வெள்ளம் வந்தது

வறண்டு கிடந்த வானத்துக்குத் திடீரென்று ஆனந்தம் வந்துவிட்டதோ, துக்கம் வந்துவிட்டதோ தெரியவில்லை. கொட்டுக்கொட்டென்று கொட்டித் தீர்த்து, நாடு நகரமெங்கும் ஒரே வெள்ளக் காடாக மாற்றிவிட்டது. மழையோடு இடியும் புயலும் சேர்ந்துகொண்டால் கேட்கவா வேண்டும்? -- சில மாதங்களுக்கு முன்பு சென்னை, மதுரை முதலிய இடங்களைச் சூழ்ந்து பெய்த மழையைத்தான் சொல் கிறேன். சென்னை நகரத்து மாடி வீட்டுக் குழந்தைகள் மாடிச் சன்னல்கள் வழியாக மழைக்காற்றில் தலைவிரித்தாடும் தென்னை மரங்களை வேடிக்கைப் பார்த்தார்கள். பொழிந்து தள்ளும் மழைப் பெருக்கில் திளைத்து விளையாடத் துடித்தார்கள். ஆனால் பெரியவர்கள் அவர்களை விடவில்லை.

சிற்சில குழந்தைகள் மட்டிலும் காகிதக் கப்பல்கள் செய்து, வீட்டுக்கு வெளியில் வழிந்தோடும் வெள்ளத்தில் விட்டுப் பார்த்தார்கள். காகிதக் கப்பல்கள் சிறிது தூரம் நேராகச் சென்றன; பிறகு காற்றில் சுழன்றன; பிறகு நீருக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து எழுந்தன. பிறகு தலை குப்புறவோ பக்கவாட்டிலோ சாய்ந்து அமிழ்ந்தே போய் விட்டன. குழந்தைகள் கைக்கொட்டிச் சிரித்தார்கள். புதிய கப்பல்களை அனுப்பிவைத்தார்கள்.

அதே சமயத்தில் சென்னை நகரத்தின் பிரசித்தி பெற்ற கூவம் நதிப் பெருக்கிலும் பல கப்பல்கள் மிதந்துகொண்டிருந்தன. ஆனால் காகிதக் கப்பல்களல்ல; கூரைக் கப்பல்கள். கூரைக் கப்பல்களா! ஆமாம்; வீட்டுக் கூரைகள்தான்; குடிசைகள்தான்.

குப்பத்துக் குழந்தைகளும் பெரியவர்களும் கூட்டங் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அந்த வேடிக்கை விளையாட்டில்லை; கண்களில் உற்சாகமோ, உல்லாசமோ சிறிதும் இல்லை.

கடலுக்குள் கட்டு மரத்தில் போய் மீன் பிடித்து வரும் குப்பத்துக் குப்புசாமியின் குடும்பமும் அங்கே நின்றுகொண்டிருந்தது. குப்புசாமி, அவன் மனைவி முனியம்மா, பத்து வயது பையன் துலுக்காணம் இந்தமூவரும், கடலுக்குள்ளிருந்து கரையில் இழுத்து போட்ட மீன்களைப் போல் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய குடிசை, காகிதக் கப்பலின் கடைசி நிமிஷம்போல் வெள்ளத்துக்குள் அமிழ்ந்து- அமிழ்ந்து எழுந்தபடியே வெள்ளத்தோடு வெள்ளமாய்ப் போய்க்கொண்டிருந்தது.

தகப்பன் தாய் இருவரையும்விட அந்தப் பத்து வயதுப் பையன் துலுக்காணத்துக்குத்தான் அதிகமான ஆத்திரம். அவன் ஒரு கந்தலில் முடிந்து பதினைந்து நயாபைசா காசைக் கூரைக்குள் ஒரு பக்கம் சொருகி வைத்திருந்தான். ஒரு மாதமாய்த் தன் தகப்பனிடம் அடம் பிடித்துச் சேர்த்து வைத்த காசு அது.

குடிசை போனது பற்றிக்கூடத் துலுக்காணத்துக்குக் கவலையில்லை. அந்த பொல்லாத குடிசை அவனுடைய பதினைந்து நயா பைசா காசையுமல்லவா எடுத்துக்கொண்டு போய்விட்டது?

மரத்திலே ஒரே ஒரு மாம் பிஞ்சு தோன்றி, நாளுக்கு நாள் அது பெரிதாகி, காயாகி, பிறகு பழுக்கிற வரையில் தினமும் அதை ஒருவன் வாயில் நீர் ஊற எதிர்பார்த்து நிற்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். பழமும் பழுக்கிறது; அதை அவன் மறுநாள் ஏறிப் பறிக்க நினைக்கிறான். மறுநாள் அதை மரத்தில் தேடிப் பார்க்கும்போதோ, அணில் கடித்துப்போட்ட வெறுங் கொட்டை கீழே தரையில் கிடக்கிறது!

துலுக்காணத்தின் நிலையும் அப்படித்தான். ஒரு மாதம் பாடுபட்டுப் பதினைந்து நயாபைசா சேர்த்தாகிவிட்டது. அதை வைத்துக்கொண்டு ஒரு பெரிய சுகத்தை அனுபவிப்பதற்காக அவன் நல்ல நாள் பார்த்துக்கொண்டிருந்தான். தகப்பன் கடல் மேலே போன பிறகு, அடுத்த தெருவுக்கு அடுத்த தெருவில் உள்ள ஓர் ஓட்டலுக்குப் போய் ஒரு தட்டுச் சாம்பார் சாதம் சாப்பிடவேண்டும் என்பது அவனது நெடு நாளைய ஆசை.

எப்போதோ ஒரு முறை அப்பனோடு அவன் அந்த ஓட்டலுக்குப் போயிருக்கிறான். அவன் தாய் முனியம்மா உடம்பு சரியில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த சமயம் அது. அந்த ஓட்டல் சாம்பார் சாதம் மிகவும் குறைவாய்த்தான் இருந்தது. ஆனால் என்ன ருசி! என்ன ருசி! பதினைந்து நயா பைசாவுக்கு நெய் மணக்கும் சாம்பார் சாதத்தை அல்வாத் துண்டு போல் பிளேட்டில் வைத்துத் தருகிறார்களே!

தான் அநுபவிக்க விரும்பிய சுகத்தை இப்போது நினைத்துக்கொண்டான் துலுக்காணம். அவனுடைய சொத்தைச் சுமந்துகொண்டு மிதந்த குடிசை அதற்குள் வெகுதூரம் சென்று, கண்களிலிருந்து மறைந்துவிட்டது. பொங்கிய கண்ணீர் உதட்டில் உப்புக் கரிக்க, நெய் மணக்கும் சோற்டைக் கரண்டியில் நாகரிகமாக எடுத்துச் சாப்பிடுவதாய் நினைத்துக்கொண்டு, எச்சிலை வெடுக்கென்று விழுங்கினான்.

கொட்டும் மழை அவர்களுக்காகச் சிறிதும் இரக்கம் காட்டவில்லை. வீசுகிற காற்றும் அவர்களுக்காக நின்றுவிட வில்லை. குப்பத்துக் கூட்டம் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டே, புகலிடத்துக்காக அங்கங்கே கலையப் பார்த்தது.

நல்ல வேளை! இயற்கை இரக்கங் காட்டாத சமயத்தில் நல்லவர்கள் சிலர் இரங்கத் தொடங்கிவிட்டார்கள். திடீரென்று சில லாரிகளும் மோட்டார்களும் அங்கு வந்து நின்றன.அவைகளில் குப்பத்துக்காரர்களை ஏறிக்கொள்ளச் சொன்னார்கள். துலுக்காணமும் தன் பெற்றோர்களோடு ஓடிப் போய் ஒரு மோட்டாரில் தொத்திக்கொண்டான்.

வெள்ளக்காடாய்க் கிடந்த சென்னை நகரத்துத் தெருக்களில் கார்கள் சேற்றை அள்ளி வீசிக்கொண்டு புறப்பட்டன. இரு புறமும் விழுந்து கிடக்கும் மரங்களையும், மின் விளக்குக் கம்பங்களையும் பார்த்துக்கொண்டே போனான் துலுக்காணம். இரு புறமும் காணப்பட்ட கெட்டிக் கட்டிட வீடுகளும் அவன் கண்களில் பட்டன.

"ஏம்பா,இந்த வீடுகள்ளே இருக்கவங்கள்ளாம் நம்பளோட வரலையே! பாவம், இவுங்க என்ன செய்வாங்க?" என்று தன் தகப்பனைக் கேட்டான் துலுக்காணம்.

குப்புச்சாமி சிரித்தான். சிரித்துவிட்டு, "மழையும் புயலும் நமக்குத் தாண்டா கண்ணு! காசு வச்சிருக்கவங்களைக் கண்டா கடவுள்கூடப் பயப்படுவாரு!"

காசு என்ற பேச்சு காதில் விழுந்தவுடன் துலுக்காணத்துக்கு வேறு எந்த நினைவும் எழவில்லை. வேறு புறம் திரும்பித் தன் தகப்பனுக்குத் தெரியாமல் நாவால் ஒருமுறை உதட்டைத் துழாவிக்கொண்டான்.'ஹும்! ஒரு பிளேட் சாம்பார் சாதம் வெள்ளத்தில் கரைந்தே விட்டது' என்ற ஏக்கம் அவனுக்கு.

மோட்டாரில் இருந்தவர்கள் தங்களுக்கு உதவி செய்தவர்களை வாழ்த்திக்கொண்டு வந்தார்கள். நல்ல மனமுள்ள சில சினிமாக்காரர்களும், வேறு சில செல்வந்தர்களும், இரக்க குணம் படைத்தவர்களும் அவர்களுக்குப் புகலிடம் கொடுக்க முன் வந்திருக்கிறார்களாம். அதோடு உணவும் உடையும் கூடக் கிடைக்குமென்று பேசிக்கொண்டார்கள்.

பள்ளிக்கூடங்கள் , அரசாங்க அலுவலகங்கள், திரைப்படத் தயாரிப்பு நிலையங்கள், சில பெரிய மாளிகைகள் இப்படி வெவ்வேறு இடங்களுக்குக் கார்கள் பிரிந்து சென்றன.

துலுக்காணம் முதலியவர்கள் ஏறியிருந்த மோட்டார் பெரிய மாளிகைபோல் தோன்றிய ஒரு கட்டிடத்தின் காம்பவுண்டுக்குள் நுழைந்தது. பிறகு ஒரு பிரும்மாண்டமான கூடத்தின் அருகில் நின்றது. அங்கு நின்றவர்கள் அவர்களை அழைத்துக்கொண்டு போய் உள்ளே தங்கச் சொன்னார்கள்.

துலுக்காணத்துக்குத் தன் கண்களையும் காதுகளையும் நம்பவே முடியவில்லை. இத்தனை பெரிய இடத்துக்குள் போகச் சொல்கிறர்களே! தாயும் தகப்பனும் அவனையும் பிடித்து இழுத்ததால், குளிரோடு சேர்த்துப் பயத்தையும் உதறிக்கொண்டு, மெல்ல உள்ளே நுழைந்தான்.

உள்ளே அந்தக் கூடத்தில் கண்ட காட்சியை அவன் அதுவரையில் நேரில் பார்த்ததேயில்லை. திரைப்படத்தில் எப்போதோ அவன் ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறான். அந்தக் காட்சியும் சீக்கிரம் மறைந்துவிட்டது.

அவன் பார்த்தது உண்மைதான் என்று நம்புவதற்கு அவனுக்கு வெகுநேரம் சென்றது. அவன் நடந்து சென்றதரை வழவழவென்று பளிங்கு போலிருந்தது. ஒருபுறம் மெத்தை வைத்துத் தைத்த நாற்காலிகளும் சோபாக்களும் ஒதுங்கிக்கிடந்தன. கண்ணைப் பறிக்கும் திரைத் துணிகள். மேலே அண்ணாந்து பார்த்தான். எங்கும் விசிறிகள், மின் விளக்குகள், என்னென்னவோ, அவனால் புரிந்துகொள்ள முடியாத சாமான்கள்.

அவ்வளவும் அவனுக்குப் பிரமிப்பைத் தந்தன வென்றாலும், அந்த மாளிகையிலும் அவனுக்கு ஒரு குறை தென்படாமல் இல்லை. ஒருமாதம் கஷ்டப்பட்டுப் பதினைந்து நயாபைசா காசைச் சேர்க்க முடிந்தால், அதை எப்படிக் கந்தலில் முடிந்து, கூரையில் சொருகுவது? தலையைத் தட்டுகிற உயரத்தில் கீற்றுக்கூரை போட்டிருந்தால் எவ்வளவு வசதியாய் இருக்கும்?

நன்றாக உற்றுப் பார்த்தான். அங்கே காசைச் சேர்த்து வைக்கிறாற்போல் ஓர் இடம்கூடத் தென்படவில்லை. 'ப்பூ இவ்வளவுதானா?" என்று தனக்குள் அலட்சியமாய்ச் சொல்லிக்கொண்டான்.

அவனுடைய அலட்சியம் அடங்குவதற்குள் அங்கு மற்றோர் அதிசயம் நடந்தது. எல்லோரையும் வரிசையாக வந்து உட்காரச் சொன்னார்கள். துலுக்காணமும் தன்னைப் பெற்றவர்களுக்கு மத்தியில் உட்கார்ந்தான். உட்கார்ந்த சிறிது நேரத்தில் ஒவ்வொருவர் கரங்களிலும் ஒவ்வொரு காகிதப் பொட்டலம் வந்து விழுந்தது. பொட்டலங்களைப் பிரிப்பதற்கு முன்பே 'கும்' மென்று நெய் வாசனை வீசியது.

துலுக்காணம் தன் பொட்டலத்தைப் பிரித்தவுடன் தன்னை ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்டான். அவன் சொப்பனம் காணவில்லை. அவன் கையில் சூடான சாம்பார் சாதப் பொட்டணம் தான். சந்தேகமேயில்லை; சந்தேகமே இல்லை; சாம்பார் சாதமேதான்...

துலுக்காணத்தின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது. இடது கையால் தன் பரட்டைத் தலையை ஒதுக்கி விட்டுக்கொண்டான். சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டான். வெகுநேரம் அதைப் பார்த்துக்கொண்டே மெல்ல மெல்லச் சாப்பிட்டான். மற்றவர்கள் சாப்பிட்ட பிறகும் அவசரமில்லாமல் சாப்பிட்டான். சீக்கிரம் தீர்ந்துவிடக் கூடாதல்லவா? பிறகு, இலையைப் பள பள வென்று சுத்தப்படுத்தினான். தூக்கி எறிய மனமில்லாமல் எறிந்துவிட்டுக் குழாயில் கையைக் கழுவினான்.

அன்றைக்கு மாலை அங்கே மற்றோர் அதிசயம் நடந்தது. எல்லோருக்கும் கனமான போர்வைகள் கொடுத்தார்கள். பெரிய போர்வை; புதுப் போர்வை. ஒவ்வொருவருக்கும் சொந்தமாகவே கொடுத்து விட்டார்கள்!

மழையும் புயலும் வந்தாலும் வந்தது. அதிசயங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் நிகழ்ந்து கொண்டே யிருந்தன. ஈரத் துணிகளைக் கழற்றச் சொல்லி, மாற்றுத் துணிகளும் கொடுத்து விட்டார்கள்.

இரண்டு நாட்களுக்குமேல் இப்படி இந்திர போகத்தை, குபேர சம்பத்தை, நினைத்துப் பர்க்கமுடியாத இன்ப வாழ்க்கையை அநுபவித்தான் துலுக்காணம். காலையில் இட்லி சாம்பார், மற்ற வேளைகளில் சாம்பார் சாதம், இரவில் அந்த மாளிகைக்குள்ளாகவே புதுப் போர்வைக்குள் உறக்கம்.

'அடடா, வெள்ளம் வந்தாலும் இப்படியல்லவா வர வேண்டும்?' என்று நினைத்து ஆனந்தப்பட்டான் அவன்.

மூன்றாவது நாள் மழை குறைந்தது; புயலும் தணிந்தது. அந்த மாளிகைக்குள்ளிருந்த வானொலிப்பெட்டிக்கு முன் பலர் கூடிக்கொண்டிருந்தார்கள்.

"நாளையிலிருந்து மழையும் புயலும் கிடையாது. இனி சமீபத்தில் மறுபடியும் இப்படிப் பெரிய அளவில் வருவதற்கான நிலைமை இல்லை" என்றது வானொலிப் பெட்டி.

துலுக்காணத்தின் அப்பா குப்புசாமி புன்னகை பூத்தான். அம்மா முனியம்மாள், அப்பாடா! கடவுள் ஒருவழியாகக் கண்ணை முழிச்சிட்டார்!" என்று மகிழ்ச்சியோடு கூறினாள்.

துலுக்காணம் உம்மென்று முகத்தை என்னவோபோல் வைத்துக்கொண்டு நின்றான். 'கடவுள் எதுக்காக இப்பக் கண்ணை முழிக்கிறார்? மழையும் புயலும் இல்லேன்னா நம்ப இங்கே வந்து இவ்வளவு சுகமாகத் தங்கியிருக்க முடியுமா? இதெல்லாம் பெரியவர்களுக்குத் தெரிய மாட்டேங்குதே!'

"அப்பா! இந்த மழை நிக்கவே படாதுப்பா!" என்று பரிதாபமாக அடம் பிடிக்கும் குரலில் கூறினான் துலுக்காணம். "நின்னுபோச்சுன்னா நம்பளை இங்கே யிருந்து போகச் சொல்வாங்கள்ள?" என்றான்.

"சொல்லாமல் இருப்பாங்களா? சொல்லியும் போகலேன்னோ அடிச்சு விரட்டுவாங்க!" என்று கூறினான் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு குப்பத்து மனிதன்.

துலுக்காணம் அவனை கோபத்தோடு பார்த்தான்; பார்த்துக்கொண்டே நின்றான். அவனது நெஞ்சில் இடி இடித்தது; புயல் வீசியது; மழை கொட்டியது. அதனால் ஏற்பட்ட வெள்ளம் அவன் கண்களில் பெருகியது.

மகனின் கண்ணீருக்குக் காரணம் தெரியாத குப்புச்சாமி அதை மெல்லத் துடைத்து விட்டான், அவன் கண்களை இந்த சமுதாயம் துடைத்து விட்டதைப் போல, இந்தக் கண் துடைப்பால் துலுக்காணத்தின் கண்ணீர் நிற்கவில்லை; வெள்ளம் வடியவில்லை.