ஏன்?

ஆஸ்ரமத்தின் ஐந்து சீடர்கள் சைக்கிளில் சந்தைக்கு சென்றுவிட்டு திரும்புவதை தலைமை குரு பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஆஸ்ரமத்தை அடைந்ததும் ஐவரையும் அழைத்தார் .

ஐவரையும் நோக்கி '' நீங்கள் ஏன் உங்கள் சைக்கிளை ஓட்டுகிறீர்கள் ? '' என்று வினவினார். '' அது எனது வேலைகளை எளிமையாக்குகிறது ஐயா '' முதலாமவன் பதிலளித்தான்.

அவனைத்தட்டிகொடுத்து ''நீ பெரிய அறிவாளி , நீ வயதானகாலத்தில் என்னைப்போல் கூன் விழாமல் நிமிர்ந்து நடப்பாய் '' என்றார் குரு.

இரண்டாவது சீடனோ '' நான் சைக்கிள் ஓட்டும்போது என்னால் இயற்கை அழகை எளிதாகவும் விரைவாகவும் ரசிக்க முடிகிறது ஐயா ''

அவனை அருகில் அழைத்து '' உன் கண்கள் திறந்திருக்கின்றன நீ உலகை ரசிக்கிறாய் '' என்றார்.

மூன்றாவது சீடன் '' ஐயா நான் பயணிக்கையிலும் கூட மந்திரங்களை ஜெபிக்க முடிகிறது ''


குரு தன் கண்கள் விரிய '' அடேயப்பா உன் புத்திக்கூர்மை வியக்கவைக்கிறது'' என்று இரண்டு கைகளையும் சத்தமாக தட்டினார்.

நான்காவது சீடன் '' நான் சைக்கிளில் பயணிப்பதால் ஏகாந்த நிலையை அடைகிறேன் ஐயா '' என்றான்

குரு மனநிறைவோடு அவனை கட்டித்தழுவி '' நீ ஞானத்தை அடையும் பாதையில் பயணிக்கிறாயடா '' என்றார்.

ஐந்தாவது சீடன் நீண்ட அமைதிக்குப் பின் '' என் சைக்கிளை ஒட்டுவதற்காக என் சைக்கிளை ஒட்டுகிறேன் ஐயா! '' என்றான் .

குரு அவன் காலில் விழுந்து '' ஐயா, என்னை மன்னியுங்கள் , நீங்கள் என் சீடனாக இருக்க முடியாது , நான்தான் உங்கள் சீடன் '' என்றார்.