கட்டிலை விட்டிறங்காக் கதை - புதுமைப்பித்தன்



(நான் பாளையங்காலில் குளித்துக் கொண்டிருக்கும்போது சில ஏடுகள் மிதந்து வந்தன. உடம்பைத் தேய்த்துக் கொண்டிருந்தவன், ஒன்றை எட்டி எடுத்துக் கவனித்துப் பார்க்க, கதை மாதிரி தெரிந்ததால், கிடைத்ததை எல்லாம் சேகரித்து வாசித்தேன். தேறினது இந்தக் கதைதான். இந்த ஏட்டுக்கு ஆதாரமோ, நான் சாக்கிரதைக் குறைவாக மிதக்கவிட்டுவிட்ட கதையின் முற்பகுதியோ இனிமேல் கிடைக்காதாகையால், இது விக்கிரமாதித்தன் கதையென்று வழங்கும் கதைகளில் இதுவரை வெளிவராத பாடம் என்பதுடன் இவ்வாராய்ச்சியை முடித்துக் கொள்ளுகிறேன். தெரிந்தவர்கள் தொடர்க.) முத்துமோகனவல்லிப் பதுமை என்ற முப்பத்தேழாவது பதுமை சொல்லிய கட்டிலை விட்டிறங்காக் கதை

நேம நிஷ்டைகள் (ஏடுகள் சிதிலமானதனால் எழுத்துத் தெளிவாகத் தெரியவில்லை) செபதபங்கள் யாவும் முடித்து, பார்ப்பனர்களுக்கும் பரிசனங்களுக்கும் கோதானம், பூதானம் வஸ்திரதானம் யாவும் குறைவறக் கொடுத்து, தம் மந்திரிப் பிரதானிகள் சூழ, தோகையர் பல்லாண்டிசைப்ப ஜாம்ஜாமென்று கொலுமண்டபத்திலே புகுந்தருளி, சிங்காதனத்துக்கு அபிடேக ஆராதனைகள் யாவும் முடிப்பித்து, போச மகாராசனானவன் அந்தச் சிங்காதனத்திலே ஏறி அமர்வதற்காகக் காலடி வைப்பானாயினான்.

முப்பத்தேழாவது படியின்மீது அவன் கால் நிழல் பட்டவுடன் முத்துமோகனவல்லிப் பதுமை என்ற முப்பத்தேழாவது பதுமை அட்டகாசமாய்ச் சிரித்து... வாரீர் போச மகாராசரே, உமக்கு இந்தச் சிங்காதனம் அடுக்குமோ, இது விக்கிரமாதித்த ராசாவானவர், பட்டி என்கிற மந்திரியோடு, காடாறு மாதமும் நாடாறு மாதமுமாய் அறுபத்தீராயிரம் வருஷம் வரை, மனு நெறி தவறாது, புலியும் புல்வாயும் ஓரிடத்துறையும் பெற்றி வழுவாது, அபேதமாக, அபூர்வமாக அட்டமா திக்குகளையும் கட்டியாண்டு, மூட்டைப் பூச்சிக்கும் முறைமை வழுவாது நடந்தமை அறியீரோ! அந்த மகாராசனுடைய கீர்த்தி வல்லபங்களிலே ஆயிரத்தில் ஒரு பங்காவது உமக்கு உண்டோ எனக் கை மறித்தது.

போச மகாராசனும், 'ஓகோ இதேது! அதிசயமாகத் தோணுது! மூட்டைப் பூச்சிக்கும் முறைமை வழுவாத செங்கோலாவது!' என அதிசயித்து, அன்று இரவு தான், நடுச்சாமத்திலே, பேயும் உறங்கும் நள்ளிரவிலே, தன் பட்டமகிஷியானவள் சப்ரமஞ்சத்திலே, தாதியர் சிலர் வீசவும், சிலர் பனிநீர் தெளிக்கவும் உறக்கம் செய்யும் சமயத்திலே ஓஹோவெனப் பதைத்தபடி, ஊர்ப் பேய் பிடித்தவள் போலவும், உன்மத்தம் கொண்டவள் போலவும் கூக்குரலிட்டோலமிட, தான் வீரவாள் எடுத்து, அந்தக் கிருகத்தில் அந்த நேரத்தில் ஆரோகணித்துப் பிரவேசித்து, "என் பட்டத்து ராணியே, பாக்கியவல்லியே, நாட்டின் குலக் கொழுந்தே, என்ன உனக்குச் சம்பவித்தது?" என்று கேட்டும் பதில் வராததனால், கட்டிலைத் தடவி, மூட்டையொன்று விழித்து நிற்கக் கண்டு, கட்டைவிரலால் நசுக்காமல், கட்கத்தினால் கொன்ற சேதி நினைவுக்கு வர, திகைத்துப் பதைத்து அருகில் நின்ற மந்திரி சுமந்திரனை விளித்து, "மூட்டையைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் உண்டா? மூட்டைக்கு மனு நெறி உண்டா? சொல்லும், சொல்லும்" என்று கேட்க, மந்திரி சுமந்திரனானவன், ஏதேது, தம் தலைக்குத் தீம்பு வந்ததென்று திட்டப்படுத்திக் கொண்டு தெண்டனிட்டு, "ராச்சிய பாரத்திலே பலவிதமுண்டு.

தேசந்தோறும் ராசமும் (ராசம் என்ற சொல், ராச்சியபார முறையைக் குறித்த வழக்கொழிந்த பிரயோகம் போலும்) மாறும்; கையில் வெண்ணெய் வைத்து நெய்க்கு அழுவாருண்டோ ? இப்பேர்க்கொத்த அதிசயங்களையும் சொல்லற்கொத்த அதிமோகனப் பதுமை இருக்கும் போது, பறையறைந்து, பார்ப்பனர்களைக் கூட்டுவித்துச் சாஸ்திர விசாரம் செய்து தேவரீர் திரு நேரத்தை வீணாக்குவாருண்டோ ? நான் சுமந்திரனல்லவா? அப்பேர்க்கொத்த ஆலோசனை சொல்லுவேனா?" என்று தலைவணங்கி நின்றான். "சவாசு, சவாசு, மந்திரி சுமந்திரனாரே! நீர் சொன்னது ஆயிரத்துக்கு ஒரு வார்த்தை! அதைத் தெரிந்துதானே, நாம் உமக்கு மந்திரிப் பதவி தந்தோம்? இந்தாரும் உம் புத்திக் கூர்மைக்கு மெச்சியும், நம் சந்தோஷத்தைத் தெரிவித்தும், தருகிறோம்.

இந்த முத்து மாலையை அதை நீரே நேரே சென்று நும்முடைய பத்தினிக்குக் கொடுத்துவப்பீர்" என்று கட்டளையிட்டுவிட்டுப் பதுமையைப் பார்த்து, வாராய் முத்துமோகனவல்லிப் பதுமையே, உங்கள் விக்கிரமாதித்தன் மூட்டைப் பூச்சிக்கு முறைமை வழுவாது நடந்தமை சொன்னீரே; அதன் வயணமென்ன?" என்று குத்துக்கால் போட்டு, குடங்கையிலே மோவாயை ஊன்றிக் குனிந்து நின்று கேட்டான். அதற்கு அந்த முத்து மோகனப் பதுமையானது, "விக்கிரமாதித்த ராசா கதை என்றால் விடுகதையா விட்டுச் சொல்ல; பொட்டென்று மறக்க? நீர் இந்தப் படியில் இப்படி அமரும்; நான் சொல்லுகிறேன். காது கொடுத்துக் கேளும். இடையிலே கொட்டாவி விட்டால், நட்டாற்றில் சலபானம் பண்ணியவன் பாவம் வந்து சம்பவிக்கும்...

(இதிலிருந்து பத்து ஏடுகளைக் காணவில்லை) ...லே, நாமகள் திலதம் போலும், நாரணன் நாபி போலும், அட்டகோண யந்திரத்தின் மையக் கோட்டை போலும், செம்பாலும் இரும்பாலும் கல்லாலும் கருத்தாலும் கட்டிய நகரம் ஒன்றுண்டு. அதற்குப் பகைவர்கள் வரமாட்டார்கள். பாவம் அணுகாது. பசியும் அணுகாது. அதன் கோட்டை வாசலோ எண்ணூறு யானைகளை வரிசையாக நிறுத்தினாலும், அதன் பிறகும் ஒரு பாகம் இடம் கிடக்கும். அந்தக் கோட்டைக் கதவுகள் வயிரத்தினால் ஆனவை. இரவில் கோடி சூரியப் பிரகாசம் போலச் சுடர்விட்டு, நூற்றிருபது காதத்துக்குப் பகைவர்கள் வந்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்; பட்டப்பகலிலோ என்றால், அவர்கள் கண்களைக் கூசவைத்துப் பொட்டையாக்கித் திக்குத் தெரியாமல் அலைந்து, முதலைகளும் சுறா மீன்களும், எங்கே, எங்கே என்று நடமாடும் அகழிக்குள் விழுந்து, தம் ஆயுசைப் போக்கும்படி செய்விக்கும்.

இப்பேர்க்கொத்த கோட்டை வாசலை உடைத்தாயிருக்கிறதனாலே, இந்தப் பட்டணத்துக்கு மாந்தை என்று பெயர். கேளாய் விக்கிரமார்க்க அரசனே, இதற்கு இன்னும் ஒரு காரணமும் சொல்லுவார்கள். இந்தப் பட்டணத்து மாந்தர்கள் மன்னர் இட்ட கட்டளையை மறவாது, மறையாது, ஒழுகி வந்ததனால், மந்தைபோல் நடக்கும் மாந்தர் வாழ் சாந்தமாம் நகர் இச்செகதலத்திலுண்டோ ? நீர் ஒரு முறை வாரும், அந்த ஊரைப் பாரும். தேவலோகத்து அளகாபுரியும், குபேரபட்டணமும், பூலோகத்து அத்தினாபுரியும் அதற்கு ஈடாகா. அதில் இல்லாதன இல்லை என்றால் முற்றும் உண்மை, முக்காலும் உண்மை. அந்தப் பட்டணத்திலே, முந்தையோர் வரம்பின் முறைமை வழுவாது, மனு நெறி பிசகாது மன்னவனாம் தென்னவனுக் கிளையான் இணையாரமார்பன், அஜமுகன் என்பான் அரசாட்சி செலுத்தி வந்தான். அவனுக்கு ஐம்பத்தாறாயிரம் பத்தினிமாரும், அதற்கு இரட்டிப்பங்கு வைப்பாட்டிமாரும் உண்டு.

அந்த ஐம்பதினாயிரவரில், அவனுடைய கண்ணுக்குக் கண்ணாக, கட்டிக் கரும்பாக, நகத்திற்குச் சதையாக, பூவுக்கு மணமாக, பத்தினிப் பெண்களிலே பதுமினிப் பெண்ணாய், கண்ணால் பார்க்கவும் மயக்கம் போடும் மோகலாகிரி தரும் - அஜமுகி என்பவள் ஆசைக்குகந்த பட்ட மகிஷி. வாஞ்சைக்குகந்த வஞ்சிக் கொடியாளுக்குப் பிள்ளையே பிறக்காமல், சிங்காதனச் சிறப்புக்கு ஆண் வாரிசே அளிக்கமாட்டேன் என்று தெய்வங்கள் யாவும் ஒன்று கூடிச் சங்கற்பித்தது போலவும், பட்டமகிஷியின் பேரிளம் பெண் பருவத்தையும் வெகு துரிதத்தில் ஓட்டி விரட்டியடித்துக் கொண்டு போவான் போல, காலதேவன், நாட்களை வாரங்களாகவும் வாரங்களைப் பட்சங்களாகவும் பட்சங்களை மாதங்களாகவும் மாதங்களைப் பருவமாகவும் பருவங்களை வருஷங்களாகவும் நெருக்கிக் கொண்டு வரவும், வயிற்றுக்குப் பாரமாகப் பிறந்த வைப்பாட்டிப் பிள்ளைமார்கள் நாள் தவறாமல் படித்தரம் பெற்றுப் போக, பட்டி மண்டபத்தில் முட்டி மோதுவதைக் கண்டு ஆறாச் சினமும் அளவிலாப் பக்தியும் கொண்டவனாகி, அதிவீர சூர பராக்கிரம கேதுவான அஜமுகன் என்ற செகதலம் புகழும் மகிபதி, அவனியில் உள்ள சாத்திர விற்பனர்கள் யாவரையும் கூட்டுவித்து, "ஐயன்மீர்! கடையேன் கடைந்தேற ஒரு வழி அருளல் வேண்டும்" என்று விண்ணப்பித்துக் கொள்ள, சகலகலா வல்லவனும், அட்டமா சித்தியில் கெட்டிக்காரனுமான சித்தவல்லப சிரோன்மணி யொருவன் சபாமண்டலத்தே எழுந்தருளி நிமிர்ந்து நின்று, "புவித்தலம் முழுதும், கவித்தொரு குடைக்கீழ், செவித்தலம் தன்னிற் பவத்துயர் கேளாது செங்கோல் நடாத்தும் அங்கண்மா ஞாலத்து அதிவீர மன்னா, நம் சயனக்கிருகத்தில், வடதிசை கிடக்கும் சப்ரமஞ்சக் கட்டிலின் சாபமே நுமக்குப் பிள்ளைப் பேறு வாயாதது; கட்டிலை அகற்றி, கானகத்தின் கீழ்த் திசையில், கருங்காலியும் சந்தனமும் பின்னிப் பிணைந்து வளர்ந்து நிற்கிறது; அதை வெட்டிக் கட்டிலாக்கிக் கால் நீட்டிப் படுத்தால், பத்தாம் மாதம் ஆண் மகவு நிச்சயம்" என்று சொல்லாநிற்க, அத்துறவிக்குப் பசிப்பிணி போக்க மடமும் மான்யமும் கொடுத்து, சைத்தியோபசாரம் செய்விக்கச் சேடிப் பெண்கள் அறுநூற்றுவரையும் உடனனுப்பினான். பிறகு முரசறைவித்து, 'காட்டிலே கருங்காலியும் சந்தனமும் கட்டித் தழுவி வளர்ந்த மரத்தைக் கொண்டு வந்து தருவோருக்கு ஆயிரம் பொன் பரிசு' என்று பரிசனங்களிடையே சொல்லச் சொல்லி, தச்சர்கள் யாவரையும் அழைப்பித்துக் கட்டில் செய்ய ஆணையிட்டான். காட்டிலிருந்து மரமும் வந்தது. கட்டிலும் செய்து முடித்தார்கள்.

அப்பொழுதுதான் அரசே, நாங்கள் இருவரும் அந்தக் கட்டிலின் குறுக்குச் சட்டத்தின் கீழ் ஈசான திசையில் இருந்த சிறு பொந்தில் குடிபுகுந்தோம். விக்கிரமாதித்த மன்னா வெற்றிவேல் அரசே, நாங்கள் காலெடுத்து வைத்த நேரம், காலன் கரிக்கோடு போட்ட நேரம் போலும்! என்று அந்தப் பெட்டை மூட்டைப் பூச்சி ரெட்டைச் சொட்டுக் கண்ணீர் சிந்தி விட்டு, பட்டியைப் பார்த்துப் பெருமூச்சுவிட்ட விக்கிரமார்க்க மகாராசாவை நோக்கித் தன்னுடைய துயரக் கதையைத் தொடர்ந்து சொல்லலாயிற்று.