​

உயர்ந்தவர் யார்?

விஜயநகரத்தை பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆண்டு வந்தார். அவருடைய அவைப் புலவர்களின் மகுடமாகத் திகழ்ந்தவர் தெனாலிராமன். அரசருக்கு வலது கரமாகத் திகழ்ந்த தெனாலியை அரசர் முற்றிலுமாக நம்பினார். அவரின் ஆலோசனைபடி ஆட்சி நடத்தினார்.

தெனாலிராமனின் அறிவையும், புத்தி சாதுர்யத்தையும், அவரது நகைச்சுவை உணர்வுகளையும் பற்றி கேள்விப்பட்டார் அண்டை நாட்டு அரசர் புஷ்யமித்திரன்.

அவர் கிருஷ்ணதேவராயரைத் தனது நாடான கஞ்சன்புரிக்கு அழைத்தார். அத்துடன், ""தெனாலிராமனின் புத்திக்கூர்மை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம், அவரையும் உடன் அழைத்து வாருங்கள்,'' என்று வேண்டினார்.

இருவரும் கஞ்சன்புரியை அடைந்தனர். புஷ்யமித்திரன், தங்கம் போல் ஜொலிக்கும் ஒரு மாளிகையில் அவர்களை தங்க வைத்தார். அங்கு நாற்புறமும் ரத்தினங்களும், முத்துக்களும் இழைக்கப்பட்டிருந்தன. தங்கப் பாத்திரங்களில் உணவு கொண்டு வந்து தங்கத் தட்டு வைத்து, உணவு படைத்தான். அதையெல்லாம் கண்டு கிருஷ்ணதேவராயரும், தெனாலிராமனும் அசந்து போயினர். சில நாட்கள் அந்த ராஜ உபசாரத்தில் திளைத்து மகிழ்ந்தனர்.

ஒருநாள் மாலை படகுச்சவாரி செய்யும்போது அரசர் புஷ்யமித்திரன் சட்டென்று தெனாலிராமனிடம், ""உங்கள் அரசர், நான், இருவரில் மிகப் பெரியவர்; உயர்ந்தவர்; மேன்மையானவர் யார்?'' என்றார். அதைக் கேட்டதும் தெனாலி ராமன் சற்று நேரம் பதில் கூறவில்லை. பிறகு சிரித்தவாறு, ""அரசே! என்னைப்பொறுத்த வரையில், நீங்கள் இருவருமே மிக உயர்ந்தவர்கள்தான். உங்களுடைய வைபவம் மலைச் சிகரம் போன்றது என்றால், அரசர் கிருஷ்ண தேவராயரின் உயர்வு சலசலத்துப் பாயும் அழகிய நதியைப் போன்றது...'' என்றார்.

உடனே புஷ்யமித்திரன் சிரித்தவாறு, ""கிருஷ்ணதேவராயரே! தீர்ப்பு கிடைத்து விட்டது. தெனாலிராமன் என்னை மலைச் சிகரம் என்று உயர்த்திக் கூறி விட்டார். எனவே, நானே உயரமானவன்,'' என்றான். தெனாலிராமனைத் திரும்பிப் பார்த்தார் கிருஷ்ண தேவராயர்.

அப்போது தெனாலி சிரித்துக் கொண்டே, ""அரசே! புஷ்ய மித்திரன் என்னுடைய பேச்சின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. நான் சொன்னது இப்படித்தான்.

""கஞ்சன்புரியில் புஷ்யமித்திரரின் நிலை ஒரே இடத்தில் உள்ள ஏதோ ஒரு மலைச் சிகரம் போன்றது என்பதுதான். எல்லா வளமும் அரண்மனையோடு சரி. மக்கள் துன்பத்திலும் அமைதியற்றும்தான் இருக் கின்றனர். மாறாக, கிருஷ்ணதேவராயரைப் பொறுத்தவரையில், "நதி எப்படித் தேசம் முழுவதும் பாய்ந்து, நாட்டின் பூமியை வளப்படுத்துகிறதோ அதே போன்று தனது செல்வம் முழுவதையும் அரண்மனைக்குள் மட்டும் அடைத்துப் போட்டுக்கொள்ளாமல், அவர் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்து கிறார்' என்பதே நான் கூறியதன் பொருள். இப்போது யார் உயர்ந்தவர்; மேன்மையானவர்; என்பதை நீங்களே யோசித்து முடிவு செய்துகொள்ளுங்கள்,'' என்றார்.

ஒருசில கணங்கள் புஷ்யமித்திரரின் முகம் கருத்து விட்டது.

பிறகு சமாளித்துக் கொண்டு, ""அரசர் கிருஷ்ணதேவராயரே! நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்; நான் தோற்று விட்டேன். தெனாலிராமன் தனது புத்தி சாதுர்யத்தை மட்டும் வெளிப்படுத்திக் காட்டவில்லை. நாட்டை ஆள்வதற்கான நல்ல வழிகளையும் எனக்குக் காட்டி விட்டார்,'' என்ற புஷ்யமித்திரன் தெனாலியை அன்புடன் ஆரத் தழுவிக் கொண்டார்.

தினமலர்