கலியபெருமாளின் கனவு

கலியபெருமாள் பிறந்து வளர்ந்தது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். அவனுடைய கல்லூரிப் படிப்பு நடந்த இடம் திருச்சி. இப்போது அவன் கலைக் கோட்டையான பட்டணத்தை முற்றுகை இடுவதற்கு எழும்பூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.

பி.ஏ. பரீட்சை முடிந்தது. விடுமுறையும் விட்டுவிட்டார்கள். வட இந்தியாவுக்குத் தன் நண்பர்களுடன் புறப்படுவதாக வீட்டில் ஒரு பொய்யைச் செல்லிவிட்டுப் பை நிறையப் பணம் எடுத்துக்கொண்டு அவன் இந்தத் தலைநகர யாத்திரையைத் தொடங்கியிருக்கிறான். தலைநகரம் அவனைப் பொறுத்தமட்டில் கலைநகரம்.

எழும்பூர் ரயிலடியில் இறங்கி அவன் விழித்த விழிப்பைக் கண்டுவிட்டு, முன்பின் தெரியாத ஓட்டல் தரகர் ஒருவர், நெடுநாள் பழகியவர்போல் அவனிடம் நெருங்கினார். அவனுக்காகவே காத்திருப்பவர்போல் தேன் சொட்டப் பேசினார். அவன் சார்பில் கூலியாட்களை அதட்டிப் பெட்டி படுக்கையைத் தூக்கிக்கொள்ளச் செய்தார். வெளியில் நின்று கொண்டிருந்த 'டாக்ஸி'யில் ஏறிக்கொண்டு அவர்கள் இருவரும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஓட்டலில் சாப்பாடும் உண்டு;தங்குவதற்கு அறையும் உண்டு; ஏவலுக்கு ஆளும் உண்டு.

புது மாப்பிள்ளைக்கு நடக்க வேண்டிய உபசாரங்கள் அங்கே அவனுக்கு நடந்தன.காலைக் காப்பி, குளிப்பதற்க வெந்நீர், பிறகு பலகாரம், அடுத்தாற்போல் பத்திரிகை இவை யாவும் அவன் கேட்காமலே அவனுக்குக் கிடைத்தன. ஏற்கெனவே அவன் ஓட்டல் வசதிகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்ததால் அவனுக்கு வியப்பொன்றும் ஏற்படவில்லை.

செய்தித்தாளை அகலமாகப் பிரித்து வைத்துக்கொண்டு படிக்கத் தொடங்கினான் கலியபெருமாள். அவனுக்குப் பிடித்தமான தினசரி அது.கலியபெருமாளிடம் இப்போது எதையும் ஆழ்ந்து படிக்கும் வழக்கமில்லை. அகலமாகப் படித்தே பழகி விட்டவன் அவன்.

'நாட்டு நடப்பில்' நாட்டம் செலுத்தியது அவன் மனம். கொலை வழக்கு, கள்ளச் சாராயம், நடுத்தெருச் சோரம், பருத்திச் சூதாட்டம், பொய் புனைசுருட்டு இவையே அவனுக்குப் பிடித்தமான நாட்டு நடப்புக்கள். முற்காலத்திலிருந்த 'மூடர்கள்' இவைகளுக்குப் பஞ்சமா பாதகங்கள் என்று பெயர் வைத்திருந்தார்கள். இந்தக்காலத்து இளம் அறிவாளிகளின் கருத்துக்கு அவை உணவாகப் போகின்றன என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்?

அடுத்தாற்போல் அவனைக் கவர்வது சினிமாச் செய்தி. அதற்கும் அடுத்தாற்போல் கட்சி அரசியல் சண்டை. இவர் அவரை இன்றைக்கு எப்படித் திட்டினார், அவர் இவரை எப்படித் திருப்பித் திட்டினார் என்ற விஷயங்கள்.

ஓட்டல் மானேஜர் ஒரு நோட்டுப் புத்தகமும் கையுமாக அவனிடம் வந்து சேர்ந்தார்.செய்தித்தாளில் 'இந்திய எல்லையில் சீனத்துருப்புக்கள்' என்ற பகுதியை ஒதுக்கித தள்ளிவிட்டுக் குமார் குந்தளா என்ற எஸ்ட்ரா நடிகையின் அந்தரங்க வாழ்க்கையாகிய 'நாட்டு நடப்புக்குள்' அவன் அப்போது புகுந்து கொண்டிருந்தான். செய்தித்தாளும், சீனத் துருப்புக்களுக்குக் கொடுக்காத மகத்துவத்தைக் குமாரி குந்தளாவுக்குக் கொடுத்து, அவளுக்காக அரைப் பக்கத்தையும் ஒதுக்கியிருந்தது.

ஓட்டல் மானேஜர் நடுத்தர வயதும் முதல்தர உடம்புமாக முறுக்கிவிட்ட மீசையுடன் காமா பயில்வானின் தம்பிபோல் இருந்தார். அகலமான நெற்றி, மல் ஜிப்பா, மல் வேஷ்டி, மூக்குக் கண்ணாடி அவருக்கு.

பையனை ஒருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஏற இறங்கப் பார்த்தார். ஓட்டலுக்கு வருகிறவர்களை எடை போட்டுப் பழகிப் போன கண்கள் அவருடைய கண்கள்.

பையனுக்கோ ஒல்லியான உடம்பு, திலீப் குமார் கிராப்பு, நறுக்கு மீசை, ஜாக்கெட் துணியில் மேல் சட்டை, தொள தொளத்த பைஜாமா, விலை உயர்ந்த சென்ட் மணமும் சிகரெட் மணமும் அவனைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. 'புள்ளி சுமாரான புள்ளி தான்' என்று தமக்குள் புள்ளி போட்டுக் கொண்டார் மானேஜர்.

மெல்லக் கனைத்துத் தம் வருகையை வெளிப்படுத்திக் கொண்டு, "எவ்வளவு நாட்களுக்குப் பட்டணத்திலே தங்கறதா உத்தேசமோ?" என்று குழைவுடன் ஆரம்பித்தார் அவர்.

குமாரி குந்தளாவிடம் ஒட்டிக்கொண்டிருந்த மனத்தை வெட்டிவிடத் துணிந்த அவரைச் சற்றுக் கடுப்புடன் பார்த்துவிட்டு, "எதுக்காக இதையெல்லாம் கேக்கிறீங்க?" என்றான் கலியபெருமாள்.

"இல்லே, உங்க சொந்த ஊர், நீங்கே இங்கே வந்த காரணம், நீங்க எத்தனை நாள் இங்கே தங்கப் போறீங்கங்கற விஷயம் இதையெல்லாம் நான் குறிச்சுக்கணும். அதனாலே கேட்டேன்."

பையன் யோசனை செய்தான். அவன் பட்டணத்துக்குப் புதியவன். ஓட்டலுக்குப் புதியவன். கேள்வி ஞானத்தால் மட்டும் விவரம் தெரிந்துகொண்டு வந்திருக்கிறான்.

"நீங்க என்ன சொல்றீங்களோ,அதை நாங்க எழுதிக்கிறோம்" என்றார் மானேஜர், அவனுடைய யோசனையைப் பார்த்துவிட்டு. "உண்மையைத்தான் சொல்லணும்கிறது இல்லை; நீங்க சொல்றதுதான் எங்களுக்கு உண்மை" என்று மறைமுகமாக அவர் சொல்வது போலிருந்தது.

அதை அவன் புரிந்து கொள்ளாமல்,"எத்தனை நாட்கள் இருக்கப்போறேன்னு எனக்கே தெரியாது" என்றான். பிறகு "ஏன், இவ்வளவு நாட்கள்தான் தங்கலாம்னு எதுவும் கட்டாயம் உண்டோ?" என்று கேட்டான்.

"சே! இதை உங்க சொந்த வீடுமாதிரி நினைச்சுக்குங்க. ஒரு நாளைக்கு அஞ்சு ரூபாய் அறை வாடகை. காப்பி, சாப்பாடு, வெந்நீர், தயிர் இதல்லாம் தனிச்செலவு. நீங்க நிரந்தரமா இங்கேயே தங்கலாம். ஆமாம் வந்த வேலை என்னான்னு சொல்றீங்களா?"

"ஒரு வேலையா இருந்தால் சொல்லலாம். எனக்கு எத்தனையோ வேலைகள். சினிமா, சங்கீதம், அரசியல், பேச்சு, எழுத்து, சித்திரம்..."

'ஓ! சகல கலாவல்லவர் போலிருக்கு!' என்று தமக்குள் சொல்லிக்கொண்டு, "அப்படீன்னா, 'கலைப்பணி'ன்னு நோட்டிலே எழுதிக்கவா?"

"ஆமாம், கலைத்தொண்டுதான் என் வாழ்க்கை இலட்சியம். அதுக்காக என் உடல்,பொருள், ஆவி எல்லாத்தையும் கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். பட்டணத்திலேதான் அதுக்கெல்லாம் இடமிருக்கு!"

"தெரியாமலா'கெட்டும் பட்டணம் சேர்'னு சொன்னான்?..அட்வான்ஸ் ஒரு நூறு ரூபா தர்றீங்களா?" என்றார் மானேஜர்.

நூறு ரூபாய் நோட்டை எடுத்து அலட்சியமாக மானேஜரிடம் நீட்டினான் கலியபெருமாள். அதை அவர் வெளிச்சத்தில் பிடித்து நீரோட்டம் பார்த்துவிட்டு, நல்ல நோட்டுத்தான் என்று தெரிந்துகொண்ட பிறகு அவனுக்கு ரசீது கொடுத்தார்.

" இன்னும் உங்களுக்கு என்னென்ன வசதி வேணுமோ, கேளுங்க. உங்களைப் பார்த்தால் பெரிய இடத்துப் பிள்ளை போலத் தோணுது. எங்களாலே முடிஞ்ச உதவிகளை யெல்லாம் செய்யக் காத்துக் கிட்டிருக்கோம்."

"முதல்லே நான் ஊரைச் சுத்திப் பார்க்கணும். யார் யார் எங்கெங்கே இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கறத்துக்கே ஒருவாரம் ஆகும். அது வரையிலே ஒரு பையனை எனக்குத் துணையாக அனுப்பி வைச்சிங்கன்னா, அதுதன் பெரிய உதவி."

சற்று நேரத்துக்கெல்லாம் ஓர் இருபது வயது இளைஞனுடன் திரும்பி வந்தார் மானேஜர். குப்பத்து இளைஞனாக இருந்தாலும் அவன் வெளுப்பான சட்டையும் சராயும் போட்டுக் கொண்டிருந்தான். "பையன் யோக்கியமான பையன்; நீங்கள் இவனை நம்பலாம்" என்று சொல்லிவிட்டு, அவனிடம் திரும்பி, "டேய், மன்னார்! ஐயாவை நீ கவனிச்சுக்க; அவர் உன்னை கவனிச்சுக்குவார். தெரிஞ்சுதா?" என்றார். " ஆமாம், கொண்டு போய் நீ பாட்டுக்குத் தப்புத் தண்டாவிலே மாட்டி விடாதே!"

" என்னங்க, இது! சாமியைப் பார்த்தா நல்லவரு மாதிரித் தோணுது. நான் அப்படியெல்லாம் செய்வேனுங்களா?"

அன்றிலிருந்து கலியபெருமாள் பட்டணத்துக்குள் மணிக்கு இருபது முப்பது மைல் வேகத்தில் சுற்றத் தொடங்கினான். 'டாக்ஸியின் மீட்டர்' சுற்றிய வண்ணமாகவே இருந்தது. தார் ரோட்டில், காற்றில் பறப்பதுபோல் காரில் போவதில் ஓர் ஆனந்தம் இருகத்தான் செய்கிறது. குளிர்ந்த காற்றுள்ள சினிமாக் கொட்டகைகளில் உட்கார்ந்து படம் பார்ப்பதிலும், திறந்த மாடியுள்ள ஓட்டல்களில் உட்கார்ந்து பலகாரம் சாப்பிடுவதிலும் வரிசை வரிசையாகப் பங்களாக்கள், கார்கள், பெண்களை வேடிக்கைப் பார்ப்பதிலும் அந்த ஆனந்தம் அதிகரிக்கத்தான் செய்கிறது.

கலிய பெருமாளின் தகப்பனார் நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபட்டுப் பணம் சேர்த்த மிராசுதார். தாமும் உழைத்தார்; வேலையாட்களையும் விரட்டி வேலை வாங் கினார்; நியாய விலைக்கும் நெல்லை விற்றார்.

அவருடைய மூத்த பிள்ளைக்குச் சேலத்தில் ஜவுளி வியாபாரம். அதுவும் நன்றாகத்தான் நடந்தது.

அவருடைய அடுத்த பிள்ளை ஏதோ ஒரு ஊரில் டாக்டராக இருந்தான். தொழிலையும் கவனித்துக்கொண்டு அவன் புதிய மருத்துவ ஆராய்ச்சிகளையும் செய்து வந்தான். அவனுக்கு அவன் இருந்த வட்டாரத்தில் நல்ல பெயர்.

அவருடைய மூன்றாவது பிள்ளைதான் கலியபெருமாள். எல்லோருக்கும் செல்லப் பிள்ளை அவன்.

பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் அவனைக் கல்லூரிக்குள் தள்ளி விடுவதற்கு அரும்பாடு பட்டார் அவனுடைய தகப்பனார். பிடிக்காதவர்களையெல்லாம் பிடித்து, கெஞ்சாதவர்களிடமெல்லாம் கெஞ்சி, கிடைக்காத இடத்தைக் கிடைக்கச் செய்தார்.

ஆரம்பத்தில் படிப்பில் சுறுசுறுப்பு ஏற்பட்டது. பிறகு அது படுத்துக்கொண்டது. கல்லூரி நாடகங்கள், பேச்சுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், இவற்றில் நாட்டம் கொள்ளலானான். படிப்பையும் கவனித்துக்கொண்டு மற்ற விஷயங்களையும் கவனிப்பதற்கு அவனுக்கு நேரம் இருந்தது. நேரம் இருந்தால் போதுமா? மனம் வேண்டாமா?

அவனுடைய வகுப்பில் பாடப் புத்தகங்களை மட்டும் அரித்துத் தின்னும் கரையான் கூட்டத்தாரும் இருந்தார்கள். கல்வி அறிவையும் பொது அறிவையும் வளர்த்துக்கொண்ட புத்திசாலிகளும் இருந்தார்கள். 'படிப்பதே பாவம்! வகுப்பில் கவனிப்பதே குற்றம்!கல்லூரியே சிறைச்சாலை!' என்று நினைக்கிற பிறவி மேதைகளும் சிலர் இருந்தார்கள்.

பெற்றோரை முட்டாள்களென்று நினைத்த இந்தப் பிறவி மேதைகளின் வட்டத்துக்குள் கலியபெருமாள் எப்படியோ அகப்பட்டுக்கொண்டான். பாடப் புத்தகங்கள் பரிதாபத்துக்குரிய பொருள்களாகி விட்டன. நாட்டு நடப்பைப் பற்றியும் கலைப் பணியைப் பற்றியுமே அவனுக்கு இரவு பகல் எந்த நேரமும் சிநதனை.

'நாட்டு நடப்பெ'ன்றால் கலியபெருமாளின் அகராதியில் கோர்ட்டு நடப்புகளும் கட்சி அரசியல் விவகாரங்களும்தான் ஆகும்.

'கலைப் பணி' என்றால் சினிமாவில் நடிப்பது, பாடுவது அதற்கு எழுதுவது முதலிய வேலைகளாகும்.

"தோன்றிற் புகழொடு தோன்றுக!" என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறார் அல்லவா? நாட்டுக்கு நல்ல பணிகள் பல செய்ய வேண்டுமென்றால், அதற்கு முதலில் புகழ்வேண்டும். புகழ் பெறுவது எப்படி? அவன் ஒரே சமயத்தில் ஒரே ஒரு வழியில் புகழ் தேட முனைந்திருந்தாலும் அதில் பொருள் உண்டு. ஆனால் கலியபெருமாளோ திரைப் படத்தில் பற்பல வேடங்களில் நடிக்கவும் விரும்பினான்; மேடையேறிச் சொற்போர் நடத்தவும் விரும்பினான்; காவியம் எழுத நினைத்தான்; ஓவியம் தீட்டத் துடித்தான்; தேர்தலுக்கு நின்று அமைச்சராகி நாடாளவும் ஆசைப் பட்டான்!

பரீட்சையின் வினாத் தாள்களைத தயாரித்தவர்கள் நாட்டுப் நடப்பைச் சிறிதும் அறியாத கொள்கையற்றவர்கள். பாடப் புத்தகங்களிலிருந்தே அநாவசியமாகக் கேள்விகளைக் கேட்டு வைத்திருந்தார்கள். கொள்கை இல்லாமல்தானே இந்த நாட்டில் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் தோன்றியிருக்கின்றன? விவசாயம், பொறி இயல், மருத்துவம், கணிதம், இலக்கியம் இவையெல்லாம் கொள்கைக்குரிய கல்வியாகுமா என்ன! இவற்றைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதால் இந்த நாடு உருப்படப் போகிறதா, என்ன!

ஆகவே தான் தேர்வின் முடிவு கொடுத்த அதிர்ச்சி தாங்காமல், கலை என்ற பொன்னாடையைப் போர்த்திக்கொண்டு புகழ் பெறுவதற்காக, அவன் தமிழ் நாட்டின் தலைநகரமான கலை நகரத்துக்கு வந்து சேர்ந்து விட்டான்.

முதல் வாரம் பளபளப்பும் மினுமினுப்பும், கண் கூசும் வெளிச்சமும், காதடைக்கும் சத்தமும் நிறைந்த சென்னை மாநகரத்தைச் சுற்றிப்பார்ப்பதில் கழிந்தது. குபேர பட்டணம் என்று கதையில் வருகிற பட்டணம் இதன் ஒரு தெருவுக்கு உறை போடக் காணுமா? கார் போகிற வேகத்தில், உட்கார்ந்திருக்கும் 'ஸீட்'டை விட உயரத்தில் இருந்த பொருள்களே கண்ணுக்குத் தெரிந்தன.

இரண்டாவது வாரம் கலைப் பிரமுகர்களைச் சந்திப்பதில் கழிந்தது. காருக்குக் காசு அதிகமானாலும் முதல் வாரத்துப் பழக்கம் அடுத்த வாரமும் அவனை விட்டு விடவில்லை.

மூன்றாவது வாரம் ஆட்டோ ரிக்‌ஷா, சைக்கிள் ரிக்‌ஷா, மனித வாகனம். நான்காவது வாரம் நடை. வெளியில் வேலையுமில்லை' அவனுக்குப் போவதற்கு மனமும் இல்லை. அவனுடைய அபிமான நடிக நட்சத்திரங்களைப் பேட்டி காண்பதற்குள் அவன் பாடு பெரும் பாடாகிவிட்டது. வீட்டுக்குப் போனபோது ஸ்டூடியோவுக்குப் போயிருந்தார்கள். ஸ்டூடியோவுக்குப் போனபோது வீட்டில் இருந்தார்கள். சில சமயங்களில் வீட்டுக்குள்ளும் நுழைய முடியவில்லை; ஸ்டுடியோவுக்கும் அநுமதி கிடைக்கவில்லை. எப்படியோ ஒருவரைச் சந்தித்து, "நீங்கள் எப்படி இந்தத் துறையில் புகழ் பெற்றீங்க?" என்று கேட்டான். "புகழாவது, மண்ணாங்கட்டியாவது! அஞ்சாவது வயதிலே நாடக மேடையிலே வாத்தியார்கிட்ட வாங்கின அடியை நினைச்சா இன்னும் பயமா இருக்குது. நடிக்கச் சொல்லி அவர் படுத்தின் பாடு ரொம்ப அதிகம். அப்ப அவர் மேலே எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இப்ப நான் அவரை நினைக்காத நாள் இல்லை. பத்துப் பதினைந்து வருஷங்களுக்கு முந்தி நல்ல துணி ஏது? சோறேது? புகழைப் பத்திப் பேச வந்திட்டீங்களே!"

"எனக்கும் உங்களைப் போல் நடிக்கணும்னு ஆசையாக இருக்கு, ஒரு சந்தர்ப்பம் கிடைச்சால்....." "ஆசைப்படறது நல்லதுதான். ஆனால் இந்த நாட்டிலே வீட்டுக்கொரு பிள்ளை நடிக்கணும்னு ஆசைப்பட்டால், நான் யாருக்குத்தான் சந்தர்ப்பம் வாங்கிக்கொடுக்கிறது? ஏற்கனவே நடிச்சு அநுபவப்பட்டவங்க ஆயிரக்கணக்கான பேர்கள் சந்தர்ப்பம் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காங்க, தெரியுமா?"

அப்போதே நூற்றுக்கணக்கானவர்கள் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் தன்னைப் போலவே அவர்களும் சென்னைக்கு வந்தவர்கள் என்பதும் அவனுக்குத் தெரிந்தது.

அப்போதே நூற்றுக்கணக்கானவர்கள் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் தன்னைப் போலவே அவர்களும் சென்னைக்கு வந்தவர்கள் என்பதும் அவனுக்குத் தெரிந்தது.

அடுத்தாற்போல் புகழுக்குரிய அரசியல் கட்சித் தலைவர்களைப் பேட்டி காண்பதற்காக முயற்சி செய்தான். பலர் ஊரில் இல்லை. வரப்போகும் பொதுத்தேர்தலுக்குப் பணம் தேடுவதற்காகவும் ஆதரவு தேடுவதற்காகவும் அவர்கள் வெளியூர்களுக்குப் போயிருந்தார்கள்.

பார்க்க முடிந்த ஒருவரிடம் தனக்கு நன்றாக மேடையில் பேசத் தெரியும் என்றும் நாட்டுப் பணிசெய்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்றும் அவன் கேட்டுக்கொண்டான்.

"மேடையிலே பேசற நாட்டுப் பணி இப்ப போதாது, தம்பி!" என்றார் அவர். "வரப் போகிற தேர்தலிலே உன்னோட வட்டாரத்திலே நீ நம்ப கட்சிக்காக பாடுபடு. உன்னோட உழைப்பைப் பார்த்திட்டுப் பின்னாலே யோசிப்போம்"என்றார்.

இன்னும் பல இடங்களுக்குப் போய்ச் சலிப்பு ஏற்பட்ட பிறகு,'சும்மா இவரையுந் தான் பார்ப்போமே!' என்ற எண்ணத்துடன் ஒரு எழுத்தாளரைப் போய்ப் பார்த்தான். அவர் புகழுக்கு உரியவரே தவிர பொருளுக்கு உரியவரல்ல. தன் தகப்பனாரிடம் பொருள் இருந்ததால், புகழ் கிடைத்தால் போதுமென்று நினைத்தான் கலியபெருமாள்.

அவன் போய்ச் சேர்ந்த நேரத்தில் அவர் கதை எழுதுவதற்காகக் கற்பனையைத் தேடிக்கொண்டிருந்தார். அவன் தன்னுடைய கதையை அவரிடம் சொல்லத் தொடங்கவே, அவருக்குக் கற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. தூண்டித் துருவி அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்போல் கேட்டார்.

அவருக்குக் கதை கிடைத்துவிட்டது. பதிலுக்கு அவனுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டுமல்லவா? - அவனோ கதை எழுதவும் ஆசைப்பட்டான்.

"நீங்க சொன்னதைத்தான் நான் இப்ப எழுதப் போகிறேன். இதை நீங்ககூட எழுதலாம். ஆனால் பயிற்சி வேணும். உழைத்துப் பழகணும். புகழுக்காகவோ பொருளுக்காகவோ ஆரம்பத்திலே பலர் இதில் ஈடுபடுவதில்லை. பிறகு தன்னாலே அது வந்தாலும் வரும்; வராமல் போனாலும் போகும். புகழ்ச்சி கிடைக்கிறப்போ இகழ்ச்சியும் கிடைக்கும். இதை மறந்திடாதீங்க."

"நான் வரட்டுமா?" என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு எழுந்தான் கலியபெருமாள்.

" இன்னொரு விஷயமும் கேட்டுக்குங்க; 'ஒன்றே செய்க, அதை நன்றே செய்க!' என்பதையும் மனசிலே போட்டு வையுங்க. ஏதாவது ஒரு கலையிலே உங்கள் ஊக்கத்தையும் திறமையையும் ஒருங்கே காட்டி நீங்கள் நீண்டநாள் அயராமல் உழைச்சிங்கன்னா கட்டாயம் வெற்றி பெறுவீங்க"

கலியபெருமாள் இப்போது சென்னை நகரத்தின் ஒரு தெருவோரத்தில் மரத்தோடு மரமாக நின்றுகொண்டிருந்தான். ஓட்டலில் அடுத்த அறையில் வந்து தங்கியிருந்தவர் அவனைச் சினிமாவில் சேர்த்து விடுவதாகச் சொல்லி, அவனிடம் இருநூறு ரூபாய்கள் வாங்கிக்கொண்டு, எங்கோ கம்பி நீட்டிவிட்டார். மேற்கொண்டு பணத்துக்கு வீட்டுக்கு எழுதியிருந்தான். பணம் வந்து சேரவில்லை. ஓட்டல் மானேஜரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டுப் பிறகு அவனை மரியாதையுடன் வெளியில் அனுப்பிவைத்தார்.

பாக்கிப் பணத்துக்கு ஈடாக அவனுடைய உடைமைகள் யாவும் அகப்பட்டுக்கொண்டன. சாப்பிடுவதற்கு அவனிடம் கையில் காசில்லை; தங்குவதற்கு இடமில்லை; மாற்றுடைகளையோ மானேஜர் வைத்திருந்தார்.

நேரம் இரவு நேரம். இந்த நேரத்தில் சென்னையில் யார் முகத்தில் போய் விழிப்பது? யாருக்கு அவனுடைய முகம் தெரியும்? இரவு நேரத்துச் சென்னை நகரத்தின் முகத்தை நன்றாக உற்றுப் பார்ப்பதற்காக , அவன் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.

பகல் நேரத்துச் சென்னைக்கும் இரவு நேரத்துச் சென்னைக்கும் எவ்வளவோ வேற்றுமை இருந்தது. காரில் போகும்போது கண்ட நகரம் வேறே; கால் நடையாகப் போகும்போது காணும் நகரம் வேறே. பணக்காரர்களின் நகரமான அது அவனுக்குத் திடீரென்று ஏழைகளின் நரகமாக மாறிவிட்டது.

தெருவோரத்து எச்சில் தொட்டிகளைச் சில இடங்களில் மனிதர்கள் மொய்த்தார்கள். கால் நடைகளைக் கட்டிப் போடுவதற்காகவாவது தனி இடம் உண்டு. மனிதர்கள் தங்கள் கட்டைகளை விட்டெறிவதற்கு அங்கே இடமில்லை. தெருவோரங்களில் கண்ட கண்ட இடங்களில் அவர்கள் படுத்துக் கிடந்தார்கள்.

பசியும் களைப்பும் அதிகமாகப் போனதால் ஓரிடத்தில் சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தான் கலியபெருமாள். கையிலே அவன் கட்டியிருந்த கடிகாரம், முன்பு கால்சட்டைப் பைக்குள் இருந்ததால் அது ஓட்டல் மானேஜரின் கண்களுக்குப் படவில்லை. இப்போது கடிகாரத்தைக் காசாக மாற்றிப் பசியாற்றிக் கொள்ளவும் முடியாது. கடைகளையெல்லாம் அடைத்துவிட்டார்கள்.

ஓட்டல் விவகாரம் முன்னறிவிப்பின்றித் திடீரென்று ஏற்பட்டதால், அந்த அதிர்ச்சி வேறு அவனை வாட்டிக் கொண்டிருந்தது. கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான். இரவு மணி ஒன்று ஆகியிருந்தது.

உட்கார்ந்திருந்த அவனிடம் யாரோ ஒரு பெண் பிள்ளை பேச்சுக் கொடுக்கப் பார்த்தாள். சினிமாவில் சேருவதற்காக வந்து சீரழிந்த பெண்களில் அவளும் ஒருத்தியாக இருக்கலாமோ என்று அநுதாபத்துடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். வயது, பருவம், உருவம் எல்லாமே அவளுடைய அழகின் வாட்டத்தை அவனிடம் எடுத்துச் சொல்லத் தொடங்கின.

"நீங்க எந்த ஊருங்க?"

" எல்லாம் இந்த ஊருதான்!" என்று சலிப்போடு கூறினான் கலியபெருமாள். அடுத்த வார்த்தை அவள் பேசுவதற்குள் முரட்டுத்தடியன் ஒருவன் ஓடிவந்து, அவளை அடிப்பது போல் அடித்து, வேறு பக்கம் இழுத்துப் போட்டான். "ஏண்டா பயலே!" என்று சாராயவாடை வீசக் கலியபெருமாளின்மீது புலியைப் போலத் தாவினான் அந்த முரடன்.

அவனால் கலியபெருமாளுக்குக் கிடைத்தது ஒன்று; பறிபோனது மற்றொன்று. கிடைத்தது முகத்தில் குத்து; பறிபோனது கைக்கடிகாரம். போகிற போக்கில் முதுகத் தோலைப் பிய்த்தெடுத்துக் கொண்டுபோக நினைத்தவன், சட்டைத்துணியைப் பிய்த்தொடுத்துக் கொண்டதோடு விட்டுவிட்டான்.

பொழுது விடிந்த பிறகும் அவனால் அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க முடியவில்லை. அங்கேயே விழுந்து கிடந்தான். இத்தனை ஆண்டுகளாக அவன் தெரிந்துகொள்ளாத உண்மைகளை யெல்லாம் அந்த ஒரு இரவு அவனுக்குப் போதித்துவிட்டது.

தன் பசியால் நாட்டின் பசியையும், தனது நிலையால் நாட்டின் நிலையையும் அறிந்துகொண்டான் அவன். ஜுர வேகத்தில் முனகிக்கொண்டிருந்த அவனை ஒரு ரிக்ஷாக்காரன் இரக்கப்பட்டுப் பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தான்.

ஆஸ்பத்திரியில் அவனுக்கு எப்படியோ தற்காலிகப் புகலிடம் கிடைத்தது. உணவு கொடுத்தார்கள்; மருந்தும் கொடுத்தார்கள்.

உணவு கொடுத்தபோது உழவரான தந்தையின் நினைவும், உடை கொடுத்தபோது துணி வியாபாரம் செய்த பெரிய தமையனின் நினைவும், மருந்து கொடுத்தபோது டாக்டரான சிறிய தமையனின் நினைவும் அவனுக்கு வந்தது. ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்குப் புகலிடம் அளித்துள்ள அந்த ஆஸ்பத்திரிக் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தான்.

முன்பு அவன் சந்தித்த எழுத்தாளர் நினைவுக்கு வந்தார். அவர் கூறிய அறிவுரைகளை எண்ணிப் பார்த்தான்.

'பிழைத்துக் கிடந்து ஊர் போய்ச் சேர்ந்தால் தொழிற் கல்வி கற்று இதைப் போன்ற பல கட்டிடங்கள் கட்டுவேன். வீடில்லாதோருக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பேன்' என்று தனக்குள் ஓர் முடிவு செய்து கொண்டான்.