நினைப்பு

பிற்பகல் மூன்று மணி.

சமஸ்தானத்துப் பெரிய ஆஸ்பத்திரிக்கு அப்போது சோம்பல் முறிக்கும் நேரம். தூங்குகிற நோயாளிகள் தூங்குவார்கள்; தூக்கம் வராதவர்கள் ஏங்குவார்கள்; அல்லது, அடுத்தவர் தூக்கத்தைக் கெடுப்பார்கள்.

ஆஸ்பத்திரிக்கே உரிய அபூர்வமான மணம் மின்விசிறிக் காற்றில் சோம்பலுடன் சுழன்றுகொண்டிருந்தது.

ஏழாம் நம்பர் வார்டில், பன்னிரண்டாம் நம்பர் படுக்கைகார ரத்தினம் பிள்ளை, ஆஸ்பத்திரி வேலைக்காரி வெள்ளயம்மாளிடம் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருந்தார். வெள்ளையம்மாள் நல்ல அழகி; வயசு முப்பது.

ரத்தினம் பிள்ளைக்கு அவளைவிட இருபது இருபத்தைந்து வயசு அதிகம் இருக்கும். வாட்ட சாட்டமாக இருந்த உடம்பின் அடையாளங்கள் இப்போது அவரிடம் வற்றியிருந்தன. வழுக்கை தலையைச் சுற்றிலும் கருப்பும் வெள்ளையும் கலந்து ஒட்டிக்கொண்டிருந்தன.

அவர்கள் ஏதோ கசமுசவென்று ஒருவர் காதை ஒருவர் கடித்துக்கொண்டார்கள். இப்படி அவர்கள் ரகசியம் பேசுவது முப்பதாவது தடவையாக இருக்கலாம்.

பத்தாம் நம்பர் படுக்கையும் பதினோராம் நம்பர் படுக்கையும் அந்தக் காட்சியைச் சிறிது பொறாமையுடன் உற்றுப் பார்த்தன. அடுத்தாற்போல் தமக்குள் ஒன்றை ஒன்று உற்றுப் பார்த்துக்கொண்டன.

பத்து இளவட்டம்; பதினொன்று நடுவட்டம். ஒன்றுக்கு வயசு இருபத்தைந்து; மற்றொன்றுக்கு முப்பத்தைந்து. இரண்டுமே இளமையைப் பறிகொடுத்த எலும்புக் கூடுகள்.

படுக்கையில் கிடந்தபடியே, பத்து பதினொன்றின் தோளில் ஒரு குத்துக் குத்தி, "அதைக் கொஞ்சம் பாரு பக்கிரி" என்று பல்லைக் காட்டியது.

"டே மாணிக்கம்! பிள்ளைவாளுக்கு இப்பத்தான் வாலிபம் திரும்பியிருக்கு! காடு வாவான்னு கூப்பிடுது; இவரோ வெள்ளையம்மாளைக் கூப்பிடுகிறார்."

"போப்பா! நம்ப கூப்பிட்டா ஏன்னுகூடக் கேட்க மாட்டேங்கறா!" என்று தன் ஏக்கத்தை கொட்டிக் கவிழ்த்தது பத்து.

இதையெல்லாம் நம்பர் பன்னிரண்டும் காதில் போட்டுக் கொள்ளவில்லை; சிவப்புச் சேலைக்கார வெள்ளையம்மாளும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

"பன்னெண்டுக்குப் படுக்கை வசதியா அமைஞ்சு போச்சு; கடைசிப் படுக்கையாவும் இருக்கு; அப்பாலே, அதை மறைச்சுக்கிட்டுச் சுவரும் நிக்குது." "கிழட்டுப்பய அவளுக்குச் சொக்குப் பொடி போட்டுட்டான்பா!"

"கிழவன் போட்ற மூக்குப் பொடியிலே மயங்கியிருப்பா!" பதினொன்று சிரித்தது.

பழுத்த பழமான பன்னிரண்டு இப்போது சுவர்ப் பக்கமாக மெல்லக் கீழே இறங்கியது. இடுப்பைப் பிடித்துக் கொண்டே தரையில் உட்கார்ந்து இரும்பு அலமாரிக்குள் கையை விட்டது. வெள்ளையம்மாளும் கீழே குந்திக்கொண்டு தன் சிவப்புச் சேலையின் முன்றானையை விரித்தாள். அலமாரிக்குள் இருந்த பொருள்கள் முன்றானைக்குள் மறைந்தன.

அதை இழுத்துச் செருகிக்கொண்டு பன்னிரண்டுக்குக்கை கொடுத்தாள். தூக்கிவிட்டாள். முக்கி முனகிக் கொண்டே அது திரும்பவும் படுக்கையில் உட்கார்ந்தது.

"வரட்டுமா?" செல்லமாய்க் கேட்டாள் வெள்ளையம்மாள்.

'போய் வா!' என்பதுபோல் புன்னகை செய்தார் ரத்தினம் பிள்ளை. அவள் மறைந்தவுடன் புன்னகை மறைந்தது. பிறகு அவர் இரும்பு உத்தரங்களை அண்ணாந்து பார்த்தார். நெற்றியை அழுத்தித் தேய்த்துக் கொண்டார். தேய்த்துக்கொண்டே இடக் கரம் நெற்றியைவிட்டுக் கீழே இறங்கியபோது அதில் கண்ணீர்ப் பசை ஒட்டியிருந்தது.

"ஏம்பா, வீடுவாசல் ஒண்ணும் கிடையாது போலிருக்கு! யாரும் வந்து, எதையும் கொண்டாந்து கொடுக்கிறதுமில்லை. அப்படியிருக்கிறப்போ, ஆஸ்பத்திரியிலே கொடுக்கிற ரொட்டியையும் சக்கரைத் தூளையும், அவகிட்ட தானம் பண்ணிட்டா, வயிறு என்ன செய்யும்?" பதினொன்று பத்தினிடம் கேட்டது.

"வயிறு என்ன செய்யும்? காயும்! அது சுத்தமாய்க் காஞ்சு உசிரைக் குடிக்காம இருக்கறதுக்குத்தான், அந்தக் கிழம், பாலைக் குடிக்குது. பசும் பால் வேறே கொடுக்கிறாங்களே!" "அதையும் அவகிட்ட கொடுத்திட்டா?"

"அவளோட முகத்தைப் பார்க்கறதுக்கு உசிரு நிலைக்க வேண்டாமா? ஆமா, இது பழைய கேஸோ?"

"வந்து ரெண்டு மூணு மாசம் ஆச்சாம். இனிமே இது எங்கே திரும்பப் போவுது? ரொட்டியும் சக்கரையும் கொடுத்தது போதாதுன்னு, ஆஸ்பத்திரியிலே தர்ர எல்லாத்தையுமே அவகிட்டக் கொட்டி அழுதுட்டு, பட்டினி கிடந்தே சாகப் போகுது."

"வெள்ளையம்மா ரொம்பப் பொல்லாதவ!" என்றான் பக்கிரி; "அவளோட மூஞ்சியும், முகறையும், திமிரும்..."

"எட்டாத பழம் புளிக்கும்னு ஒரு குள்ள நரி சொல்லுச்சாம், அதைப் போல..." மாணிக்கம் சிரித்தான்.

ரத்தினம் பிள்ளையின் காதில் இந்தப் பேச்செல்லாம் அரை குறையாய் விழுந்துகொண்டிருந்தன. அவர் அவர்களைப் பார்த்து முறைத்தார்.

"என்ன தாத்தா, முறைக்கிறிங்க?" மாணிக்கம் கேட்டான்.

"ஏண்டா, தம்பிகளா! உங்க நாற வாயை வச்சுக்கிட்டுக் கொஞ்சம் சும்மா இருக்கமாட்டிங்க?" காரசாரமாகவே பேசினார் ரத்தினம் பிள்ளை.

"தாத்தா! உங்களுக்கும் வெள்ளையம்மாளுக்கும் என்ன உறவு?" இது பக்கிரி.

"பார்த்தாத் தெரியலையா?" என்று பதிலளித்தான் மாணிக்கம்.

"பெரிய டாக்டர்கிட்டே சொல்லி, உங்க வாயை ஊசி போட்டுத் தைக்கச் சொல்லப்போறேன்" என்றார் ரத்தினம் பிள்ளை.

"ஓஹோ! 'ரிப்போர்ட்' பண்ணப் போறிங்களா? பண்ணுங்க,பண்ணுங்க!" என்றான் பக்கிரி; "நாங்க பண்ணினா என்ன நடக்கும் தெரியுமா? உங்க வெள்ளையம்மாளோட கள்ளத்தனம் வெளிப்படும். அவளுக்குச் சீட்டுக் கிழியும்; உங்களுக்கும் முதுகு கிழியும்!" அவர்களுடைய வாயைத் தைக்கச் சொல்வதாகப் பயமுறுத்திய ரத்தினம் பிள்ளை, தம்முடைய வாய்க்குத் தாமே தையல் போட்டுக்கொண்டார். பக்கத்தில் கிடந்த பஞ்சை எடுத்துத் தம் காதுகளில் அடைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தார்.

2

ரத்தினம் பிள்ளைக்கு முதலில் கை கால் வீக்கம். பிறகு அது வடிந்தவுடன் வேறொரு வியாதி. அடுத்தாற்போல் இன்னொன்று. இப்படி ஒன்று போக ஒன்று.

அவருடைய உண்மையான நோய்க்கு அந்த ஆஸ்பத்திரியில் மருந்து கிடையாது. பரந்த உலகமான பெரிய ஆஸ்பத்திரியில் அவர் தேடிக் களைத்துப்போன மருந்து அது. பணமே அவருடைய மருந்து.

கடுமையான உழைப்பால் ஏற்பட்ட உடல் தளர்ச்சி, அதனால் ஏற்பட்ட மனத் தளர்ச்சி, மனைவி, மக்கள், அவர்களுடைய வாய்கள், வயிறுகள், ஆசைகள், ஆத்திரங்கள் இவையே அவருடைய வியாதிகள். பணக்கவலையே அவர் மனக்கவலை.

நன்றாக இருந்த காலத்தில் நன்றாக உழைத்தார்; நன்றாகச் சம்பாதித்தார்; நன்றாகச் சாப்பிட்டார். சாகும் வரையில் இப்படியே உழைத்துச் சம்பாதித்துச் சாப்பிட முடியுமென்று நம்பினார்.

வெகு நாட்கள் குழந்தை இல்லாமலிருந்து, பிறகு நாற்பது வயசுக்குமேல் குழந்தை பிறந்தது. முதற் குழந்தை செல்லக் குழந்தை; செல்வக் குழந்தை. அடுத்தாற்போல் தொடர்ந்து பிறந்துகொண்டே இருந்தன. சவலைக் குழந்தைகள். ஒவ்வொன்றும் பத்து மாதம் சுமந்து பெற்ற பெருமை அவர் மனைவிக்கு. அவள் தன் வயிற்றில் சுமந்து பெற்ற குழந்தைகளை அவர் தம் நெஞ்சில் சுமக்கலானார்.

பாசம் வளர்ந்தது; அந்த அளவுக்குப் பணம் வளரவில்லை. அதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வளர்ந்தன. அவர் மனைவிக்குப் பாசத்தின் அருமை தெரிந்ததே தவிர, பணத்தின் அருமை தெரியவில்லை.

உழைப்புச் சக்தி குறைந்தது; ஊதியமும் குறைந்தது. குழந்தைகள், விவரம் தெரிந்த குழந்தைகளாகிவிட்டார்கள். இதைக் கொடுத்தால் அதைக் கேட்டார்கள். மனைவி எதற்கும் குறைப்பட்டுக்கொண்டாள்.

பிள்ளைவாள் பார்த்தார். உள்ளூரில் காலந் தள்ள முடியாதுபோல் தோன்றியது. குடும்பத்தை மனைவியின் பிறந்த வீட்டில் விட்டு வெளியூருக்குக் கிளம்பினார்.

பல ஊர், பல தண்ணீர்,பற்பல முயற்சி, பற்பல தொல்லை, பல நாள் பட்டினி; பலன், வியாதியும் படுக்கையும். நோய்க்கு மருந்து கொடுத்தார்கள்; வயிற்றுக்கு ரொட்டியும் பாலும் கொடுத்தார்கள்.

அந்த ரொட்டியில் சிறு அளவை மென்றுவிட்டு, மற்றதை வெள்ளையம்மாளிடம் கொடுத்தார். கிழவருக்கு ஏற்பட்ட திமிர்தானா இது? அல்லது மனக்கவலைக்கு மருந்தை அவள் முகத்தில் தேடினாரா?

ஆஸ்பத்திரிக்குள்ளே கசமுசவென்று பேசிக்கொண்டார்கள். வாய்க்கு வாய் ரகசியம் பரவியது. கிழவருக்கும் குமரிக்கும் சேர்த்து முடிச்சுப் போட்டார்கள். அவர் ஆண்: அவள் பெண். வேறு என்ன வேண்டும்?

ஆவணிக் கடைசியில் வந்தவருக்கு ஐப்பசி பிறந்த பிறகும் நோய் தீரவில்லை. ஒரு வேளை, அவர் தம்முடைய ரொட்டியைத் தாமே சாப்பிட்டிருந்தால் நோய் தீர்ந்திருக்குமோ என்னவோ?

3

தீபாவளி நெருங்கிக்கொண்டிருந்தது.

மாலை நாலரை மணியிலிருந்து ஆறு வரையில் நோயாளிகளை வெளியில் உள்ளவர்கள் பார்க்க வரும் நேரம். அந்த ஏழாம் நம்பர் வார்டுக்கு எத்தனையோ பேர் வந்தார்கள். சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, திராட்சைப்பழம் இப்படிப் பல வகைகள் வந்தன.

பன்னிரண்டாம் நம்பர் படுக்கைக்கு யாரும் வர வில்லை. யாரும் வருவதில்லை.

மூன்று மணிக்கே வரக்கூடிய வெள்ளையம்மாள், மணி ஆறு ஆகியும் வரக் காணவில்லையே என்று பிள்ளை கவலைப் பட்டுக்கொண்டிருந்தார். நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.

"பெரியவரே!" என்று ரத்தினம் பிள்ளையைக் கூப்பிட்டான் மாணிக்கம்;" நான் சொல்றனேன்னு வருத்தப்படாதிங்க. அந்தக் குட்டி உங்களை நல்லா ஏமாத்துறா. வீணா நீங்க ஏமாந்து போகப்போறீங்க."

'அட,அயோக்கியப் பயலே, சும்மா இருடா!' என்று கத்தத் தோன்றியது அவருக்கு. ஆனால் அதே சமயம் அவள் தன்னை ஏமாற்றுகிறாளோ என்ற எண்ணமும் எழுந்தது. மூன்று மணிக்கே வருகிறவள் இன்னும் வரவில்லையே!

வராமல் இருந்து விடுவாளோ?- நெஞ்சு வலித்தது பிள்ளையவர்களுக்கு. 'இளம் பெண்ணை நம்பி மோசம் போய் விட்டோமோ?'

-அவள் வந்து விட்டாள், கலகலத்த சிரிப்புடன். அவள் கண்கள் சிரித்தன, உதடுகள் சிரித்தன, முகம் சிரித்தது. ரத்தினம் பிள்ளையும் நம்பிக்கையோடு சிரித்தார்.

பக்கத்தில் வந்து, ஓர் காகிதப் பைக்குள்ளிருந்து, இரண்டு சீட்டித் துணிகளை எடுத்து அவரிடம் காண்பித்தாள் வெள்ளையம்மாள். "கடைக்குப் போய் வாங்கிட்டு வந்தேன். உங்களுக்குப் பிடிச்சிருக்கா, பாருங்க"

கிழவரின் வாயெல்லாம் பல்லாகியது."வெள்ளையம்மா, உனக்குப் பிடிச்சிருந்தா சரி." அதைத் தம் கையால் வாங்கிப்பார்த்து மகிழ்ந்தார். விலை குறைந்த இரண்டு சீட்டித் துணிகள் உறுதியாக இருந்தன். சாயம் போகாத ரகம். விலையைச் சொன்னாள்.

"நீ கெட்டிக்காரப் பொண்ணு, நல்லதாப் பார்த்து எடுத்திருக்கே."

"சரி, நீங்க சொன்னபடியே செய்திடட்டுமா?"

"மறந்திடாமல் நாளைக்கே செய்திடு."

பத்தாம் நம்பர் பக்கிரியும், பதினோராம் நம்பர் மாணிக்கமும் கண்களால் சாயை காட்டிக்கொண்டார்கள். "கிழவன் தீபாவளிக்கு ரவிக்கைச் சீட்டி எடுத்துக் கொடுக்கிறாண்டா!"

"கையிலே காசு வேறே கொடுப்பான் போலே இருக்கு."

அந்த வழியாக எதேச்சையாகப் போய்க்கொண்டிருந்த நர்ஸ் ரஞ்சிதம், கையில் சீட்டித் துணிகளுடன் பிள்ளையவர்களிடம் நின்று கொண்டிருந்த வெள்ளையம்மாளைக் கண்டு விட்டாள். காலகள் வேகமாக நடை போட்டு மற்றொரு நர்ஸ் காந்தாமணியுடன் திரும்பி வந்தன. ரவிக்கைச் சீட்டியைக் கண்ட அவர்கள் கண்கள் கொப்புளித்துப் பொங்கின.

"இப்பவே நான் கேக்கப் போறேன், பார்!" என்றாள் காந்தாமணி.

"பொறுத்துக்க! தீபாவளி அன்னிக்கு, தச்சுப் போட்டுக்கிட்டு 'ஜம்'முன்னு வருவா; அப்போ பாத்துக்கலாம்."

"கண்றாவி! கண்றாவி! காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு!"

4

ஊரெல்லாம் ஒரே தீபாவளி அமர்க்களமாக இருந்தது. அடிமடியில் சில தின்பண்டங்களை வைத்துக் கட்டிக்கொண்டு பகல் பதினொரு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தாள் வெள்ளையம்மாள். அன்றைக்கு அவளுக்கு விடுமுறை நாள். என்றாலும் அவரைப் பார்க்க வேண்டியிருந்தது. நோயாளிகளுக்குத் தின்பண்டம் கொடுக்கக் கூடாது என்பது சட்டம். 'தீபாவளியும் அதுவுமாக் கொஞ்சம் சாப்பிட்டால் என்ன வந்து விடும்?' என்று நினைத்தாள் அவள்.

நர்ஸ் ரஞ்சிதமும் காந்தாமணியும் அவளை மழி மறித்துக் கொண்டார்கள். "வெள்ளையம்மா, மடியிலே என்ன வச்சிருக்கே? யாருக்குக் கொண்டுபோறே?"

வெள்ளையம்மாள் விழித்தாள்.

"என்னடி திருட்டு முழி முழிக்கிறே?" என்றாள் காந்தாமணி: உன்னோட வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்தாரே ரவிக்கைத் துணி, அதைத் தச்சுப் போட்டுக்கலே?"

"நீங்க என்னம்மா சொல்றீங்க?"

"பாவம்! ஒண்ணுந் தெரியாதவ!"என்று சிரித்தாள் ரஞ்சிதம். "போ!போ! புருஷன் தீபாவளிப் பலகாரம் வரலேன்னு காத்துக் கிடப்பாரு. கொண்டு போய்க் கொடு."

"அம்மா, உங்க நாக்கு அழுகிப் போகும்!" என்று அலறினாள் வெள்ளையம்மாள். கண்ணீர் வெடித்துக்கொண்டு கிளம்பியது.

"அந்தக் கிழட்டுப் 'பே ஷண்டு' உனக்கு என்ன சொந்தம்?"

"உங்களுக்கு அவர் என்ன சொந்தமோ அதே சொந்தம்"

" என்ன சொன்னே?"-ரஞ்சிதம் அவளைப் பிடித்துக்கொண்டு, சொற்களால் குதறிப் பிடுங்கினாள்."என்ன துணிச்சல் உனக்கு! கிழவனுக்கு வைப்பாட்டியா இருக்கிறவளுக்கு வாய் வேறேயா, வாய்?"

"அம்மா, கொஞ்சம் நான் சொல்றதைக் கேளுங்க" என்று மன்றாடினாள் வெள்ளையம்மாள்: "அவர் யாரோ, நான் யாரோ! எனக்கு அவர் ஒண்ணும் சொந்தமில்லை. அவர் தன்னோட கதையை ஏங்கிட்ட சொன்னாரு. புள்ளை குட்டியுள்ள பெரிய குடும்பம் இருக்குதாம் அவருக்கு. வெளியூருக்குப் போய்ப் பணம் சம்பாதிச்சு அனுப்பறதாச் சொல்லிட்டு வந்தாராம்.சம்பாதிக்க வழியில்லே; நோயிலே படுத்திட்டார். வீட்டுக்கு இதைச் சொன்னா வருத்தப் படுவாங்கன்னு, வேலை தேடிக்கிட்டிருக்கிறதாக் கடுதாசி எழுதினாராம்..."

அவள் குரலும் கண்ணீரும் அவளை நம்ப வைத்தன. இருவரும் உற்றுக் கேட்டனர்.

"ஆஸ்பத்திரி ரொட்டியை ஏங்கிட்டக் கொடுத்து வெளியிலே விற்கச் சொன்னாரு. மாட்டேன்னு சொன்னேன். கெஞ்சினார்;அழுதார்; குடும்பக் கஷ்டத்தை எடுத்துச் சொன்னார். மனசு கேக்கல்லே. அவரோட ரொட்டியை வித்துச் சேத்த காசிலே அவர் சம்சாரத்துக்கு ரவிக்கைத்துணியும் அவர் பெண் குழந்தைக்கு ஒரு சட்டைத் துணியும் வாங்கினேன். அவரோட ஊருக்கு அதைப் பார்சல் பண்ணி அனுப்பியிருக்கு."

"வெள்ளையம்மா........ நாங்க தப்பா நினைச்சிட்டோம், வெள்ளையம்மா!" என்று தடுமாறினான் ரஞ்சிதம்.

"நினைப்பீங்கம்மா!" என்றாள் வெள்ளையம்மாள் ஆத்திரத்துடன்; "எலும்பிலே ஒட்டியிருக்கிற சதையைப் பார்த்திட்டு ஆம்பளைங்க நம்மைச் சுத்தி அலையற காலம் இது. கையிலே சிக்கினாக் கடிச்சுக் குதறிப் போட்டுக் கண்காணாமப் போயிடுவானுங்க."- வெள்ளையம்மாளின் குரல் தன் கசப்பான பழைய அநுபவம் எதையோ நினைத்துக்கொண்டு தழுதழுத்தது. " அப்படி ஆம்பிளைங்க இருக்கிற உலகத்திலே, தன் குடலைப் பிடுங்கி வேகவச்சுக் குடும்பத்துக்குக் கொடுக்கிற உத்தமரும் இருக்காரு... பெத்த தகப்பன் மாதிரி நினைச்சு அவரை நான் சுத்திக்கிட்டு அலையறேன்"

கண்களைத் துடைத்துக்கொண்டு வெகு வேகமாக ரத்தினம் பிள்ளையிடம் ஓடி வந்தாள் வெள்ளையம்மாள்.

"இந்தாங்க இதைச் சாப்பிடுங்க!"

"வேண்டாம்" என்று தலையாட்டினார் பிள்ளை; "குழந்தைங்க அங்கே என்ன சாப்பிட்றாங்களோ, தெரியாது."

வற்புறுத்தியதின் பேரில், வெள்ளையம்மாளின் மனம் நோக வேண்டாம் என்பதற்காக, ஒன்றை வாங்கிக் கடித்தார். அது தொண்டையில் அடைத்து விக்கிக் கொண்டது. புரை ஏறியது.

"வீட்டிலே நினைச்சுக்கறாங்க" என்றாள் வெள்ளையம்மாள்.

"அப்படியா!" என்று விக்கலோடு விக்கலாகக் கேட்டார் பிள்ளை.

ஆமாம்; வீட்டில் அப்போது அவரை நினைத்துத்தான் கொண்டார்கள்; "எங்க வீட்டுக்காரருக்குப் புத்தி கெட்டுப் போச்சு. ரெண்டு சல்லாத் துணியையும், ரொட்டியையும், சக்கரைத் தூளையும் மூட்டை கட்டி அனுப்பிச்சிருக்காரு. மேலே போட்டுக்கறத்துக்கு லாயக்கான துணியா இது?"

"ஏம்மா, அப்பா முந்தியெல்லாம் கோதுமை அல்வா வாங்கித் தருவாங்களே; இப்ப ஏன் ரொட்டி அனுப்பிச்சிருக்காங்க?" என்று கேட்டான் பிள்ளைகளில் ஒருவன்.

"வயசானாப் புத்தி கெட்டுப் போகும்.உங்கப்பாவுக்கு வயசாயிடுச்சு."

அவளைச் சொல்லக் குற்றமில்லை. அவர்கள் நன்றாயிருந்த போதே அவர் வாங்கி வந்த பொருள்களிலெல்லாம் குறை கண்டவள் அவள். பணக்குறை தெரியாத மனக்குறைக்காரி அவள்.

ஆஸ்பத்திரியில் கிடந்த பிள்ளை மறுபடியும் விக்கினார். பயந்துபோய் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, சிறிது தண்ணீரை அவர் வாயில் ஊற்றினாள் வெள்ளையம்மாள்.

சற்று நேரம் திக்குமுக்காடித் திணறிவிட்டு, "வேண்டாம் 'வெள்ளையம்மா! அரை மனசோட இதை நான் சாப்பிட வேண்டாம்" என்றார். பிறகு, "அவங்க என்னை நினைச்சுக்குவாங்கன்னு சொல்றியா?" என்று குழந்தைபோல் கேட்டார்; "உண்மையா நினைச்சுக்குவாங்களா?"

"கட்டாயம் நினைச்சுக்குவாங்க!"

எந்த விதமாக நினைத்துக்கொண்டார்கள் என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் அனுப்பிய துணிகளை அவர் மனைவி ஒரு மூலையில் கசக்கி எறிந்தாள் என்பதும் அவருக்குத் தெரியாது.