Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 8

8. நரஜன்ம மஹிமை - பிச்சை எடுத்து உண்டது - பாயஜாபாயியின் ஒப்பில்லாத பக்தி - தாத்யாவுடனும் மஹால்ஸாபதியுடனும் மசூதியில் உறங்கியது




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 கடந்த அத்தியாயத்தில், பாபா ஹிந்துவா முஸ்லீமா என்று எப்படி எவராலும் நிர்ணயிக்க முடியாதுபோயிற்று என்பதும் பாபா தம்முடைய வாசஸ்தலமாக ஆக்கிக்கொண்ட சிர்டீ வானளாவிய பாக்கியம் பெற்றது என்பதும் விவரித்துச் சொல்லப்பட்டன.

2 பாபா முதன்முத­ல் ஓர் இளைஞனாக வந்து, பிறகு மக்களுக்கு ஒரு 'பைத்தியக்காரப் பக்கீராகஃ எவ்வாறு மாறினார் என்பதுபற்றியும் கரடுமுரடான கரம்பு நிலத்தை ஓர் அழகான பூந்தோட்டமாக அவர் ஆக்கியதுபற்றியும்--

3 சிலகாலத்திற்குப் பிறகு, அவ்விடத்தில் ஒரு சத்திரம் எவ்வாறு எழுந்தது, எவ்வாறு பாபா தோதி-போதி, கண்டயோகம் போன்ற தைரியமான யோகப்பயிற்சிகளில் தலைசிறந்து விளங்கினார் என்பனபற்றியும்--

4 பக்தர்களின் ரட்சகரான பாபா எவ்வாறு அவர்களுடைய துன்பங்களைத் தம்முட­ல் ஏற்றுக்கொண்டு மெய் வருந்தினார் என்பதுபற்றியும், நான் எப்படிப் போதுமான அளவுக்கு வர்ணிப்பேன்?

5 நரஜன்மத்தின் மஹிமை, பாபா பிச்சை எடுத்த விவரம், ஞானிகளுக்கு பாயஜாபாயி செய்த தன்னலமற்ற ஸேவை, பாபா உணவு உண்ட விசித்திரம்,
இவற்றைப்பற்றியும்--

6 தாத்யா, மஹால்ஸாபதி, பாபா, இம்மூவரும் எப்படி மசூதியில் உறங்கினர் என்பதுபற்றியும் ரஹாதாவி­ருந்த குசால்சந்தின் இல்லத்திற்கு பாபா சென்ற பழக்கத்தைப்பற்றியும் மேற்கொண்டு கேளுங்கள்.

7 தினமும் காலையில் சூரியன் உதிக்கிறான்; மாலையில் மறைகிறான். இவ்விதமாக வருடங்கள் விழுங்கப்படுகின்றன. பாதி வாழ்வு தூக்கத்தில் தொலைகிறது; மீதி பாதியும் சாந்தியையோ சந்தோஷத்தையோ கொண்டுவருவதில்லை.

8 பால பருவம் விளையாட்டில் கழிந்துவிடுகிறது. இளமைப் பருவம் சிற்றின்பத்தில் கழிகிறது; வயோதிகப் பருவம், தள்ளாமையும் வியாதிகளும் பலவிதமான அவஸ்தைகளும் தரும் அலுப்பிலும் ச­ப்பிலும் கழிகிறது.

9 உடலைப் புஷ்டியாக வளர்ப்பதற்காகவும் தொண்டுகிழமாகும்வரை மூச்சுவிட்டுக் கொண் டிருப்பதற்காகவுமா நாம் இவ்வுலகிற்கு வந்தோம்? மனித ஜன்மம் எடுத்ததன் பயன் இதுதானா?

10 பரமாத்மாவை அடைவதே மனித ஜன்மத்தில் செய்யவேண்டிய முக்கிய கடமையாகும். அவ்வாறு இல்லையெனில் நாய்களும் பன்றிகளும் மற்ற மிருகங்களும் நடத்தும் வாழ்வில் குறை என்ன சொல்ல முடியும்?

11 நாய்களும் வயிற்றை நிரப்பிக்கொள்கின்றன; யதேஷ்டமாகப் பிரஜைகளை (குட்டிகளை) உற்பத்தி செய்கின்றன. நாய்களும் மனிதர்களும் இவ்விதத்தில் ஒரே நிலையில் இருப்பின், மனித ஜன்மத்தின் சிறப்புதான் என்ன?

12 உடலைப் பேணிப் போஷாக்காகக் காப்பதும் சிற்றின்பமுமே மனித வாழ்க்கையின் இலட்சியத்தைத் திருப்திசெய்யுமெனில், இந்த நரஜன்மத்திற்கு அர்த்தமேதும் இல்லாமல் போகிறது.

13 ஆஹாரம், நித்திரை, சிற்றின்பம், பயம் ஆகிய நான்கு செயல்பாடுகளிலேயே வாழ்க்கை கழிந்துவிட்டால், நாய்களுக்கும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்? நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

14 இதுதான் நரசரீரம் எடுத்ததன் பலன் என்றால், வண்டுகளுக்கும் தாவரங்களுக்கும் வாழ்க்கையில் என்ன குறை? துருத்திகளும் உள்மூச்சு வெளிமூச்சு வாங்குகின்றன; நாய்களும் நன்கு தின்று கொழுக்கின்றன அல்லவோõ

15 ஆனால், மனிதனோ பரிணாம வளர்ச்சியடைந்தவன்; பயமற்றவன்; சுதந்திரமானவன்; சாசுவதமானவன். இந்த விழிப்புணர்வு இருந்தாலே ஜன்மம் சாபல்யம் அடைகிறது.

16 நான் எங்கிருந்து வந்தேன்? நான் யார்? நான் ஏன் மனித ஜன்மா எடுத்திருக்கிறேன்? இதன் சூக்குமத்தை அறிந்தவன் வித்துவானாவான்; இந்த ஞானம் இல்லையெனில் சகலமும் வீண்.

17 தூங்காவிளக்கின் சுடர் ஆரம்பத்தி­ருந்து கடைசிவரை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் ஒவ்வொரு கணமும் அது மாறுபாடு அடைந்துகொண்டே இருக்கின்றது; மனித உடலும் அவ்வாறே.

18 பிள்ளைப் பருவம், இளமை, முதுமை-இந்த மூன்று நிலைகளும் எல்லாருக்கும் வெளிப்படையாக நன்கு தெரிந்ததே. ஆனால், அவை இயல்பாக வந்துபோவதை எவரும் உணர்வதில்லை.

19 இந்தக் கணத்தில் நாம் பார்க்கும் (தூங்காவிளக்கின்) சுடரின் நிலை இந்தக் கணத்தோடு சரி; ஒவ்வொரு கணமும் மாறுபட்டுக்கொண்டே இருந்தாலும், அது ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறது. அதுபோலவே, இந்தக் கணத்தில் மனித உடல் இருக்கும் நிலை அடுத்த கணத்தில் மாறிவிடும்.

20 மலம், மூத்திரம், சளி, சீழ், எச்சில், அழுக்கு ஆகியவற்றை வெளியிடும், கணத்திற்குக் கணம் மரணம் அடைந்துகொண் டிருக்கும் மனிதவுடல் துர்லக்ஷணம் நிரம்பியது.

21 புழுக்களும் கிருமிகளும் வாழும் இடமாகிய மனிதவுடல், பல ரோகங்களின் வாஸஸ்தலம் (இருப்பிடம்); நிலையற்றது; மரணமடையக்கூடியது.

22 மாமிசம், ரத்தம், தசைகள், ஓர் எலும்புக்கூடு, தோல் இவையெல்லாம் ஏற்றப்பட்ட பாரவண்டியே மனிதவுடல். மலமும் மூத்திரமும் நிறைந்த குழிகளுடன் உயிருக்குக் கவசமாக அமைந்துள்ளது.

23 தோல், மாமிசம், ரத்தம், சதை, கொழுப்பு, எலும்புகள், மஜ்ஜை, வாயு இவற்றுடன் பிறவி உறுப்பு, குதம் போன்ற அசிங்கமான பாகங்களுடன் சேர்ந்து அமைந்த இம்மனிதவுடல் அற்பகாலமே வாழக்கூடியது.

24 இவ்வளவு அமங்கலமானதாகவும் நசித்துப்போகக்கூடியதாகவும் கணநேரத்தில் முடிந்து போகக்கூடியதாகவும் மனிதவுடல் இருப்பினும், சர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமான பரமேச்வரனை அடைவதற்கு உண்டான கருவி அது ஒன்றேõ

25 ஜனனமரணச் சுழ­ல் மாட்டிக்கொண்ட மானிடன் மரணத்தைப்பற்றிய கற்பனையிலும் பயத்திலுமே வாழ்நாளைக் கழிக்கிறான். ஆயினும், உயிர் பிரியும்போது கணநேரத்தில் பறந்துவிடுகிறது.

26 இரவிலும் பக­லும் எத்தனை மக்கள் பிறக்கின்றனர்; இறக்கின்றனர். இதை யார் கணக்கு வைத்துக்கொள்ள முடியும்? மார்க்கண்டேயரைப்போல்1 வாழப்போகிறேன் என்று நினைத்துக்கொண் டிருப்பவர்களும் ஒருநாள் இறந்துதான் தீரவேண்டும்.

27 நிலையில்லாத மனித உட­ல் வாழும்போது, நினைத்தாலே புண்ணியம் அளிக்கக்கூடிய ஞானிகளின் திவ்வியமான சரித்திரத்தைக் கேட்கும் நேரமே நன்கு செலவிடப்பட்டதாகும். அதைச் செய்யாத நேரமெல்லாம் வியர்த்தமே.

28 அம்மாதிரியான விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்படுவதே மனிதப்பிறவி எடுத்ததன் அனுகூலமாகும். ஆயினும், சுயமாக அனுபவிக்காமல் எவரும் இவ்வுண்மையை உணரமுடியாதுõ

29 இவ்வனுபவத்தைப் பெறுவதற்கு மிகுந்த அப்பியாசம் தேவை. ஆகவே, சாசுவதமான ஆனந்தத்தை அனுபவிக்க விரும்பும் ஜீவன், அந்த வைபவத்தை அடைவதற்கு சாதனைகள் பல புரிய வேண்டும்.

30 மனைவி, மக்கள், சொத்து, புகழ் இவற்றுடன் ஆழிசூழ் உலகத்தையே ஒருவன் இறைவனின் அருளால் அடையலாம். அப்பொழுதும் அவன் மனத்தில் திருப்தி இல்லாதவனாக இருப்பான்.

31 ஆனால், சாசுவதமான சுகத்தையும் சாந்தியையும் மனத்தின் லக்ஷியமாகக் கொண்டு, எவ்வுயிரிலும் இறைவனைப் பார்ப்பதையே வழிபாடாக அமைத்துக்கொண்டால், அதுவே முக்தியை அளிக்கும்.

32 தோலையும் ரத்தத்தையும் மாமிசத்தையும் எலும்புகளையும் ஒன்றாகச் சேர்த்துச் செய்யப்பட்ட இம் மனிதவுடல் ஆன்மீக வாழ்க்கைக்குப் பெருத்த தடையாகும். ஆகவே, உடல்மீது கொண்ட பற்றை விட்டுவிடவேண்டும்.

33 உடலைக் கேவலம் உன் வேலைக்காரனாக நடத்து; அளவுக்கதிகமாக அதைப் பாராட்டாதே. அதற்குச் செல்லம் கொடுத்துக் கொடுத்து உன்னை நரகத்திற்கு இழுத்துக்கொண்டுபோக விடாதே.

34 அதற்கு உணவும் உடையும் தேவையான அளவு கொடுத்து நிர்வாகம் செய். அவ்வப்போது போஷித்துப் பாலனம் செய். அவ்விதம் செய்தால்தான் உடலை ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஜனனமரணச் சுழ­­ருந்து விடுபடுவதற்கும் உபயோகிக்க முடியும்.

35 ஜனனமரண அனர்த்தங்கள், எக்கணமும் மரணம் நேரலாம் என்னும் நிலை, இவ்விதமாக நிரந்தரச் சுகமற்றது மனித வாழ்க்கை. கணநேரமே ஏற்படும் மகிழ்ச்சியால் என்ன பிரயோஜனம்?

36 பளிச்சென்று ஒளி வீசி மறையும் மின்னலைப் போன்றும் கணநேரத்தில் தோன்றி மறையும் கடலலையைப் போன்றும் அநித்தியமானவை உடல் இன்பங்கள். இதைப் பற்றிச் சிறிது யோசியுங்கள்.

37 உடலும் வீடும் மனைவியும் மக்களும் உற்றாரும் உறவினரும் நசித்துப்போகக் கூடியவர்கள் என்பதை நன்கு அறிந்தும், தாய்தந்தையரின் பாடைகளைத் தோள்மேல் சுமந்துசென்ற அனுபவம் இருந்தும், மனிதன் தன்னுடைய நிலைபற்றிய உண்மையை உணர்வதில்லை.

38 அவனுக்கு முன்னால் இறந்து போனவர்கள் சென்ற பாதையிலேயே செல்கிறான்; ஜனனமரணச் சுழ­ல் மாட்டிக்கொள்கிறான். இச்சுழ­­ருந்து வெளிவருவது எப்படி என்று ஒரு கணமும் சிந்திப்பதில்லை.

39 குடும்பத்தின் பாரத்தைச் சுமப்பதிலேயே வாழ்க்கை வேகமாகக் கழிந்துவிடுகிறது. அனால், காலதேவனோ ஆண்டுகள் கழிவதை மிக அக்கறையுடன் கவனித்துக்கொண்டு வருகிறான்; கடமையி­ருந்து ஒருபோதும் நழுவமாட்டான்õ

40 கடைசி நேரம் வரும்போது காலதேவன் ஒரு கணமும் தாமதிக்கமாட்டான். மீன்பிடிப்பவன் வலையை இழுப்பதுபோல் இறுக்கமாக இழுத்துவிடுவான். அந்நேரத்தில் மனிதன் வலையில் அகப்பட்ட மீனைப்போல ஏதும் செய்யமுடியாது துடிதுடிப்பான்.

41 கோடிப்புண்ணியம் செய்தும் மஹாபாக்கியங்களாலும் இம் மனிதப்பிறவி கிடைத்திருக்கிறது. ஆகவே, இந்த நல்வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

42 பகீரதப்1 பிரயத்தனம் செய்தாலும் மனிதப்பிறவியை அடையமுடியாது. அது விதிவசமாகக் கிடைக்கும் அதிருஷ்டமே; வீணாகக் குப்பைத்தொட்டியில் போட்டுவிடாதீர்கள்.

43 இந்த ஜன்மத்தில் கிடைத்தது கைவிட்டுப் போனாலும், அடுத்த ஜன்மமும் மனிதப் பிறவியாகவே அமையும் என்று நினைத்து, அடுத்த ஜன்மத்திற்கென்று எதையும் தள்ளிப்போடுபவன் முட்டாள்.

44 எத்தனையோ பாபிகள் அவர்களுடைய கர்மாவுக்கேற்றவாறு மனிதப்பிறவி எடுப்பதற்காக ஆண்விந்து ரூபத்தில் யோனித்துவார வாயி­ல் வந்து நிற்கிறார்கள்.

45 அதனினும் அதமர்கள் (கடையர்கள்) நகரும் உயிரினத்தி­ருந்து நகராத தாவரமாக கர்மாவுக்கேற்றவாறு பிறவியெடுக்கிறார்கள்.

46 அடைந்த ஞானத்திற்கும் செய்த கருமானுஷ்டானங்களுக்கும் ஏற்ப ஒருவன் ஒரு குறிப்பிட்ட உடலை அடைவான் என்று நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இது வேதங்களின் பிரமாணம்.

47 கருணை வடிவான வேதமாதா சொல்கிறாள், ''ஞானத்திற்கு ஏற்றவாறே பிறவி ஏற்படுகிறதுஃஃ. எவ்வளவு இறைஞானம் சேமிக்கப்பட்டிருக்கிறதோ அதற்கேற்றவாறே ஜீவனுக்குப் பிறவி கிடைக்கிறது.

48 இறைவனுடைய லீலைகள் தர்க்கசிந்தனையால் புரிந்துகொள்ளமுடியாதவை. அவற்றைப்பற்றிய பூரணமான ஞானத்தை அடையவேமுடியாது; ஒரு பகுதியையாவது அறிந்துகொள்ளமுடிந்த மனிதன், மஹாபாக்கியசா­.

49 பரமபாக்கியம் பெற்றவனே மனிதப்பிறவி பெறுகிறான்; அவனினும் புண்ணியசா­யே உயர்குலத்தில் பிறக்கின்றான். ஆனால், இறைவனின் அருளே ஒருவரை ஸாயீ பாதங்களுக்குக் கொண்டுவருகிறது. இம்மூன்றும் ஒருசேரக் கிடைப்பது அரிதினும் அரிது.

50 யோனி ஜன்மமாகப் பிறக்கும் ஜீவராசிகள் எத்தனை எத்தனையோ. இவையனைத்திலும் மனிதப்பிறவியே சிரேஷ்டமானது. ஏனெனில், மனிதர்களால்தான் 'என்னைப் படைத்தது யார்? நான் எங்கிருந்து வந்தேன்?ஃ என்றெல்லாம் சிந்தனை செய்ய முடியும்.

51 மற்ற ஜீவராசிகளுக்கு எதுவுமே தெரிவதில்லை. பிறக்கின்றன; வாழ்கின்றன; ஒருநாள் இறந்துபோகின்றன. கடந்த காலத்தைப்பற்றியோ, நிகழ்காலத்தைப்பற்றியோ, எதிர்காலத்தைப்பற்றியோ, இறைவனைப்பற்றியோ எந்த ஞானமும் அவற்றிற்கு இல்லை.

52 மனிதனைப் படைப்பதில் இறைவன் ஆனந்தம் அடைந்தான். மனிதன் விவேகத்தை உபயோகித்துப் பற்றற்ற நிலையை நாடித் துறவுபூண்டு, தன்னை வழிபடுவான் என்றெண்ணினான்.

53 சிருஷ்டியில் வேறெதற்கும் முக்தியடைவதற்கேற்ற ஸாதனைகள் செய்யக்கூடிய உடலமைப்பு இல்லை. தன்னுடைய உடைைல உபயோகப்படுத்தி ஸாதனைகள் புரிந்து, மரணமேயில்லாத நாராயணனுடன் ஒன்றிவிடும் சக்தி மனிதனுக்கு மாத்திரமே உண்டு.

54 மாயாஜால வித்தைக்காரன் சாமர்த்தியசா­யாக இருப்பான்; ரஸிக்கத் தெரியாத கூட்டத்திற்கு அவன் வித்தை காட்டுவதில்லை; தன்னுடைய சூக்குமமான அசைவுகளையும் வேகமான விளைவுகளையும் ரஸிக்கும் கூட்டத்தையே நாடுகிறான்.

55 எண்ணிலடங்காத பறவைகளையும் மிருகங்களையும் மரங்களையும் புழுக்களையும் பூச்சிகளையும் இதர ஜீவராசிகளையும் சிருஷ்டி செய்தபின், பரமேச்வரன் தன்னுடைய லீலைகளனைத்தும் ஸாரமில்லாமல் போய்விட்டனவே என்று ஆச்சரியமடைந்தான்.

56 சூரியனும் சந்திரனும் கணக்கற்ற நக்ஷத்திரங்களும் அடங்கிய பிரம்மாண்டமான சிருஷ்டியில், எதற்கும் இவ்வற்புதமான நிர்மாணத்தைப்பற்றிய சிந்தனையோ, வியப்போ, படைப்பாளியைப்பற்றிய பிரமிப்போ சிறிதளவும் ஏற்படவில்லையேõ

57 இப்பிரபஞ்சத்தின் தலைவனாக, சிருஷ்டி என்னும் இந்த லீலையை நான் புரிந்த காரணம் ஓர் உயிருக்கும் தெரியவில்லையேõ

58 ஆகவே, என்னுடைய சிருஷ்டியின் வைபவங்களைப் புரிந்துகொள்ளவும் என்னுடைய ஒப்பில்லா மஹிமை படைத்த செயலைப் பாராட்டுவதற்கும் தேவையான திறமையுள்ள, தர்ப்பையின் நுனி போன்ற கூரிய மதி படைத்த, ஒரு ஜீவனை நான் சிருஷ்டி செய்யாதவரை, நான் ஏற்கெனவே செய்த செயல்களனைத்தும் பயனற்றுப் போகும்.

59 ஆகவே, இறைவன் மனிதனைப் படைத்தான். ஜகதீசன் நினைத்தான், ''இம்மனிதன், ஸாரம் எது? ஸாரமில்லாதது எது? என்று தன்னுடைய புத்தியை உபயோகித்துத் தெரிந்துகொண்டு என்னை அறிவான்.--

60 ''என்னுடைய அளவிடமுடியாத வைபவத்தை அறிந்து, என்னுடைய அபூர்வமான சக்தியையும் உணர்ந்து, இப்பிரபஞ்சமே என்னுடைய மாயையின் லீலை என்பதையும் தெரிந்துகொண்டு ஆச்சரியத்தில் மூழ்கிப்போவான்.--

61 ''மனிதனால்தான் ஞானத்தைச் சம்பாதித்துக்கொண்டு, என்னைப்பற்றிய சிந்தனையும் தியானமும் செய்து, மரியாதை கலந்த பயத்தாலும் வியப்பாலும் நிரம்பிப்போக முடியும். என்னுடைய லீலை அப்போதுதான் பூரணமாகும்.--

62 ''பார்வையாளர்களுடைய மகிழ்ச்சியே என்னுடைய லீலையின் நிறைவேற்றம். இவ்வுலகத்தை நான் நிர்வகிக்கும் திறமையைப் பார்த்து மனிதன் திருப்தியடைவான்ஃஃ.

63 பலனை விரும்பிச் செய்யும் செயல்களும் பணம் சம்பாதிப்பதும் மனிதவுடலைப் பேணிக்காப்பதன் நோக்கமல்ல. உயிருள்ளவரை விடாமுயற்சியால் தத்துவஞானத்தை சம்பாதிப்பதே பிறவியின் பயன்.

64 அபேதத்தை1 உணர்வதே சிறந்த ஞானம். உபநிஷதங்கள் இதையே பிரம்ம ஞானம் என்று அழைக்கின்றன. இறைவனை வழிபடுவதும் ஸேவை செய்வதும் இதுவே. 'பகவான் பக்தர்களைச் சார்ந்தவன்ஃ என்ற வசனத்திற்குப் பொருளும் இதுவே என்று கொள்ளலாம்.

65 'பிரம்மமும் குருவும் தானும் ஒன்றேஃ என்ற அபேத ஞானத்தைப் பெற்றவனுக்கு, அதே மார்க்கத்தில் பக்தி செலுத்துபவனுக்கு, மாயையை வெல்வது சுலபம்.

66 இவ்வாறு சிரத்தையுடன்கூடிய ஞானத்தையும் துறவு மனப்பான்மையையும் பெற்ற யோக்கிய புருஷர்கள் மாத்திரமே, தன்னை அறியும் சுகத்தைப் பெறத் தகுதியுடையவர்கள். அம்மாதிரியான பக்தர்கள் பாக்கியசா­கள் என அறியவும்.

67 'தான் யார்ஃ என்று அறியாமல் தன்னை முழுமை பெற்றவன் என்று நிர்ணயித்துக் கொள்வதால் ஓர் அவலக்ஷணமான பிரதிபந்தம் (மாற்றுத்தளை) உருவாகிறது.

68 ஞானம், அஞ்ஞானம் இரண்டுமே மனத்தின் விகாரங்கள்; மயக்கத்திற்கும் தவறுகளுக்கும் இடமளிக்கக் கூடியவை. ஒரு முள்ளை மற்றொரு முள்ளால்தான் எடுக்கவேண்டும். அதுபோல ஒன்றை மற்றொன்றால் நீக்கவேண்டும்.

69 அஞ்ஞானத்தை ஞானத்தால் விரட்டவேண்டும். இருப்பினும் மனிதப் பிறவியின் மிகச்சிறந்த இலக்கு, அஞ்ஞானம்-ஞானம் இரண்டிற்கும் அப்பால் சென்று, பரிசுத்தமான ஆத்மாவிலேயே கரைந்துபோவதுதான்.

70 புலனின்ப நாட்டம் என்னும் எண்ணெய் எரித்து முடிக்கப்படும்வரை, அஞ்ஞான இருள் சாம்பலாக்கப்படும்வரை, 'நான்ஃ, 'என்னுடையதுஃ என்னும் திரி பொசுங்கிப்போகும்வரை, ஞானம் பிரபையுடன் (சுடரைச் சுற்றியிருக்கும் ஒளிவட்டம்) ஒளிவிடாது.

71 தவிர்க்க முடிந்ததோ, தவிர்க்க முடியாததோ, நரதேஹத்தால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் புத்தியால் நிச்சயிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன என அறியவும்.

72 செய்வதற்கு வேலை என்று ஒன்றும் இல்லாதவன், ஐசுவர்யத்தையும் சுகத்தையும் அனுபவித்துக்கொண்டு வாழலாம்; அல்லது ராமநாமத்தை ஜபம் செய்யலாம். ராமநாமம் ஆசைகளி­ருந்தும் தொல்லைகளி­ருந்தும் விடுதலையளிக்கும்.

73 உட­ன் உறுப்புகள், மனம், புத்தி இவை ஆத்மாவினுடைய உபாதிகள். இவ்வுபாதிகளால், ஆரம்பம் இல்லாததும் இன்பம் தேடாததுமான ஆத்மா, கர்மவினைகளால் ஏற்பட்ட இன்னல்களை அடைகிறது.

74 தன்னுடைய சுயகுணத்தால் இன்பம் தேடாத ஆத்மா, இன்னலடைவது மேற்சொன்ன உபாதிகளாலேயே. அன்வயம்1 -- வ்யதிரேகம் என்னும் விதிகளைக் காட்டி நியாயசாஸ்திரம் இதற்கு நிரூபணம் அளித்திருக்கிறது.

75 செயல்களையும் மனத்தின் தாவல்களையும் புத்திக்கு விட்டுவிடவேண்டும் என்பதை அடிப்படைத் தத்துவமாக அறிந்துகொள். உன்னைப் பொறுத்தவரை செயல் புரியாதவனாக இரு. (இறைவனின் கையில் நான் ஒரு கருவியே என்னும் பாவனை).

76 சுயதர்மத்தை அனுஷ்டானம் செய்; ஆத்மாவுடன் சம்பந்தப்படாதவற்றை விலக்கி, எந்நேரமும் ஆத்மாவிலேயே எண்ணத்தைச் செலுத்து. தன்னிலேயே மூழ்கிப் போகும் இந்தத் திருப்தியும் சாந்தியுமே நரஜன்மத்தின் முடிவான இலக்காகும்.

77 தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம், (அறம் - பொருள் - இன்பம் - வீடு) ஆகிய நான்கு மனித வாழ்வின் லக்ஷணங்களை அடைவதற்கு, உடலைவிட்டால் வேறு வழியே இல்லை. இந்த நான்கு புருஷார்த்தங்களை2 எப்படி அடைவது என்பதை அப்பியாசம் செய்யும் மானுடன் ஸ்ரீவைகுண்டபதவியை அடைந்துவிடுவான்.

78 ஆகவே, இவ்வுடல் கீழே வீழ்வதற்கு முன்பே ஆத்மஞானம் பெறுவதற்கு முயற்சி செய்வீராக. நரஜன்மத்தின் ஒரு நொடியைக்கூட வீண் செய்துவிடாதீர்.

79 ஸமுத்திரத்தின் உப்புநீர் மேகங்களாக மாற்றம் அடைந்து, சுத்தமான குடிக்கத்தகுந்த நீராக மாறுகிறது. அவ்வாறே குருவின் பொன்னடிகளில் மூழ்கினால் சுகம் கிடைக்கிறது.

80 குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால்தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.

81 மந்திரங்கள், புனிதத்தலங்கள், தேவதைகள், பிராமணர்கள், ஜோசியர்கள், வைத்தியர்கள், ஏழாவதாக குரு -- இந்த ஏழுக்கும் ஒருவருடைய விசுவாசத்தைப் பொருத்தே பலன்கள் அமையும்.

82 நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே ஸித்திகளின் பரிமாணமும் அமையும்.

83 ஞானிகள், பந்தங்களால் கட்டுப்பட்ட மனிதனை முமுக்ஷுவாக1 மாற்றுகிறார்கள். முமுக்ஷுவை முக்தனாக2 ஏற்றமடையச் செய்கிறார்கள். இதைச் செய்வதற்காக அவர்கள் தோன்றாநிலையி­ருந்து தோன்றியநிலைக்கு மாறுகிறார்கள்; இவை அனைத்தும் பரோபகாரம் கருதியே.

84 வியாக்கியானங்கள் மற்றும் புராணங்கள் மூலமாக அடைய முடியாததை, ஞானிகளின் பாதங்களை தரிசித்து சுலபமாக அடைந்துவிடலாம். அவர்களுடைய அங்க அசைவுகளும் நடத்தையும் மௌன உபதேசங்களாகும்.

85 மன்னிக்கும் குணம், சாந்தி, தனிமை, காருண்யம், பரோபகாரம், புலனடக்கம், அஹங்காரமின்மை ஆகிய நற்குணங்கள் நிறைந்திருக்கும் மனிதனைக் காண்பது அரிது.

86 புத்தகத்தைப் படித்து அறிந்துகொள்ள முடியாததையெல்லாம் ஒரு மாமனிதரின் செயல்முறைகளைப் பார்த்து சுலபமாக அறிந்துகொள்ளலாம். கோடிக்கணக்கான வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்து அளிக்கமுடியாத ஒளியை, சூரியன் ஒன்றே கொடுத்துவிடுகிறது அன்றோõ

87 உதாரகுணம் படைத்த ஞானிகளும் அவ்வாறேõ அவர்களுடைய பலப்பல ஸஹஜமான செயல்கள் மனிதர்களை பந்தங்களி­ருந்து விடுபடச்செய்து அவர்களுக்கு அத்தியந்த சௌக்கியத்தை அளிக்கின்றன.

88 ஸாயீமஹராஜ் இம்மாதிரியான தலைசிறந்த ஞானிகளுள் ஒருவர்; அளவிலா ஆன்மீகச் செல்வம் பெற்றவர்; ஸ்ரீமான். ஆத்மாவிலேயே எந்நேரமும் மூழ்கியவராயினும் அவர் ஒரு பக்கீரைப்போலவே வாழ்க்கை நடத்தினார்.

89 அவர் எல்லாரையும் சமமாகவே பார்த்தார்; 'நான்ஃ 'எனதுஃ என்னும் எண்ணமே அவருக்கு இல்லை; எல்லா உயிர்களிலும் இறைவனைக் கண்டதால் அவற்றிடம் தயை காட்டினார்.

90 இன்பம் அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை; துன்பம் அவருக்கு சோகத்தைக் கொடுக்கவில்லை. செல்வரும் ஆண்டியும் அவருக்குச் சரிசமானம். அம் மனோநிலை சாதாரணமாகக் கிடைக்கக்கூடியதா என்ன?

91 புருவத்தை உயர்த்துவதால் மட்டுமே ஓட்டாண்டியையும் பெரும் செல்வராக்கக்கூடிய சக்தி பெற்றவராக இருந்தும், ஒரு ஜோ­யைத்1 தோளில் மாட்டிக்கொண்டு வீடுவீடாகச் சென்றார்.

92 யாருடைய வீட்டு வாச­ல் பாபா பிச்சைக்காக நின்று, ''ஓ மகளேõ எனக்கு உன் சோளரொட்டியி­ருந்து கால்ரொட்டி கொண்டு வாஃஃ என்று கரமேந்திப் பிச்சை எடுத்தாரோ, அவர் மஹா புண்ணியசா­.

93 ஒரு கரத்தில் ஜோ­யை ஏந்தி, மற்றொரு கரத்தில் ஒரு தகர டப்பாவை வைத்துக்கொண்டு சில குறிப்பிட்ட இல்லங்களுக்கு வாயில்வாயிலாகச் சென்றார்.

94 பாஜி, சாம்பார், பால், மோர் போன்ற பதார்த்தங்கள் அனைத்தும் இந்தத் தகர டப்பாவில் பிச்சையிடுபவர்களால் கொட்டப்பட்டன. ஓ, என்ன விநோதமான உணவு சேர்க்கும் முறைõ

95 சாதத்தையோ, சோளரொட்டியையோ வாங்கிக்கொள்வதற்கு அவர் தமது ஜோ­யை விரிப்பார். ஆனால், திரவ ரூபமான பதார்த்தம் எதுவாக இருந்தாலும், அது அவர் வைத்திருந்த தகர டப்பாவில் கொட்டப்பட்டது.

96 விதவிதமான பதார்த்தங்களைத் தனித்தனியாக ருசித்துச் சாப்பிடவேண்டும் என்கிற ஆவல் எங்கிருந்து எழும்? ருசிகளையும் வாசனைகளையும் நாக்கு அறியாதபோது, மனத்தி­ருந்து இவ்வாசை எவ்வாறு எழும்?

97 ஜோ­யில் யதேச்சையாக எது வந்து விழுந்ததோ, அதை அவர் திருப்தியுடன் உண்டார். சுவையுள்ளதாயினும் சரி, சுவையற்றதாயினும் சரி, அதைப்பற்றிக் கவலைப்படவேயில்லை. நாக்கு சுவையுணர்வையே இழந்துவிட்டது போலும்õ

98 ஒவ்வொரு நாளும் காலைநேரத்தில் அவர் பிச்சை எடுப்பார்; கிடைத்ததைக்கொண்டு வயிற்றை நிரப்புவார்; திருப்தியும் அடைவார்.

99 பிச்சையையாவது ஒரு நியமனத்துடன் எடுத்தாரா? அதுவும் இல்லை; விருப்பப்பட்டபோதுதான் பிச்சை எடுக்கக் கிளம்புவார்õ சில நாள்களில் பிச்சை எடுக்கக் கிராமத்தினுள் பன்னிரண்டு சுற்றுகள் சென்றாலும் செல்வார்õ

100 இம்மாதிரியாகப் பிச்சை எடுத்துச் சேர்க்கப்பட்ட உணவு, மசூதியில் இருந்த ஒரு வாயகன்ற மண்பாத்திரத்தில் கொட்டப்படும். இதி­ருந்து காகங்களும் நாய்களும் சுதந்திரமாக உணவுண்டன.

101 மசூதியையும் வெளிமுற்றத்தையும் தினமும் பெருக்கும் பெண்மணி, பத்து-பன்னிரெண்டு சோளரொட்டிகளை எடுத்துக்கொண்டு போவார். அவர் அவ்வாறு எடுத்துக்கொண்டு போனதை ஒருவரும் தடைசெய்யவில்லை.

102 பூனைகளையும் நாய்களையுங்கூடக் கனவிலும் விரட்டாத மனிதர், எப்படி ஏழை எளியவர்களை விரட்டுவார்? அவருடைய வாழ்க்கை புனிதமானது.

103 ஆரம்ப காலத்தில் அவர் 'பைத்தியக்காரப் பக்கீர்ஃ என்றே மக்களால் அழைக்கப்பட்டார். பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பவரைப் பெரிய மனிதராக எப்படிக் கருத முடியும்õ

104 ஆனால், இந்தப் பக்கீர் தாராளமான மனமுள்ளவராக இருந்தார்; எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி சிநேகமாக இருந்தார். வெளிப்பார்வைக்குச் சஞ்சலமுடையவராகத் தெரிந்தாலும், அகத்தில் சஞ்சலமில்லாது அமைதியாக இருந்தார். அவருடைய நடத்தையைப் புரிந்துகொள்ளவேமுடியவில்லைõ

105 அந்தக் குக்கிராமத்திலும் சிலர் இயற்கையாகவே தயையுள்ளவர்களாகவும் பாக்கியவான்களாகவும் இருந்தனர். அவர்கள் இவரை ஒரு ஸாதுவாகவே ஏற்றுக்கொண்டனர்.

106 தாத்யா கோதே பாடீ­ன் தாயாரான பாயஜாபாயி என்ற பெயர் கொண்டவர், சோளரொட்டிகள் நிரம்பிய ஒரு கூடையைத் தலைமேல் வைத்துக்கொண்டு மதிய நேரத்தில் காட்டினுள் செல்வார்.

107 முட்செடிகள் மீதும் புதர்கள் மீதும் நடந்துசென்று, மைல்கணக்காகக் கானகத்தில் அலைந்து, இந்தப் 'பைத்தியக்காரப் பக்கீர்ஃ எங்கிருக்கிறார் என்று கண்டுபிடித்து, அவருடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரிப்பாள்õ

108 அவருடைய அன்பும் பெருந்தன்மையும் எத்தகையதுõ மரங்களிடையேயும் காட்டினுள்ளும் சென்று, எளிய உணவான சோளரொட்டியும் பாஜியும்1 பாபாவுக்குக் கொடுத்து பிற்பகல் நேரத்தில் உணவு இடுவார்.

109 இந்த மாபெரும் பக்திபூர்வமான ஸேவையை பாபா தம்முடைய கடைசிநாள் வரையில் மறக்கவில்லை. இதை நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொண்டு பாயஜாபாயியின் மகனுக்கு2 வளமான வாழ்வளித்தார்.

110 பாயஜாபாயியும் அவருக்குக் கணவரும் பக்கீரின்மீது திடமான நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருந்தனர். வாஸ்தவத்தில் அவர்கள் இருவரும் இந்தப் பக்கீரையே இறைவனாகக் கருதினார்கள். நம்புபவர்களுக்குத்தானே நடராஜாõ

111 பக்கீர் ஆழ்ந்த தியானத்தி­ருப்பார். பாயஜாபாயி அவரெதிரில் ஓர் இலையைப் போட்டுக் கூடையி­ருக்கும் உணவை எடுத்து இலையின்மேல் பரிமாறி, பிரயத்தனம் செய்து பக்கீரை உண்ணவைப்பார்.

112 பாபா எப்பொழுதும் சொல்லுவார், ''ஆண்டித்தனமே உண்மையான அரசபோகம்; ஏனெனில், ஆண்டியாக இருப்பதே நிரந்தரம்; செல்வம் எங்கும் நிலைக்காது எப்படி ஓடிவிடுகிறது பாரீர்õஃஃ

113 பிற்காலத்தில் பாபா காட்டைத் துறந்து கிராமத்திலேயே வசிக்க ஆரம்பித்தார். மசூதியிலேயே உணவுண்ண ஆரம்பித்தார். தாயாருடைய (பாயஜாபாயி) கஷ்டங்களுக்கு ஒரு முடிவேற்பட்டது.

114 அப்போதி­ருந்து தினமும் உணவு கொண்டுபோவதென்ற தவறாத பழக்கம் தம்பதியால் (பாயஜாபாயியும் அவருக்குக் கணவரும்) அனுசரிக்கப்பட்டது; அவர்களுக்குப் பிறகு தாத்யாவால் செய்யப்பட்டது.

115 எவருடைய இதயத்தில் வாஸுதேவன் எப்பொழுதும் உறைகின்றானோ அந்த ஞானி புனிதமானவர்; புனிதமானவர். அரிய பெரிய அதிருஷ்டத்தால் ஞானிகளுடன் புனித சங்கமெனும் வைபவத்தைப் பெறும் பக்தர்களோ புண்ணியசா­கள்.

116 தாத்யா ஒரு மஹா பாக்கியவான்õ மஹால்ஸாபதியும் பூர்வஜன்ம புண்ணியங்கள் பல சேர்த்தவராக இருக்கவேண்டும்õ ஏனெனில், அவர்கள் இருவருமே பாபாவுடன் கூட இருப்பதென்னும் முன்னுரிமையைச் சரிசமமாக அனுபவித்தார்கள்.

117 தாத்யா, மஹால்ஸாபதி, இருவருமே மசூதியில் உறங்கினர். பாபா இவ்விருவர்மீது வைத்த சரிசமமான பிரீதி விவரிக்க முடியாததாகவே இருந்தது.

118 அவர்கள் மூவருடைய தலைகளும் கிழக்கு, மேற்கு, வடக்கு, என்று மூன்று திசைகளில் இருந்தன. பாதங்களோ மத்தியில் பரஸ்பரம் தொட்டுக்கொண் டிருந்தன.

119 இவ்வாறு அவர்கள் படுக்கை விரிப்புகளைப் போட்டுக்கொண்டு பலவிதமான விஷயங்களைப் பேசிக்கொண் டிருப்பார்கள். யாராவது ஒருவருக்குத் தூக்கக் கலக்கம் வருவதுபோலத் தெரிந்தால் மற்றவர் அவரை எழுப்புவார்.

120 தாத்யா குறட்டைவிட ஆரம்பித்தால், பாபா சட்டென்று எழுந்து தாத்யாவைப் புரட்டிப்போட்டுத் தலையைப் பிடித்து அமுக்குவார்.

121 மஹால்ஸாபதியையும் சேர்த்துக்கொண்டு இருவரும் தாத்யாவைக் கெட்டியாகப் பிடித்து, இறுக்கமாக அணைத்து, கால்களைப் பிடித்துவிட்டு, முதுகையும் பலமாகத் தேய்த்துவிடுவர்.

122 இவ்விதமாக தாத்யா பதினான்கு முழு ஆண்டுகள் மசூதியில் பாபாவுடன் உறங்கினார். ஓ, எவ்வளவு அற்புதமான காலம் அதுõ அந்தக் காலம் அவர்களுடைய மனத்தில் என்றும் மறவாதவாறு பதிந்துவிட்டது.

123 பெற்றோர்களை வீட்டில் விட்டுவிட்டு, பாபாவின் மீதிருந்த பிரேமையால் மசூதியில் உறங்கினார். எந்தப் படியை உபயோகித்து இந்த அன்பை அளப்பது? அந்தக் கிருபையை (பாபாவின்) யாரால் மதிப்பிட முடியும்?

124 தந்தை காலமான பிறகு, குடும்பப் பொறுப்பு தாத்யாவின் தலையில் இறங்கியது. தாமே ஒரு கணவராகவும் குடும்பத் தலைவராகவும் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர், வீட்டிலேயே தூங்க ஆரம்பித்தார்.

125 நிஷ்டையுள்ள1 பா(ஆஏஅ)வத்தினால் மட்டுமே ஸாயீ அனுபவம் கிட்டும்; கேட்காமலேயே கிட்டும். பக்தனுக்கு இது ஓர் அற்புதம்.

126 அதுபோலவே, ரஹாதாவில் விக்கியாதி பெற்ற தனவந்தரும் கிராமத்தின் நகர்சேட்டுமான2 குசால்சந்த் என்பவர் இருந்தார்.

127 எவ்வாறு கணபத் கோதே பாடீல் (சிர்டீயைச் சேர்ந்தவர்) என்ற பக்தர் மீது பாபா விருப்பம் செலுத்தினாரோ, அவ்வாறே குசால்சந்தின் சிறிய தகப்பனாரின்மீதும் அவர் மிகப் பிரீதியுடையவராக இருந்தார்.

128 மார்வாடி சமூகத்தவராக இருந்தாலும் அவர் பாபாவை மிக விரும்பினார். இருவரும் அடிக்கடி சந்தித்தனர்; பரஸ்பரம் மகிழ்ச்சியடைந்தனர்.

129 சிலகாலத்திற்குப் பிறகு, பெரிய சேட் ஸ்ரீஹரியினுடைய இச்சைப்படி வைகுண்டபதவியடைந்தார். ஆனால் பாபா இந்த நட்பை மறக்கவில்லை. வாஸ்தவத்தில் இக் குடும்பத்தின்மீது பாபா வைத்திருந்த அக்கறை பன்மடங்காகியது.

130 இதற்குப் பிறகும் பாபா குசால்சந்தின்மேல் வைத்திருந்த பிரேமை வளர்ந்தது. பாபா ஜீவிதமாக இருந்தவரை குசால்சந்தின் நல்வாழ்வை இரவுபகலாகக் கவனித்துக்கொண் டிருந்தார்.

131 தம் அன்பர்களுடன் சுமார் ஒன்றரை மைலுக்கப்பா­ருந்த ரஹாதாவிற்குச் சில சமயங்களில் மாட்டுவண்டியிலும் சில சமயங்களில் குதிரை வண்டியிலும் பாபா செல்வார்.

132 கிராம எல்லையில் வாத்திய கோஷங்களோடு கிராம மக்களால் பாபா வரவேற்கப்படுவார். பிறகு, கிராம மக்கள் பிரேமையுடன் பாபாவின் பாதங்களில் விழுந்து வணங்குவர்.

133 அங்கிருந்து பாபா ஆனந்தம் பொங்கும் ஆடல்பாடல்களுடன் கிராமத்தினுள் மரியாதையாக அழைத்துச் செல்லப்படுவார்.

134 பிறகு, குசால்சந்த் பாபாவைத் தம்முடைய இல்லத்தினுள் அழைத்துச்சென்று சுகமான ஆஸனத்தில் உட்காரவைத்துவிட்டுச் சிற்றுண்டி ஏதாவது கொடுப்பார்.

135 இருவரும் பழைய நினைவுகளைப் பேசுவர்; மிகுந்த சந்தோஷத்தை அடைவர். அவர்களுடைய மகிழ்ச்சியை யாரால் வர்ணிக்க முடியும்õ

136 மகிழ்ச்சி நிரம்பிய இந்தச் சந்திப்பு, பழ ஆஹாரம் சாப்பிடுதல் ஆகியவை முடிந்தபிறகு, பாபா அன்பர்களோடு தம்மிலேயே மூழ்கிய ஆனந்தத்துடன் திரும்பி சிர்டீக்கு வருவார்.

137 ரஹாதா கிராமம் ஒரு திசையில் இருந்தது; நிம்காங்வ் கிராமம் மற்றொரு திசையி­ருந்தது. இரண்டுக்கும் நடுவில் சிர்டீ கிராமம் இருந்தது.

138 மையமான சிர்டீயி­ருந்து பாபா அவருடைய வாழ்நாளில் இவ்விரண்டு கிராமங்களைத் தாண்டி வேறெங்கும் சென்றதில்லை. இருப்பினும் அவருக்கு எங்கு நடக்கும் விஷயங்களும் (எல்லாமே) தெரிந்திருந்தன.

139 அவர் வேறெந்த ஊருக்கும் போனது கிடையாது; ரயிலையும் பார்த்தது கிடையாது. ஆனால், ரயில்கள் வரும் நேரம், கிளம்பும் நேரம், கால அட்டவணை அனைத்தும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

140 நேரத்தில் ரயிலைப் பிடிப்பதற்காக பக்தர்கள் ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்வார்கள். வீடு திரும்ப பாபாவினுடைய அனுமதியை வேண்டி அவர்கள் சென்றபோது, ''ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்ஃஃ என்றுதான் கேட்பார் பாபா.

141 ''பாபாõ இப்பொழுது நான் அவசரமாகக் கிளம்பவில்லையெனில் பம்பாய் செல்லும் ரயிலைக் கோட்டைவிட்டுவிடுவேன். என்னுடைய உத்தியோகத்திற்குக் குந்தகம் விளைந்துவிடும். யஜமானர் என்னை நிச்சயமாக வேலையி­ருந்து நீக்கிவிடுவார்.ஃஃ (பக்தரின் கவலை)

142 ''இங்கு வேறு யஜமானர் எவரும் இல்லைõ போய் ஒரு சோளரொட்டியாவது சாப்பிடு. மதிய உணவு உண்டபிறகு போõஃஃ (பாபாவின் பதில்)

143 இந்த ஆக்ஞையை மீறுவதற்கு எவருக்கு தைரியம் இருந்தது? சிறியவர்கள், பெரியவர்கள், விவேகமுள்ளவர்கள், நல்லது-கெட்டது தெரிந்தவர்கள், அனைவரும் சுயானுபவத்தால் உண்மைநிலையை அறிந்திருந்தனர்.

144 பாபாவினுடைய ஆக்ஞைக்கு அடிபணிந்தவர்கள் ரயிலை ஒருபோதும் தவறவிட்டதில்லை. ஆக்ஞையை அலக்ஷியம் செய்தவர்கள் நிச்சயமாகப் பிரச்சினைகளையும் ஆபத்துகளையும் எதிர்கொண்டார்கள்.

145 இம்மாதிரி அனுபவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனை எத்தனையோõ ஒவ்வொன்றும் புதியது; தனித்தன்மை வாய்ந்தது. இவற்றைச் சுருக்கமாகச் சொல்லுவேன்.

146 ஹேமாட் இப்பொழுது ஸாயீ பாதங்களில் சரணடைகிறேன். அடுத்த அத்தியாயத்தில், சிர்டீயி­ருந்து வீடு திரும்புவதற்கு பக்தர்கள் பாபாவின் அனுமதியைப் பெறவேண்டியதின் முக்கியத்துவம் விவரிக்கப்படும்.

147 பாபாவினுடைய அனுமதி பெற்றவர்கள் வீடு திரும்பியதையும், அனுமதி கிடைக்காதவர்கள் சிர்டீயிலேயே தங்கிவிட்டதையும், பாபாவின் ஆக்ஞையை மதிக்காதவர்கள் எவ்வாறு அபாயங்களில் மாட்டிக்கொண்டனர் என்பதையும் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கிறேன்.

148 அதுபோலவே, பாபா எவ்வாறு மதுகரீ பிக்ஷை எடுத்தார் என்பதுபற்றியும், ஏன் பாபா பிச்சை எடுத்து உண்டார் என்பதுபற்றியும், பஞ்சஸூனா பாவநிவிர்த்திபற்றியும் பிற்பாடு விளக்கப்படும்.

149 ஆகவே, கதை கேட்பவர்களின் பாதங்கைைளப் பற்றிக்கொண்டு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு கணமும் கவனத்துடன் உங்களுடைய நன்மைக்காவும் நல்வாழ்வுக்காகவும் ஸாயீ சரித்திரத்தைக் கேளுங்கள்.


எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, ''ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃஃ என்னும் காவியத்தில், 'நரஜன்ம மஹிமை - பிச்சை எடுத்து உண்டது - பாயஜாபாயியின் ஒப்பில்லாத பக்தி - தாத்யாவுடனும் மஹால்ஸாபதியுடனும் மசூதியில் உறங்கியதுஃ என்னும் எட்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.