தெய்வத்தின் குரல்

கூட்டமென்றால் கூட்டம்; மருதனூர்க் கிராமம் அதுவரையில் என்றைக்குமே கண்டிராத பெருங்கூட்டம்! அக்கம் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஏழை எளியவர்கள் எல்லோரும் அங்கே வாரி வழித்துக் கொண்டுவந்து கூடியிருந்தார்கள். அது மட்டுமல்ல, பத்திரிகை நிருபர்கள், படம் பிடிப்பவர்கள், ஆட்டக்காரர்கள், பாட்டுக்காரர்கள், நடிகர்கள்- இப்படி ஊரே அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது.

இவ்வளவும் எதற்கு என்று கேட்கிறீர்களா? மருதனூர் மாகாளி கோயிலில் அன்றைக்குத் திருவிழா. வழக்கம்போல் வருடம் வருடம் தூங்கி வழிந்துகொண்டு நடைபெறுமே, அதுபோல சாதாரணத் திருவிழா அல்ல இது. மூன்று பெரிய மலைகள் ஒன்று கூடி, முப்பெரும் வள்ளல்கள் ஒன்று சேர்ந்து, முழுமூச்சோடு இதை நடத்துகிறார்கள்.

விழாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே பரபரப்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அந்த ஊரில் பிறந்து வளர்ந்து, பட்டணத்துக்குப் போய்ப் பிரமுகர் களான பெரியசாமி, சின்னச்சாமி, தங்கசாமி மூவருக்கும் தங்கள் குலதெய்வத்தின் நினைவு வந்துவிட்டதாம். திருவிழாவைப் போட்டி போட்டுக்கொண்டு நடத்தத் துணிந்து விட்டார்களாம்.

அன்றைக்கு வருகிற ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யும் பொறுப்பைப் பெரியசாமி ஏற்றுக்கொண்டார். உணவுப் பொருள்களை மொத்தமாய்ச் சேகரித்து விற்பனை செய்து பெரிய மனிதரானவர் அவர். ஆகவே உணவுப் பொறுப்பை அவரிடமே மற்றவர்கள் விட்டுவிட்டார்கள்.

சின்னச்சாமியோ, "நீங்கள் சாப்பாடு போட்டால் நான் துணி கொடுக்கிறேன்!" என்று துணிந்து கூறினார்; "ஆண்களுக்கு வேட்டி துண்டு; பெண்களுக்குச் சேலை" என்றார்.

"தாராளமாய்ச் செய்யுங்கள்! உங்களுடைய மில் துணிகளில் ஒரு பகுதியை இப்போதே தர்மத்துக்கு மூட்டை கட்டி வைத்து விடுங்கள்" என்றார் பெரியசாமி. நெசவாலைகளை வைத்து நடத்தும் சின்னச்சாமியும் தம்முடைய தொழிலுக் கேற்றபடி பொறுப்பெடுத்துக் கொண்டதில் அவருக்குத் திருப்தி.

மூன்றாவது பிரமுகரான தங்கசாமிக்கோ தாம் மற்ற இருவரையும்விடப் பெருந்தன்மையில் குறைந்தவரல்ல என்று காட்டிக்கொள்ளத் தோன்றியது. "மற்ற எல்லாச் செலவுகளும் என்னுடையவை!" என்று ஓங்கியடித்தார் அவர்; "பெரிய பெரிய ஆட்களையெல்லாம் அழைத்து வந்து ஆட்டங்கள் பாட்டுக்கள் நடத்த வேண்டும். பந்தல்கள் கொட்டகைகள் கட்ட வேண்டும். கோவிலுக்கு வர்ணம் பூச வேண்டும். எல்லாவற்றையும் என்னிடம் விட்டு விடுங்கள்!"

தங்கசாமி பலருடைய பெயர்களில் பல தொழில்கள் செய்து வந்தார். பணம் பண்ணும் வித்தையில் அவருக்கு நிகர் அவர்தாம். எங்கும் இருப்பார்; எல்லோரையும் தெரியும்; எதையும் செய்வார். அவருக்கேற்ற பொறுப்பு அவருக்கு.

"நம்ப மருதனூர்தானா இது!" என்று உள்ளூர்க்காரர்கள் மூக்கின்மேல் விரல் வைக்கும் படியாக ஊரே மாறிவிட்டது. பல பாதைகள் செப்பனிடப்பட்டு லாரிகளும் கார்களும் வந்தன. தண்ணீர் வசதி, சுகாதார வசதி, விளக்கு வசதி யாவும் மந்திரஜால வித்தைகள் போல நடந்த வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்த பலருக்கு வேலைகளும் கிடைத்தன.

"எல்லாம் நம்ப ஊர்த் தெய்வத்துக்குச் செய்யும் காரியம். கூலியைப்பற்றிக் கவலைப்படாமல் வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்யுங்கள்!" என்று உற்சாகமூட்டினார் தங்கசாமி.

முப்பெரும் பிரமுகர்களான மூன்று சாமிகளையும் அடிக்கடி ஒன்றாய்ச் சேர்த்துத் தரிசனம் செய்யும் பாக்கியம் அந்த ஊர்காரர்களுக்குக் கிடைத்தது.

பொழுது புலர்வதற்கு முன்பிருந்தே திரள்திரளாக மனிதர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஒலிபெருக்கிகளின் வாயிலாகத் திசைக்குத் திசை இசைத்தட்டுகளும், நாகசுரமும், பல்வேறு ஒலிகளும் பெருகத் தொடங்கின. எங்கே பார்த்தாலும் தோரணங்கள், வாழைமரங்கள், வளைவுகள்.

ஊரை நோக்கிக் கூட்டம் அலைமோதிய அதே சமயத்தில், ஊருக்குள்ளிருந்து கையில் தடிக்குச்சி ஒன்றை ஊன்றியபடியே தட்டுத் தடுமாறி வந்துகொண்டிருந்தாள் ஒரு கிழவி. அதன் எல்லைக்கு வந்து ஒரு கூரை வீட்டுத் திண்ணையில் களைப்பாற உட்கார்ந்தாள். கூட்டத்து மக்களை அடிக்கடி ஏக்கத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள். "திருவிழாவுக்குப் போறிங்களா? போங்க! போங்க! இன்னைக்காவது உங்களுக்கு நல்ல சோறு கிடைக்கும்; நல்ல துணி கிடைக்கும். போங்க! போங்க!" என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

பிறகு என்ன நினைத்துக் கொண்டாளோ, திண்ணைச்சுவரில் சாய்ந்துகொண்டே, "அட, நான் பெற்ற மக்களா!" என்று சொல்லிக் கண் கலங்கினாள்.

அந்த வீட்டுச் சொந்தக்காரன் ராமையா வெளியில் வந்து பார்த்துவிட்டு ஒரு கணம் திடுக்கிட்டான். கிழவிக்கு வயசு நூறு இருக்கும்; அதற்கு மேலும் இருக்கும். அவளுடைய முகத்தில் பூச்சும் குங்குமப் பொட்டும் துலங்கி, அவள் சுமங்கலி என்பதைச் சுட்டிக்காட்டின. அந்த வயசில் அவ்வளவு களை மிகுந்த ஒரு முகத்தை ராமையா கண்டதில்லை.

"என்ன பாட்டி,நீ மாத்திரம் தாத்தாவை விட்டுட்டு வேடிக்கை பார்க்க வந்திட்டியா?" என்று கேட்டான் ராமையா.

பாட்டி தன் பொக்கை வாயைக் காட்டிப் பேரனைப் பார்த்துச் சிரித்தாள்; "ஆமாண்டா கண்ணு! வேடிக்கை பாக்கறத்துத்தான் என்னோட இடத்தை விட்டுட்டு இங்கே வந்திருக்கேன்." என்றாள்.

"உனக்கு எவ்வளவு வயசிருக்கும் பாட்டி?"

"வயசா? அதெல்லாம் எனக்கு எங்கே நினைவு இருக்கு?" என்று சொல்லிவிட்டு, "ஏண்டாப்பா, இன்னிக்கு மாத்திரம் எனக்கு இந்தத் திண்ணையில் தங்கறத்துக்கு இடம் தர்ரியா?" எனக் கேட்டாள்.

"திண்ணை எதுக்கு? தாராளமா வீட்டுக்குள்ளேயே வந்து தங்கிக்க; இங்கேயே எங்களோட சாப்பிடு. ஆனாத் திருவிழாச் சாப்பாடு காத்துக்கிட்டிருக்கிறப்போ, உனக்கு இதெல்லாம் ஒத்து வருமா?"

" கூட்டத்திலே போய் இடிபட்றதுக்கு எனக்குத் திராணி இல்லே. நீ சாப்பாடு போட்டாலும் நல்லதுதான்."

"உனக்குப் போட்றதுக்கு எனக்குக் கொடுத்து வைக்கணும் பாட்டி! இந்தக் காலத்திலே உன் வயசுப் பாட்டியைப் பாக்கிறது எனக்குத் தெய்வத்தைப் பாக்கிறாப்பலே இருக்கு, வா,உள்ளே! பழைய கஞ்சியைக் குடிச்சிட்டு, நம்பளும் வேடிக்கை பார்க்கப் போகலாம். நான் உன்னைப் பத்திரமாய்க் கூட்டிக்கிட்டுப் போறேன்.."

"நீ மகராஜனா இருக்கணும்!" என்று நீட்டி முழக்கி ஆசி கூறிக்கொண்டே, அவனோடு உள்ளே புகுந்தாள் பாட்டி.

ராமையா தான் அந்தக் குடும்பத்துக்குப் பெரியவன்.அவன் நிலபுலன்களைக் கவனித்துக்கொண் டிருந்தான்.

அவனுடைய தம்பிகள் இருவரில் மூத்தவன் கைத்தறி மக்கத்தில் வேலை செய்துகொண் டிருந்தான். இளையவன் கொத்து வேலை செய்தான். ராமையாவுக்கு மட்டிலும் கல்யாணமாகி யிருந்தது. மற்றவர்களுக்கு இனிமேல்தான் ஆகவேண்டும். தகப்பனரின் பொறுப்பிலிருந்து குடும்பத்தைக் கவனித்து வந்தான் ராமையா.

இவ்வளவு விஷயங்களையும் வீட்டுக்குள் நுழைந்து ஒரு நாழிகைப் பொழுதுக்குள் பாட்டி தெரிந்துகொண்டாள். ராமையாவின் மனைவி வட்டியில் போட்டு வைத்த பழைய சாதத்துக் கஞ்சியை ஒருவாய் குடித்து வைத்தள்; "உங்க குடும்பம் அமோகமா வளரணும்டா கண்ணு!" என்றாள் நிறைந்த வயிறோடு.

"என்ன பாட்டி ஔவைக் கிழவி கூழுக்கு பாடினாப்பலே நீ பேசறே?"

ஆமாண்டா ராசா! நீயோ உழுது பயிர் செஞ்சு ஊருக்குச் சோறு கொடுக்கிறே. உன்னோட மூத்த தம்பி வள்ளுவரைப் போலத் தறிநெசவு வேலை செஞ்சு துணி கொடுக்கிறான். இன்னொருத்தனோ குடியிருக்க நிழல் கொடுக்கிற கொத்து வேலை செய்கிறான். நீங்க மூணுபேரும் செய்கிற தொழில் இருக்கே, உத்தமமான தொழில்! சத்தியத்தை வளர்க்கிற தொழில்!"

"போ பாட்டி, நீ சுத்தக் கர்நாடகம்!" என்றான் ராமையா; "உழுதவன் கணக்குப் பாக்கிறேன், உழக்கரிசி கூட மிஞ்ச மாட்டேங்குது. இதை என்கிட்டேயிருந்து வாங்கிட்டுப் போய் வச்சிருந்து, கிராக்கி பண்ணி விக்கிறார் பார், அவர் இன்னிக்கு விழா நடத்துறார்!"

"யார், பெரியசாமியையா சொல்றே?"

"எல்லாச் சாமியையுந்தான் சொல்றேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விசயத்திலே பெரிய ஆசாமி, பாட்டி! நீ இதையெல்லாம் வெளியிலே சொல்லி வைக்காதே! கைத்தறி மக்கத்துக்கு நூலு கிடைக்காமல், நீ வள்ளுவர் வேலையின்னு

சொன்னியே, அது தவியாத் தவிக்குது. என் தம்பி திண்டாடிக்கிட்டிருக்கான்."

"அடப்பாவமே!"

"கொத்து வேலை பாக்கிறவனோட கதையையும் சொல்றேன் கேட்டுக்க: 'நெல் கொன்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே'ன்னு யாரோ பாடினாங்களாமில்ல? அதுமாதிரி, கையிலே காசு வாங்கற வரைக்கும் நிலைச்சு நிக்கறாப்பிலே இப்பக் கட்டிடம் கட்டச் சொல்றானாம்! கூலிக்கு வேலை செய்யறவன் என்ன செய்ய முடியும்? இந்தத் தங்கசாமியோட வேலையெல்லாம் இப்படித்தான். ரெண்டு ரூபா கூலியைக் கொடுத்திட்டு, நாலு ரூபான்னு எளுதி வாங்கறானாம். சத்தியம் செத்துப் போய்க்கிட்டிருக்குது பாட்டி, செத்துப் போய்கிட்டிருக்கு!"

பாட்டிக் கிழவி திடீரென்று பெண் புலிபோல் விழித்தாள். அவளுடைய முகமும் விழிகளும் கோபத்தால் சிவந்தன;"சொல்லாதே!சத்தியம் சாகாது! ஒருகாலும் சாகாது!" என்று கத்தினாள்.

அவள் விழித்த விழிப்பையும், அவள் குரலையும் கேட்டு ராமையாவே நடுநடுங்கிப் போனான். யார் இந்தக் கிழவி? இந்த வயசில் இவளுக்கு எப்படி இவ்வளவு வேகம் வருகிறது?

நேரம் சென்றது. திருவிழாவை வேடிக்கை பார்ப்பதற்காகத் தன் மனைவியையும் கிழவியையும் அழைத்துக் கொண்டு ஊருக்குள் சென்றான் ராமையா. ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துவிட்டுச் சாப்பாட்டுப் பந்தியை அவர்கள் ஒதுங்கியிருந்து கவனித்தார்கள். கிழவியின் கண்கள் கலங்கியிருந்தன. "சாப்பிடுங்கள் மக்களா!; இன்னைக்கு ஒரு நாளைக்காவது வயிறாரச் சாப்பிடுங்க!" என்று அவள் வாய் முணுமுணுத்தது.

அதற்குள் சாப்பாடு பரிமாறும் ஒருவரைச் சுற்றிக்கொண்டு, பளிச்சுப் பளிச்சென்று ஒளி மின்னச் சிலர் புகைப்படம் பிடித்தார்கள். " பெரியசாமியே தன் கையாலே பரிமாறினாருன்னு பத்திரிகையிலே போட்றதுக்கு இப்போது படம் பிடிக்கிறாங்க!" என்று ரகசியமாய்க் கிழவியின் காதில் சொன்னான் ராமையா.

அடுத்தாற்போல் சின்னசாமி உடைகளைத் தானம் செய்யும் போதும் இதேபோல் படங்கள் பிடிக்கப்பட்டன. தங்கசாமியும் தவறாமல் புகைப்படக் கருவிகளுக்குள் அகப்பட்டார்.

நாட்டியங்கள் நடந்து முடிந்தன. இசைப் பெருக்கும் ஓய்ந்தது. 'முப்பெரு வள்ளல்கள்' என்ற தலைப்பில் ஒருவர் நெடுநேரம் பிரமுகர்களைப் பற்றி பேசித் தீர்த்தார். பேச்சின் முடிவில், "இவர்களே மக்களைக் காப்பதற்காக மாகாளியால் அனுப்பப்பட்ட் தர்ம தாதாக்கள்" என்று சொல்லி வைத்தார்.

ஒலிபெருக்கியில் அதைக் கேட்ட கிழவியின் உதடுகள் கோபத்தால் துடித்தன. ஒருபுறமாகத் திரும்பித் தரையில் காறித் துப்பினாள் அவள்.

நேரம் சென்றது. கூட்டம் கலைந்தது. விழா நடத்திய பிரமுகர்கள் தங்கள் கார்களில் ஏறிக்கொண்டு சிட்டெனப் பறந்தார்கள்.

திரும்பிப் போகும் கூட்டத்தாரைப் பார்த்த பாட்டிக்கிழவி, போங்க! போங்க! நாளைக்கு போய் என்ன செய்யப் போறீங்க? போங்க! என்று தனக்குள் பேசிக் கொண்டாள்.

பிறகு, கிழவி தடிக்கம்பை கீழே போட்டுக்கொண்டு கோவில் வாசலில் உட்கார, ராமையாவும் அவன் மனைவியும் அவளருகில் அமர்ந்தார்கள்.

"திருவிழா நடத்தறாங்களாம் திருவிழா!" என்றாள் கிழவி. "இதை நடத்தினாங்களே இந்த வள்ளல்கள், இவங்களோட அறிவுக்கும், திறமைக்கும், சக்திக்கும் இவங்களுக்கு மனச்சாட்சிங்கிற ஒண்ணுமட்டும் கூட இருந்திட்டா, இத்தனைபேர் ஏழை எளியவங்க இந்தப் பக்கத்திலியே இருந்திருக்க மாட்டாங்க! இவங்க நினைச்சிருந்தா, இங்கே அத்தனை பேரையும் எப்பவுமே பட்டினியில்லாமல் காப்பாத்தியிருக்கலாம். பக்தி செலுத்தறாங்களாம் பக்தி! எல்லாம் வெறும் யுக்தியடா மகனே யுக்தி!"

"பாட்டி!நீ பொல்லாத பாட்டியா இருப்பே போலே இருக்கே?" என்றான் ராமையா;"சரி, வா, வீட்டுக்குப் போய் பேசலாம்."

" நான் இப்ப என் வீட்டிலேதாண்டா கண்ணு இருக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க!"

"பாட்டி!" மெய் சிலிர்க்கக் கூவினார்கள் இருவரும்.

"ஆமாண்டா ராசா!அவுங்க நுழையற இடத்திலே எனக்கென்ன வேலை? அந்தப் பாவிகளுக்குப் பயந்துகிட்டுத்தான் நான் உன் வீட்டைத் தேடி வந்தேன்."

"அப்படீன்னா நீ வந்து...?"

"இன்னுமா தெரியலே?"என்று கேட்டுப் புன்னகை பூத்தாள் சுமங்கலிக் கிழவி:"நான்தாண்டா மகனே, இந்தக் கோயிலுக்குச் சொந்தக்காரி!"

கிழவி எழுந்தாள்;கோயிலுக்குள் நுழைந்தாள்; கல்தோடு கலந்தாள். சிலையின் முகத்தில் இப்போது தனிக்களை துலங்கியது. வெளியில் இருவர் கல்லாய்ச் சமைந்து நின்றார்கள்.