காக்கைச் சிறகினிலே...

அது ஓர் அடர்ந்த காடு; அந்தக் காட்டுக்குள் ஓர் பெரிய ஏரி; அந்த ஏரியின் மத்தியில் சின்னஞ்சிறு தீவுகளைப் போன்ற சில திட்டுக்கள்; அந்தத் திட்டுக்களில் மரம் செடி கொடிகள் பின்னிப் பிணைந்து கிடந்தன.

ஆழ்ந்து அகன்ற அந்த ஏரிக்குள்ளே அந்தத் திட்டுக்கள் பசும் நிறைந்த மரகதத் தெப்பங்களைப்போல் மிதந்து கொண்டிருந்தன. நங்கூரம் பாய்ச்சிய மரக்கலங்கள் என்றும் சொல்லலாம்.

அந்த மரகதத் தெப்பங்களுக்கிடையில் பலவேறு நிறங்களில், வண்ண வண்ண உருவங்களில், ஒளிசிந்தும் நவரத்தின மணிகளைப்போல் மின்னுகின்றனவே, அவை என்னவென்று கேட்கிறீர்களா?

அவை பறவைகள்; பலவேறு இனங்களைச் சேர்ந்த கொக்குகள், நாரைகள், மீன்கொத்திகள், மரங்கொத்திகள், சிட்டுக்கள், மணிப்புறாக்கள், தவிட்டுப் புறாக்கள்......இப்படி எத்தனையோ வகை!

அந்த ஏரிக்கரை மேட்டை மதிற்சுவராகவும், அதன் மரங்களைக் காவல் வீரர்களாகவும், ஏரியை அகழியாகவும் வைத்துக்கொண்டு, அங்கு அவை ஓர் கந்தர்வலோக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தன. தெவிட்டாத தீஞ்சுவைப்பாடல்கள், ஆனந்தமயமான ஆடல்கள், காதல் களியாட்டங்களான ஊடல்-கூடல்கள் இவற்றுக்கெல்லாம் அங்கே பஞ்சம் இல்லை.

இன்பம் நிறைந்த இளவேனிலை அடுத்து,ஏரியில் நீர் நிறைந்து துளும்பி வழியும் காலங்களில் மட்டுமே அங்கே பறவைகள் வந்து கூடுவது வழக்கம். ஆண்டுதோறும், ஆண்டுதோறும், எத்தனையோ ஆண்டுகளாக, குறிப்பிட்ட சில மாதங்களில் இந்த இன்பக் கொள்ளை நடந்துகொண்டிருக்கிறது.

பணம் படைத்த மனிதர்கள் தங்களது குதூகலத்திற்காகப் பறவைக் கப்பலில் பறந்து பாரிஸ் நகரத்துக்கும் பனிமலை நிறைந்த நாடுகளுக்கும் செல்வதில்லையா? உல்லசத்துக்காக உதகமண்டலத்துக்கும் காஷ்மீரத்துக்கும் புறப்படுவதில்லையா?

அந்தப்பறவைகள் இந்தவிஷயத்தில் தற்கால நாகரிக மனிதர்களை முந்திகொண்டு விட்டன. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே அவைகளுடைய உல்லாசப் பிரயாணம் தொடங்கிவிட்டது. வெகு காலமாக மனிதர்கள் கண்களுக்குப் படாமலே அவை களியாட்டம் நடத்தி வருவதால், மனிதர்களுக்குக் காலத்தைக் கணக்குப் பார்க்க முடியவில்லை. எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தெல்லாம் பறவைகள் அந்த இடத்தைத் தேடிக்கொண்டு வந்தனவாம். கடல் கடந்த நாட்டுப் பறவைகளையும் அங்கே காணமுடியுமாம்.

அதிசயம்தான்! நெடுங்கடல் வெளியை எப்படித் தங்கள் சிறகுகளாலேயே அவைகளால் கடக்க முடிந்ததோ, வழியில் எப்படி அவைகளால் உண்ணவும் உறங்கவும் ஓய்வு கொள்ளவும் முடிந்ததோ, எப்படிக் குறிப்பாக அந்த ஏரி இருக்குமிடம் தெரிந்து அவைகளால் வந்து சேர முடிந்ததோ, அதிசயந்தான்!

காடுகளில் திரிந்த வேடுவர்களின் கண்களுக்கு முதல் முதலில் அந்த இடம் தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும் அவர்களுடைய கைவரிசைக்கு எட்டாத தொலைவில், நீருக்கு மத்தியில், நிலத் திட்டுக்களில், மரக் கிளைகளின் மறைவில் கொட்டமடித்த அவைகளிடம் என்ன செய்ய முடியும்? வில்லின் அம்புக்கு எட்டாத தூரம்; அப்படியே அம்பு எய்தாலும் தண்ணீரில்தான் அடிபட்டு விழக் கூடும்; வேடர்களுக்கு மனத் தாங்கல்தான் மிச்சம்! அம்புக்கு எட்டியும் கைக்கு எட்டவிட்டால், அம்பு எய்து பயன் என்ன?

காடு நாடாகத் தொடங்கியபோது, ஒரு சிறு கிராமம் அந்த ஏரிக்கரையை அடுத்து உருவாயிற்று. சுற்றியுள்ள நிலங்களைப் பண்படுத்தி உழுது விதைக்கத் தொடங்கினார்கள். பயிர் பச்சைகள் வளர்ந்து வரும் காலங்களில், அவற்றைப் பூச்சி புளுக்கள் அரிக்கத் தொடங்கின.

உல்லாசப் பறவைகளுக்கு உழைப்பும் கிடைத்தது; பிழைப்பும் கிடைத்தது. பயிர்களை அழிக்கும் பூச்சி புழுக்களைத் தின்று உழவர்களுக்கு உபகாரம் செய்யத் தொடங்கின பறவைகள். கிராமத்து மக்களுக்கு ஒரே ஆனந்தம்.

அதனால், பிற்காலத்துத் துப்பாக்கி வேட்டைக்காரர்கள் அந்தப் பறவைகளைச் சுட்டு விளையாட விரும்பியபோது, அவர்களையே சுட்டு விளையாடி விடுவதாகப் பயமுறுத்தித் திருப்பி அனுப்பினார்கள் கிராமவாசிகள்.

கிராமத்துக் குழந்தைகளுக்கு அந்தக் காலங்களில் காலையிலும் மாலையிலும் வேறு பொழுதுபோக்கே கிடையாது. ஏரிக்கரைக்கு வந்து பறவைகளைப் போலவே கூவுவார்கள்; ஆடுவார்கள்; பாடுவார்கள்; பறப்பதற்குக்கூட முயற்சிகள் செய்வார்கள்.

இந்தச் சமயத்தில்தான் அதிசயமான அந்தப் பறவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, இயற்கை வாழ்வில் பற்றுதல் கொண்ட ஓர் இளைஞர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் கண்ட காட்சி அவரை அப்படியே வியப்பில் ஆழ்த்திவிட்டது. அதே கிராமத்தில் தங்கி, கிடைக்கும் உணவைச் சாப்பிட்டுவிட்டு, தினமும் ஏரிக்கரைக்கு வரலானார்.

குழந்தைகள் அவரிடம் பறவைகளுக்குப் பெயர்களைக் கேட்கலானார்கள். முதலில் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தார். பிறகு தாமே உற்சாகத்துடன் பெயர்களைக் கற்பனை செய்து சொல்லத் தொடங்கினார். மூக்கு நீண்டிருந்தால் அதற்கு 'நீண்ட மூக்கன்', கண்கள் பெரியனவாக இருந்தால் 'வட்டக் கண்ணன்', சிவந்த கொண்டை இருந்தால் 'சிவப்புக் கொண்டை' இப்படியே 'கரும்புள்ளிக்காரன்', 'வெள்ளைராஜா', 'முக்குளிப்பான்' முதலிய பெயர்கள் வந்தன.

நாட்கள் சென்றன. இளைஞர் அந்தப் பறவைகளின் இன்ப வாழ்க்கையைப் பற்றித் தமிழ்ப் பத்திரிகையொன்றில் ஒரு கட்டுரை எழுதினார். யாரும் அதைப் படிக்கவில்லை. மீண்டும் ஒரு கட்டுரை எழுதினார். பத்திரிகாசிரியரே திருப்பி அனுப்பி விட்டார். தமிழர்கள் சங்ககாலத்திலேயே இயற்கையோடு வாழ்ந்து, தமிழிலும் கரைகண்டு விட்டார்களாதலால், இந்தக் காலத்து எழுத்தையும் வாழ்க்கையையும் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லையாம்!

பிறகு அந்த இளைஞர் மனம் சோர்ந்துபோய், வெளிநாட்டுப் பத்திரிகை ஒன்றுக்கு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி நம்பிக்கையில்லாமல் அனுப்பிவைத்தார், அவ்வளவுதான்! ஆசிரியரின் பாராட்டுதலுடன் கட்டுரையும் வெளிவந்தது. அதை அடுத்துப் பல கடிதங்களும் அவருக்கு வந்தன.சிலர் அந்த இடத்தைக் காண்பதற்காகவே மேல்நாடுகளிலிருந்து நேரில் வரப்போவதாகவும் எழுதிவிட்டார்கள்.

கிராமத்தில் தங்குவதற்கு வசதியான இடம் இல்லை; குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடையாது;உணவு விஷயமும் அப்படித்தான். இவ்வளவு சிரமங்களையும் அவர்களுக்கு எழுதினார் இளைஞர்.

அவர்களோ எதையுமே பொருட்படுத்தாமல் வந்து சேர்ந்துவிட்டார்கள். வெளி நாடுகளிலிருந்து பறவைகள் வந்து கூடித் திரும்பியது போலவே அவர்களும் வந்து திரும்பினார்கள்.தங்களுக்கு இருந்த வசதிக் குறைவுகளை அவர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

இந்த நிலையில்தான் ஒரு மேல்நாட்டு இளைஞர் அங்கு வந்து வாரக்கணக்கில் அந்தத் தமிழ்நாட்டு இளைஞருடன் தங்கினார். பறவைகளுக்கு அவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள். மேல்நாட்டு இளைஞரிடம் தொலைநோக்கிக் கண்ணாடி, திரைப்படம் பிடிக்கும் கருவிகள் முதலிய பலவேறு சாதனங்கள் இருந்தன.

இளைஞர்கள் இருவரும் மரத்தினால் தெப்பம் ஒன்று கட்டிக்கொண்டு, நீரில் மிதந்து, பறவைகள் கூடியிருந்த திட்டுக்களைச் சுற்றி வரலானார்கள். தொலை நோக்கி வழி யாக அவர்கள் கண்ட பறவைகளின் வாழ்க்கை விநோதங்கள் அவர்களை மெய்மறக்கச் செய்தது.

கடவுள் என்னும் ஓவியன் எத்தனை எத்தனை வண்ணக் கலவைகளை அவற்றின் விழிகளிலும் அலகுகளிலும் சிறகுகளிலும் கொண்டைகளிலும் கழுத்துகளிலும் தீட்டியிருக்கிறான்! அவற்றின் உல்லாசக் களியாட்டம், உக்கிரமான போராட்டம், பலவகை உணர்ச்சிகளை வெளியிடும் குரல்கள் இவ்வளவையும் அவர்களால் அருகில் இருந்து கவனிக்க முடிந்தது.

பறவைகளின் விழிகளும் அவர்களை அச்சமின்றி வரவேற்பதுபோல் ஒளி உமிழ்ந்தன.

வந்த மேல்நாட்டு இளைஞர் பிரியா விடைபெற்றுச் சென்றார் தம் நண்பரிடம். அந்த உயிரினங்களோடு ஒன்றாக உறவாடிப் பழகுவதற்காக, அந்த இளைஞர் மேற்கொண்ட கடினமான எளிய வாழ்க்கை தமிழ்நாட்டு இளைஞரையே திகைக்க வைத்தது. பரம்பரையான பணக்காரர் வீட்டுப்பிள்ளை அவர். விமானத்தில் பிரயாணம் செய்து பலமுறை உலகைப் பார்த்தவர். அப்படிப்பட்ட ஒருவர் குக்கிராமத்திலும் குக்கிராமமான இங்கு வந்து கொசுக் கடியிலும் வெப்பத்திலும் அரைப்பட்டினியிலும் உழன்று, பறவை களிடம் ஈடுபாடு கொண்டாரென்றால்......?

அடுத்த சில மாதங்களில் இந்த நாட்டின் முக்கியமான திரைப்படக் கொட்டகைகளிலெல்லாம் ஓர் வண்ணப்படம் திரையிடப்பட்டது. 'தமிழ்நாட்டு ஏரியில் உலகத்துப் பறவைகள்' என்ற தலைப்புக் கொண்ட படம் அது.படத்தின் துவக்கத்தில் தம் நண்பருக்கு நன்றி கூறியிருந்தார் அவர்.

அந்தப் படத்தைப்பற்றி எல்லாத் தமிழ் பத்திரிகைகளும் ஆங்கிலப் பத்திரிகைகளும் தாராளமாகத் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தன. நிருபர்கள் பலர் கூட்டங கூட்டமாகச் சென்று வந்தார்கள். தமிழ் நாட்டு இளைஞருக்குப் பூரிப்புத் தாங்க முடியவில்லை. ஒரே சமயத்தில் பலரிடமிருந்து அவருக்குக் கட்டுரைகள் எழுதும்படி கடிதங்கள் வந்து குவிந்தன.

பறவைகள் தங்கக்கூடிய காலம் முடிந்துவிட்டதால் அவை வழக்கம்போல் பறந்து கலைந்துவிட்டன.

இனி அடுத்த ஆண்டுதான் அவைகளைக் காணமுடியும்.

அதற்குள் பணம் படைத்தவர்கள் பலர் பெரிய பெரிய கார்களில் அங்கு வந்து இறங்கினார்கள். கேட்ட விலையைக் கைமேல் கொடுத்து அங்கிருந்த நிலங்களை வாங்கினார்கள். பெரிய பெரிய ஓட்டல்களைக் கட்டினார்கள். மின் விளக்குகளைக் கொண்டு வந்தார்கள். புதிய புதிய நவநாகரிக வசதிகளுடன் அங்கே பங்களாக்கள் எழும்பின. பறவைகள் வருவதற்கு முன்பே மனிதர்கள் வந்து கூடிக் கலைந்தார்கள்.

'மேலை நாட்டார் ஒரு படம் எடுத்துத் திரையில் காட்டமுடிந்தபோது, நாமும் நம் திரைப்படத்தில் அதை ஏன் காட்டக்கூடாது?' என்று ஒருவர் நினைத்தார். அந்தப் படத்தைப் பார்த்தவுடன்தான் அப்படி நினைத்தார் என்பதையும் நாம் சொல்லத்தான் வேண்டும்.

'வேட்டைக்காரன்!' என்ற கதை உருவாயிற்று. நூற்றுக்கணக்கான ஆண், பெண் நடிக நடிகையர், பலவேறு வண்ண்ங்களில் அலங்கரித்துக்கொண்டு, ஓர் அழகிய தெப்பத்தில் அந்த ஏரிக்குள் போவதுபோல் படம் எடுக்கத் திட்ட மிட்டார்கள். பறவைகளை இயற்கையான பின்னணியாகக் கொண்டு பாடிய வண்ணம் படகோட்டும் காட்சி ஒன்று உருவாயிற்று.

வண்ணப் படம் அல்லவா? நூற்றுக்கணக்கானவர்கள் அங்குவந்து நாட்கணக்கில் தங்கவேண்டும் அல்லவா? ஏற்கனவே நாகரிகமாகிக் கொண்டுவந்த கிராமம், திடீர் திடீரென்று புதிய புதிய வசதிகளைக் காணத் தொடங்கியது.

ஏரியைப் போய்ப் பார்த்து வந்த செய்திகள், கிராமத்தில் ஏற்பாடு நடைபெறும் செய்திகள், அங்கே போய் ஒவ்வொருவரும் தும்மியது முதல் இருமியது வரையுள்ள பல வேறு செய்திகள் பத்திரிகைகளை அலங்கரிக்கத் தொடங்கின.

பறவைகளைப் பார்ப்பதற்குக் கூடாதவர்கள்கூட, பறவைகளைப் படம் பிடிப்பதற்காகச் செய்யும் முன்னேற்பாடுகளைப் பார்ப்பதற்கு அங்கு வந்து திரண்டார்கள். 'தேர்க் கூட்டம், திருவிழாக் கூட்டம், என்று முன்னாட்களில் சொல்வதுபோல், அங்கு அக்கம் பக்கத்துக் கிராமங்களெல்லாம் கூடத்தொடங்கின.

பறவைகளும் குறிப்பிட்ட காத்தில் வந்து குழுமிவிட்டன.

பெரிய பெரிய லாரிகளிலும் 'வான்' களிலும் இயந்திரக்கருவிகள் வந்து சேர்ந்தன. சரமாரியாகக் கார்களும் கிளம்பின. சாலைகளின் இரு மருங்குகளிலும் மக்கள் கூட்டத்தின் உற்சாகம் எல்லை கடந்து நின்றது.

ஆயிற்று. துரிதமாக ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டன.காலை இள வெய்யிலில் பொன்னிறமான வண்ணப் படகு, நூற்றுக்கணக்கான காளையரும் கன்னியரும் நிறைந்த கூட்டத்தைச் சுமந்துகொண்டு ஏரிக்குள் சென்றது. அதைத் தொடர்ந்து நான்கைந்து 'கமிரா' க்கள் பல வேறு கோணங்களிலிருந்து சுடுவதற்குத் தயாராக இருந்தன.

குபீரென்று ஒலிபரப்பி திரைப் பாடலை முழக்கம் செய்தது;

"வேட்டைக்காரா!....வேட்டைக்காரா!... ஓடிவா!"

"ஷூட்" என்றது இயக்குனரின் குரல்.

சொல்லி வைத்தாற்போல் அவ்வளவு பறவைகளும், 'ஜிவ்' வென்று வானத்தில் கிளம்பி வட்டமிடத் தொடங்கின.

"கட்! கட்! என்று கத்தினார் டைரக்டர்.

எல்லோரும் வானத்தையே அண்ணாந்து பார்த்தார்கள். கழுத்துச் சுளுக்கும்வரை பார்த்தார்கள். அவ்வளவு பறவைகளும் வட்டமிட்டுச் சுழன்றுகொண்டிருந்தனவே தவிர, ஒன்று கூட இறங்கி வந்து தனது கூட்டை எட்டிப் பார்க்க வில்லை. சற்று நேரத்தில் கரும் புள்ளிகளென மறைந்து அவை இரை தேடச் சென்றுவிட்டன.

மாலையில் திரும்பி வந்தபோதும் அங்கு ஓடம் இருந்தது; அதன்மேல் மனிதர்கள் நிறைந்திருந்தார்கள்.

ஒருபறவையாவது வானத்தை விட்டுக் கீழே இறங்கி வரவேண்டுமே!

இரவில் அவை எங்கேதான் சென்று தங்கினவோ தெரியவில்லை. மறுநாள் காலையிலும் அந்த மரகத மணித் திட்டுக்கள் பறவைகளின் கலகலப்பின்றி வெறிச்சிட்டுக் கிடந்தன. காத்திருந்தார்கள். காத்திருந்தவர்களில் ஒருவருக்குப் பறவைகளின்மீது கோபம் கோபமாக வந்தது. 'என்ன திமிர் இந்த அற்பப் பிராணிகளுக்கு! லட்சக்கணக்கில் பணம் செலவு செய்துகொண்டு, எவ்வளவோ ஏற்பாடுகள் செய்துகொண்டு இங்கு வந்திருக்கிறோம். கொஞ்சங்கூட மரியாதை தெரியவில்லையே!'

பறவைகளின் நண்பரான அந்த இளைஞரும் அங்கு வந்து இவ்வளவு வேடிக்கைகளையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.

முதலில் அந்த இளைஞரை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் அலட்சியம் செய்த ஒருவர், பிறகு அவரிடம் வந்து, "அந்த வெள்ளைக்காரன் மட்டும் எப்படி வந்து படம் பிடித்தான்?" என்று மெதுவாய்க் கேட்டார். "அவன் இங்கு வந்து பல நாள் தங்கினான். தன்னுடைய உயிரைப் போலவே அவற்றின் உயிரையும் நேசித்தான். ஆவலோடு அவற்றின் வாழ்க்கையிலுள்ள இன்ப துன்பங்களைத் தெரிந்துகொள்ள முயன்றான். கடைசியில் அவற்றின் வாழ்க்கைக் கலையை வெளி உலகத்துக்கு வெளிப்படுத்துவதற்காகவே அவன் படம் பிடித்தான். அவன் கலைஞன்!"

அவனைக் கலைஞன் என்று அந்த இளைஞர் கூறியவுடன் கோபத்தால் முகம் சிவந்தது பிரமுகருக்கு.

"அப்படியானால் நாங்கள்?" உருட்டி விழித்தார் அவர்.

புன்முறுவல் பூத்துவிட்டு, "தயவு செய்து என்னிடம் இப்படிக் கேட்காதீர்கள்" என்று மழுப்பப் பார்த்தார் இளைஞர்.

"இல்லை, சொல்லுங்கள்!"

"நான் என்ன சொல்வது? பறவைகளே உங்களுக்குப் பதில் சொல்லிவிட்டனவே !......உங்களுடைய படத்தின் பெயர் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் போதும்!"

பணவேட்டைக்குத் தங்களைக் கருவிகளாகப் பயன்படுத்த வந்தவர்கள், திரும்பிச்சென்றவுடன், கலைவாழ்வு வாழ வந்த உயிரினங்கள் மீண்டும் அங்கு ஆனந்தத்துடன் கூடிக் களித்தன.