சகோதரர் அன்றோ?

தொலைவில் தெரிந்த வெள்ளிப் பனி மலையின் பளிங்குச் சிகரங்கள் பகைவர்களைப் பயமுறுத்தும் ஈட்டி முனைகளைப் போலக் காலை வெயிலில் பள பளத்தன. சிகரங்களின் வாயிலாக ஊடுருவிப் பாய்ந்த இளங்கதிர், இன்னும் அந்த மலைக் காட்டில் நுழையவில்லை. அடிவாரத்தின் மடியில் அடர்த்தியான குளிர்; மங்கலான இருள்.

நெடியதொரு மலைப் பாம்பு போல், ஒரு குறுகலான ஒற்றையடிப் பாதை வளைந்து மேலே சென்றது. பாதையின் இரு புறங்களிலும் நெடி துயர்ந்த மரங்கள். அடிக்கடி சின்னஞ்சிறு மலையருவிகள் குறுக்கிட்டன. பனிப் பாளங்கள் நொறுங்கி நீரில் மிதந்ததால், அருவியில் வைத்த காலை, மரத்துப்போன மரக்கட்டையாகத்தான் வெளியில் எடுக்க முடியும். மரக்கிளைகளிலும் இலைகளிலும் படிந்த வெண்பனி மட்டும் சொட்டுச் சொட்டாக உருகி உதிரத் தொடங்கியது.

பனியும் ,பயங்கரமும், இடர்ப்பாடும் நிறைந்த அந்த மேட்டுப் பாதையில் இருபது போர் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்றனர்.அவர்களது ஒழுங்கான காலடி ஓசையைத் தவிர, மற்ற எந்த ஒலியும் அங்கு எழவில்லை. ஓசையில் ஏதாவது நேரும்போது மட்டிலும், முன்னால் சென்ற தலைவன் குமார், தாளம் தவறிப் போடுபவனைப் பார்க்கும் பாடகனைப்போல் திரும்பிப் பார்ப்பான்- பிறகு ஓசை தவறுவதில்லை.

"லெப்ட்...ரைட்...சரக்...சரக்...சரக்...சரக்...!"

இது அவர்களுக்கு இரண்டாவது நாள் நடை.கம்பளிக் குல்லாய்களையும் அங்கிகளையும் தாண்டி வந்து எலும்புக் குருத்தைச் சுண்டி இழுத்தது அந்தக் குளிர். முதல் நாள் இரவை எப்படியோ ஒரு கூடாரத்துக்குள் நெருப்பு மூட்டிக் கழித்து, தங்கள் எலும்புகளை ஓரளவு உலர்த்திக்கொண்டு, மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தார்கள்.

வேவு பார்ப்பதற்காக முன்னால் சென்றுகொண்டிருந்த ரோந்துப் படை இது. இதை அடுத்து இதேபோல் ராஜ்பகதூர் என்ற பாஞ்சாலத்து இளைஞனின் தலைமையில் மற்றொரு சிறு படையும் வந்துகொண்டிருந்தது. அதற்கும் பின்னால் வந்த படைதான், நூறுபேர்களடங்கிய 'பயனீர்' படை. காடுகளை வெட்டிச் செப்பனிட்டுப் பாதைகளை ஒழுங்காய்ச் சமைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். அதை அடுத்தாற் போல்தான் அவர்களது தாற்காலிக ராணுவ முகாம் இருநதது. அங்கிருந்தவர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால்,மொத்தம் முந்நூறு பேர் தேறுவார்கள்.

போக்குவரத்துச் சாலைகளில்லாத மலைக் காட்டுப் பிரதேசம் அது. வீரர்கள், தளவாடங்கள், சப்ளைகள் முதலிய எல்லாவற்றையும் அங்கு 'ஹெலிகாப்டர்' விமானம் மூலம் கொண்டு வந்து இறக்கித்தான், அந்த ராணுவ முகாமையே ஏற்படுத்தி யிருந்தார்கள்-சீனர்களின் நயவஞ்சகத்தனமான படையெடுப்புக்கு ஆளாகியிருந்த வடகிழக்கு எல்லைப் பிரதேசம் அது.

சூரியன் வானத்தின் உச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தான். குமாரின் தலைமையில் வந்த வீரர்களும் மலை உச்சியை நெருங்கினார்கள். சூரியனின் ஒளி அங்கு நிலவொளி போலத்தான் குளிர்ந்திருந்தது. வெளிச்சமுண்டு; வெம்மையில்லை.

மலை முகட்டைத் தாண்டிச் செல்வதற்கு அவர்களுக்கு உத்தரவு இல்லை. ஆகவே, இயற்கையாக அரண் போல் அமைந்த ஒரு பாறைத் தொடரின் மறைவில் தன் வீரர்களை உண்டு களைப்பாறச் செய்தான் குமார். ரொட்டித்துண்டு நன்றாக இறுகிப் போயிருந்தது. அதை மென்று, விழுங்கி விட்டு, குளிரை விரட்டுவதற்கு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். தாங்கள் வநது சேர்ந்ததுபற்றியும், மலை முகட்டை அடுத்த பள்ளத்தாக்கில் பகைவரின் நடமாட்டம் எதுவும் தெரியவில்லை என்பது பற்றியும் பின்னால் வரும் ராஜ்பகதூருக்குச் செய்தி அறிவித்தான். தலைமை நிலையத்தை 'சிக்னல்' கூப்பிட்டபோது, அங்கிருந்து பதில் இல்லை. அங்குள்ள இயந்திரம் பழுதாகி விட்டது போலும்!

குமார் ஒரு பாறையின் பின்பு நின்று கொண்டு, தொலை நோக்கிக் கண்ணாடியால் பள்ளத்தாக்கு முழுவதையும் நன்றாக ஊடுருவிப் பார்த்தான். நடுத்தரமான உயரம்; வைரம் பாய்ந்த ஒல்லியான உடற்கட்டு; முறுக்கு மீசை; கறுப்பு நிறம்.

"சீனர்களுக்குச் சாதகமான நில அமைப்பு அவர்களுடைய எல்லையில் இருக்கிறது. பாதை அமைத்துக்கொண்டு வாகனங்களில் வந்து குவிந்து விடலாம் -அதை நமக்குப் பாதகமாகப் பயன் படுத்தி விட்டார்கள் துரோகிகள்!" என்றான் குமார், அருகில் நின்ற மராத்திய வீரனிடம்.

"அவர்களுடைய கொரில்லாப் பயிற்சி இந்த மலைக்காடுகள் வரையில்தான் எடுபடும். சமவெளிக்கு வந்தால் நாம் புதை குழி வெட்டிவிடலாம்" என்றான் மராத்தியன்.

தொலை நோக்கியால் பார்த்தபடி பேசிக்கொண்டே வந்த குமார், சட்டென்று பேச்சை நிறுத்தி, ஒரு திசையில் சுட்டிக்காட்டினான். தொலைநோக்கியை மற்றவனிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னான்.

"ஆமாம்; பெரியகூட்டம்!" என்றான் மராத்தியன். "இலை தழைகளை அள்ளிப் போட்டு மறைத்துக் கொண்டு வருகிறார்கள், வாகனங்கள் ஏதுமில்லை கோவேறு கழுதைகளில் சப்ளை வருகிறது."

இரும்புச் சிலையின் முகமாக மாறியது குமாருக்கு. சட்டென்று அதை வாங்கிப் பார்த்துவிட்டு, மீண்டும் தலைமை நிலையத்தோடு கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கெள்ளமுயன்றான்;முடியவில்லை."சுமார் ஆயிரம் பேர் இருப்பார்கள்; இரண்டு மைல் தொலைவில் வந்துகொணடிருக்கிறார்கள்!" என்றான்.

இருப்பதோ இருபது பேர்; வருவதோ ஆயிரம்...! குமார் சிறிது நேரம் யோசித்தான், பிறகு மள மளவென்று தனக்குப் பின்னால் வந்த ராஜ்பகதூருக்குச் செய்தி அனுப்பினான்.

"ராஜ்பகதூர்!...ஆயிரம் சீனர்கள்!...வாகனங்களில்லை; இரண்டு மைல் தொலைவில் வருகிறார்கள்... உச்சிக்கு வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்... தலைமை நிலையத்திற்குத் தொடர்புமில்லை... நாமே முடிவு செய்ய வேண்டியதுதான்...என்ன சொல்லுகிறாய்?"

ஒரு மைல் தொலைவிலிருந்து செய்தியைக் கேட்ட ராஜ்பகதூரின் நெடிய உருவம் ஒரு கணம் திடுக்கிட்டு விட்டது.

" நீ என்ன சொல்கிறாய்?...முகாமில் உள்ள எல்லோரைடும் சேர்த்தாலே, நாம் மூன்றில் ஒரு பங்குதான் தேறுவோம்!" என்றான் ராஜ் பகதூர்.

"இருந்தால் என்ன?... நாங்கள் இங்கே வாய்ப்பாக மறைந்து, முடிந்தவரை தீர்த்துக் கட்டுகிறோம். நூறு பேர்களையாவது சரிக்கட்டிவிட்டு, நாங்களும் செத்துத் தொலைகிறோம். சுமார் ஒரு மணிநேரம் எங்களால் அவர்களை 'எங்கேஜ்' செய்ய முடியும். அதற்குள் நீ பின்வாங்கிப் 'பயனீர்' படையோடு சேர்ந்துகொள். கட்டிய பாலத்துக்குச் சரியான நேரத்தில் வேட்டு வைத்தால் அதில் பலர் ஒழிந்து போவார்கள். நீங்கள் எல்லோரும் காட்டுக்குள் மறைந்து கொண்டு பகைவர்களைச் சிதற அடிக்கலாம். என்ன சொல்கிறாய்?-'பயனீர்' படைக்குச் செய்தி அனுப்பிவிட்டுத் திரும்பிப் போ!"

" நீ சொல்லியது அவ்வளவும் சரி. நான் அப்படியே செய்தி அனுப்புகிறேன்.- ஆனால் ஒரு விஷயத்தில் நீ முட்டாள்! இருபது பேர்களை வைத்துக் கொண்டு நீ எவ்வளவு நேரம் எத்தனை பேர்களைச் சமாளிக்க முடியும்?"

"எங்களது எண்ணிக்கை முதலில் அவர்களுக்குத் தெரியப்போவதில்லை..." "ஏ முட்டாள்! நீ உன் வாயை மூடு! நான் வரத்தான் போகிறேன்."

"நீ முட்டாள் மட்டுமல்ல; சண்டைக்காரனும் கூட நம்முடைய பழைய சண்டையைப் புதுப்பிக்க இதுவா நேரம்?... ராஜ்பகதூர்!"

"நான் அங்கே வந்து கொண்டிருக்கிறேன்!...நம்முடைய உத்தியோகம் ஒன்றாக இருந்தாலும், நீ என்னை விட சீனியர்; உத்தரவு கொடு!...உத்தரவு கொடு!"

"சரி வந்து தொலை!" என்று கூறி விட்டுத் தனக்குள் சிரித்துக்கொண்டான் குமார். சண்டைக்காரனாக இருந்தாலும், ராணுவக் கட்டுப்பாட்டை மீறாமல் தன்னிடம் உத்தரவு கேட்டதில் அவனுக்கு மகிழ்ச்சி.

தூரத்திலிருந்தே இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர், "பொல்லாத மதராஸி" என்றும், "முரட்டுப் பஞ்சாபி!" என்றும் பெருமையோடு கூறி நகைத்துக் கொண்டார்கள்.

மலை உச்சியிலிருந்த குமாருடன் இப்போது ராஜ்பகதூரும் வந்து சேர்ந்து கொண்டான். இருபது பேர்களாக இருந்தவர்கள், நாற்பது பேர்களானார்கள். எதிர்ப்பக்கத்திலிருந்து பொங்கி எழும் கடல் அலைபோல் சீனப்படை முன்னேறிக் கொண்டிருந்தது. மரணம் என்கிற முடிவுக்குத் தீர்மானமாக வந்து விட்டு, அதைக் கம்பீரமாக ஏற்றுக் கொள்ளத் துணிந்த இந்த நாற்பது பேர்களும், ஆளுக்குப் பத்து பகைவர்கள் வீதமாவது தீர்த்துவிட்டுத்தான் மடியவேண்டு மென்று உறுதி பூண்டனர்.

நெருங்கிக் கொண்டிருந்தனர் பகைவர்கள்.

"ராஜ்பகதூர், நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள்" என்று அவனிடம் திட்டங்களை விளக்கினான் குமார்." நாம் செய்ய வேண்டிய காரியங்கள் மூன்று: ஒன்று, நமது எண்ணிக்கை தெரிந்துவிடாதபடி திடீர்த் தாக்குதல் நடத்தி அவர்களைக் கலக்கி விட நேண்டும்; பெரும் படை இங்கே இருப்பதாக அவர்களை நினைக்கச் செய்து உறுதியைக் குலைக்க வேண்டும். இரண்டு, தாக்குதலின் மூர்க்கத்தனம் அவர்களுக்கு அதிகச் சேதத்தையும், தாமதத்தையும் தரவேண்டும். மூன்று, நான் முன்னின்று போரை நடத்துகிறேன். நீ செய்திகளை வேகமாக அனுப்பிக்கொண்டே இரு.-இன்றைய போரில் நம்மை மீறிப் போனாலும், அடுத்த இடத்தில் இவர்கள் தோற்றுத் திரும்ப வேண்டும்!"

துப்பாக்கி முனைக் கெதிரே குமார் நின்று கொண்டு, செய்திப் பொறுப்பைத் தன்னிடம் விட்டு விட்டானே என்று ராஜ்பகதூருக்குச் சிறிது வருத்தம். என்றாலும், செய்திப் பொறுப்பும் மிக முக்கியமானது என்பதால் அவன் முணுமுணுக்கவில்லை. குமாரை விட உயரத்திலும் பருமனிலும் எவ்வளவோ பெரியவன் ராஜ்பகதூர்; வயதில் மட்டும் இளையவன்.

நுங்கும் நுரையுமாகப் பொங்கிப் பொருமிக் கொண்டு வந்தது செஞ்சீனரது மஞ்சள் நிறப் படை.

பாரத வீரர்கள் கண்ணிமைக்காமல், மூச்சுக் காற்றைக் கட்டுப் படுத்திக் கொண்டு, துப்பாக்கி விசைகளின்மீது விரல்களை வைத்த வண்ணம் ஒவ்வொரு விநாடியும் தங்கள் தலைவனின் ஆணைக்குக் காத்திருந்தார்கள். -ஆயிற்று, மிகமிக நெருக்கத்தில் வந்து விட்டார்கள் பகைவர்கள்.

'டுமீல்' என்று ஒரே ஒரு குண்டு சீனர்களின் பக்கத்திலிருந்து வெடித்து, ஒரு இந்திய வீரனின் தலையை ஒட்டிப் பறந்தது.

வீரர்கள் அனைவரும் ஆவேசத்துடன் குமாரைத் திரும்பிப் பார்த்தார்கள். 'தலைவன் ஏன் இன்னும் தாமதம் செய்கிறான்'?

"முட்டாள்!....முட்டாள்!... நீ எந்த உலகத்தி லிருக்கிறாய்?" என்று குமாரின் காதருகில் வந்து கத்தினான் ராஜ்பகதூர். முதலில் குமாரைச் சுட்டுத் தள்ளிவிட்டு, மறுவேலை பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

"ஆத்திரப் படாதே ராஜ்! சந்தேகத்தின் பேரில் அவர்கள் சுட்டுப் பார்க்கிறார்கள். இன்னும் அருகில் அவர்கள் நெருங்கிவிட்டால், நம்முடைய ஒவ்வொரு குண்டுக்கும் ஒருவன் பலியாவானில்லையா?" -குமாரின் சமயோகித புத்தி அவனை வியக்க வைத்தது.

நன்றாக நெருங்கி விட்டது கூட்டம். குமார் சைகை செய்துவிட்டு, தன்னுடைய துப்பாக்கி விசையையும் தட்டி விட்டான். இயந்திரச் சுழல் துப்பாக்கிகள் அந்த மலைக் கூட்டமும் கானகமும் அதிர முழக்கம் செய்தன.

பனி மலை கிடு கிடுத்தது;கானகம் கதறியது; வெள்ளிப்பனி செவ்விரத்த வெள்ளமாய் உருகிப் புரண்டோடியது; மரண ஓலங்கள் மனித இதயங்களை உலுக்கி எடுத்தன.

எதிர்பாராத இந்தத் தாக்குதலில் நிலை குலைந்து பதறிய பகைவர்கள் தங்களில் கால் பகுதி வீரர்களைக் கால் மணிப் பொழுதுக்குள் இழந்தனர். என்றாலும், அவர்கள் தங்கள் இழப்பைப் பற்றிப் பொருட்படுத்தியவர்களாகவே தெரியவில்லை. மூர்க்கத்தனத்தோடு மேலும் மேலும் படைகள் முன்னணிக்கு வரத் தொடங்கின. பாரத வீரர்களிலும் பத்துப் பேர்களுக்குமேல், தஙகள் கடமையை நிறைவேற்றிய பெருமையோடு வீர சுவர்க்கம் புகுந்தனர்.

பாரத வீரர்களின் எண்ணிக்கையும் தெரிந்துவிட்டது அவர்களுக்கு-மலை போன்ற மனிதப் பேரலை ஒன்று ஆர்ப்பரித்துப் பொங்கி வந்தது.

"கடைசி வீரன் உள்ள வரையில் , அல்லது கடைசிக் குண்டு உள்ளவரையில் சுட்டுத் தள்ளுஙகள்!" என்று கத்தினான் குமார்.

அது வரையில் செய்திகளைப் பரபரப்போடு அனுப்பிக் கொண்டிருந்த ராஜ்பகதூர், செய்திப்பெட்டியும் துப்பாக்கியுமாகக் குமாரின் அருகில் வநது தானும் சுடத் தொடங்கினான்.

ஒரு குண்டு, குமாரின் தோளில் பாய்ந்து அவனைக் கீழே தள்ளியது. மற்றொரு குண்டு ராஜ்பகதூரின் செய்திப் பெட்டியைச் சுக்கு நூறாகச் சிதற அடித்தது.

ராஜ்பகதூர் பாரதப் பகுதியின் படுகளத்தைத் திரும்பிப் பார்த்தான். குமாரைத் தவிர, அனைவருமே விண்ணுலகெய்திவிட்டனர். குமார் மட்டிலும் குற்றுயிராய்க் கிடந்தான்.

ராஜ்பகதூருக்கு வேறொன்றும் தோன்றவில்லை. பகைவர்களின் கண்களுக்குப் படாமல், அவர்கள் நெருங்குவதற்குள், பர பரவென்று குமாரை இழுத்துக்கொண்டு ஒரு பாறையின் மறைவுக்கு ஓடி வந்தான். அங்கும் அவன் நிற்கவில்லை. குமாரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, வெறி பிடித்தவன் போல் மேலும் ஓடினான்.

கால் வழுக்கியது. மள மளவென்று இருவரும் ஒருவரையொருவர் பற்றிக் கொண்டபடியே மலைச்சரிவில் புரண்டார்கள். ராஜ்பகதூருக்கு நினைவு வந்த போது, மலைப்புல் நிறைந்த ஒரு புதருக்குள் இருவரும் ஒன்றாய்க் கிடப்பது தெரிந்தது. குமாரின் மூக்கருகில் கையை வைத்துப் பார்த்தான். வெப்பமான மூச்சுக்காற்று வந்து கொண்டிருந்தது.

மாலை மயங்கும் நேரம்.தொலை நோக்கிக் கண்ணாடி உடையாமல் இருந்ததால், மலைப்பாதையை உற்றுப் பார்த்தான். நண்பகலில் படைகளுடன் சென்ற சீனர்கள், பின்னணியிலிருந்த பாரதப் படையினரிடம் எஞ்சி யிருநதவர்களில் பாதிப்பேரைப் பறி கொடுத்துவிட்டு, சோர்வும் களைப்புமாக மலையேறிக் கொண்டிருந்தார்கள். பெருமையோடு குமாரின் முகத்தைப் பார்த்துக்கொண்டு, "குமார், நம்முடைய இன்றைய திட்டம் வெற்றி பெற்றுவிட்டது!" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினான் ராஜ்பகதூர்.

குமாரின் விழிகள் திறந்து கொண்டன. அவன் புன்னகை பூத்தான். 'நல்ல செய்தியைக் கேட்டு விட்டேன். இனி நிம்மதியாக என்னைச் சுட்டுத் தள்ளிச் சாகவிட்டு, நீ பத்திரமாகத் திரும்பிப் போ!" என்று மெலிந்த குரலில் கூறினான் குமார்.

"என்ன!- உன்னைச் சுட வேண்டுமா?"

"முட்டாள்!- இது போர்க் களம்! எனக்கு உதவி செய்ய விரும்பினால் சுட்டுத்தள்ளு!... முடியா விட்டால் நீ மட்டுமாவது இங்கிருந்து போய்த்தொலை!"

" நீ தான் முட்டாள்;உன் மூளை தான் குழம்பியிருக்கிறது! நீ கட்டாயம் பிழைத்துக் கொள்வாய்."

"சண்டை போடாதே! உன் முரட்டுத் தனத்துக்கு நான் ஆளில்லை; இது நேரமுமில்லை."

குமாரைத் தூக்கிக் கொண்டுபோவது என்ற பிடிவாதம் ராஜ்பகதூருக்கு. இது தேவையில்லாத வீண் முயற்சி என்பது குமாரின் எண்ணம். வாய்ச் சண்டை முற்றியதால், அந்த வேகம் தாங்காது மீண்டும் மயக்க மடைந்தான் குமார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் சண்டை யிட்டு மோதிக் கொண்டு தரையில் புரண்ட காட்சியை அப்போது நினைத்துக்கொண்டான் ராஜ்பகதூர்.

பஞ்சாப் மாநிலக் கல்லூரி ஒன்றுக்கும் சென்னைக் கல்லூரி ஒன்றுக்கும் சென்னை விளையாட்டு மைதானத்தில் 'ஹாக்கி' போட்டி நடந்தது. இருவரும் இரு வேறு கட்சிகளின் தலைவர்கள். மாணவர்களும் பொது மக்களூம் கூடி ஆட்டக்காரர்களை ஆரவாரங்களோடு உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தனர். வட இந்திய மாணவர்களின் தலைவனான ராஜ்பகதூர், பீமசேனனைப் போன்ற உருவத்தோடு, மின்னல் வேகத்தில் அங்குமிங்கும் ஓடி'கோல்'போடப் பார்த்தான். குமார் அதிகமாகப் பரபரப்படையவில்லை. நளினமாக மட்டையால் பந்தைத் தள்ளி விட்டு வெற்றி கொள்ளப் பார்த்தான்.இடைவேளை வரையில் இருபுறமும் 'கோல்' விழவில்லை.

கடைசிக் கால் மணி நேரத்தில் சென்னை மாணவர்கள் லாவகமாக ஒரு 'கோல்' போட்டு விட்டார்கள். கை தட்டலால் மைதானமே அதிர்ந்தது. ரசிகர்கள் பலர் வெறி பிடித்துக் கூத்தாடினார்கள். இவற்றுக்கிடையில் சில அரை வேட்டூக்க உணர்ச்சிப் பித்தர்கள் "ஒழிந்தது வடக்கு" என்று கூக்குரலிட்டனர்.

திடீரென்று விளையாட்டில் சூடு பிடித்துக் கொண்டது. ராஜ்பகதூர் பம்பரமாக மைதானம் முழுவதும் சுழன்று, பந்துருட்டிக் கொண்டு ஓடினான். குறுக்கிட்டவர்களிடமிருந்து சாகசத்தோடு பந்தைக் காப்பாற்றினான். பிறகு, கடைசி நிமிஷத்தில் தன் பலமனைத்தும் சேர்த்துச் சென்னைக் கல்லூரிக்கு ஒரு 'கோல்' போட்டான். நீண்ட குழலும் ஊதினார் நடுவர். வெற்றி தோல்வி யின்றி முடிந்தது ஆட்டம்.

அத்துடன் நிற்கவில்லை விஷயம். ராஜ்பகதூர் 'கோல்' போட்ட சமயம், இடது பக்கத்திலிருந்து குறுக்கே வந்து விழுந்த ஒரு தமிழக இளைஞன் பலமான அடிபட்டுத் தலைகுப்புறப் போய் விழுந்தான்.

குமாருக்கு கோல் விழுந்து விட்ட ஆத்திரம் வேறு. அத்துடன் ராஜ்பகதூர் வேண்டு மென்றே தங்கள் கட்சிக்காரனை அடித்துவிட்டான் என்ற எண்ணம் வேறு. ஓடிச்சென்று தன்னை மறந்த வெறியில் ராஜின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத ராஜ், ஹாக்கி மட்டையால் அவன் கழுத்தை வளைத்து இழுத்தான். இருவரும் வெறியோடு கட்டிப் புரண்டு உருண்டார்கள். துடிப்பு மிக்க இளம் ரத்தமல்லவா?

"தந்திரக்கார மதராஸிகள்!... ஜெயிக்க முடியவில்லையே என்ற ஆத்திரம்!" என்று ராஜ்பகதூரின் ஆள் ஒருவன் உளறி வைத்தான்.

"கோல் போட்டு ஜெயிக்க வக்கில்லை; காலொடிக்க வந்துவிட்டான்.- வடக்கத்தி முரட்டுத் தனம் இங்கே சாயாது!" என்றான் மறத் தமிழன் ஒருவன்.

வாய்ச் சண்டை முற்றி, சூடான பத்திரிகைகளின் பரபரப்பான செய்தி வளர்ந்து, மேடை முழக்கங்கள் வரையில் முற்றி விட்டது விவகாரம்.

விளையாட்டு கசப்பு நிறைந்த வினையாக முடிந்து விட்டது. இருவருக்குமே சில்லறைக் காயங்கள்.

நெருக்கடி நிலையின் போது, திடீரென்று இருவரும் ராணுவ முகாமில் சந்தித்தபோதுதான், இருவரும் ராணுவத்தில் சேர்ந்திருப்பதைப் புரிந்து கொணடார்கள். பழைய மனக் கசப்பின் தழும்பு ஒரு மூலையில் இருவருக்கும் இருந்துகொண்டுதான் இருந்தது. என்றோ நடந்த விஷயங்கள் இவை.

இருள் பரவத் தொடங்கியவுடன் துப்பாக்கியைத் தூக்கித் தோளில் மாட்டிக்கொண்டு, குமாரைப் பற்றித் தூக்குவதற்கு முயன்றான் ராஜ்பகதூர்.

"வேண்டாம், என்னை விட்டு விட்டுப் போ!... வீணாய் நீ அவதிப்பட வேண்டாம். வழியில் எந்தச் சீனனாவது எதிர்ப்பட்டால், எனக்காக நீயும் சாக வேண்டி வரும்... போ ராஜ்பகதூர்!"..மன்றாடினான் குமார்;கெஞ்சினான்.

"குமார், உன் மீது எனக்குப் பாசமில்லை; பற்றுதலும் கிடையாது. இந்தத் தேசத்துக்கு ஒரு வீரனின் உயிர் இந்த நேரத்தில் மிக மிகத் தேவையானது. என் கடமையில் நீ குறுக்கிட வேண்டாம்."

பிடிவாதமாகக் குமாரைத் தூக்கித் தோள்மீது சாய்த்துக் கொண்டு, இரவின் மங்கலான நிலவில் தனது பயணத்தைத் தொடங்கினான் ராஜ்பகதூர். நிலவின் வெளிச்சத்தையும் மறைப்பதற்குப் பனி மழை வந்து சேர்ந்தது. கண்களுக்குப் பாதை புலப்படவில்லை. பனிக் கூடாரத்துக்குள் அகப்பட்டது போன்ற பிரமை.

ஆனால் எந்தத் தடைகளும் ராஜ்பகதூரின் உறுதியைக் குலைக்கவில்லை. உள்ளத்திலே வைராக்கியம், எண்ணத்திலே நற்செயலின் பூரிப்பு, தன் தாய்த் திரு நாட்டின் சகோதரனைக் காப்பது தேச பக்தி என்ற லட்சியம் இவ்வளவும் அவனுடைய நடைக்கு வேகம் தநதன.

விண்ணிலிருந்து பனி மழை;அவன் உள்ளத்திலிருந்து அதை விரட்டும் நெருப்பு. வெளியில் இருட்டு;உள்ளுக்குள் பேரொளி. உடலில் பசி, களைப்பு, சோர்வு; நெஞ்சில் நிறைவு, தெம்பு, உற்சாகம்! அவனை அந்தக் கோலத்தில் யாரும் கண்டால், வெறி பிடித்த பேய் என்றோ, பிசாசு என்றோதான் சொல்வார்கள்.

அவன் தோளில் கிடந்த குமார் இரவெல்லாம் ஏதேதோ பிதற்றினான். குமாரின் உடல் நெருப்பாய்த் தகிப்பது, அவனுக்குக் கடுமையான ஜுரம் என்பதை ராஜ்பகதூருக்கு, உணர்த்தியது. ஒரு வகையில் அவன் கவலைப்பட்டாலும் இறந்து போகாமல் உயிரோடிருக்கிறானே என்று ஆறுதல் கொண்டான்.

இரவு முழுதும் அவன் நடந்த நடை, அந்தப் பயங்கரமான காடுகளுக்குத் தெரியும்; தூரத்துப் பனி மலைகளுக்குத் தெரியும்; இரக்கமில்லாமல் கொட்டிய கடும் பனிக்குத் தெரியும். ஆனால் குமாருக்குத் தெரியாது.

பொழுதும் விடிந்தது. அருவிக் கரையும் வந்தது. அதன் பாலத்தைப் பாரத வீரர்கள் தகர்த்திருந்தார்கள். முதல் நாள் அங்குக் கடுமையான போர் நடந்திருப்பதற்கான சின்னங்கள் சுற்றுப்புற மெங்கும் சிதறிக் கிடந்தன.

'அருவியைத் தாண்டிச் செல்வது எப்படி?' என்ற கேள்வி எழுந்தவுடன், திடீரென்று ராஜ்பகதூரிடமிருந்த வலிமையனைத்தும் மறைந்து விட்டன. தட்டுத் தடுமாறித் தன் தோள் சுமையைக் கிழே இறக்கி வைத்தான். தோள்களிரண்டும் வீக்கம் கண்டு இசி வெடுத்தன. பனியால் பாளம் பாளமாக வெடித்திருந்தது உதடு. கண்கள் சிவந்து, பார்வை மங்கி, எரிச்சல் கண்டது. - ஒவ்வொரு மயிர்க்காலிலும் ஒரே வலி, வேதனை, குடைச்சல்.

"கடவுளே, குமாரைக் கொண்டு சேர்க்கும் வரையிலாவது என்னைக் காப்பாற்று. பாரத தேசத்தின் மண்ணில் பிறந்தவன் அவன்!" என்று, தன்னை மறந்து வாய்விட்டு அலறினான் ராஜ்பகதூர். குமாரின் செவிகளில் நண்பனின் ஓலம் விழுந்து விட்டதா? கண்களைத் திறந்தான் குமார்; புன் முறுவல் பூக்க முயன்றான்.

"பைத்தியக்காரா!..எப்படியாவது தனியாகப் போய், குறுகலான இடத்தில் அருவியைத் தாண்டி விடு!...நான் சொல்வதைக் கேட்கமாட்டாயா ராஜ்?"- குமாரின் குரல் ஏக்கத்தோடு ஒலித்தது.

பெற்ற தாய் ஒருத்தி தன் புதல்வனை உற்றுப் பார்ப்பதுபோல் குமாரைக் கனிவுடன் உற்றுப் பார்த்தான் ராஜ் பகதூர்.

"குமார், எனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. சகோதரர்களும் இருக்கிறார்கள். ஆனால் உனக்கொரு மனைவி இருக்கிறாள். இந்த மாதத்தில்தான் நீ தகப்பனாகப் போகிறாய் என்றும் கேள்விப்பட்டேன். நான் இறந்தால், இந்த தேசம் ஒரு வீரனை மட்டும் இழக்கும். ஆனால் நீ?...நீ ஒரு கணவன், ஒரு தந்தை, ஒரு வீரன்!... உனக்குக் கணக்குப் போடத் தெரியுமே? தேசத்துக்கு நம் இருவரில் இப்போது யார் முக்கியம் என்று கணக்குப் போட்டுப் பார்!"- ராஜ்பகதூர் தெளிவாக, உறுதியோடு, உருக்கமாகப் பேசினான்.

"என் குடும்பத்தைப் பற்றி....?"

"உன் நண்பன் ஆறுமுகத்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்."

குமாருக்கு வாயடைத்துப் போய் விட்டது. நிறை மாதக்காரியான அவன் மனைவி, அவனது நகரம், காவேரிக்கரை எல்லாம் நினைவுக்கு வந்தன. அத்துடன், சென்னையில் நடை பெற்ற மாணவர் ஹாக்கிப் பந்தயம், இருவரும் சண்டையிட்டு மண்டைகளை உடைத்துக்கொண்டது, வடக்கு- தெற்கு வீண் விவகாரம், எல்லாமே மனத் திரையில் சுழன்றன.

குமாரின் கண்கள் குளங்களாக மாறின. மெல்ல மெல்லத் தன் கரங்களை உயர்த்தி ராஜ்பகதூரின் கழுத்தை வளைத்துக் கொண்டான். அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. "தம்பி, தம்பி! ...எனக்கு உடன் பிறந்தான் யாருமில்லை... நீ... நீதான் அவன்..தம்பீ!"-பேச்சுத் திணறி மீண்டும் மயங்கி வீழ்ந்தான் குமார்.

மீண்டும் அருவிக் கரையோரமாகவே இந்தப் புனித யாத்திரை தொடங்கியது. கனவும் நினைவுமற்ற ஏதோ ஒரு நிலையில், ராஜ்பகதூரின் தோளில் தொங்கிக்கொண்டிருந்தான். அப்போது சர சரவென்று யாரோ காட்டுக்குள் ஓடும் சத்தம் கேட்டது. ராஜ்பகதூர் குமாரைத் தூக்கிக்கொண்டே ஓடினான்.

சுய நினைவு வந்தபோது குமாருக்கு உடல் முழுவதும் கட்டுக்கள் போட்டிருந்தார்கள். முகாமின் ராணுவ ஆஸ்பத்திரி அது. குமாருக்குப் பக்கத்துக் கட்டில்களில் காயம்பட்ட வீரர்கள் சிலர் கிடந்தார்கள். அருகில் குமாரின் நண்பன் ஆறுமுகம் நின்றுகொண்டிருந்தான்.

"ராஜ்!..ராஜ் எங்கே?"என்று கேட்டான் குமார். "நமது காவல் வீரர்கள் அருவிக் கரையைத்தாண்டி வந்த போது, அங்கே உன்மீது விழுந்து கிடந்தான் ராஜ் பகதூர். உடலில் உயிர் இல்லை. அவனுக்குப் பத்தடி தூரத்தில் ஒரு சீனனின் சடலமும் கிடந்தது. இருவரும் ஒரே சமயத்தில் ஒருவரை யொருவர் சுட்டுக் கொண்டிருக்க வேண்டும். காட்டில் ஒளிந்துகொண்டிருந்த சீனர்கள் சிலரையும் நம் வீரர்கள் சுட்டிருக்கிறார்கள்"

குமார் எங்கோ தொலை தூரத்தில், கூடாரத்துக்கப்பால் தெரிந்த கானகத்தை ஊடுருவிப் பார்த்தான். ஒன்றுமே பேசவில்லை அவன். கண்ணீர் அவன் இரத்தத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது.

"வீட்டிலிருந்து நல்ல செய்தி வந்திருக்கிறது" என்று கூறி, ஒருகடிதத்தைக் குமாரிடம் நீட்டினான் ஆறுமுகம். அவன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அது குமாரையே உரித்துக் கொண்டு வந்திருப்பதாகவும் செய்தி, நீண்ட பெருமூச்சு விட்டு,"ஆறுமுகம், நான் சொல்வது பொல் ஒரு பதில் எழுது" என்றான் குமார். " என் மகனுக்கு ராஜ்பகதூர் என்று பெயர் வைக்கச் சொல்... அணுவளவு ஆறுதல், அவன் பெயரை அடிக்கடி கூப்பிடுவதாலாவது எனக்கு ஏற்படும்."

தமிழ்ப் பெயர் இல்லையே இது?" என்று குறுக்கிட்டான் ஆறுமுகம்.

வேதனையோடு சிரித்தான் குமார். "ராமன், கிருஷ்ணன், கைலாசம் என்றெல்லாம் தமிழ்நாட்டில் காலங்காலமாகப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்களே, ஏன் தெரியுமா? ஆயிரம் வேற்றுமைகளுடைய நம் தேசத்தில், அடிப்படையான ஒரு பண்பாடு வலிமையாக இழையோடுகிறது. எனக்கும் உனக்கும் இமயமலை சொந்தம். அதனால் நாம் அதைக் காக்க உயிர் கொடுக்க வந்திருக்கிறோம். அது போலவே கன்யாகுமாரியும் ராமேஸ்வரமும் ராஜ்பகதூருக்குச்சொந்தம்.- ராஜ்பகதூர் என் ரத்தத்தின் ரத்தம்; உயிரின் உயிர். அவனும், நானும், நாமும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்...நெடுங்காலத்து உறவு இது. - நீ எழுது!"

ஆறுமுகத்தின் கண்களிலும் நீர் பொங்கியது. அவன் மள மளவென்று கடிதம் எழுதினான். அப்போது குமாரின் வாயிலிருந்து பாரதியின் பாடல் உருக்கத்துடன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

"சண்டை செய்தாலும் சகோதரனன்றோ? சகோதரனன்றோ? சீனத்தராய் விடுவாரோ? ...சீனத்தராய் விடுவாரோ!....."'