புலித் தோல்

ஒரு சலவைத் தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்தக் கழுதைக்கு தேவையான தீவனத்தை வைக்க முடியவில்லை. வயிறார புல் மேய்வதற்கு மேய்ச்சல் நிலமும் இல்லை.

இந்தக் காரணத்தால் கழுதை நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வந்தது. சலவைத் தொழிலாளி கழுதையின் நிலை கண்டு மிகவும் கவலைப்பட்டான்.

ஒருநாள் சலவைத் தொழிலாளி காட்டு வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தபோது ஒரு புலி செத்துக் கிடிப்பதைக் கண்டான்.

அதைக் கண்டதும் சலவைத் தொழிலாளிக்கு ஒரு யோசனை தேன்றியது.

இந்தப் புலியின் தோலை உரித்து அதைக் கழுதை மீது போத்தி நெல் வயல்களில் விட்டு மேயச் செய்தால் உண்மையாகவே புலி மேய்வதாக எண்ணிப் பயந்து கொண்டு வயலுக்குச் சொந்தக்காரர்கள் பேசாமலிருந்து விடுவார்கள். கழுதை வயிறார மேயும் என்று சலவைத் தொழிலாளி நினைத்து கொண்டான்.

புலித் தோலை உரித்து எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

மறுநாள் கழுதை மீது புலித் தோலைப் போர்த்தி விளைந்திருந்த வயல்கள் பக்கமாக போகச் செய்தான்.

புலிதான் பயிரை மேய்கிறது என்று எண்ணிக் கொண்டு குடியானவர்கள் அதை விரட்டப் பயந்து கொண்டு பேசாமலிருந்து விட்டார்கள்.

கழுதை விளை நிலத்தில் அன்றாடம் வயிறார மேய்ந்து நன்றாக கொழுத்துவிட்டது.

ஒரு நாள் கழுதை புலித் தோலைப் போர்த்திக் கொண்டு நெல் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்தது.

அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு பெண் கழுதை உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கியது.

அதைக்கேட்ட புலித்தோல் போர்த்திய ஆண் கழுதை பெண் கழுதையின் குரலைக் கேட்டதும் உற்சாகமடைந்து தானும் உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கிவிட்டது.

குடியானவர்களுக்கு உண்மை விளங்கிவிட்டது. எல்லோரும் ஒன்று சேர்ந்து தடிகளை எடுத்துக் கொண்டு வந்து கழுதையை நன்றாக அடித்துக் கொன்று விட்டார்கள்.