கறவையும் காளையும்

அழகான செவலைப் பசு; அதன் அருகில் கம்பீரமான மயிலைக் காளை. கறவைப் பசுவும் காளைமாடும் ஒன்றை ஒன்று சந்தித்தவுடன் திடுக்கிட்டுத் தலை தூக்கிப் பார்த்தன. அவற்றின் கண்களிள் ஒளிவிட்ட தாப உணர்ச்சி சொற்களில் அடங்காத‌து. பழைய காதலர்களின் மறு சந்திப்பு இது.

பழைய காதலென்றால் முதற் காதல்; இளமைப் பருவத்தில் அடி எடுத்து வைத்தவுடன் ஏற்படும் முதல் அநுபவம். மனிதர்களின் முதற் காதலைப் பற்றி எத்தனை எத்தனையோ காவியங்களும் ஓவியங்களும் தோன்றியிருக்கின்றன.

மனிதர்கள் பல சமயங்களில் மிருக உணர்ச்சிக்கு வசப்படுவது போல், இந்தப் பசுவும் காளையும் மனித உணர்ச்சிக்கு இப்போது அடிமையாகின. தங்களுடைய அந்தக் காலத்தை‍-மறக்க நினைத்த பொற்காலத்தை‍-நினைத்துக் கொண்டன.

அந்த நான்கு கண்களையும் ஒரு கவிஞன் கண்டிருக்க வேண்டும். ஆனால் விவசாயப் பண்ணையின் கருணையற்ற காவலாளி கண்டான். அவனுக்கு என்ன புரியும்?

"உங்க கொட்டத்தையெல்லாந்தான் அடக்கியாச்சே! ஏன் இப்படிப் பாக்கிறீங்க?" என்று எகத்தாளமாகச் சொல்லிவிட்டு அவன் அப்பால் போனான். அவன் கொட்டம் இன்னும் அடங்கவில்லை.

அவன் இளைஞன். அந்த மாடுகளைக் கட்டியிருந்த இடம் ஒரு நவீன விவசாயப் பண்ணை. ஒரு பக்கம் நெல் சாகுபடி செய்திருந்தார்கள்; மறுபக்கம் கரும்பும் வாழையும் வளர்ந்தன. இடையில் மரங்களும் செடிகளும் மண்டிக் கிடந்தன. இயற்கையும் செயற்கையும் முட்டி மோதிக்கொண்டிருந்த இடம் அது.

மாட்டுத்தொழுவங்கள், கோழிக் கூடாரங்கள், தேனீப் பெட்டிகள் இப்படி பல தரப்பட்டவை அந்தப் பண்ணைக்குள் பதுங்கிக் கொண்டிருந்தன. விவசாயம் நடநிதுகொண்டிருந்த முறையை முற்றிலும் விஞ்ஞானமென்றும் சொல்ல முடியாது; அஞ்ஞானமென்றும் தள்ளமுடியாது. ஒரு பக்கம் இயந்திரங்கள் உழுதன; மற்றொரு பக்கம் மாடுகள் உழுதன. குழாய் மாட்டிய மனிதர்களும், கோவணங் கட்டிய மனிதர்களும் அங்கே ஒன்றாய் உழைத்தார்கள்.

காளை மாடு கண்ணிமைக்கவில்லை.பசு தன் பார்வையை அகற்ற வில்லை. காளை மாட்டின் கண்களில் சுழன்ற நிழற்படமொன்று பசுவின் கண்களிலும் பிரதிபலித்தது.

இரண்டு சொட்டுக் கண்ணீர் திரண்டது முதலில்.அடுத்தாற்போல் அது நான்கு சொட்டுக் கண்ணீராக மாறியது. பசு இதைக் கவனித்தது.

காளையின் கண்களீல் ஏன் கலக்கம்? இது பசுவுக்குப் புரியவில்லை.

பசுவின் கண்களில் ஏன் கசிவு? இது காளைக்கு விளங்கவில்லை.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது:-

ஏதோ ஒரு கிராமத்தின் எதிரெதிர் வீடுகளில் இரண்டும் கன்றுப் பிராயம் முதல் ஒன்றாய் வளர்ந்தன. துள்ளிக்குதித்து விளையாடின. மேய்ச்சலுக்குப் போகும்போதும் வயல் வரப்புகளில் மேயும்போதும், வீட்டிற்குத் திரும்பும் போதும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துக் காண முடியாது.

கன்று காளையானது; கிடாரி குமரியானது.

அடடா! அந்தக் கிராமத்துக் காளைகளிடையே எத்தனை எத்தனை போட்டா போட்டிகள்! தன் உயிரினும் மேலான உடைமையைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு சமயம் அந்த இளம் காளை தன் கொம்புகளில் ஒன்றையே ஒடித்துக் கொண்டது.

நெற்றியெல்லாம் ஒரே ரத்தம்; கொம்பு உடைந்து தொங்கியது; தாங்கமுடியாத வலி, வேதனை அதற்கு.

ஆனால், அதன் காதலி பரிவோடு ரத்தம் தோய்ந்த அதன் முகத்தை மெல்லத் தன் நாவால் துழாவியபோது, அத்தனை வலியும் வேதனையும் எங்கே போயின?

அந்த முதல் நாளைத்தான் மறக்க முடியுமா?

ஆற்றங்கரைப்படுக்கையில் நாணற்புல்லை மனங்கொண்ட மட்டும் மென்றுவிட்டு, திடீரென்று தன் துணைவியை நினைத்துக்கொண்டு, நாலாபுறமும் திரும்பிப் பார்த்தது காளை. எங்கும் அதைக் காணவில்லை. பச்சைப் புல்லும் குளிர்ந்த தண்ணீரும் அதன் வயிற்றுக்குள்ளே குதூகலத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. உச்சி வெய்யில்கூட அதற்குப் பால் நிலாவாகத் தோன்றியது.

வாலை உயர்த்திப் பட்டுக் குஞ்சம் போல் வீசிக்கொண்டு நாலு கால் பாய்ச்சலில் பறந்தது காளை.

"ம்...ம்மா!..."

புதருக்கு மத்தியில் ஒளிந்து நின்ற பசு தலை தூக்கிப் பார்த்தது. காளையின் குரலில் கொப்பளித்த வேகத்தைவிட அதன் பாய்ச்சல் வேகம் அதற்குப் பயங்கரனமான தொரு ஆனந்தத்தைக் கொடுத்தது. 'எதிர்வீட்டுப் பெண்தானென்றாலும் எட்டிய கரத்துக்கு அகப்படுவேனோ?' என்று கேட்கிற பாவனையில் அதுவும் துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கியது.

ஓட்டப் பந்தயத்தில் அந்த ஆற்றுப் படுகையே அதிர்ந்தது.

ஆற்றுத் தண்ணீர் அலைமோதியது.

நாணல் புதர்கள் சின்னாபின்னமாயின. மணல் மேடு புழுதி எழுப்பிக் காளையின் கண்களை மறைத்தது.

இனி ஓட முடியாதென்ற நிலை வந்தவுடன், ஓரக் கண்களால் காளையைத் திரும்பிப் பார்த்துவிட்டு, ஒரு மாமர நிழலில் ஒதுங்கி நின்றது பசு. தன் தோல்வியை ஒப்புக் கொள்வதாகக் காளையிடம் சாகசம் செய்துவிட்டு, உண்மையில் பருவத்தின் வெற்றியைக் கண்டது அது.

அந்த ஒரு நிமிஷம், இந்த உலகத்திலிருந்து அவைகள் மறையும் வரையில் மறக்கமுடியாத நிமிஷம். இந்த உலகத்தை இன்ப உலகமென்றும், அழியா உலகமென்றும் நம்ப வைத்த நிமிஷம்.

அதன் பிறகு காளை கம்பீரமாக முன்னே நடந்து சென்றது. பசு பணிவோடு அதைப் பின்பற்றியது.

பத்தே மாதங்களில் அவர்களுக்கு ஒரு படு சுட்டி பிறந்தான். தகப்பனைப் போன்ற அதே மயிலை நிறம்; அதே கண்கள்; அதே மிடுக்கும் துடிப்பும்.

இதெல்லாம் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய கதை.

எதிர் வீட்டுப் பசுவையும் கன்றையும் யாரோ விலை கொடுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். பிறகு கன்றையும் தாயையும் பிரித்தார்கள். கடைசியில் பசு இந்த நாகரிகப் பண்ணைக்கு- விஞ்ஞானப் பண்ணை என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்-வந்து சேர்ந்தது.

வந்த பிறகு இதுதான் முதல் சந்திப்பு. பிரிவுக்குப் பின் ஏற்படுகிற சந்திப்பு.

இப்போது பசுவுக்கு நிறைமாதம். அடுத்த குழந்தையை அது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ’அது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது’ என்று சொன்னேனா? தப்பு! அதை வளர்த்தவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காளை மெல்லத் தன் வாயைப் பசுவின் காதருகில் கொண்டு சென்றது. தயங்கித் தயங்கிக் கேட்டது.

"அடுத்த குழந்தையா?"

பசு கண்களை மூடிக்கொண்டது.

"குழந்தையின் தகப்பன் யார்? நான் பார்க்கலாமா?"

பசுவின் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் வந்தது.

"பதில் சொல்லக் கூடாதா?" என்று ஏக்கத்தோடு கேட்டது காளை. "நான் கேட்கிறேன்; சொல்லக் கூடாதா?"

கதறி அழவேண்டும் போலிருந்தது பசுவுக்கு. காவற்காரனுக்குப் பயந்து, பல்லைக் கடித்துக் கொண்டது.

"சொல்லக் கூடாதா?" பசுவின் நெஞ்சு பதறியது.

"தெரியாது; உண்மையில் தெரியாது; சத்தியமாய்த் தெரியாது!"

காளை திடுக்கிட்டது. பிறகு சந்தேகத்துடன் அதைப் பார்த்தது.

"பத்து மாசம் சுமந்துவிட்டேன்; எத்தனையோ மாசம் பால் கொடுக்கப் போகிறேன். குழந்தையின் தகப்பன் முகம் கூட எனக்குத் தெரியாது... ஏதோ விஞ்ஞானமாம்; கருவியாம்; மனிதர்களுக்கு இரும்பும் ஒரு கருவி; நாமும் ஒரு கருவி".

காளையின் கண்களில் நெருப்புத் திவலைகள் தோன்றின.

"என்னைத் தான் அழித்தார்களென்றால் உனக்குமா இந்தக் கதி?"

"உங்களையா?" என்று கதறியது பசு.

"நான் இப்போது காளை இல்லை; உன்னிடம் கொஞ்சி விளையாடிய கட்டிளம் ஆண்மகனில்லை. என் ஆண்மையை அழித்துவிட்டார்கள்;- அவர்களுக்காக உழைத்துச் சாக வேண்டுமாம் நான்."

காளை தன் கொம்புகளை ஓங்கி மண்ணில் குத்தித் தரையைப் புழுதிக் காடாக்கியது. நான்கு கால்களாலும் மண்ணைப் பிராண்டிச் சூராவளிபோல் தூசி எழுப்பியது. அதன் கண்களில் கொப்புளித்த உவர் நீரைப் பசு மெல்லத் தன் மிருதுவான நாவால் நக்கித் துடைக்க வந்தபோது, காவலாளி முரட்டுத்தனமாய்க் காளையைத் தாக்கி அங்கிருந்து அதை அகற்றினான்.

மனிதனுடைய மிருக இச்சையால் கட்டுப்பாடின்றிப் பெருகும் உயிர்க்குலத்தை வளர்க்க, மிருகங்களின் புனித உணர்ச்சியைக் குலைக்கும் விஞ்ஞானக் கருவிகள் அந்தப் பண்ணையின் ஒரு அறைக்குள் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன!