அது நிறைவேறாதுவெளியூரிலிருந்து தன் மனைவியின் உடன் பிறந்த சகோதரன் தெனாலிராமனின் வீட்டிற்கு வந்திருந்தான். அவனை கணவன் மனைவி இருவரும் நன்கு உபசரித்தனர். தினமும் அவனுக்கு தின்னப் பல வகைப் பழங்கள் அரண்மனையிலிருந்து கொண்டு வந்து தருவான். அவற்றை ஆவலோடு ருசித்துச் சாப்பிட்ட அவன், ''இந்த வகை அபூர்வப் பழங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன'' என்று தெனாலிராமனிடம் கேட்டான். அதற்கு தெனாலிராமன் ''இவை அரண்மனைத் தோட்டத்தில் இருக்கின்றன. தோட்டத்தில் காவல் அதிகம், திருடினால் அவர்கள் தலை சீவப்படும்'' என்றும் கூறினான். இவற்றை அறிந்தும் அவனுடைய மைத்துனன் எப்படியும் அரண்மனைத் தோட்டத்தினுள் புகுந்து நிறைய பழங்கள் தின்ன வேண்டுமென்று ஆவல் கொண்டான்.அதன்படியே ஒரு நாள் நள்ளிரவு தோட்டத்துக்குள் புகுந்து வேண்டியளவு பல்வகைப் பழங்களை உண்டான். பின் வீடு திரும்ப எண்ணி நடந்து கொண்டிருக்கையில் காவலர்கள் அவனை கையும் களவுமாகப் பிடித்தனர். அவன் காவலர்களிடம் எவ்வளவு சொல்லியும் விடுவதாக இல்லை. மன்னரிடம் கொண்டுபோய் நிற்பாட்டினர். மன்னர் அவனுக்கு மரண தண்டனை விதித்தார். இச்செய்தி தெனாலிராமனுக்கு தெரிய வந்தது. அவன் மனைவி ''என் தம்பி அநியாயமாகச் சாகப் போகிறானே காப்பாற்றுங்கள்'' என்று பலவாறு வேண்டிக் கொண்டாள். அதற்கு தெனாலிராமன் ''மன்னர் ஆணையிட்டால் அது ஆணையிட்டதுதான். மாற்ற மாட்டாரே என்ன செய்வது'' என்று கூறிக் கொண்டே மன்னரைக் காண விரைந்தான். தெனாலிராமனைப் பார்த்த மன்னர், ''தெனாலிராமா, நீ என்ன நினைத்து வந்தாயோ அது நிறைவேறாது'' என்றார். உடனே தெனாலிராமன் அப்படியானால் உடனே என் மைத்துனனின் தலையை வெட்டி விடுங்கள் என்றான். உடனே மன்னர் தெனாலிராமனின் சமயோசித புத்தியைப் பாராட்டி உன் மைத்துனனை விடுதலை செய்கிறேன் என்றார். காரணம் அவன் எது நினைத்து வந்தோனோ நேர் எதிராகத்தான் மன்னர் செய்வதாகச் சொல்லியுள்ளார். தெனாலிராமனே தன் மைத்துனனை கொலை செய்யச் சொல்லும்போது மன்னர் அதற்கு எதிராகத்தானே ஆணையிட முடியும். ஆகவேதான் அவனுடைய மைத்துனனை விடுதலை செய்யச் சொன்னார். தெனாலிராமனின் புத்திக் கூர்மையை அவனது மனைவி உட்பட அனைவரும் பாராட்டினர். |