பொங்கலோ பொங்கல்!

சென்னப்பட்டணத்திலிருந்து ஏதோ ஒரு கிராமத்தை நோக்கிச் சிட்டுக் குருவிகளைப் போலப் புத்தம் புதுக் கார்கள் பறந்துகொண்டிருந்தன. இருந்தாற்போலிருந்து திடீரென்று அந்தக் கிராமத்துக்கு ஒரு யோகம் பிறந்துவிட்டது. தமிழ்ச் சினிமாப் படம் ஒன்றில் அந்தக் கிராமமும் தலை நீட்டுவதென்றால் அதற்கு அதிருஷ்டந்தானே?

ஏற்கனவே கிராமத்தின் எல்லையில் நான்கைந்து 'வான்'களும் 'லாரி'களும் வந்து நின்றன. ஐம்பது அறுபது பட்டணத்து மனிதர்கள் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக ஓடி ஏதேதோ செய்யத் தொடங்கினார்கள். புகைப்படக் கருவிகளும் ஒலிப்பதிவுக் கருவிகளும் பொருத்தப்படும் வேலை ஒருபுறம் நடந்துகொண்டிருந்தது. மறுபுறம் நாற்காலிகள், மேஜைகள், பெரிய பெரிய குடைகள் முதலியவை கார்களிலிருந்து இறக்கப்பட்டன.

தேர்த் திருவிழாவுக்குக்கூட அவ்வளவு கூட்டம் அந்தக் கிராமத்தில் கூடியதில்லை. அந்தக் கூட்டத்தை ஓர் எல்லைக்குள் தடுத்து நிறுத்துவதற்குள் பட்டணத்துக்காரர்களுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.

விஷயம் இவ்வளவுதான்:-

அந்தப்படக் கதையின் கதாநாயகி கிராமத்துப் பெண்மணியாம்; குடியானவக் குடும்பத்தைச் சேர்ந்தவளாம். அவள் வயல் வரப்பில் வேலைகள் செய்வதுபோல் படம் பிடிக்க வேண்டுமாம். தழை மிதிப்பது, நாற்று நடுவது, களை பிடுங்குவது, கதிர் அறுப்பது, நெற்கட்டைச் சுமந்து செல்வது-- இவைபோன்ற வேலைகளை நம் தமிழ் நாட்டுக் குடியானவப் பெண்கள் செய்வதில்லையா? அதே போல் சினிமாக் கதையிலும் காட்சிகள் இருந்தனவாம்.

படத்தில் நடிக்கும் கதாநாயகியின் பெயரைக் கேட்டவுடன், 'ஆஹா, ஆஹா!' என்று உச்சுக் கொட்டினார்கள், கிராமத்து இளைஞர்கள். ஒருவர் தோளை ஒருவர் இடித்துக் கொண்டார்கள். ஒரே குதூகலம் அவர்களுக்கு. கண்ணெதிரில் அவளுடைய உருவத்தைக் காணும் பாக்கியம் கிடைக்கிறதல்லவா?

"குமாரி கோமளம்" என்று சிலர் தங்களுக்குள் பல முறை சொல்லிப் பார்த்துக்கொண்டார்கள். அவளைப் பற்றிய பல விவரங்களையும் அவர்கள் பத்திகைகளில் படித்திருக்கிறார்கள், அவள் எந்த எந்த வேளைகளில் எந்த எந்தப் புடவைகள் உடுத்துவாள், என்றைக்கு எந்த மாதிரி முடி அலங்காரம் செய்துகொள்வாள், எந்த வேளையில் என்ன ஆகாரம் சாப்பிடுவாள் என்பன போன்ற அதிமுக்கியமான கலைச் செய்திகளைக் கொடுப்பதற்கென்றே இந்தச் சோஷலிச நாட்டில் மக்கள் பத்திரிகைகள் உள்ளனவே!

ஆகவே, விநாடிக்கு விநாடி ஜுரவேகத்தோடு ரசிகர்கள் அவளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒருவன் விளையாட்டுக்காக, "இதோ பார், வந்திட்டா!" என்று சொல்லிவைத்தான். அதற்குள் நூறு பேர், "எங்கே? எங்கே?" என்று அவன்மீது மோதி விழத் தொடங்கிவிட்டார்கள். அவ்வளவு பிரபலமான நட்சத்திர மோகினி அவள்.

பளபளக்கும் பெரியதொரு காரில் வந்து, ஒய்யாரமாக இறங்கி, உல்லாசமாக நடந்தாள் குமாரி கோமளம். குமரர்கள் முதல் கிழவர்கள் வரையிலும் வாயில் ஈ நுழைவதுகூடத் தெரியாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றனர். கண நேரத்துக் கண்வீச்சில் கூட்டத்தை ஒருமுறை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, விரித்த குடைக்குள் அடைக்கலம் புகுந்தாள் அவள்.

பட்டணத்துப் பணியாட்கள் சிலர் ஓடோடியும் அவள் அருகில் சென்று கைகட்டி வாய் புதைத்து நின்றனர்.

"பிரயாணத்திலே ரொம்பவும் களைச்சிப் போயிட்டிங்களே!" என்று தொடங்கிய ஒருவன், "ஆப்பிள் ஜூஸ் வேணுங்களா? ஓவல் வேணுங்களா? கூல் டிரிங்க் வேணுங்களா?" என்று அடுக்கினான்.

அதே சமயத்தில், ஒரு மணி நேரமாக வேகாத வெயிலில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தாகத்துக்குப் பச்சைத் தண்ணீர் கேட்டபோது, ஒரு பயல் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

படப்பிடிப்புக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. எந்த வயலில் அவர்கள் படம் பிடித்தார்களோ, அந்த வயலுக்குச் சொந்தக்கார ஆண்களும் பெண்களுங்கூட அப்போது நடவு நட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தியாகக் கோமளாவும் கலந்துகொண்டு நாற்று நட்டால், மிகவும் இயற்கையாக இருக்குமென்று டைரக்டர் கருதினார்.

கோமளாவை மிகவும் பயபக்தியோடு வரவேற்று உபசார வார்த்தைகள் பேசினார் தயாரிப்பாளர். பிறகு டைரெக்டர் வந்து அவள் கலகலப்பாக நடிக்க வேண்டுமென்பதற்காக, தாம் ஏதோ பத்திரிகையில் படித்த நகைச்சுவை முத்துக்கள் சிலவற்றை உதிர்த்து அவளுக்குச் சிரிப்பு மூட்டினார். அடுத்தாற்போல் வசனகர்த்தா தம்முடைய தலையை மெல்ல நீட்டினார். மிகவும் நிதானத்தோடு, வசனங்களை ஆரம்பிக்கலாமா என்பதுபோல் தயக்கத்தோடு அவளைப் பார்த்தார்.

"சரி ஸார், சொல்லுங்கோ!" கேரளத்துக் குயில் தமிழில் கூவியது. நடிக்கவேண்டிய கட்டத்தை விநயமாக எடுத்துச் சொல்லிவிட்டு, வசனங்களைச் சொல்லிக்கொண்டு போனார் வசனகர்த்தா.

"ஸார், ஸார், நிறுத்துங்க! உங்க வசனத்திலே இந்த ’ழ’னா அதிகமாக வருது ஸார்! வளவளன்னு அது எதுக்கு ஸார்?"

மொழி உணர்ச்சி கொண்ட வசனகர்த்தாவுக்கு அது சுருக்கென்று தைத்துவிட்டது. பொதுக் கூட்டங்களில், "தாயைப் பழித்தாலும் தமிழைப் பழிக்காதே!" என்று சீறுகிறவர் அவர்.

"ழனா எங்கள் தமிழுக்கு உயிர்போலே இருக்கிற ஓர் எழுத்தம்மா!" என்று அவர் பரிதாபமாகப் பதிலளித்தார்.

"வேண்டாம் ஸார்! அதைப் போட்டு என் உயிரை எடுக்காதிங்க!"

"அம்மா! அம்மா!" என்று தம்முடைய நிலையை விளக்கப் பார்த்தார் ஆசிரியர். குமாரியோ தன்னுடைய முகத்தை இலேசாக ஒரு முறை சுளித்துக்கொண்டு தயாரிப்பாளரை ஒரு பார்வை பார்த்தாள்.

வேர்த்துக் கொட்டியது தயாரிப்பாளருக்கு. ஒரு மாதமாக நடிகையிடம் கெஞ்சிக் கூத்தாடி இந்த ஒருநாள் நடிப்புக்கு அவளை வெளியூருக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். அன்றைக்குச் செலவு அவருக்குப் பத்தாயிரம் ரூபாய்.

"ஆசிரியர் ஸார்! அந்த உயிர் எழுத்து வேறே இடத்திலே இருந்திட்டுப் போகட்டும். இப்ப நம்ப உயிரே அந்த அம்மா கையிலே இருக்கு. தயவு செஞ்சு மாத்திப்புடுங்க!"

டைரெக்டர் 'நமக்கு ஏன் இந்த வம்பு’ என்பதுபோல பேசாமல் நழுவிப்போய், அவருடைய கோபத்தை ஒரு வேலைக்காரச் சிறுவன்மீது எரிந்து விழுந்து தணித்துக் கொண்டார்.

நேரம் நெருங்கி விட்டது. இன்னும் குடியானவப் பெண்ணுக்குள்ள சேலையை உடுத்திக்கொள்ளாமல் இருக்கிறாளே என்று தவியாய்த் தவித்தார் டைரெக்டர். உடை மாற்றத்துக்கு அருகிலேயே ஒரு களத்து வீட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள். அருகில் நின்ற உடைமாற்றும் பையனைச் சாடைகாட்டி அழைத்தார் டைரெக்டர்; "ஏன், அந்தப் புடைவையைக் கொடுத்துக் கட்டிக்கொண்டு வரச்சொல்லேன்!" என்று அவன் காதருகில் ஓதினார்.

"சொல்லிப் பார்த்திட்டேன், ஸார்! அந்தப் புடவை நல்லா இல்லையாம். இப்பக் கட்டிக்கிட்டிருக்கிறதே போதும்னு சொல்லிட்டாங்க."

டைரெக்டருக்கு அதற்கு மேலும் தாங்க முடியவில்லை. தயாரிப்பாளரைக் கூப்பிட்டார்; "நம்ப இப்ப எடுக்கப் போற படம் கிராமப் படம். இந்த லட்ச ரூபாய் நட்சத்திரம் கட்டிக்கிட்டிருக்கிற சில்க் புடவையோ காலேஜ் பெண் வேஷத்துக்குத்தான் பொருத்தமாயிருக்கும். இப்ப என்ன செய்யப் போறிங்க?"

தயாரிப்பாளரின் முகத்தில் ஈ ஆடவில்லை. உடைகளைக் கவனிக்கும் பையனிடம், "ஏம்பா, நீ சொல்லிப் பார்த்தாயா?" என்று கேட்டார்.

"நான் சொல்லிப் பார்த்திட்டேங்க!"

"டைரெக்டர் ஸார், நீங்க கொஞ்சம்..." தயவாகக் கெஞ்சினார் தயாரிப்பாளர்.

"என்னையே போய்க் கட்டிவிடச் சொல்லுவிங்க போலிருக்கே!" ரோஷத்தோடு பாய்ந்தார் டைரெக்டர்.

ஒரு கணம் யோசித்துவிட்டு, தலையைச் சொரிந்து கொண்டே குமாரியிடம் சென்று, மென்று விழுங்கிக் கொண்டே விஷயத்தை வெளீயிட்டார் படத்தின் சொந்தக்காரர்.

கலகலவென்று அம்மையாரின் சிரிப்பொலி கிளம்பியது; "ஏன் ஸார், நாட்டுப்புறத்துப் பெண்கள்தான் இப்பக் காலேஜ் பெண்களைத் தூக்கியடிக்கிறாப்பிலே டிரஸ் பண்ணிக்கிறாங்களே. அதைத் தெரிந்சுதான் நான் இந்த டிரஸ்லே வந்திருக்கேன். சும்மா இப்படியே இருக்கட்டும், ஸார்."

அதற்குமேல் 'அப்பீல்' கிடையாது. அப்பீலுக்குப் போனால், 'ஐ.பி' கொடுக்கும் நிலை வந்தாலும் வந்துவிடும்! டைரெக்டரிடம் வந்து, "போனால், போகட்டும், எப்படியாவது இன்னிக்கு வேலையை முடிச்சிடுங்க" என்று கேட்டுக்கொண்டார்.

"முதலாளி ஸார், இதுக்குப் பேர் தர்மசங்கடமில்லை! அதர்ம சங்கடம்! சமதர்ம நாட்டிலே, சினிமா உலகத்துக் குள்ளே நடக்கிற தர்மக்கொலை ஸார், தர்மக்கொலை! படம் டப்பாவுக்குள்ளே போயிட்டா அவங்களுக்கு என்ன நஷ்டம்?"

"ஸார், ஸார்! அவ காதிலே விழுந்திடப் போகுது ஸார், மெதுவாப் பேசுங்க!"

ஆயிற்று. நேரம் நெருங்கியது. ஒளிப்பதிவு நிபுணர் 'காமிரா'வின் கறுப்புத் துணிக்குள் தலையைக் கொடுத்துக் கொண்டார். ஒலிப்பதிவுக்காரர் காதுகளில் இயந்திரத்தை மாட்டிக் கொண்டார். டைரெக்டர், முதலில் இயற்கையாக வயலில் வேலை செய்தவர்களைப் பார்த்து, "எங்கே காமிராவைப் பார்க்காமல் சுறுசுறுப்பாய் நாற்று நடுங்கள், பார்க்கலாம்!" என்றார்.

மற்றவர்கள் நாற்று நடும் சமயத்தில், கதாநாயகி வயல் வரப்பில் துள்ளிக்குதித்து ஓடி வந்து, தானும் நடவில் கலந்து கொள்வதைப்போல் காட்சியமைப்பு இருந்தது. ஓடி வரும் கதாநாயகி, வயலுக்குள் குதித்து, மற்றப் பெண்களைப் போலவே குனிந்து நின்று நெல்நாற்றுகளைச் சேற்றில் பதிய வைக்க வேண்டும்.

"ரெடி! ஷூட்!" என்று கத்தினார் டைரெக்டர். காமிராவின் இயந்திரம் சுழன்றது; ஒளிப்பதிவுச் சுருளும் உருண்டது.

"வாங்கம்மா!" என்று கதாநாயகியை டைரெக்டர் அழைக்க, அவள் துள்ளிக் குதித்துக்கொண்டு வரப்பின்மேல் ஒயிலாக ஓடினாள். நாற்றுக் கட்டுக்களை வைத்திருந்த இடத்துக்குச் சென்று மெல்லக் குனிந்து ஒரு பிடி நாற்றைக் கையிலும் எடுத்து விட்டாள். அடுத்தாற்போல், உற்சாகமாக சேற்றில் குதித்து, நாற்றுக்களை நட்டு வைப்பதுபோல் நடிக்க வேண்டியதுதான்.

காமிரா ஓடிக்கொண்டிருந்தது. பல நூறு கண்கள் அவள் செய்வதை ஆவலோடு தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்தன.

நாற்றைக் கையில் எடுத்தவள் வயலுக்குள் குதிக்காமல், திடீரென்று திரும்பி நின்று, "கட்! கட்! நிறுத்துங்கள்!" என்று கத்தினாள்; பயத்தால் பதறுவதுபோல் பதறினாள்.

திகைத்துப் போனார்கள் டைரெக்டரும் தயாரிப்பாளரும். 'ஏன், வயலில் ஏதும் பாம்பைக் கண்டு மிரண்டுவிட்டாளா? என்ன நடந்தது?'

வயலுக்குள் வேலை செய்துகொண்டிருந்தவர்களில் மூத்தவளான அந்த வயலின் சொந்தக்காரி சுப்பம்மாள், காரணம் புரியாமல் கோமளாவின் அருகில் வந்து, "என்னம்மா சமாசாரம்?" என்று பரிவோடு கேட்டாள். குமாரியோ அவளைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை; பதில் அளிக்கவும் இல்லை. அத்தனை அலட்சியம் அவளுக்கு. இதற்குள் தயாரிப்பாளரும் டைரெக்டரும் அவள் நின்ற இடத்துக்கே ஓடி வந்து விட்டார்கள்.

"என்னம்மா!"

"என்னம்மா!"

"நான் இந்தச் சேத்திலே குதிச்சு 'ஆக்ட்' பண்ண முடியாது ஸார்! ஒரே அசிங்கமா இருக்கு!"

தலையில் கையை வைத்துக்கொண்டார் தயாரிப்பாளர். அவரைக் கீழே விழுந்து விடாமல் தாங்கிப் பிடித்துக்கொண்டார் டைரெக்டர்.

"இப்படியெல்லாம் சேத்திலேயும் சகதியிலேயும் புரளச் சொல்லிக் கதை எழுதினா, எப்படி ஸார் நான் நடிக்கிறது? யாரையாவது எனக்குப் பதிலா 'டூப்' போட்டு, இதை மட்டும் எடுத்துக்குங்க. இந்த அசிங்கத்திலே நான் கால் வைக்க மாட்டேன்!"

"நீங்க பார்க்கிற முப்பது நாள் வேலைக்கு உங்களுக்கு லட்ச ரூபாய் கொடுக்கிறேன், தாயே! தயவு செய்து என்னைக் கைவிட்டுடாதீங்க!" என்று அழாக்குறையாகக் கெஞ்சினார் தயாரிப்பாளர்.

"ஷூட்டிங் முடிஞ்சவுடனே, இங்கேயே சுத்தமாய்க் குளிச்சிட்டுப் போகலாம், அம்மா!" என்றார் டைரெக்டர்.

எந்தப் பேச்சும் குமாரியிடம் எடுபடவில்லை.

இவ்வளவையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கிராமத்துச் சுப்பம்மாள் திடீரென்று வரிந்து கட்டிக்கொண்டு சேற்றுக் கையோடு குமாரியின் எதிரில் வந்து நின்றாள். நிலத்தில் உழைத்தவர்கள் நிமிர்ந்து பார்த்தார்கள்.

"என்ன சொன்ன நீ? அசிங்கமா இருக்குதா? எது உனக்கு அசிங்கமா இருக்குது? என்னவோ வானத்திலிருந்து குதிச்சு வந்தாப்பிலே வேஷம் போட்றியே?"

"நான் உங்கிட்ட ஒண்ணும் பேசல்லை!" என்றாள் குமாரி. லட்சாதிபதிகள் பிச்சைக்காரர்களைப்போல் தம்மிடம் கைகட்டி நிற்க, இவள் யார் எதிர்த்துப் பேசுவதற்கு என்ற ஆத்திரம் அவளுக்கு.

"நீ இப்ப நின்னுகிட்டிருக்கிறது என்னோட நிலம்! நீ இப்ப அவமானப்படுத்தினியே இந்தச் சேறு, இதுதான் உன் வயித்துக்குப் போற சோறு! எந்த வகையிலே உன்னோட பிழைப்பு எங்க பிழைப்பைவிட உயர்ந்து போச்சு? சோறு இல்லாட்டி இந்த உலகம் பட்டினியாலே செத்துப் போகும். நீ இல்லாட்டி இங்கே என்ன குறைஞ்சு போகும்னு கேக்கிறேன். நீ பேசலேம்மா, நீ வாங்கிற பணம் உன்னை இப்படிப் பேச வைக்குது. கோடான கோடிப்பேரு கும்பி கொதிக்க உழைச்சுபிட்டு, இங்கே மாட்டைவிடக் கேவலமாச் சாகிறான். நீ என்னடான்னா குபேரப் பட்டணத்திலே குடியிருக்கிறாப்லே நினைச்சுக்கிட்டுக் கும்மாளம் போடுறே!"

"அம்மா, அம்மா!" என்று குறுக்கிட்டுப் பதறினார் தயாரிப்பாளர். டைரெக்டருக்கோ, தங்களைப்போல் மீசைமுளைத்த ஆண்பிள்ளைகள் கேட்க முடியாத கேள்விகளை ஒரு பட்டிக்காட்டுப் பெண்பிள்ளை கேட்கிறாளே என்று ஆனந்தம்.

"நிறுத்துங்கம்மா!" என்று கத்தினார் தயாரிப்பாளர்.

"அட, நிறுத்தய்யா!உனக்குத்தான் அவ பெரிசு!" என்றாள் சுப்பம்மாள். பிறகு தன்னோடு வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடியானவர்கள் பக்கம் திரும்பினாள்; "கேட்டீங்களா சேதியை? நீங்க இங்கே ஒரு ரூபாய் கூலிக்கு ஒரு நாள் முழுக்க உழைச்சுப்பிட்டு, சினிமாக் கொட்டகைக்குப் போயிக் கொட்டி அழுதிட்டு வர்ரிங்க பாருங்க, அதனாலே வந்த ஏத்தம் இது!"

"பாக் அப்!பாக் அப்!இன்னிக்கு ஷூட்டிங் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்!" என்று கத்தினார் தயாரிப்பாளர். சாமான்கள் மளமளவென்று லாரிகளுக்குச் சென்றன.

"இந்தா பார், நீ ஏன் இன்னம் இந்தப் பூமித்தாயை மிதிச்சுக்கிட்டு இங்கே நிக்கிறே? உன்னோட மூச்சுப் பட்டாக் கூட என்னோட நிலம் விளையாது.போ, வயலை விட்டு!"

எல்லோரும் போய்ச் சேர்ந்த பிறகு, மாலை நேரத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்தாள் சுப்பம்மாள். அவளுடைய ஆத்திரமும் அழுகையும் நெஞ்சுக்குள்ளிருந்து இன்னும் அகலவில்லை. பரம்பரையாக அந்தக் குடும்பத்துக்கு உயிர் கொடுத்த தெய்வம் அந்த நிலம். அதை ஒருத்தி கேவலமாய்ப் பேச, கேட்டுக்கொள்ளும் காலம் வந்துவிட்டதே என்ற ஆற்றாமை அவளுக்கு. நிலத்தில் படப்பிடிப்புக்கு அநுமதி கொடுத்த தன் கணவனை நொந்துகொணடாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் அவளுடைய மூத்தமகன் கையில் சில வழுவழுப்பான வர்ணத்தாள்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். "என்னடா அது?" என்று கேட்டாள்.

"அடுத்த வாரம் பொங்கல் வரப்போகுதில்லை, அம்மா? அதுக்குச் சினேகிதர்களுக்கு அனுப்பறத்துக்கு பொங்கல் வாழ்த்து வாங்கிட்டு வந்திருக்கேன்."

ஆசையோடு தன் தாயிடம் நீட்டினான் மகன். சுப்பம்மாள் அவற்றை உற்றுப் பார்த்தாள். எரிகிற நெருப்பில் எண்ணெயை வாரிக் கொட்டியது போலிருந்தது அவளுக்கு. உழவனுக்கும் தொழிளாளிக்கும் நன்றி சொல்லும் விழாவுக்குக் குமாரி கோமளத்தின் மூவர்ணப் படங்கள்! அவையும் ஆடைகள் சரிந்து விழும் அலங்கோல நிலைப் படங்கள்!

"ஏண்டா, நீ ஒரு ஆண்பிள்ளைதானா? நீ பொங்கலைக் கொண்டாடுகிற யோக்கியதை இதுதானான்னு கேக்கிறேன்."

பையனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"நெத்தி வேர்வையை நிலத்திலே கொட்டி, ரத்தத்தைப் பாய்ச்சி நெல்லைக் குவிக்கிறானே, அவனை மதிக்கிறதுக்கு ஏற்பட்ட திருவிழாடா இது! குடியானவனையும் தொழிலாளியையும் வருஷத்திலே ஒரு நாளாவது மனுஷன் நினைச்சுப் பாக்கிறதுக்கு ஏற்பட்ட பொங்கல்டா இது! மனுஷனுக்கு ஒண்ணு, மாட்டுக்கு ஒண்ணுன்னு நம்ப பெரியவங்க இதை ஏற்படுத்தியிருக்காங்க. இந்தப் படத்துக்குப் பதிலா, கறவை மாட்டுப் படத்தையோ, காளை மாட்டுப் படத்தையோ நீ வாங்கி இருந்தா, நீ சோத்திலே உப்புப் போட்டுத் திங்கிறதுக்கு அது நியாயமா இருந்திருக்கும். நீ குடியானவண்டா, குடியானவன்!"

பிள்ளை மெதுவாகத் தாயின் கையில் இருந்ததை வாங்கப் பார்த்தான். தாயோ அதைச் சுக்குநூறாய்க் கிழித்து அவன் முகத்தில் வீசிக்கொண்டே, "டே! வயலிலே உழைக்கப் போற உனக்கே சூடு சுரணை இல்லேன்னா வேறே எவனுக்குடா அது வரும்?" என்று கத்தினாள்; போடா, போ, ஊதாரி!- நன்றி விசுவாசம் கெட்டுப்போய், நாசுக்கா வாழத் திரியாதே!"
அந்த வீட்டில் பால் பொங்கிய நேரத்தில், சுப்பம்மாள் தன் மகனுக்கு வாழ்த்துகள் என்ற பெயரில் வந்த வெளிமயக்குக் குப்பை கூளங்களையெல்லாம் அடுப்பில் போட்டு எரித்தாள். பாலும் பொங்கியது.