இளம்பெண்

டான்சன், எகிடோ இருவரும் புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.

ஒரு வளைவில் திரும்பும் போது, நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒரு புறத்தில் அழகான இளம்பெண் வேலைப்பாடுடன் கூடிய அழகிய பட்டுச் சேலையைக் கட்டிக் கொண்டு அடுத்த பக்கம் போவதற்கு முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.

"இங்கே வா!" என்று கூப்பிட்ட டான்சன் அவளைத் தன்னுடைய கையில் அலக்காக தூக்கிக் கொண்டு சகதியான தெருவின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்.

அன்று இரவு மடத்திற்கு திரும்பும் வரை எகிடோ எதுவும் பேசாமல் வந்தான். அதற்கு மேல் பொருக்க முடியாமல், "நம்மைப் போன்ற புத்த பிட்சுகள் பெண்கள் அருகில் செல்வது கூட தவறு. முக்கியமாக இளமையும், அழகும் வாய்ந்த பெண்கள் பக்கத்தில் செல்லவேக் கூடாது. நீ ஏன் அவளைத் தூக்கி கொண்டு சென்றாய்?" என்றான்.

"நான் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டு விட்டேன்" என்ற டான்சன், "நீ ஏன் இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாய்?" என்று திருப்பிக் கேட்டார்.