யார் தியாகி?

சகுந்தலாவின் வாழ்க்கையில் இருபது ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1942 ஆகஸ்டில், ஓர் முக்கியமான நிகழ்ச்சி நடந்தது. அதை நினைக்கும் போதெல்லாம் என்னுடைய உள்ளத்திலிருந்து ஊதுவத்தியின் நறுமணம் கமழ்ந்து வருவது போன்று ஓர் இனிய உணர்வு பிறப்பதுண்டு. அவளுடைய தியாகம், இருதயம் படைத்த எந்த மனிதராலும் மறக்க முடியாத தியாகந்தான்.

ஆனாலும், சகுந்தலாவின் வாழ்க்கையில் அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து, மற்றொரு சம்பவமும் நடந்திருக்கிறது. அந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் சேர்ந்தாற்போல் நினைக்கத் தொடங்கினால் உள்ளத்திற்குள்ளே இரண்டு ஊதுவத்திகள் ஒன்றாகச் சேர்ந்து நறுமணம் பரப்புவது தெரியும்.

அந்த இரண்டு ஊதுபத்திகளில் எதனுடைய மணம் உயர்ந்தது என்று இன்னும் என்னால் தீர்மானிக்க முடியவில்லை. இருவருடைய தியாகங்களில் எது சிறந்த தியாகம் என்று எனக்குப் புரியவில்லை. உங்களிடம் சகுந்தலாவின் கதையைச் சொல்கிறேன். கேட்டுவிட்டுத் தயவுசெய்து உங்கள் முடிவைச் சொல்கிறீர்களா?

சகுந்தலா அப்பொழுது கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தாள். அவள் தகப்பனார் மிகவும் ஏழையாக இருந்தாலும், தமது மகளுக்குக் கல்விச் செல்வத்தை அளிப்பதற்காகத் தம்மிடம் எஞ்சியிருந்த பிற செல்வங்கள் அனைத்தையும் இழந்தார். பெண்களுக்கென்று தனியாகக் கல்லூரி அந்த ஊரில் இல்லாததால், ஆண்களும் பெண்களும் ஒன்றாகத் தான் அங்கு படித்து வந்தார்கள்.

சகுந்தலாவின் அழகில் ஏதோ ஓர் தனித் தன்மை இருந்தது. நீண்ட விழிகளும், எடுப்பான நாசியும், அடர்ந்த புருவங்களுமாக அவள் கற்பனையில் சிறந்த ஓவியனின் கைவண்ணம் போல் விளங்கினாள். ஒரு முறை அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவர்கள், மறுமுறையும் திரும்பிப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். உடனடியாக அந்த முகத்தை அவர்களால் மறந்து விடவும் முடியாது.

ஆனால் அவ்வழகினால் அவள் யாரையும் மயக்கிக் கிறங்கச் செய்யவில்லை. நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக அவள் எல்லோரிடமும் கள்ளங் கபடின்றிக் கலகலப்போடு பழகினாள். 'நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்!' என்று கூறும் பாரதியின் புதுமைப் பெண்ணுக்கு அவள் இலக்கணமாய்த் திகழ்ந்தாளென்றே சொல்ல வேண்டும்.

என்றாலும் அதே கல்லூரியில் படித்த ராஜாராமனிடம் மட்டிலும் ஏனோ அவளுக்கு அச்சமும் நாணமும் ஏற்பட்டன. அவன் முகத்தை அவளால் நிமிர்ந்து நோக்க முடியவில்லை; அவனிடம் சிரித்துப் பேசுவது அவளுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. ஒரு வேளை இதற்குப் பெயர்தான்...?

ராஜாராமன் மாணவர் சங்கத் தலைவன். அற்புதமாக மேடைகளில் பேசுவான். அழகான தோற்றமும் அறிவாற்றலும் பெற்றிருந்தான். பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

அந்த நாட்களில் விடுதலை வேட்கையான நாட்டுப் பற்று ஒவ்வொரு இளம் உள்ளத்திலும் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. 'அடிமைத் தனக்கு எதிராகப் போராட்டம் நடக்கும்போது, நாம் நம்முடைய உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் தியாகம் செய்வோம்!' என்று கனல் தெறிக்கப் பேசுவான், ராஜாராமன். அதிலும் சகுந்தலா அந்தக் கூட்டத்தில் இருந்து விட்டால், அவனுடைய பேச்சின் வேகம் கட்டுக்கடங்காமல் சென்றுவிடும்.

அவனுடைய தீரப் பேச்சும் தியாக மனமும் தான் சகுந்தலாவின் முகத்தில் அவனைக் கண்டவுடன் நாணம் பரவக் காரணமாக இருந்தனவோ என்னவோ!

"சகுந்தலா! என்னுடைய பெற்றோர்களிடம் இப்போதே சொல்லி ஒரு விஷயத்தில் அனுமதி வாங்கிவிட்டேன்" என்று ஒரு நாள் பெருமையுடன் கூறினான் ராஜா ராமன். "எனக்குப் பிடித்த பெண்ணைத் தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்; ஏழையாக இருக்கிறாள் என்று நீங்கள் மறுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன்" என்றான்.

சகுந்தலாவின் முகம் அளவுக்கதிகமான நாணத்தால் கவிழ்ந்தது. அந்தத் தோற்றத்தில் அவள் தலை குனிந்து நின்ற காட்சியைக் கண்டு உளம் பூரித்தான் ராஜாராமன். மற்ற எல்லோருக்குமே அவள் 'நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும்' உள்ளவள் அல்லவா?

அறப்போர் துவங்கிவிட்டது. ஆண்டியிலும் ஆண்டியாக வாழ்ந்து, தியாக வாழ்வுக்கென்றே தம்மைத் தியாகத் தீயில் வேகச் செய்து புடம் போட்டுக்கொண்ட காந்தியடிகள், மீண்டும் வெஞ்சிறையில் வாடச் சென்றுவிட்டார். ராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டு விட்டது. விடுதலை வேட்கை கொண்டவர்கள் புற்றீசல்களைப் போல் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எங்கும் துப்பாகி வெடி, தடியடி, சிறைச்சாலை, கூட்டு அபராதம், உடைமைப் பறிமுதல்...

அது கட்சி அரசியல் போராட்டமல்ல-நாட்டு மக்களின் விடுதலைப்போர்...

வாழ்வு அல்லது சாவு!

கல்லூரி வாசலில் பெருங் கூட்டம் கூடிவிட்டது. ராஜாராமன் ஒரு புறம் காம்பவுண்டுச் சுவரின் மேல் நின்று கொண்டு கூவினான். வேறொரு பக்கம் சகுந்தலா நின்று கொண்டாள். கன்னியாகுமரியிலிருந்து இமயம் வரையிலும் ஆங்காங்கே மக்கள் சுட்டுக்கொல்லப்படும் பயங்கரச் செய்திகளை அவர்கள் கூறி, "வெள்ளையர்களின் ஆட்சியை இங்கே நடக்காமல் செய்வோம்; அல்லது எல்லோருமே செத்து மடிவோம்" என்று முழங்கினார்கள்.

அந்த நகரத்துக்குப் புதிதாக மாற்றப்பட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாசலம், நூற்றுக்கணக்கான போலீஸ் வீரர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். போலீஸ்காரர்களைக் கண்டவுடன் மாணவ மாணவிகள் பலருக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் பொங்கத் தொடங்கியது. ஒரு சில மானவர்கள் மாத்திரம் பயந்துகொண்டு கல்லூரிகளுக்குள் செல்ல முயன்றார்கள்.

"போகிறவர்களைத் தடுக்காதீர்கள்!" என்று கத்தினார் இன்ஸ்பெக்டர்.

துப்பாக்கி முனைகளில் கூர்மையான கத்திகள் பள பளப்புடன் ஒளி வீசின.

பயத்தால் நடுங்கிய இளைஞர்கள் சிலர் வழியில் நின்று தடுத்த சகுந்தலாவை மீறிக்கொண்டு உள்ளே புக முயன்றார்கள். தன் இரு கைகளயும் விரித்துத் தடுக்கத் துடித்தாள், சகுந்தலை.

"தடுக்காதே! வழியை விடு!" இன்ஸ்பெக்டர் கூறினார்.

சகுந்தலை இன்ஸ்பெக்டரின் குமுறலைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. மாணவர்களின் முகத்தில் நிலவிய பீதி உணர்ச்சியைக் கண்டவுடன் அவளுக்கு வெறி வந்துவிட்டது.

"நீங்களெல்லாம் ஆண்பிள்ளைகள் தானா? இது தானா உங்கள் வீரம்?" என்று கத்தினாள். "இந்தாருங்கள்! என்னுடைய வளையல்களைக் கழற்றித் தருகிறேன்! ஆளுக்கொன்றைப் போட்டுக்கொண்டு, உங்களைப் பெண்கள் என்று சொல்லிக்கொண்டு,உள்ளே நுழையுங்கள்! நாளையிலிருந்து சேலைகளைக் கட்டிக் கொண்டு வாருங்கள்!"

பீதியுற்றிருந்த மாணவர்களின் முகங்களில் வீரக்களை குடி கொண்டு விட்டது. சட்டென்று திரும்பி நின்றார்கள்.

சுவரில் நின்ற ராஜாராமன் பரிகாசத்துடன் வாய் விட்டுச் சிரித்தான். குதித்தோடி வந்து நின்று மாணவர்களை உற்சாகப் படுத்தினான். இன்ஸ்பெக்டர் அருணாசலத்தின் கண்கள் கொவ்வைக்கனிகளாக மாறின. அவருடைய மீசை துடித்தது. சகுந்தலா வின் முகத்தைச் சுட்டு வீழ்த்தி விடுவதுபோல் பார்த்தார்.

எவ்வளவு அழகான முகம்! இந்த அழகும் இளமையும் உணர்ச்சி வேகமும் ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டுக்கு முன்னால் என்ன செய்ய முடியும்?

சுடுவதற்கு அவரிடம் தயாராக உத்தரவு இருந்தது. தேவையானால் எந்த நிமிடத்திலும் ராணுவத்தை அனுப்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.

மின் வெட்டும் நேரத்திற்குள் முடிவு செய்தார் இன்ஸ்பெக்டர். அவருடைய கடமையிலிருந்து அவர் அணுவளவும் நழுவ விரும்பவில்லை. நகரத்தின் அமைதியையும் ஒழுங்கையும் அவர் எப்படியும் காப்பாற்றித் தீரவேண்டும். இந்த மாணவர் கூட்டம் முழுவதும் நகரத்திற்குள் திரண்டு சென்றால் ஏற்கனவே உணர்ச்சி வசப்பட்டிருக்கும் போது மக்கள் எப்படி மாறுவார்கள் என்று சொல்ல முடியாது.

உத்தரவு கையில் இருந்தது:-

நகரத்தின் அமைதியைக் காப்பாற்றியாக வேண்டும்.

பயந்து நடுங்கிய இளைஞர்கள் சிலரையும் வெறிகொண்ட வேங்கைகளாக மாற்றிவிட்டாள், ஒரு பெண்.

' என்ன செய்வது? என்னசெய்வது? என்ன செய்வது?

'ஷூட்' என்று ஒருவார்த்தை சொல்லி விடலாமா?

இன்ஸ்பெக்டரும் இளைஞர்தாம். என்றாலும் மனித உயிர்களின் மதிப்பை அவரால் மறக்க முடியவில்லை.'பாவம்! இளம் கன்றுகள் பயமறியாமல் துள்ளுகின்றன! வீட்டில் இவர்களுடைய தாய் தகப்பன்மார்கள், உற்றார், உறவினர், இவர்களைத் தங்களுடைய எதிர் காலத்துக்காக நம்பியிருப்பவர்கள்....."

சிந்தனை முடியவில்லை. இதற்குள் மாணவ மாணவிகளின் கூட்டம் கட்டுக்கடங்காமல் போலீஸ்காரர்களையே தள்ளி ஒதுக்கிவிட்டு ஊருக்குள் நுழையும் போல் தோன்றியது.

வெறிகொண்டவர்போல் தம்முடைய கைத்தடியை ஓங்கிக்கொண்டு,"சார்ஜ்" என்று கத்தினார், இன்ஸ்பெக்டர். அவரது உத்தரவையே எதிபார்த்துக்கொண்டிருந்த மற்ற போலீஸ்காரர்களும் ஆவேசத்துடன் தடிகளைச் சுழற்றத் தொடங்கினார்கள்.

"கலங்காதீர்கள்!" என்று கத்தினான், ராஜாராமன்.

இன்ஸ்பெக்டர் உயர்த்திய தடியைச் சுழற்றிக்கொண்டே தமது கண்களை இறுக மூடிக்கொண்டு அவன்மேல் பாய்ந்தார். பிறகு என்ன நடந்ததென்று அவருகுத் தெரியவில்லை. கைவலிக்கு மட்டிலும் தடியைச் சுழற்றினார்.

"ஆ!" என்று, அவரது நெஞ்சையே குலுங்கச் செய்த ஓர் பெண் குரல் எழுந்த பிறகுதான் அவரது ஆவேசம் அடங்கியது.

அவர் தம் விழிகளைத் திறந்தபோது சகுந்தலா இரத்த வெள்ளத்தில் கிடந்தாள். நெற்றி பிளந்திருந்தது. புருவத்திற்குமேல் இரத்த வெள்ளம் நிற்கவில்லை. ராஜாராமனை அங்கு காணவே காணோம்.

சுற்று முற்றும் பார்த்தார். அவன் எங்கு சென்று மறைந்தானோ தெரியவில்லை.

'ஒருவேளை., அவன் மீது விழ இருந்த அடியை இவள் குறுக்கிட்டு...!"

ஒரு உயிரைக் கூடக் கொல்லாமல் அன்றைக்குப் போராட்டத்தைத் தடுத்து விட்டாலும், ஏனோ இன்ஸ்பெக்டரின் மனம் தமது செய்கைக்காகப் பெருமைப் படாமல் சிறிது சஞ்சலமடைந்தது. அரசாங்க மருத்துவமனைக் கட்டிலில் சுயநினைவிழந்து படுத்துக்கிடந்தாள், சகுந்தலா. அவளருகில் உட்கார்ந்துகொண்டு அவளுடைய தாயாரும் தகப்பனாரும் கண்ணீர் வடித்துக்கொண் டிருந்தார்கள். சகுந்தலாவின் ஒரு பகுதி முகத்தை மறைத்துக் கட்டுப்போட் டிருந்தார்கள். இன்னும் கைகளிலும் கால்களிலும் சிறுசிறு கட்டுக்கள். என்ன இருந்தாலும் முகத்தில் போட்டிருந்த கட்டு மாத்திரம் பயங்கரமாகத் தோற்றமளித்தது.

"என்னுடைய பெண் அழகாக இருக்கிறாளென்று எவ்வளவோ கர்வப்பட்டேனே, நான்! அக்கம் பக்கத்தார் இவளுடைய அழகைப்பற்றிச் சொல்லும்போது பூரித்துப் போனேனே,நான்! அந்த அழகைக் குலைத்து விட்டானே படுபாவி!" என்று புலம்பினாள், தாயார்.

அவளுடைய தகப்பனாரும் தமது பெண்ணின் முகத்தைப் பற்றித்தான் பேசிக் கண்ணீர் சிந்தினார். அழகும் பணமும் உள்ள பெண்களுக்கே கல்யாணம் நடைபெறுவது கஷ்டமாக உள்ள இந்தக் காலத்தில், சகுந்தலாவின் கதி என்ன ஆகுமோ என்று கூறி வருந்தினார்.

"சுட்டுக் கொன்றிருந்தால்கூடத் தேவலாமே? உயிருள்ள வரையில் இந்தப் பெண்ணை அழவைத்து விட்டானே!" என்று கலங்கினாள் தாய்.

"பெண் மாத்திரமா அழப்போகிறாள்? பெண்ணோடு நீயும் நானும் சேர்ந்துதான் அழப்போகிறோம்" என்றார், தகப்பனார். அவருக்குக் கோபம் வந்தபோது சிலவேளைகளில் சகுந்தலாவைத் திட்டினார். சிலவேளைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டரைத் திட்டினார். இன்னும் சில வேளைகளில் காந்தியடிகளைத் திட்டினார்.

காயத்தை அவிழ்த்துக் கட்டும்போது அந்தக்காட்சியைப் பார்ப்பதற்குச் சகுந்தலையின் தாயாருக்கே மிகவும் வேதனையாக இருக்கும்.கன்னத்திலும் புருவத்திலும் ஏற்பட்டிருந்த காயம், எவ்வளவுதான் ஆறக்கூடியதாக இருந்தாலும், அதன் தழும்பு மறையவே மறையாது. சித்திரப் பாவையின் செந்தாமரை முகம்போல் விளங்கிய அந்த முகத்திற்கா இந்த நிலை வரவேண்டும்?

பெற்றவர்கள் இருவருக்குமே சகுந்தலாவுக்கும் ராஜாராமனுக்கும் ஏற்பட்டிருந்த மனத்தொடர்பு தெரியாது. கல்லூரி மாணவ மாணவிகளில் சிலர் வழக்கமாக அவளை வந்து பார்த்துச் சென்றார்கள். அவர்களில் ஒருவனாகவே அவர்கள் ராஜாராமனை நினைத்ததால், அவர்களிடம் சகுந்தலாவின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை நாளுக்குநாள் மங்கிக் கொண்டு வந்தது.

சகுந்தலாவுக்கு எதிரிலும் அவர்கள் அதைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். சகுந்தலா பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். பிறகு அவர்களைத் தடுத்துப் பார்த்தாள். ஆனால் அவர்களுக்கு மனம் கேட்கவில்லை.

"பணம் இருந்தாலாவது யாராவது பணத்திற்கு ஆசைப் பட்டாவது கல்யாணம் செய்துகொள்ள வருவார்கள். அதுவும் நம்மிடம் இல்லையே!" என்றார் அவள் தகப்பனார்.

"அவள் படிப்புக்காகச் செலவழித்த பணத்தைச் சேர்த்திருந்தால், இப்படி இவளுக்குத் தொல்லையும் வந்திருக்காது. நல்ல இடத்திலும் கல்யாணம் செய்து கொடுத்திருக்கலாம். நீங்கள் தான் என் பேச்சைக்கேட்காமல் படிக்க வைத்தீர்கள்!"

சகுந்தலாவுக்கு இதற்கு மேலும் மௌனமாக இருக்க முடியவில்லை.

"என்னுடைய கல்யாணத்தைப் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! படித்தவர், பணக்கார வீட்டுப் பிள்ளை, பரந்த மனம் கொண்ட ஒரு பண்புள்ள இளைஞர் கட்டாயம் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போக்கிறார். என்னுடைய பணத்துக்காகவோ அழகுக்காகவோ அவர் என்னை விரும்பவில்லை!"

விவரத்தைத் தெரிந்து கொண்ட பிறகுதான் சகுந்தலாவின் தாயாருக்கு அமைதி ஏற்பட்டது. அவளுடைய தகப்பனாரும் தமக்குள் தம்முடைய பெண்ணின் திறமையை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். ராஜாராமனின் குடும்பத்தைப்பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். அவனுக்கு விருப்பமிருந்தால் அவர்கள் மறுக்க மாட்டார்கள் என்பதையும் அவர் அறிந்து கொண்டிருந்தார்.

கட்டை அவிழ்த்துத் தன்முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள், சகுந்தலா. அவளுடைய கண்ணீரே அவள் உருவத்தை மறைத்தது. அதைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் பார்த்தபோது, கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தையே ராஜாராமன் உற்றுப் பார்த்துக்கொண்டு பின்னால் நிற்பதைக் கவனித்தாள்.

சகுந்தலாவின் முகம் வழக்கம்போல் நாணத்தால் சிவந்தது.மெல்லத் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

"சகுந்தலா!" என்ற குரல் தேனருவிபோல் தன் செவியில் பாயுமென அவள் எதிர்பார்த்தாள்.

ஆனால்,அவனோ கண்ணாடியில் பார்த்த முகம் கண்டு திடுக்கிட்டு வந்த சுவடே தெரியாமல் மறைந்து விட்டான். அடுத்த ஆறு மாதங்களில் அவனுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் மிக விமரிசையாக அதே ஊரில் திருமணம் நடந்தது.

அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் சென்றன. எப்படிச் சென்றன என்று கேட்காதீர்கள்.

சகுந்தலாவைப் பார்க்கும் ஒவ்வொருவரும் திடீரென்று தங்கள் முகத்தைச் சுளித்துக்கொண்டால், அவள்தான் பாவம் என்ன செய்வாள்? கல்யாணம் நடப்பது இருக்கட்டும். ஏதாவது வேலைக்குச் சென்று பிழைக்கலாம் என்றால், மற்ற மனிதர்கள் முகங்களில் விழிக்காமல் எப்படி இருப்பது?

அவளுடைய வீட்டில் படத்தில் இருந்த காந்தி அவளைப் பார்த்துப் புன்னகை பூத்தார். தன்னுடைய தழும்பை அவரிடம் சுட்டிக்காட்டி ஆறுதல் அடைந்தாள், சகுந்தலா. நேரில் அவரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தால் அவரிடம் அந்தத் தழும்பின் கதையைக் கூறினால், அவர் எவ்வளவு ஆனந்தப்படுவார்? ஆமாம், அவருக்கு மாத்திரந்தான் அதன் அருமை தெரியும். அதன் உயர்வு தெரியும்.

நாட்டுக்கு விடுதலை கிடைத்த அன்றைக்கும் அப்படியே ஆனந்தக் கண்ணீருடன் காந்தியடிகளின் படத்திற்கு முன்னால் நின்று கொண் டிருந்தாள், சகுந்தலா. அவளுடைய வீட்டு வாசலுக்கு முன்னால் ஓர் புதிய கார் வந்து நின்றது. வீடு தெரியாமல் யாராவது வந்திருப்பார்கள் என்று நினைத்தாள்.

காரிலிருந்து வாட்டசாட்டமாக ஓர் ஆண் அழகன் இறங்கி வந்தார். அவருடைய மீசை கருகருவென்று முறுக்கி விடப்பட்டிருந்தது. அவளுக்கோ அவளுடைய பெற்றோர்களுக்கோ ஒன்றுமே விளங்கவில்லை.

"நீங்கள் வந்து... " என்று இழுத்தார், அவள் தகப்பனார்.

"என் பெயர் அருணாசலம்.ஐந்து வருடங்களுக்கு முன்னால் இந்த ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்சராக இருந்தேன். இப்பொழுது நான் சூப்பரிணடெண்டாக இருக்கிறேன்."

சகுந்தலாவின் தகப்பனாரின் கண்கள் சிவந்தன. தாயார் அவர் மேல் பாய்வதற்குப் போனாள். சகுந்தலா மெதுவாகக் கதவோரம் வந்து நின்று அவர்கள் பேசுவதைக் கவனித்தாள்.

பேசுவதையெல்லாம் பேசித் தீர்த்தார்கள், பெற்றவர்கள் இருவரும். "எதற்காக இங்கே வந்தீர்கள்? வெட்கமில்லை உங்களுக்கு?...வேண்டுமானால் எங்களையும் அப்படி அடித்துப் போட்டுவிட்டுப் போங்கள்!அவளைச் சுட்டுக் கொன்றிருக்கலாமே?...அவள் முகத்தைக் கொஞ்சம் பாருங்கள்!"

மறுமொழி பேசாமல் மௌனமாக இருந்தார் அருணாசலம். பிறகு மெதுவாகத் தம் தலையைத் தூக்கி " என்னுடைய கடமையை நான் செய்ததாகவே இப்போதும் நினைக்கிறேன்; அதைப்பற்றிப் பேசுவதற்காக நான் வரவில்லை; வேறொரு விஷயம் பேச வேண்டும்" எனறார்.

"உங்களிடம் பேசுவதற்கு என்ன விஷயம் இருக்கிறது?" என்று வெறுப்போடு கேட்டார் அவள் தகப்பனார்.

"என்னுடைய வேலை நேரம் முடிந்த பிறகு, நானே சாதாரண உடையில் பலமுறை உங்களுடைய பெண்ணை அப்போது ஆஸ்பத்திரியில் வந்து பார்த்திருக்கிறேன். அப்போதே நீங்கள் என்னைத் திட்டியதையும் தூற்றியதையும் காதாரக் கேட்டிருக்கிறேன். நான் அதற்காகக் கவலைப் படவில்லை. உங்கள் பெண்ணுக்காகக் கவலைப்பட்டேன்...."

சகுந்தலா மெதுவாக அந்த மனிதரின் முகத்தை அவருக்குத் தெரியாமல் கவனித்தாள். அவருடைய கண்கள் கலங்கியிருந்தன."அந்த ராஜாராமனுக்கும் உங்கள் பெண்ணுக்கும் கல்யாணம் நடக்கக்கூடுமென்று எதிர் பார்த்தேன். அப்படி நடந்திருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன்..."

"நீங்கள் ஏன் வருத்தப்படவேண்டும்?"

"சொல்கிறேன்; அதைச்சொல்வதற்குத்தான் வந்தேன்" என்று சொல்லிவிட்டுச் சிறிது நேரம் யோசனை செய்தார்.

"கல்யாணம் நடக்கவில்லை என்று தெரிந்தவுடன் நான் இங்கு வருவதற்குப் பலமுறை முயற்சி செய்தேன்.ஆனால் உங்களுடைய பெண்ணின் வெறுப்புக்கு ஆளாக நேரிடுமோ என்று தயங்கினேன். தேசபக்திக்கும் என்னுடைய கடமைக்கும் விரோதமென்று சகுந்தலா நினைக்கலாமல்லவா? தேசபக்தி இருந்ததால்தான் சுடுவதற்கு உத்தரவிருந்தும் சுட்டுக் கொல்லாமல் கலவரத்தைச் சமாளிக்க முடிந்தது."

"கலவரமென்று சொல்லாதீர்கள்!விடுதலைப் போரென்று சொல்லுங்கள்!" என்று தன்னையும் மறந்து கோபத்துடன், கூறிக்கொண்டு வெளியில் வந்தாள் சகுந்தலா.

"மன்னித்துக் கொள். நீ இங்குதான் இருக்கிறாயா?"

சகுந்தலாவை அவர் பார்த்த பார்வையில் ஆனந்தம் துள்ளியதே தவிர, அதில் அனுதாபமோ, வருத்தமோ, வேதனையோ சிறிதுகூட இல்லை. அவருடைய கண்களுக்கு சகுந்தலா எவ்விதக் குறைபாடுகளுமே இல்லாதவளாகத் தோன்றினாள். பல ஆண்டுகளுக்குப் பிறகுதான், தன் முகத்தைக் கண்டவுடன் மற்றொரு முகமும் மலர்வதை முதல் முறையாக உணர்ந்தாள் அவள்.

அருணாசலம் நாணத்துடனும் அச்சத்தோடும் தலையைக் குனிந்து கொண்டு பேசலானார்:-

"எனக்கு இன்னும் கல்யாணம் நடக்கவில்லை. நீங்களும் உங்கள் பெண்ணும் சம்மதித்தால்....சகுந்தலாவை... நான்"

மற்ற மூவராலும் அவரவர்களுடைய செவிகளையே நம்ப முடியவில்லை.

திருமணத்திற்குப் பிறகு ஒருநாள் அருணாசலத்தின் கண்ணீர் சகுந்தலையின் நெற்றித் தழும்பின்மீது உதிர்ந்து அவள் கன்னத்தில் வழிந்தது. அன்புடன் அவருடைய கையைப் பற்றி அந்தத் தழும்பின்மீது பதித்துக் கொண்டு மெய் மறந்திருந்தாள், சகுந்தலா.

"சகுந்தலா! நீ அன்றைக்குக் குறுக்கே விழுந்து அடி வாங்கிக் கொண்டாயே, அது...அது...அவனைக் காப்பாற்றுவதற்கா? இல்லை..?"

"என்னுடைய சுய நினைவே எனக்கு அப்போது இல்லை. நான் யாரைக் காப்பாற்றவும் குறுக்கே வரவில்லை என்னுடைய நாட்டைக் காப்பாற்றுவதற்காக அடிபட்டுச் சாக நினைத்தேன்."

"உண்மையிலேயே நீ ஒரு தியாகி சகுந்தலா!"

"இல்லை; நீங்கள் தாம் தியாகி!.........அழகில்லாத என்னை..."

சகுந்தலா குரல் தழுதழுத்தது. சட்டென்று அவள் வாயைப் பொத்தினார், அருணாசலம். "அழகு உன் முகத்தில் இல்லை என்று யார் சொன்னார்கள்? உன்னுடைய முகத்தழகு என் கணகளுக்குத் தெரிந்தால் போதாதா? நீ முகத்திலும் அழகி; அகத்திலும் அழகி!"

இப்போது சொல்லுங்கள்: இந்த இருவரில் யாருடைய தியாகம் உயர்ந்ததென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நாட்டுக்காக சகுந்தலா செய்த தியாகமா? அல்லது அவளுக்காக அருணாசலம் செய்த தியாகமா?