ஈதனைத்தும் உல்லாசமான தமாஷ் பேச்சிலேயே நடந்துவிடுகிறதென்றும், ஸாயீ மிக சுலபமாக பக்தருக்கு நல்வழி காட்டுகிறாரென்றும் செவிவழிச் செய்தியாக அறிந்தேன்.--

84 ''ஆகவே, தவக்கடலான மஹராஜரே உம்முடைய பாதங்களை நாடிப் பணிவுடன் வந்திருக்கிறேன். என்னுடைய மனம் சஞ்சலமடையாது நிலையான சாந்தியைப் பெற ஆசீர்வாதம் செய்யுங்கள்.ஃஃ

85 மஹராஜ் இதன் பிறகு ஓர் உருவகக் கதை சொன்னார். அதைக்கேட்ட அனந்தராவ் தாம் கற்ற கல்வி பலனளித்துவிட்டது என்று ஸமாதானமடைந்தார்.

86 பரம ஸாரமுள்ளதும் சுருக்கமானதுமான அக் கதையை இப்பொழுது சொல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள். நகைச்சுவை மிகுந்ததாயினும் போதனை நிறைந்த இக் கதையை யார் அனாதரவு செய்யமுடியும்?

87 பாபா கேள்விக்குப் பதில் கூறினார், ''ஒருசமயம் வியாபாரி ஒருவன் இங்கு வந்தான். அவனெதிரில் இருந்த குதிரை ஒன்பது (சாணி) லத்திகளைப் போட்டது.--

88 ''வியாபாரி செயல் முனைப்பு உடையவனானதால் சட்டென்று தன்னுடைய அங்கவஸ்திரத்தை விரித்தான். ஒன்பது லத்திகளையும் ஜாக்கிரதையாகச் சேகரித்துக் கட்டிக்கொண்டான். ஒருமுனைப்பட்ட மனம் உடையவன் ஆனான்.ஃஃ

89 ஸமர்த்த ஸாயீ தெரிவிக்க விரும்பியது என்ன? அதனுடைய உட்பொருள் என்ன? வியாபாரி (சாணி) லத்திகளை எதற்காகச் சேகரித்தான்? விஷயமென்னவென்றே புரியவில்லையே

90 அனந்தராவ் இதைப்பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து, மசூதியி­ருந்து திரும்பிவந்து, நடந்த ஸம்பாஷணை முழுவதையும் தாதா கேள்கரிடம்1 விவரித்தார்.

91 ''யார் இந்த வியாபாரி? குதிரைச் சாணியால் யாருக்கு என்ன பிரயோஜனம்? ஏன் குறிப்பாக ஒன்பது லத்திகள்? இவையெல்லாம்பற்றி எனக்கு விளக்குங்கள்.--

92 ''தாதா, இதென்ன புதிர்? என்னுடைய சிறுமதிக்கு எதுவும் விளங்கவில்லை. எனக்கு எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லுங்கள். பாபாவின் இதயத்தில் என்ன நினைத்தார் என்பது எனக்கு விளங்கவேண்டும்.ஃஃ

93 தாதா கூறினார், ''பாபாவின் திருவாய்மொழியை முழுக்க என்னாலும் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆயினும், அவர் தரும் உள்ளுணர்வால் நான் என்ன புரிந்துகொள்கிறேன் என்பதைச் சொல்கிறேன்.--

94 ''குதிரை இறைவனின் அருள்; ஒன்பது (சாணி) லத்திகள் ஒன்பது விதமான பக்தியின் வெளிப்பாடுகள். பக்தியின்றிப் பரமேச்வரனை அடைய முடியாது. ஞானத்தால் மட்டும் அவனை அடையமுடியாது.--

95 ''பக்தியின் வெளிப்பாடுகளைப்பற்றி இவ்விதம் அறிவீராக.

முதலாவதாக, சிரவணம் (இறைவனின் பெருமையைக் கேட்டல்),

இரண்டாவதாக, கீர்த்தனம் (இறைவனின் லீலைகளைப் பாடுதல்),

மூன்றாவதாக, ஸ்மரணம் (இறைவனை நினைத்தல்),

நான்காவதாக, பாதஸேவனம் (பாதங்களைக் கழுவுதல் - பிடித்து விடுதல்),

ஐந்தாவதாக, அர்ச்சனம் (மலர்களால் அர்ச்சனை செய்து பூஜித்தல்),

ஆறாவதாக, வந்தனம் (பணிதல் - நமஸ்காரம் செய்தல் - வணங்குதல்),

ஏழாவதாக, தாஸ்யம் (அடிமைபோல் ஸேவை செய்தல்),

எட்டாவதாக, ஸக்யம் (தோழமை கொள்ளுதல்),

ஒன்பதாவதாக, ஆத்மநிவேதனம் (தன்னையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல்).--

96 ''நவவித பக்திகளில் ஏதாவது ஒன்றையாவது பூரணமான பா(ஆஏஅ)வத்துடன் கடைப்பிடித்தால், வேறெதையும் வேண்டாத ஸ்ரீஹரி, பக்தனுக்குத் தம்மை வெளிப்படுத்துவார்.--

97 ''பக்தியில்லாத ஜபமும் தவமும் விரதங்களும் யோகஸாதனைகளும் வேதங்களையும், உபநிஷதங்களையும் பரிசீலனை செய்வதும் பலமாக ஆத்ம ஞானப் பிரவசனம் செய்வதும் (இவையனைத்துமே) வீண்.--

98 ''வேத சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஞானமோ ஞானி என்கிற உலகளாவிய கீர்த்தியோ வறண்ட, அன்பில்லாத பக்தியோ உபயோகமில்லை. அன்பு நிறைந்த பக்தியே
தேவை.--

99 ''உம்மை அந்த வியாபாரியாக அறிந்துகொள்வீராக அந்த நிகழ்ச்சியின் உட்பொருளைப் புரிந்துகொள்வீராக ஒன்பது விதமான பக்தி என்னும் கொடி ஏற்றப்படும்போது இறைவன் உல்லாசமடைகிறான்.--

100 ''குதிரை ஒன்பது லத்திகள் சாணமிட்டது. வியாபாரி அதை ஆவலுடன் ஓடிப் பிடித்தான். அம்மாதிரியாகவே நீர் நவவித பக்தியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், உமது மனம் சாந்தியில் திளைக்கும்.--

101 ''அதுவே உம்முடைய மனத்தை உறுதிப்படுத்தி கம்பீரமாக்கும்; எல்லா உயிர்களிடத்தும் நல்லுணர்வை ஊட்டும். அது இல்லை எனில், மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டு அலைபாயும். இவ்வாறு குருவரர் பிரேமையுடன் கூறுகிறார்.ஃஃ

102 அடுத்தநாள் ஸாயீ பாதங்களுக்கு வந்தனம் செய்யச் சென்றபோது, ''என்ன, குதிரைச் சாணி லத்திகளை உம்முடைய அங்கவஸ்திரத்தில் (மேல்துண்டில்) கட்டிவிட்டீரா?ஃஃ என்று பாபாகேட்டார்.

103 அனந்தராவ் பிரார்த்தனை செய்தார், ''இந்த தீனனின்மேல் உங்களுக்கு தயவிருந்தால் அவற்றை சுலபமாகச் சேர்த்துக் கட்டிவிட முடியும். அப்படியென்ன முடியாத விஷயமா அது?ஃஃ

104 பாபா அவரை ஆசீர்வதித்து, 'மங்களமுண்டாகும்ஃ என்று உறுதியளித்தார். அவ்வார்த்தைகளைக் கேட்ட அனந்தராவ் மகிழ்ச்சிக்கட­ல் மூழ்கினார்; சுகத்தை அனுபவித்தார்.

105 செவிமடுப்பவர்களே இப்பொழுது இன்னுமொரு சிறுகதையை பயபக்தியுடன் கேளுங்கள். பாபாவினுடைய அந்தர்ஞானத்தைப் (எங்கு நடப்பதையும் அறியும் சக்தியைப்) பற்றியும் பக்தர்களை நல்வழிப்படுத்தும் முறையையும் அறிந்துகொள்வீர்கள்.

106 ஒருசமயம் ஒரு வக்கீல் சிர்டீக்கு வந்தவுடனே மசூதிக்குச் சென்றார். ஸாயீநாதரை தரிசனம் செய்துவிட்டுப் பாதங்களில் வணங்கினார்.

107 தாம் கொண்டுவந்திருந்த தக்ஷிணையைக் கொடுத்துவிட்டு உடனே ஒரு பக்கத்தில் அமர்ந்தார். அங்கு நடந்துகொண் டிருந்த ஸாயீயின் ஸம்பாஷணையைக் கேட்க ஆவல் கொண்டார்.

108 பாபா அவர் பக்கம் திரும்பி அவரைப்பற்றி ஏதோ சொன்னார். அந்த வார்த்தைகள் அவருள்ளே புகுந்து, தேள்போல் கொட்டின. அவர் விசனமுற்றார்.

109 ''ஓ, மக்கள்தாம் எவ்வளவு நேர்மையில்லாமல் இருக்கிறார்கள் பாதங்களில் விழுந்து வணங்குவர்; தக்ஷிணையும் அர்ப்பணம் செய்வர்; ஆயினும் மனத்துள்ளே எப்பொழுதும் வசைபாடுவர். எவ்வளவு ஸாமர்த்தியமாகச் செயல் புரிகிறார்கள்ஃஃ

110 இதைக் கேட்ட வக்கீல் மௌனம் சாதித்தாலும், அவருடைய உள்மனத்திற்கு அனைத்தும் புரிந்துவிட்டது. பாபாவின் வார்த்தைகளில் நியாயமிருந்தது அவருக்குத் தெரிந்தது. தாத்பரியம் (பாபாவின் நோக்கம்) அவர் மனத்தை எட்டிவிட்டது

111 பிறகு அவர் வாடாவிற்குத் (சத்திரத்திற்குத்) திரும்பியபோது தீக்ஷிதரிடம்1 சொன்னார். ''பாபாவின் வார்த்தைகள் இதயத்தைத் துளைப்பதுபோல் இருப்பினும், அவர் கூறியதனைத்தும் சரியே--

112 ''நான் நுழைந்தபோது பாபா விடுத்த சொல்லம்புகளெல்லாம் உண்மையில், மற்றவர்களைத் தூஷித்துப் பேசுவதிலும் இழிவாகப் பேசுவதிலும் என் மனம் ஈடுபடக்கூடாது என்று எனக்கு அளிக்கப்பட்ட எச்சரிப்பேயாகும்.--

113 ''உடல் நலம் குன்றிய, எங்கள் நீதிபதி, ஓய்வெடுத்துக் கொள்வதற்காகவும் சுகமடைவதற்காகவும் விடுப்பு எடுத்துக்கொண்டு இங்கு (சிர்டீக்கு) வந்தார்.--

114 ''அந்த சமயத்தில், வக்கீல்கள் ஓய்வெடுக்கும் கூடத்தில் நீதிபதியைப்பற்றிய பேச்சு எழுந்தது. சம்பந்தமே இல்லாதவர்கள் விவாதத்திலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.--

115 ''வைத்தியம் செய்துகொண்டு சரியான மருந்துண்ணாமல் ஸாயீயின் பின்னால் ஓடுவதால் மட்டும் சரீரத்தின் நோய்கள் நிவாரணம் ஆகிவிடுமா என்ன? நீதிபதி பதவியில் இருப்பவர் ஒருவர் இவ்வாறு செய்வது முறையா?ஃஃ (என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது).--

116 ''இவ்வாறாக நீதிபதியைப்பற்றிய நிந்தையும் புறம் பேசுதலும் தொடர்ந்தன. ஏளனம் பாபாவையும் விட்டுவைக்கவில்லை. மிகச்சிறிய அளவாக இருக்கலாம்; ஆனால், நானும் அந்த தூஷணைக்கு உடந்தையாக இருந்தேன். அது தகாத செயல் என்பதையே பாபா ஆக்ஷேபணம் (மறுப்பு) செய்து என்னை எச்சரித்தார்.--

117 ''பாபா என்னைத் திட்டவில்லை; அனுக்கிரஹமே செய்திருக்கிறார். வீணான வாதங்களையும் தர்க்கத்தையும் இகழ்ச்சியான விமரிசனங்களையும் நிந்தையையும் மற்றவர்களைப்பற்றிய தீய எண்ணங்களையும் அறவே ஒழித்துவிடு என்று போதித்து எனக்கு அனுக்கிரஹம் செய்திருக்கிறார்.--

118 ''நூறு மைல்களுக்கப்பால் இச்சம்பவம் நடந்ததெனினும், ஸாயீ ஒவ்வொருவர் மனத்தையும் அறிந்திருக்கிறார் என்பதற்கு இன்னுமொரு நிரூபணம் கிடைத்துவிட்டது. அவர் எங்கு நடப்பதையும் அறியும் சக்தி படைத்தவரல்லரோ--

119 ''இன்னொரு விஷயமும் தெளிவாகிவிட்டது. குன்றுகளும் மலைகளும் நடுவே தடையாக இருந்தபோதிலும் ஸாயீநாதரின் பார்வையி­ருந்து எதையும் மறைக்க முடியாது. பரம ரஹஸியமாக நாம் கருதும் விஷயமும் அவர் முன்னே திறந்து கிடக்கிறது.ஃஃ

120 ஆகவே, அப்பொழுதி­ருந்து அந்த வக்கீல் யாரையும் நிந்திப்பதில்லையென்றும் விமரிசிப்பதில்லையென்றும் யாரைப்பற்றியும் எந்தக் கெட்ட எண்ணத்திற்கும் இடமளிப்பதில்லையென்றும் உறுதியாகத் தீர்மானம் செய்துகொண்டார்.

121 நாம் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் அது ஸாயீயின் பார்வையில் படாமல் இருக்காது. இந்த விஷயம் அவருக்கு நிச்சயமாகிவிட்டது. அஸத்தான (தீய) செய்கைகளில் அவருக்கிருந்த நாட்டம் ஒழிந்தது.

122 நல்ல காரியங்களைச் செய்யவேண்டுமென்ற விழிப்புணர்வு ஏற்பட்டது. தமக்கு உள்ளும் முன்னாலும் பின்னாலும் ஸாயீ இருக்கிறார் என்ற நம்பிக்கை அவர் இதயத்தில் நிர்த்தாரணம் ஆகிவிட்டது. ஸாயீயை வஞ்சிக்கும் ஸாமர்த்தியம் படைத்தவர் யார்?

123 இக் கதை அந்த வக்கீலுக்கே சம்பந்தப்பட்டதாகத் தோன்றினாலும், ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், இந்த போதனை எவ்விதமாகப் பார்த்தாலும் எல்லாவழியிலும் நம் எல்லாருக்கும் அளிக்கப்பட்டது என்பது விளங்கும்

124 அந்த வக்கீலைப் போலவே, இந்தக் கதையைச் சொல்பவரும் கேட்பவர்களும் அனைத்து ஸாயீ பக்தர்களுமே இந்த போதனையின்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்.

125 ஸாயீகிருபை என்னும் மேகம் அருளைப் பொழியும்போது நாமனைவரும் திருப்தியடைவோம். இதில் புதுமை ஏதும் இல்லை. தாஹமெடுத்தவர்கள் அனைவரும் திருப்தியடைவர்

126 ஸாயீநாதரின் பெருமை அளவிடமுடியாதது; அவருடைய கதைகளும் எண்ணிலடங்காதவை. ஸாயீயின் சரித்திரம் எல்லையற்றது; ஏனெனில், அவர் முழுமுதற்பொருளின் அவதாரம்.

127 சிரத்தையுடன் செவிமடுப்பவர்களே அடுத்த அத்தியாயத்தில் ஒரு கதையை பயபக்தியுடன் கேட்டால் உங்களுடைய மனோதரங்கள் நிறைவேறும்; மனம் உறுதிப்படும்; சாந்தியடையும்.

128 தம் பக்தர்களுக்கு என்னென்ன ஆபத்துகள் வரப்போகின்றன என்பது ஸாயீநாதருக்கு முன்கூட்டியே தெரியும். கே­யும் பரிஹாஸமும் சிரிப்புமாக விளையாடிக்கொண்டே ஸாயீநாதர் அவ்வாபத்துகள் வாராது தடுத்துவிடுவார்.

129 பக்தன் ஹேமாட் ஸாயீயை சரணடைகிறேன். இக்கதை இங்கு முற்றும். அடுத்து வரும் கதை பக்தர்களுக்கு வரக்கூடிய ஸங்கடங்களை ஸாயீ நிவாரணம் செய்தது பற்றியாகும்.

130 பக்தர்களுக்கு நேரப்போகும் ஸங்கடங்களையும் ஆபத்துகளையும் முன்கூட்டியே தெரிந்துகொண்ட ஸாயீ என்னும் கருணைக்கடல், எப்படிச் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்து அவ்வாபத்துகள் வாராது தடுத்தார் என்பதுபற்றிச் சொல்கிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'அநுக்கிரஹம் செய்தல்ஃ என்னும் இருபத்தொன்றாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.


Do you want to ask questions and share ideas about your kid's education, parenting and more? Join Tamilcube Kids, our exclusive premium Facebook group now, and start meeting other Singapore Indian parents with similar interests.

Share:

Download Free Tamilcube School App:
Home Tamil Tuition Tamil Testpapers Tamil eLearning Calendar Books Astrology
Dictionaries : Tamil Hindi Malayalam Telugu Marathi Sanskrit Kannada More...
Baby Names : Tamil Hindi Sanskrit Telugu Kannada Muslim Malayalam Bengali Marathi Gujarati Marathi
GK : GK questions TNPSC More...
More...