சொர்க்கம் எங்கே?

"இந்த மண்ணுலகத்திலே சொர்க்கம் என்று ஒன்று இருக்குமானால், அது இங்கேதான்!அது இங்கேதான்! அது இங்கேதான்!"-தன் கரத்திலிருந்த ஒரு புத்தகத்திலிருந்து இந்த வரிகளைக் குதூகலத்துடன் வாய்விட்டுப் படித்துக் கொண்டிருந்தாள் மல்லிகா.

"ஆம், அது இங்கேதான்!அது இங்கேதான்! அது இங்கேதான்!"

பின்னாலிருந்து ஆனந்தனுடைய குரல் எதிரொலிக்கவே, மல்லிகா நாணத்துடன் எழுந்து நின்று அந்தப் புத்தகத்தால் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்.

ஓவியன் ஆனந்தனுடைய நீண்ட மெல்லிய விரல்கள், மல்லிகாவின் முகத்தை மூடியிருந்த புத்தகத்தை மெல்லப் பற்றின. சிரித்துக்கொண்டே அதைத் தானும் படித்தான்.

முகலாயர்களுடைய கட்டடக் கலைச் சிறப்புகளைப் பற்றி. படங்கள் நிறைந்த புத்தகம் அது. டில்லி செங்கோட்டை என்று இன்று அழைக்கப்படும் அந்தப் பழைய அரண்மனையின் மண்டபம் ஒன்றில், சக்கரவர்த்தி ஒருவர் அந்த வரிகளைப் பதித்து வைத்திருப்பதாக அந்த நூலில் எழுதியிருந்தது.

"மல்லிகா! அந்தச் சக்கரவர்த்திக்கு அந்த மாளிகை சொர்க்கமென்றால், இந்த ஏழைக் கலைஞனுக்கு இந்தக் குடிசைதான் சொர்க்கம்! இதுதான் நம் சொர்க்கம்!"

"கலைச் சக்கரவர்த்தி என்று சொல்லுங்கள். ஏன் ஏழையென்று உங்களையே தாழ்த்திக் கொள்ளவேண்டும்?" என்று சற்றுக் கோபத்துடன் கூறினாள் மல்லிகா.

ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்தது. " என்னைப் பற்றி நான் உயர்வாக நினைக்கவில்லை. ஆனால், என்னைச் சக்கரவர்த்தி யாக்குவதன் மூலம் நீ மகாராணியாக விரும்புகிறாய் என்றால் தாராளமாகச் சொல்லிக்கொள். மற்ற ஓவியர்கள் கேட்டால் பொறாமைப் படுவார்கள்" என்று கூறிய ஆனந்தனுடைய கற்பனை நெஞ்சிலே விதம் விதமான வண்ண ஓவியங்கள் மலர்ந்து மணம் வீசத்தொடங்கின.

"சரி, மகாராணியாரே! நம்முடைய சாம்ராஜ்யத்தில் மாதம் மும்மாரி பொழிகிறதா? குடிபடைகள் பத்திரமாக இருக்கிறார்களா? வரி வசூல் ஒழுங்காக நடைபெறுகிறதா?" என்று கேட்டான்.

"அடிக்கடி சொல் மாரிதான் பொழிகிறது!" என்று சிரித்துக்கொண்டே சித்திரங்களைச் சுட்டி "அதோ உங்களுடைய குடிபடைகளையெல்லாம் பத்திரமாக எடுத்துத்துடைத்து வைத்திருக்கிறேன்!" என்றாள் மல்லிகா. அத்தோடு கணக்கு நோட்டையும் எடுத்துவந்து பிரித்துக்காட்டி "வரி வசூல்தான் ஒழுங்காக நடைபெறுவதில்லை; படங்களை வாங்கிக்கொண்டு போவதற்குக் காலுக்கு விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு நடப்பவர்கள், வாங்கிக்கொண்டு போனபிறகு காணிக்கை செலுத்த மறந்து போகிறார்கள்!" என்றாள்.

"கொடுத்துவிடுவார்கள்; விட்டுத்தள்ளு!" என்று அலட்சியமாகக் கூறிவிட்டு" உண்பது நாழி அரிசி; உடுப்பது நாலுமுழத்துண்டு; இதற்குத்தானா பஞ்சம் வந்துவிடும்?" என்று குழந்தை போல் கேட்டான் ஆனந்தன்.

வயது வந்த குழந்தைகளான இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். தஙகளுடைய வறுமையை மறந்து, கவலைகளை மறந்து அவர்கள் சிரித்தார்கள்.

வீட்டின் மற்றொரு பகுதியில் இட்டிலி வார்த்துக்கொண்டிருந்த ஆனந்தனுடைய தாயாருடைய செவிகளிலும் அந்தச் சிரிப்பொலி விழுந்தது. "கல்யாணம் பண்ணிக்கொண்ட புதுசு! காணாததைக் கண்டதுபோல் அவனும் தலைகீழே நிற்கிறான். போய்த் தொலையட்டும்!" என்று தனக்குள் பேசிக்கொண்டாள் அவள்.

ஆனந்தனின் தாயாருக்கு அவன் ஒரே செல்லப்பிள்ளை. தகப்பனார் சிறு வயதில் அவனை விட்டுவிட்டுப் போன பிறகு எத்தனையோ சிரமங்கள் பட்டு அவனை வளர்த்து ஆளாக்கி விட்டவள் அவள். 'குழந்தை' என்கிற ஆனந்தனைத்தான் அவளுக்குத் தெரியுமே தவிர, வலிமை மிக்க ஓவியனாக வளர்ந்து, பலருடைய பெருமைக்கும் பாராட்டுக்கும் உரியவனாக அவன் உலவிக்கொண்டிருப்பது அவளுக்குப் புலப்பட வில்லை.

சென்னை நகரத்தின் ஒதுக்குப்புறத்திலிருந்த ஒரு சிறிய கூரை வீடுதான் ஆனந்தனுடையது. என்றாலும் அதைச் சுற்றிலும் ஓர் அழகிய பூந்தோட்டம் அவன் போட்டிருந்தான். மூங்கில் பட்டைகளால் வேலி அடைத்துக்கொண்டு நகரத்தை ஒட்டினாற் போல் கிராம வாசத்தின் அமைதியைத் தேடிக்கொண்டிருந்தான் அவன்.

"செங்கோலை எடு!" என்றான் ஆனந்தன். அதற்குப் பிறகு அவன் முற்றிலும் மாறுபட்ட வேறு மனிதன் என்பதை மல்லிகா தன்னுடைய சிறிது காலப் பழக்கத்திலேயே கண்டு விட்டாள். மௌனமாகச் சித்திரம் வரையும் தூரிகையை எடுத்து அவனிடம் நீட்டினாள். முன்னதாகவே வர்ணக் கிண்ணங்கள் பல்வேறு நிறங்களில் அவனருகில் தயாராக இருந்தன.

இனிமேல் அவளுடன் நாடக வசனங்கள் இல்லை; பேச்சில்லை; சிரிப்பில்லை. குதூகலமோ கொண்டாட்டமோ அங்கு இனி இல்லை.

அந்த நேரத்தில் அவனுக்கு இடி இடித்தால் தெரியாது; மழை பொழிந்தால் தெரியாது;பிரளயமே ஏற்பட்டாலும் தெரியாது. மல்லிகா அந்த நேரங்களில் அவனுடைய காதலியல்ல; மனைவியல்ல; கலைத் தேவிக்குத் தொண்டு செய்யும் ஆனந்தன் என்ற அடிமைக்கு அவள் ஓர் அடிமை!

தன்னையே அவனுடைய கண்கள் ஊடுருவிக் கொண்டிருந்தாலும், தனக்குப் பின்னே உள்ள எதையோ அவன் தேடுகிறான் என்பதை அவள் கண்டுகொள்வாள். அவனுடைய தோற்றம் விசுவரூபம் எடுத்து நிற்பதை அவளுடைய கண்கள் மட்டுமே கண்டிருக்கின்றன.

மகாராணியாக இருந்த மல்லிகா, அடிமையிலும் அடிமையாகத் தன்னை மாற்றிக்கொண்டு, மௌனமாக அவனுக்கு வேண்டிய சிறு உதவிகளைச் செய்வாள். அல்லது, அவன் எங்கே எப்படியெல்லாம் இருக்கச் சொல்கிறானோ, அங்கே அப்படிக் கட்டுண்டு இருந்துவிடுவாள்.

ஆனந்தனின் கண்கள் மதுவை உண்ட மயக்கத்தில் கிறங்கிப் போயிருந்தன. கரத்தின் தூரிகை நர்த்தனமாடியது. அடிக்கடி மல்லிகாவின் பக்கம் திரும்பிப் பார்ப்பதும், பிறகு தோட்டத்துச் செடி கொடிகளை உற்று நோக்குவதும் பிறகு திரைச் சீலையில் கவனம் செலுத்துவதுமாக இருந்தான் ஆனந்தன்.

நேரம் சென்றதே இருவருக்கும் தெரியவில்லை.

சமையலறைக்குள்ளிருந்து சத்தம் கேட்டது. "மல்லிகா! மல்லிகா!"

"இதோ வந்துவிட்டேன் அத்தை!" என்று குரல் கொடுத்துக்கொண்டே கிளம்பினாள் மல்லிகா.

"கொஞ்சம் பொறு! இப்போதே போகாதே!" என்று தடுத்தான் ஆனந்தன். மல்லிகா நடுங்கினாள். கலைக் கட்டளைக்குக் கட்டுப்படுவதா? அத்தையின் அழைப்பை மீறுவதா?

சில விநாடிகள் தயங்கியபிறகு 'போகலாம்' என்று அவன் கையசைத்தபிறகு மெல்ல அங்கிருந்து கிளம்பினாள் அவள். அடுப்படியில் அவர்களுக்குள் ஏதோ வார்த்தை நடந்தது. அது ஆனந்தனின் செவியில் விழவில்லை.

அன்றைக்கு மாலையில், அவன் காலையில் எழுதத் தொடங்கிய படம் முழுமை பெற்றது. இடையில் ஏதோ அவன் தாயாரின் கட்டாயத்துக்காகச் சாப்பிட்டு வைத்தான். மல்லிகா எடுத்துக் கொடுத்த தண்ணீரைச் சுய நினைவின்றிக் குடித்து வைத்தான். படம் முழுமை பெற்ற பிறகு தான் அவனுக்கு இந்த உலகின் நினைவே வந்தது.

வேதனைகளையும் பொறுக்கமுடியாத வலியையும் பொறுத்துக் கொண்டு, தான் பெற்றிருந்த குழந்தையை முதன் முதலாகப் பார்க்கும் தாயைப் போல, அந்தப் படத்தை ஒரு நிமிடம் தன் ஆவல் தீரப் பார்த்தான் ஆனந்தன். மல்லிகாவும் தன் கண்கள் மலர அதையே உற்று நோக்கினாள்.

இதுதான் அவன் எழுதிய ஓவியம்: ஒரு பூங்காவின் மத்தியிலிருந்த பளிங்கு மேடையருகில் மாலைத் தென்றலில் அசைந்தாடும் முகத்திரையைப் பற்றியவாறே நாணத்துடன் எழுந்து நிற்கிறாள் மகாராணி மும்தாஜ். அப்போதுதான் அங்கு சக்கரவர்த்தி ஷாஜஹான் தமது பேகத்தைத் தனிமையில் சந்திப்பதற்கு ஆவலோடு வந்து கொண்டிருக்கிறார். அவருடைய வரவைக் கண்டுவிட்டு, மகிழ்ச்சி பொங்கிய நாணத்துடன் மும்தாஜ் பரபரப்போடு பளிங்கு மேடையிலிருந்து எழுந்து நிற்பதுபோல் ஒரு தோற்றம்.

"மல்லிகா!இதற்கு என்ன தலைப்புக் கொடுக்கலாம்?"

"'சொர்க்கம் இங்கே' என்று கொடுங்கள்!"

"மல்லிகா! எதை நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ, அதையே நீயும் சொல்லிவிட்டாய்.இதற்கு எத்தனையோ பேர்கள் விலை மதிப்புச் சொல்வார்கள். ஆயிரம் ஆயிரமாக அவர்கள் அள்ளிக் கொடுத்தால் கூட, அவர்களால் இதன் ஆத்மாவை உன்னைப்போல் உணர முடியுமா, மல்லிகா?... இந்தப் படத்தின் வெளி அழகும் நீ, உள்ளழகும் நீ, உயிரழகும் நீ!...எல்லாவற்றையும்விட இதன் ஆத்மத் துடிப்பு இருக்கிறதே, அது நீயேதான் மல்லிகா!நீயேதான்... "

மெய்யான பக்தனைக் கண்டு பரவசம் அடையும் கடவுளைப்போல், ஆத்மாவைக் கண்டு ஆனந்தமுறும் யோகியைப்போல், தனக்கொரு ரசிகையைக் கண்டுவிட்ட கலைஞன் மகிழ்ச்சிப் பூரிப்பால் ஏதேதோ அவளிடம் உளறினான்.

மறுநாள் அவனுடைய வீட்டுக்கு வந்திருந்த நண்பன் நாவுக்கரசு, அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வாயடைத்துப் போய் நின்றான். அதை ஆனந்தன் ஒரே நாளைக்குள் எழுதி முடித்தான் என்பதை மட்டும் அவன் நம்பவே இல்லை.ஒரு வாரமாவது ஆகியிருக்குமென்று வாதாடினான்.

"மல்லிகா சாட்சி யிருக்கிறாள், கேட்டுப்பார்!"

"ஆம், அண்ணா! நேற்றுக் காலையில் தொடங்கி மாலையில் முடித்துவிட்டார்" என்று நாவுக்கரசிடம் பெருமையோடு கூறினாள் மல்லிகா,

"அடேயப்பா! அசுர சாதனையென்று சொல்வார்களே, அதைத்தான் நீ சாதித்திருக்கிறாய். எப்படி ஆனந்தா உன்னால் இவ்வளவு அழகான படத்தை, இவ்வளவு சீக்கிரம் உருவாக்க முடிகிறது?-உண்மையாய்க் கேட்கிறேன்: உன்னுடைய கலை இரகசியத்தைத்தான் என்னிடம் கொஞ்சம் சொல்லி வையேன்."

"இதோ பார்! இந்த ரோஜாப் பூவிடம் போய், 'நீஎப்படி மலர்கிறாய்?' என்று கேள்வி கேட்டால், அது என்ன பதிலைச் சொல்லும்?" என்று தோட்டத்தில் மலர்ந்திருந்த ஒரு ரோஜாவைத் தன் நண்பனிடம் காட்டினான் ஆனந்தன்.

நாவுக்கரசு அவனை விடவில்லை. " ரோஜாவிடம் அழகும் மணமும் இருக்கிறதே தவிர, அதற்கு வாயில்லை. உன்னிடம் கலையும் இருக்கிறது; அதைப் பற்றிச் சொல்ல வாயும் இருக்கிறது" என்று கூறினான்.

"நாவுக்காரசு! இந்தப் படத்தையே எடுத்துக்கொள். இதை எழுதப்போகிறேனென்று நான் நேற்று காலை வரையில் நினைக்கவில்லை. அறைக்குள் நுழைந்தபோது இவள் ஏதோ சில வரிகளைப் படித்துக்கொண்டிருந்தாள். அதன் பொருள் எனக்கு உற்சாகம் தந்தது. என்னைக் கண்டவுடன் இவள் நாணத்துடன் எழுந்து நின்ற சாயல் என் கற்பனை யைத் தூண்டிவிட்டது. இவளையே மும்தாஜாக மாற்றி, நான் ஷாஜஹானாகிவிட்டேன்!... இதையெல்லாம் நீ கிளறிக் கேட்பது எவ்வளவு சங்கடமாக இருக்கிறது தெரியுமா?"

"போங்கள்! உங்களுக்குக் கொஞ்சங்கூட வெட்கமில்லை!" என்று கோபத்தோடு சொல்லிவிட்டு, உள்ளே ஓடி மறைந்தாள் மல்லிகா.

நாவுக்கரசு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். அதிசயப் பிறவியான தன்னுடைய நண்பனுக்கு மற்றோர் அதிசயப் பிறவி வந்து மனைவியாக வாய்த்திருப்பது அவனுக்கு மகிழ்ச்சி தந்தது.

"நீ ஒரு கலை வெறியன்!" என்றான் நாவுக்கரசு சிரித்துக்கொண்டே.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. சில சமயங்களில் கலைக்கே வெறி வந்து என்னை ஆட்டி வைக்கிறது என்று வேண்டுமானால் வைத்துக்கொள். கிண்ணங்களில் வண்ணங்களைக் குழைத்தவுடன் அதில் கற்பனை ஊற்றும் கலந்துவிட்டால் சித்திரம் நயமாக அமைந்துவிடுகிறது. எதிர்பாராத சில சமயங்களில் ஆத்ம தரிசனம் கிடைத்ததுபோல், கலை ஊற்றுப் பீறிட்டுப் பொங்கிப் பூரிக்கிறது. சில வேளைகளில் பல நாடகள் சிரமப்பட்டு ஒரு சித்திரத்தைக்கூட முடிக்க முடிவதில்லை."

" ஆனந்தா! உண்மையிலேயே நீ மிகவும் கொடுத்து வைத்தவன்" என்று பூரிப்போடு கூறினான் திருநாவுக்கரசு."சீக்கிரம் நீ மிகப் பெரிய ஓவியக் கலை மேதையாகிவிடப் போகிறாய், பார். பாசமே உருவாக வந்த தாயாரும், உன் கலை மனத்துக்கு உற்சாகமூட்டும் மனைவியும் உனக்குக் கிடைத்திருக்கிறார்கள். இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?"

"நேசமே உருவான நண்பனும் எனக்குக் கிடடைத்திருக்கிறான் என்பதை மறந்துவிடாதே!" என்று கூறிச் சிரித்தான் ஆனந்தன்.

நண்பன் நாவுக்கரசு கூறியது ஒருவகையில் உண்மையாகிவிட்டது. நாளுக்கு நாள் ஆனந்தநிந் சித்திரங்கள் ரசிகர்களிடம் பேராதரவைப் பெற்றுக்கொணம்டே வந்தன. வறுமைத் துன்பமும் மறைந்துகொண்டு வந்தது. மல்லிகாவுக்கும் எந்த நேரத்திலும் அவனுடைய வேலைகளுக்கே பொழுது சரியாக இருந்தது. ஆனால் தன் கணவனுக்கு அருகிலேயே எந்த நேரமும் இருந்தும் கூட, அவன் தன்னை விட்டு வெகு தூரத்துக்கு வெகு தூரம் விலகிக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். மல்லிகாவிடம் அவன் பேசுகிற பேச்செல்லாம் சித்திரங்களைப் பற்றிய பேச்சுத்தான். 'அவருக்கு நான் மனைவி என்பதையே முற்றிலும் மறந்துவிட்டார் போலிருக்கிறது' எந்று எண்ணி ஏங்கத் தொடங்கினாள் மல்லிகா.

அவனுடைய தாயார் பார்வதியம்மாளுக்கோ, மல்லிகா வீட்டுக்கு வந்ததிலிருந்தே தன்னுடைய மகன் மாறிவிட்டான் என்ற எண்ணம் விதையூன்றிவிட்டது. தன் பாசத்துக்குப் பஞ்சம் வந்துவிட்டதுபோல் ஓர் அச்சம் அவளுக்கு. எந்த நேரமும் ஆனந்தனின் கூடவே மல்லிகா இருந்ததால், அவனைத் தன்னிடமிருந்து பறித்துக்கொண்டுவிட்டாள் என்று பார்வதியம்மாளால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பாசத்தைப் பயம் பற்றிக்கொண்டது.

காதலோ கடமையின் பிடியில் அகப்பட்டு ஏங்கித் தவித்தது.

இடையில் மல்லிகாவுக்கு ஒரு மகனும் பிறந்துவிட்டான்.

இந்த நிலையில் வீட்டுப் பெண்கள் ஆனந்தனின் கலை வளர்ச்சியையோ, அவனுடைய புகழையோ, முன்னேற்றத்தையோ சிறிது சிறிதாகக் கவனிப்பதை மறந்தார்கள். மாமியார் தன் கவனத்தை மருமகள்மீது திருப்பி, அவளுடைய செயல்களிலெல்லாம் குறை காணத் தொடங்கினாள். மருமகளோ, தன்னிடம் கணவன் பராமுகமாக இருப்பதாகவும் மாமியார் தன்னைக் கஷ்டப்படுத்துவதாகவும் நினைக்கத் தொடங்கிவிட்டாள்.

"நீ வந்ததிலிருந்து என் குடும்பமே போய்விட்டது!" என்று குற்றம் சாட்டினாள் மாமியார்.

"நான் இருதலைக் கொள்ளி எறும்பு! அங்கே அவருக்கு நான் அடிமையாகக் கிடந்து உழைத்துவிட்டு, இங்கே உங்களிடமும் ஏச்சு வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது!" என்றாள் மருமகள்.

மாமியாருக்கும் பொறுமை யில்லை; மருமகளுக்கும் பொறுமையில்லை. மாமியார் மருமகளைத் தூற்றினால், மருமகள் குழந்தையைத் தூற்றுவாள். கோபம் தாங்க வில்லையென்றால் குழந்தை குமரனின் அழுகுரலை அங்கே கேட்கலாம்!

மனத்தில் வண்ணம் குழைத்துத் தூரிகையை எடுக்கும் ஆனந்தனின் சிந்தனை அடிக்கடி குடும்பத்திற்குள் திரும்பியது. 'குடும்பமென்று இருந்தால் அதிலும் குழந்தையும் பிறந்துவிட்டால், இப்படித்தான் இருக்கும்.எல்லாம் நாளடைவில் சரியாகிவிடும்' என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டு வந்தான் ஆனந்தன்.

நாளடைவில் நிலைமை மோசமாகிக்கொண்டு வந்ததே தவிரச் சரியாகவில்லை. பிரகு ஒருநாள் மல்லிகாவிடம் "நீதான் பொறுத்துக்கொள்ளவேன்டும், மல்லிகா! அம்மா என்னைப் பெற்று வளர்த்தவர்கள்! கலைஞனுடைய வாழ்விலுள்ள சிரமங்களையும் தொல்லைகளையும் அறியாதவர்கள் என்னோடு வாழ்வதென்றால் உனக்கு அளவுக்கு மீறிய பொறுமை வேண்டும், மல்லிகா!" என்று வேதனையோடு கூறினான்.

தாயாரிடமும், " அம்மா எனக்கும் பெயரை ஆனந்தன் என்று வைத்தீர்கள். என்னுடைய ஆனந்தத்தினால்தான் என்னுடைய கலையே வளர முடியும். உங்களுக்கும் பொறுமை வேண்டுமம்மா!... நீங்கள் அவளைக் குறை கூறிக்கொண்டே இருந்தால், அவளுடைய மன அமைதியைக் குலைக்கிறதம்மா!" என்றான்.

" அவள் வந்ததிலிருந்து வீட்டில் அமைதியே குலைந்து போய்விட்டது!" என்றாள் தாயார்.

"புரிந்து கொள்ளுங்கள், அம்மா,புரிந்து கொள்ளுங்கள்!" என்று கத்தினான் ஆனந்தன்."நீங்கள் இருவரும் என்னிடம் அன்பு செலுத்துவது உண்மையானால், முதலில் உங்களுக்குள் அன்பும் ஒற்றுமையும் வேண்டும். அப்படியில்லாவிட்டால் அது என்னைத்தான் பாதிக்கும்."

இவ்வளவுக்கும் இடையில் ஆனந்தன் தன்னுடைய குழந்தை குமரனின் களங்கமற்ற சிரிப்பிலும், மழலையிலும், சுட்டித்தனத்திலும் ஆனந்தம் கண்டான். உயிர்களுடைய மலர்ச்சியிலே கற்பனைக் கனவுகளைக் காண்பவன் அவன். மல்லிகாவின் இடத்தை நிரப்புவதற்கு அவனுக்குக் குமரன் கிடைத்தது ஓர் ஆறுதலாக இருந்தது.

ஒரு நாள் அவனுடைய சித்திரக்கூடத்துக்குள், பூந்தோட்டத்தை வெறித்துப் பார்த்தவாறு குழந்தையும் கையுமாக நின்றுகொண்டிருந்தாள் மல்லிகா. அறைக்குள் நுழைந்த ஆனந்தனுக்குக் குழந்தையும் கையுமாக அவள் தோன்றிய காட்சி அற்புதமான கற்பனையைக் கொடுத்தது. தோட்டத்துக் குருவிகளைக் கண்டு குமரன் குதூகலமாக மழலைகளை வாரி இறைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய பிஞ்சுக் கரங்களும் கால்களும் துள்ளித் துடித்தன. சிரிப்பின் சிற்றலைகள் அந்த அறையெங்கும் நறுமணம் வீசியது. குழந்தையும் கடவுளும் ஒன்றேயல்லவா!

ஆனந்தனின் இதயமான வண்ணக்கிண்ணத்தில் கற்பனைத் தேன் பொங்கத் தொடங்கவே, மல்லிகாவுக்குத் தெரியாமல் தூரிகையை எடுத்துக் கொண்டு திரைச் சீலையின் அருகில் சென்றான். பெற்றெடுத்த தாயின் இதயமும் அப்போது தன் இதயத்தைப் போலவே குழந்தையின் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் என்பது அவனுடைய கற்பனை. ஓவியர்கள் அனைவருக்குமே தெவிட்டாத காட்சிதான் இது.

"மல்லிகா! எங்கே இப்படிக் கொஞ்சம் திரும்பு!" என்று மெல்லக் கூறினான் ஆனந்தன். "குமரனின் முகத்தைக் கொஞ்சம் சிரித்தபடியே பார்!"

மல்லிகா பயந்து நடுங்கிக் கொண்டே திரும்பினாள். அவள் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது. சிரிப்பை எதிர்பார்த்த முகத்தில் துயரம்; ஆனந்தத்தை எதிர்பார்த்த முகத்தில் சோகம்; கற்பனைத் துளிகளை எதிர்பார்த்த முகத்தில் கண்ணீர்த் துளிகள்.

அவ்வளவு தான்! தான் என்ன செய்கிறோம் என்பதை மறந்து, அருகிலிருந்த ஒரு வர்ணக் கிண்ணத்தை எடுத்து அவள் முகத்தில் வீசினான் ஆனந்தன். குழந்தை குமரன் வீறிட்டு அழுதான். "நீங்கள் மனிதர் தானா?: என்று கதறினாள் மல்லிகா. "சிரிக்கச் சொல்கிறீர்களே, என்னை நீங்கள் நடிக்கச் சொல்கிறீர்களா? எப்படிச் சிரிப்பு வரும் எனக்கு இந்த வீட்டில்? தொட்டதெல்லாம் குறை, செய்வதெல்லாம் தப்பு என்று ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்தால் உங்களால் தான் உற்சாகமாகச் சித்திரம் வரைய முடியுமா" - இதோ பாருங்கள். என்னிடம் உங்களுக்கு அன்பில்லை; உங்களுடைய தாயாருக்கும் அன்பில்லை! உங்களுடைய கலைக்கு அன்பு வேண்டும், ஆத்மா வேண்டும், உற்சாகம் வேண்டும் என்கிறீர்களே, அதை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டே வந்தால் உங்களிடம் நான் எதைக் கொடுப்பது?"

குழந்தையுடன் அவள் வேகமாகச் சென்று மறைந்தாள். ஆனந்தன் துக்கத்தில் ஆழ்ந்தவனாகத் தூரிகையை வீசி எறிந்தான். அன்றிலிருந்து அவனுக்குத் தூரிகையைத் தொடுவதற்குக் கூட உற்சாகமில்லை. தொல்லைகளுக்காக எதையாவது எழுதித் தரவேண்டும் என்ற எண்ணம் அவனுக்குக் கிடையாது. மாதத்துக்கு ஒரு படத்தைக் கூட அவனால் முழுமையாக்கிக் கொடுக்க முடியவில்லை . ஒரே நாளில் ஓர் உயிர்ச் சித்திரத்தை முடித்தவனால், ஒரு மாதத்தில் ஒன்றையாவது திருப்தியோடு வரைய முடியவில்ல. பலவற்றை எழுதிப் பார்த்துவிட்டுத் தனக்குப் பிடிக்காததால் கிழித்துப் போட்டுவிட்டான். அவனுடைய போக்கைப் பற்றி அவன் தாயாரோ, மல்லிகாவோ கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் கவலை அவரவர்களுக்கு. பார்வதி அம்மாளுக்கு மல்லிகாவின் மீது குறை; மல்லிகாவுக் குப் பார்வதியம்மாளின் மீது குறை.

ஆனந்தன் மல்லிகாவிடம் தன் நிலையைச் சொல்லி அவளை முன்போல் இருக்கும்படி வேண்டினான். அவனும் முன் போலவே அவளிடம் மனம் விட்டுப் பேசிப் பொழுது போக்கினான். கணவனிடம் அவளுடைய அநுதாபம் திரும்பியது. ஆனால் பார்வதியம்மாளுக்கோ அதன் காரணம் புரியவில்லை. இருவரும் தன்னைப் பற்றித் தான் குறை கூறிக் கொள்கிறார்களோ என்ற சந்தேகம் அவளுக்கு.

வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஆனந்தனைப் பார்க்க வந்த நாவுக்கரசுக்கு, ஆனந்தனுடைய தோற்றத்தைக் கண்டவுடன் திகைப்பாகப் போய் விட்டது. அதைப் போலவே அவன் மனைவியும் வீட்டுப் பெண்கள் இருவரும் மாறியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.

நாவுக்கரசு கேட்டான்: "உனக்கு என்ன வந்துவிட்டது ஆனந்தா? ஏன் இப்படி மெலிந்து போய்விட்டாய்? அடையாளமே தெரியாதபடி உருக் குலைந்து போயிருக்கிறாயே?" "அதிக வேலை;வேறொன்றும் காரணமில்லை" என்று மழுப்பினான் ஆனந்தன்.

"பொய் சொல்லாதே! நீ உன் வேலைகள் எதையுமே ஒழுங்காகச் செய்வதில்லை என்று எனக்குப் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.குறித்த காலத்தில் எந்தப் படத்தையும் முடித்துக் கொடுப்பதில்லையாம். அருமையான வாய்ப்புக்கள் வந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் நீ இப்படித்தானா நடந்துகொள்வது?"

ஆனந்தன் மௌனமாகத் தலை குனிந்துகொண்டான்.

நாவுக்கரசோ தன் பேச்சை நிறுத்தவில்லை. "வாழக்கையில் சிலருக்குத்தான் பிறவியிலேயே கடவுள் கலைத் திறன் என்கிற அருளைக் கொடுக்கிறார். அவர்களிலும் ஒரு சிலரைத்தான் வெளி உலகம் தெரிந்துகொண்டு வரவேற்கிறது. இவ்வளவிருந்தும், தன்னுடைய நிலையை நீயே தெரிந்துகொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டால், பிறகு நீ வருந்த வேண்டியிருக்கும், ஆனந்தா!"

ஆனந்தனுக்கு அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. "இவ்வளவும் எனக்குத் தெரிகிறது திருநாவுக்கரசு. ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியவில்லை. என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்? கலையையே வாழ்வாகக் கொண்ட பல மேதைகளின் குடும்பவாழ்வு எவ்வளவு துன்பம் நிறைந்ததாக இருந்ததென்பது உனக்குத் தெரியுமே!"

"முட்டாள்!" என்று அன்பின் உரிமையோடு கண்டித்தான் நாவுக்கரசு. "உன்னை நான் விட்டுவிடுவேனென்று நினைக்காதே" என்றான்.

வீட்டுக்குள் புகுந்த நாவுக்கரசின் மனைவியிடம் மல்லிகாவும் பார்வதியம்மாளும் தங்கள் குறைகளைக் கூறி அழுதனர். நாவுக்கரசு தன் மனைவியிடமிருந்து வீட்டுப் பெண்கள் இருவரைப் பற்றியும் அறிந்துகொண்டான்.

"பாவம்! உலகத்தில் பலருக்கு இயற்கையாகவே துன்பத்துக்கு மேல் துன்பம் வந்துகொண்டிருக்கிறது. வேறு சிலரோ இயற்கையாகவே தங்களுக்கு இன்பத்துக்கு மேல் இன்பம் வந்து குவியும்போதே, அதை ஒதுக்கிவிட்டு, துன்பத்தைத் தேடிக்கொண்டு அவதிப்படுகிறார்கள். எது இன்பம், எது துன்பம் என்று அவர்களுக்கே தெரிவதில்லை" எனறான் நாவுக்கரசு தன் மனைவியிடம்.

"பார்வதியம்மாளும் நல்லவர்கள்தான்; மல்லிகாவும் நல்லவள்தான். ஏன் இந்தக் கஷ்டம் அவர்களுக்கு?" என்று கேட்டாள் அவள்.

"இரண்டு பேருமே நல்லவர்களாக இருந்தும், மற்றவர்களை நல்லவர்கள் என்று நினைக்காததனால் வரும் தொல்லைதான் இது. தனியே தன் மகன்மீது உயிரையே வைத்திருக்கும் அவன் தாயாருக்கு யார் மீதெல்லாம் அவன் அன்பு செலுத்துகிறானோ, அவர்கள் மீதெல்லாம் தானும் அன்பு செலுத்தவேண்டும் என்று தெரிவதில்லை. அதேபோல் அவன் மனைவிக்கும் அவன் தாயார்மீது வைக்கும் பாசம் அவள்மீது செலுத்தும் அன்பு என்பதும் புரியவில்லை..."

"ஏன், இதை நீங்களும் நானுமே போய்ச் சொல்லலாமே!" என்றாள் அவள்.

"பொறு! நாம் போய்ச் சொன்னால் அவர்கள் நம்மையே பொல்லாதவர்கள் என்று நினைப்பார்கள்.நம்மையே அவர்கள் வெறுக்கத் தொடங்கினாலும் தொடங்குவார்கள்."

" அப்படியானால் உங்களுடைய நண்பரின் பாடு என்ன ஆவது? அவர் நன்றாக இருந்தால்தானே அந்தக் குடும்பத்துப் பெண்களுக்குச் சண்டை போட்டுக் கொள்வதற்காகவாவது வசதி கிடைக்கும்? அவர் மனம் நொந்து போய்ப் படுக்கை யில் விழுந்து விட்டால்? தூரிகையைத் தூக்கி எறிந்து விட்டால்? இந்த நாட்டுக்கே பெருமை தரும் கலைஞர் என்று அவரைப் பற்றிச் சொல்லிக் கூத்தாடுவீர்களே, அவரிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு இவ்வளவுதானா?"

சிரித்தான் நாவுக்கரசு.அவன் சிரிப்பைக் கண்டு அவன் மனைவிக்கு எரிச்சலாக இருந்தது.

நாவுக்கரசின் தூண்டுதலால், உலகச் சித்திரப் போட்டிக்கென்று ஒரு படம் வரைவதற்காக, சென்னையை விட்டுக் கிளம்பி மைசூருக்குச் சென்று ஓர் ஓட்டலில் தங்கிக் கொண்டு படம் வரைந்து கொண்டிருந்தான் ஆனந்தன். அவன் வீட்டை விட்டுச் செல்லும்போது கூறி விட்டுப்போன வார்த்தைகளை அவன் தாயாரும் மறக்கவில்லை; மனைவியும் மறக்கவில்லை. "உங்களை விட்டு வெகுதூரம் போனால்தான் அமைதி கிடைக்கும் போலிருக்கிறது. அமைதியில்லாமல் என்னால் சித்திரம் வரைய முடியாது!"

இதை நினைத்து நினைத்து இருவரும் ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு நாள் இரண்டு கடிதங்கள் ஆனந்தனின் விலாசத்துக்கு வீட்டுக்கு வந்தன. வந்த கடிதங்களில் ஒன்றை மனைவி மல்லிகா படித்தாள்; மற்றொன்றை அவள் தாயார் படித்தாள்.

மல்லிகா படித்த கடிதம் யாரோ ரசிகை எழுதியது:-

அன்புள்ள ஆனந்தன் அவர்களுக்கு,

எங்களுக்கெல்லாம் ஆனந்த பரவசத்தை இடைவிடாமல் உங்கள் சித்திரங்களால் கொடுத்துக் கொண்டிருந்த நீங்கள் ஏன் இப்போது சித்திரங்களே வரைவதில்லை? கடவுளுக்கு அடுத்தபடியாகக் கலைஞர்களைப் போற்றும் நாடு இது. இதில் தாங்கள் தவறிப் பிறந்தவர்கள். தங்கள் கலைத்திறனால் நம் நாட்டின் மதிப்பே உலகத்துக்கு மத்தியில் உயரப்போகிறது.

ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். என் தோழி ஒருத்தி தங்களைக் காண வந்திருந்தபோது, தங்களது வீட்டில் சரியான வரவேற்பில்லையாம். தங்கள் தாயாரும் மனைவியும் ஒருவருக்கொருவர் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருந்தார்களாம். இது நீடித்துக் கொண்டே போகிறதென்றும் அறிந்தேன்.

நான் எழுதுவது தவறாக இருக்கலாம். ஆனால் எனக்கு உங்களுடைய கலைதான் பெரிது. உங்களுடைய ஆனந்தத்துக்காக என் வாழ்வையும், என்னுடைய உடைமைகளையும் நான் காணிக்கையாக வைக்கக் காத்திருக்கிறேன். மேலை நாடுகளில் கலைஞர்களை வளர்க்கும் ரசிகைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தங்கள் அடிமை,

கண்களில் கண்ணீர் பொங்க, மல்லிகா அந்தக் கடிதத்தைத் தன் மாமியாரிடம் கொடுத்துவிட்டு, அவளிடமிருந்த கடிதத்தை வாங்கினாள். அதை ஆனந்தனின் சித்திரக்கார நண்பன் ஒருவன் எழுதியிருந்தான்.

அதில் இருந்த சில வரிகள் பார்வதியம்மாளையே பதறச் செய்துவிட்டன.

"ஆனந்தா! உடனே புறப்பட்டு ஓடி வந்துவிடு.நாம் பாரிசுக்குப் போவோம்; அல்லது லண்டன் போவோம். கையில் பணமிருக்கிறது. கவலைகளை மறப்பதற்காக எவ்வளவோ வழிகள் அங்கே இருக்கின்றன. மிகச்சிறந்த கலைஞர்கள் சிலர் என்ன செய்கிறார்கள், தெரியுமா? குடும்பத் தொல்லைகளில் அவர்கள் அகப்படுவதே இல்லை. நினைத்தபோது குடிக்கிறார்கள்; பிறகு ஆவேசத்தோடு சித்திரங்கள் வரைகிறார்கள். நாம் ஒவ்வொரு படத்தை எழுதும் போதும் எத்தனை எத்தனை வேதனைகளை அனுபவிக்கிறோம்? அந்தக் கலையின் வெற்றிக்காகவே நம்முடைய வாழ்வைச் சீரழித்துக் கொண்டால்தான் என்ன? வாழ்க்கை மண்ணுக்கு; கலை விண்ணுக்கு. பறந்து போகலாம், வா!"

கடிதங்களைப் படித்துவிட்டுச் சிலையாகிப் போனார்கள் இருவரும். பிறகு வெகுநேரம் தங்களுக்குள் கண்ணீர் வடித்தார்கள். ஒருவர் கண்ணீரை மற்றவர் துடைத்தார்கள்.

மைசூரிலிருந்து திரும்பி வந்த ஆனந்தனுக்கு வீட்டுக்குள் ஏற்பட்டிருந்த மாறுதல்களை நம்புவதற்கே சில வாரங்கள் சென்றன. அவனக்குக் காரணமே தெரியவில்லை. எப்போதும் ஒரே குதூகலம், சிரிப்பு, பரிகாசப் பேச்சுக்கள். பார்வதியம்மாளின் மடியில் படுத்துக்கொண்டு மல்லிகா கதை கேட்டாள். மாமியாரைப் பற்றி வாய்க்கு வாய் பெருமை பேசினாள். குழந்தை குமரனுக்கோ எந்த நேரமும் கொண்டாட்டம்.

நண்பன் நாவுக்கரசு உலகத்துச் சித்திரப் போட்டியில் ஆனந்தனுக்கே முதல் பரிசு என்ற செய்தியை ஆரவாரத்தோடு வீட்டில் வந்து கூறினான். தமிழ் நாட்டின் புகழை உலகத்துக்கு மத்தியில் நிலைநாட்டி விட்டதாக அவன் பெருமைப் பட்டுக் கொண்டான்.

பரவசத்தோடு மல்லிகா அவனை மெய்ம்மறந்து பாராட்டினாள். ஆனந்தனோ நிதானமாக அவளிடம் கூறினான். "மல்லிகா! உலகப் பரிசு எனக்குப் பெரிதாகவே தோன்றவில்லை. என் உள்ளம் ஒரு பெரிய பரிசை அதற்கு முன்பே பெற்றுவிட்டது. அம்மாவும் நீயும் எப்படி இவ்வளவு தூரம் மாறி விட்டீர்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. அந்த மாற்றம் என்ற பரிசு இருக்கிறதே அது அப்படியே இருக்கவேண்டும்."

அந்தக் கடிதங்களைப் பற்றி மல்லிகாவோ பார்வதியோ ஆனந்தனிடம் எதுவும் கூறவில்லை. அவர்களுக்குக்கூட அந்தக் கடிதங்களை எழுதியவன் நாவுக்கரசுதான் என்பது தெரியாது.